Tuesday, November 17, 2009

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாய் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936 ல் டி.பி ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார். அதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத் தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973 இல் விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980 இல் தமிழில் வெளிவந்தது. எண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குனரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்ரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக் கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை. பின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக ப்ரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி. எழுபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குனர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.

பார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குனர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை. பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர இந்திய மனங்கள் அனுப்பதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொருத்த வரை பெண்களும் தங்களின் மூளையை விட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குனர் என அடையாளப்படுத்தப் பட்ட பாலசந்தருக்கு நாயகி ஜாக்கெட் மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குனர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது. இதுவரை தமிழ் சினிமாக்களில் எழுதப்பட்ட காதல் பாடல்களில் பெண் தன்மையே / பார்வையே இல்லை என்கிற அதிர்ச்சி வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் கேட்டதும்தான் எனக்கு எழுந்தது. இதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கருப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.

பெண் தன் காதல் உணர்வைச் சொல்வதாய் ஒரு பாடல் எழுதப்படக்கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குனர்களை எப்படி எதிர்பார்க்க? இம்மாதிரியான சூழலிலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.

சம கால பெண் இயக்குனர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு, கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுது போக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடுத்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டு விடுவோம்.

ப்ரியாவின் உதவி இயக்குனரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை கோவையில் பதிவுலக நண்பர்களுடன் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சம கால தமிழ்படங்களிலிருக்கும் பெரும்பாலான இம்சைகள் இப்படத்தில் இல்லை. நேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாராஸியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுது போக்குப் படமாய் இருந்தது. தமிழில் கலைப்படங்களுக்குத்தான் சாத்தியமில்லையென்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்க நிலைதான் இருந்து வருகிறது. பொய் சொல்லப் போறோம், திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்து இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன. ஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன. இந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்கு பாராட்டுக்களும் வாழ்த்தும்.

பணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிகவிசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு விசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன. அதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், கபோதிகள், கவிர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.

திரைப்படத் துறையில் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன்மொழி தாஸ் போன்றோர் இலக்கியப் பின்புலத்தோடு திரையில் இயங்கிவருகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமாசக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார். இவர்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

Friday, November 13, 2009

குளிர் நினைவுகள்


குளிர்பதனப் பெட்டியின் உர்ர் தான் இன்றைய விழிப்பில் கேட்ட முதல் சப்தம். இந்த சப்தத்தின் மீது எண்ணத்தைக் குவித்தபடி படுத்துக் கிடந்தேன். காலைப் பரபரப்புகள் இல்லாத இந்த விடுமுறைத் தினத்தைப் போல எல்லா தினங்களும் இருந்தால் எப்படியிருக்கும் என்கிற நினைவின் கனவுத் துழாவல்களோடு கடிகாரத்தின் நகரும் முள்ளின் சப்தமும் சேர்ந்து கொண்டது. இந்தப் புதிய வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. நகரத்தின் இரைச்சல்களிலிருந்து சற்றுத் தள்ளிய வீடிது. இதுவரை எத்தனை வீடுகளில் வசித்திருப்பேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீடாய் நினைவு படுத்தத் துவங்கியது. என் கிராமத்து வீடு, திருவண்ணாமலை வீடு, கிருஷ்ணகிரி அறை, காட்டிநாயனப் பள்ளி அறை, ஓசூர் தர்கா அறை, அண்ணாமலை நகர் வீடு, அண்ணாமலை நகர் அறை, டவுன்ஷிப் வீடு,பாண்டிச்சேரி நடேசன் நகர் வீடு, ரெட்டியார் பாளையம் அறை, எல்லப் பிள்ளைச் சாவடி வீடு, முதலியார் பேட்டை அறை சென்னை ஜாபர்கான் பேட்டை அறை,திருவள்ளூர் நேரு நகர் அறை, பூங்கா நகர் வீடு, ஆயில் மில் அறை, மதுரை வீடு, ஷார்ஜா பேங்க் ஸ்டீரீட் வீடு, துபாய் அல்கூஸ் அறை, கராமா அறை, டெய்ரா அறை, ஷார்ஜா வீடு மீண்டும் டெய்ரா அறை இப்போது இந்த பர் துபாய் வீடு. இது நான் வசிக்கும் இருபத்தி நான்காவது வீடு. புன்னகையும் அயர்ச்சியும் ஒரே சமயத்தில் எழுந்தது.

எது என்னை இப்படி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. எல்லா வீட்டின் சித்திரங்களையும் வரிசையான காட்சிகளாக மாற்றி சுழலவிட்டுப் பார்த்தேன். முன் பின் கால வரிசைப்படி வேகமாய் நினைவுகளில் வீடுகளை நகர்த்தியும் பின்பு மெது மெது வாய் நகர்த்தியுமாய் நினைவுகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அலுக்கவே சடாரென எழுந்து திரைச்சீலையை சரக் கென விலக்கினேன். பளிச் வெள்ளை வெயில் திடீர் மிரட்சியாய் இருந்தது. சடார் சரக் பளிச் என்ன ஒரு ரிதம்! என நினைவு சப்தங்களில் முன்பும் பின்புமாய் அலையத் துவங்கியது.

நினைவைக் கட்டி இழுத்து நிகழில் பொருத்தினேன். மணி என்ன என சரியாய் தெரியவில்லை. எட்டரை அல்லது ஒன்பது இருக்கலாம். இங்கு குளிர் துவங்கி விட்டது.வெயிலுக்கு கருணை வந்து விட்டது. தூர தேசப் பறவைகள் வரத் துவங்கி விட்டன. கடல் புறாக்கள் அதிகம் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. எல்லா காலத்திலும் இருக்கும் புறாக்கள் மிகுந்த அசட்டையாய் தரைத் தளத்தில் நடந்து கொண்டிருந்தன. குளிருக்கு ஒண்டும் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எல்லாப் பூனைகளையும் கொன்றிருப்பார்களோ என்கிற எண்ணம் பயத்தைத் தந்தது. இந்த நகரம் இன்னும் சரியாய் விழிக்கவில்லை. இரவு முழுக்க விழித்திருந்து விட்டு அடுத்த நாள் நண்பகல் வரை தூங்கும் இந்த நகரம் என்னை மட்டும் சீக்கிரம் எழுப்பி விட்டு விடும். மனித சஞ்சாரங்கள் குறைந்த காலையை நினைவுகளோடு போராடியபடி குளிரோடு அணுகுவது இதமாகத்தான் இருக்கிறது.

தேநீர் குடித்தால் என்னவெனத் தோன்றிற்று. தேநீர் தியானமுறை நினைவிற்கு வந்தது. சமோவாரில் தேநீர் கொதிக்கும் சப்தத்தின் மீது தியானித்தபடி, தயாரானவுடன் அதன் வாசனையை உள்ளிழுத்தபடி, தேநீரை மெதுவாய் மிக மெதுவாய் மிகமிக மெதுவாய் உறிஞ்சிக் குடித்தபடி நகரும் நாட்கள் மிகுந்த நிறைவுகளைத் தரக் கூடும். தியானம், நிர்வாணம், அமைதி, சலனமின்மை என எல்லாவற்றிலிருந்தும் இப்போது விலகிக் கடந்து வந்தாயிற்று. நினைவுகளோடு போராடப் பழகி விட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் நினைவே மிகப் பெரிய துணையாகவுமிருப்பதால் ஓஷோ, ஜேகே வையெல்லாம் பரணில் தூக்கிப் போட்டாயிற்று. எனக்கானத் தேநீரைத் தயாரிக்க எனக்கான உணவைச் சமைக்க எப்போதும் பிடித்திருக்கிறது. தேயிலையில் பால் கலப்பது வன்முறைதான் என்றாலும் எனக்கிதுதான் வசதி. செம்மண் நிறத்தில் லேசாய் ஏல வாசனையோடு டீ தயாரித்துக் குடிக்க எனக்குப் பிடித்திருக்கிறது. என் முடி வெள்ளையாவதற்கு இதுதான் காரணமென இவள் சொல்வதை நினைத்தபடியே மேலதிகமாய் ஒரு கரண்டி தேயிலையைக் கூட்டினேன். காலையில் புகைக்க எனக்குப் பிடிக்காது. உடல் மாசுபடுவதைக் காட்டிலும் இந்த அதிகாலைக் குளிர் காற்றில் புகை நாற்றத்தைக் கலப்பதில் விருப்பமிருந்ததில்லை. எனக்கு இரவுகளில்தான் புகை தேவைப்படும். குளிரில் நடுங்கியபடி மொட்டை மாடியில் புகைக்கும்போது காற்று மாசாவதை நினைத்துக் கொள்வதில்லை.

பால்கனியில் நடக்கையில் முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது. பால்கனியில் இதற்கும் அதற்குமாய் நடந்தபடி வாய்விட்டுப் படிக்கும் சிறுமியொருத்தி மீன் தொட்டியில் உலவும் மீனைப் போலிருக்கிறாள் என்கிற குறுங்கவிதையது. மிக வழக்கமான காட்சியை சாதாரண வார்த்தைகளில் புனைவிற்கு தள்ளுவது அல்லது தன் கவிதைப் படிமங்களை இயல்பிற்கு கொண்டு வருவது, இதில் அதையும் அதில் இதையும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டே கோர்ப்பது இவைதாம் இவர் கவிதைகளில் கவித்துவத்தை கொண்டு வரும் யுக்தியாக இருக்கிறது. யாருமில்லாத அமைதியான காலையில் சத்தமாய் ஒரு கவிதையை சொல்லி முடித்தவுடன் ஏற்படும் உணர்வினுக்குப் பெயர் தெரியவில்லை.

முழுக்க முழுக்க தன் வயமான இத்தனிமை எப்போதும் சலிப்படையாதிருக்க எனக்கு இலக்கியமும் திரைப்படமும் உதவியாய் இருக்கிறது. குற்ற உணர்வில் திளைக்காதிருக்க வாழ்வு இன்பமயமானதுதான் என்பதை நம்ப வார இறுதி விடுதிகளும் சக நண்பர்களும் உதவுகின்றனர். இவையெல்லாம் இல்லாத பிறருக்கு எது விடுதலையாய் இருக்க முடியும் என யோசித்துப் பார்த்தேன். பெரும்பாலும் கடவுள் நம்பிக்கையாய் இருக்கலாம். ஒட்டு மொத்த மனித இனமும் எதிலிருந்தாவது விடுபடுவது/எதிலாவது சிக்கிக் கொள்வது என்கிற இரண்டு நிலைப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தரைத் தளத்தில் கோடு போட்ட காகிதம் ஒன்றை மென் காற்று மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தது. புறா அக்காகிதத்தின் மீது வந்தமர்ந்தது. கோடு போட்ட காகிதம் ஒன்றில் பென்சிலில் கோழிக் கிறுக்கலாய் என் பக்கத்தில் பிடித்த வரிகளை எழுதி வைத்துக் கொண்ட நண்பியொருத்தியின் நினைவு வந்தது. அவள் அந்தக் காகிதத்தை ஸ்கேனித்து அனுப்பியிருந்தாள். எதையோ வீட்டில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் காகிதம் தட்டுப்பட்டதாயும், ஒரு வருடத்திற்கு முன்பு என் பக்கத்தை மிகுந்த விருப்பங்களோடும், எரிச்சலோடும், கோபங்களோடும் படித்துத் திரிந்ததாயும் அவ்வப்போது பிடித்தவற்றை ஏதாவது ஒரு காகிதத்தில் எழுதி, எங்காவது தொலைத்து விடுவது வழக்கமானதெனவும் சொல்லியிருந்தாள். மிகவும் இணுக்கி இணுக்கி அந்த ஒரு பக்கத்தில் நான் எழுதிய வரிகள் எழுதப்பட்டிருந்தன. இணையம் அறிமுகமாவதற்கு முன்பு வரை நானும் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த வரிகளை / காட்சிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அதே வழக்கத்தைக் கொண்ட இன்னொருத்தி எழுதி வைத்துக் கொள்வது என் வரிகளாய் இருக்கிறதென்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

இம்மாதிரிக் குளிர் காலையில், தேநீரோடு, காட்சிகளை விழுங்கியபடி, பிடித்தமான நினைவுகளில் மூழ்குவதும் ஒரு கட்டத்தில் சலிக்கவே செய்கிறது. சலிக்கும் நொடிதான் இசை கேட்பதற்கான துவக்கம். இந்துஸ்தானியையும் கஜலையும் மென்மையாய் கசியவிடும்போது தயவு செய்து யாராவது என் மூளையில் இந்த இந்தி / உருது மொழியை ஏற்றிவிடுங்களேன் எனக் கத்த வேண்டும் போலிருக்கும். என்னால் ஏன் இம்மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரியவில்லை.

சென்ற வருடத்திற்கு முந்தின குளிர்காலத்தில் கராமாவிலிருந்தேன். விடுமுறை தினங்களில் சீக்கிரம் எழுந்து நடைக்குப் போவது வழக்கமாய் இருந்தது. குளிர் விரவிய தெருக்களில், பனி மூடிய அகலமான சாலைகளில் ஏதேனும் ஒரு விநோதப் பறவை தட்டுப் படலாம். அகலமான இறக்கைகளில் அடர் நீலத்தில் தூரிகையால் பட்டையாய் கோடிழுத்தது போன்ற தீற்றல் கொண்ட பறவையொன்றை இது போன்ற ஒரு நடையில்தான் பார்த்தேன். பின்பொரு பறவையின் முகம் கொண்ட சிறுமியையும் செம்பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணையும் அவ்வப்போது கடந்து போவேன். இருவரிடமும் கேட்காமலேயே விட்டுப் போன ஒரு கேள்வி என்னிடம் இருந்தது. உங்களை மனித உருவாய் போகக் கடவதென சபித்த பறவையின் பெயர் என்ன?

Tuesday, November 10, 2009

ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

மூன்று நாட்களாய் தொடர்ந்து மழை பெய்வதாய்
மின்னரட்டையில்
சகோதரர்
சொன்னார்
கேட்க மகிழ்வாயிருந்தது
மழையால் கிடைத்த விடுமுறைக்கு
குதூகலித்த மகளுடன்
நனைந்தபடி வீடு திரும்பிய
தாயொருத்தியின் பேச்சில்
ஈரமிருந்தது
தொடர்பிலிருந்த பெண்கவிஞர்கள் அனைவரும்
மழையால் இன்னும்
இளகியிருந்தனர்
அவரவர்களின் சமீபத்திய காதலனோடு
மழையையும் முத்தங்களையும்
பொருத்தி
தலா பத்து கவிதைகளை
எழுதிவிட்டிருக்கிறார்கள்
ஒவ்வொன்றாய்
அரட்டைப் பெட்டியில்
விழ ஆரம்பித்ததும்
பதறி வெளிவந்து
தூங்கிப்போனேன்
அதிகாலையில் தொலைபேசிய இவள்
தொடர்ச்சியான மழைக்கு இன்னும்
இவனது
வெண்பஞ்சுடல் தயாராகவில்லையென
வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்
கவிஞன்
மகனை மழையொன்றும் செய்யாது
என்கிற என் சமாதானங்கள்
அவளுக்குப் போதுமானதாய்
இருக்கவில்லை
படுக்கை விடுத்து
உயரமான திரைச்சீலையகற்றி
கண்ணாடிக் கதவு
வழியே
கட்டிடங்களுக்கு மத்தியில்
சிறிதாய் தென்பட்ட
வானம் என்கிற
வஸ்துவைப் பார்த்து
வாழ்வில் முதன் முறையாய்
அப்பாடலைக் கத்தினேன்
ரெய்ன் ரெய்ன் கோ அவே!!

Thursday, November 5, 2009

பவா வைப் பற்றி சில குறிப்புகள்

From தனிமையின் இசை

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர் காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

Tuesday, November 3, 2009

சிதைந்த நிஜமும் செழித்த நிழலும்

1

ஒழுங்குகள்/ ஒழுங்கீனங்கள் இவ்விரண்டிலும் என்னைப் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து, வருந்தி, கத்தி, புலம்பி நிகழைக் கொன்று கொண்டிருக்கிறேன். எல்லா உச்சத்தையும் எட்டியதாய் இறுமாந்தும், எல்லாவற்றையும் இழந்துபோனதாய் கதறியுமாய் நகர்கின்றன என் நினைவு மேகங்கள். நிறைவடையாது இருப்பதன் பெயர், நிறம், அடையாளம் என எதையும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவ் உணர்வின் தன்மை நான் அடிக்கடிக் கனவு காணும் நதியினடியில் துயிலும் தணிவாகத்தான் இருக்கும். மேலும் அதன் இயல்பே உயரமான பாறையின் மீதிருந்து குதித்துச் சிதறிப்போவதற்கு முன்பான விநாடியின் உடல் சில்லிப்பை /துடிப்பை ஒத்ததாய் இருக்கலாம். ஒரு மலை வீற்றிருப்பதுபோல் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்னுள் பதியனிட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அதன் தடத்தைப் பிடித்துவிடலாம். அதுவரைக்கும் இவ்வுழல்வுதான்.அதுவரைக்கும் இந்த போதைதான்.அதுவரைக்கும் இந்தக் கோபம்தான். அதுவரைக்கும் இந்தப் பைத்தியம்தான் அதுவரைக்கும் இந்த வெந்துச் சாதல்தான். அதுவரைக்கும் இதேக் கதறல்கள்தாம். புலம்பல்கள்தாம். வாந்திதாம். தாம்.. தாம்...தாம்… தாஆஆம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்.

இறுதி எது? உச்சம் எது? நிறைவு எது? எங்கடா இருக்கு எனக்கான வாழ்வு? : ஜோர்பா தி புத்தா : அடிசெருப்பால!

சமீபமாய் நான் நம்பிக் கொண்டிருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாய் உதிரத் துவங்குகின்றன. இது எனக்கு மட்டும் பிரத்யேகமாய் அவ்வப்போது நிகழும் ஒன்று. அதனாலேயே நம்பிக்கைகளின் கிளைகளை நான் எப்போதும் விரிப்பதில்லை. விரித்திராத கிளைகள் வேர்களுக்குள்தான் அடங்கியிருக்கின்றன. அல்லது நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்து கொண்டிருக்கும் வேர்களே விரிக்காத கிளைகளாவும் இருக்கின்றன. இப்பாதுகாப்பான, பத்திரமான, அதி ரகசிய, தகவலை தடம் பிடித்துவிடுபவர்களே எனக்கான பிரச்சினைகளாக உருமாறத் துவங்குகின்றனர். எல்லாவற்றையும் உதறவும் முடியாது /சுமக்கவும் முடியாது, விரும்பி/வெறுத்து, விலகி/நெருங்கி, எதிரெதிர் துருவங்களில் என்னையே பொருத்திக் கொண்டு இவ்விளையாட்டினை ஆடித் தீர்க்கிறேன். என் வாழ்வுச் சதுரங்க கட்டங்களில் நகரும் காய்களுக்கு எவ்வித குதூகலத்தையும் என்னால் தந்துவிட இயலாது. அதே சமயத்தில் எவ்விதத் துயரையும் தந்துவிடாதிருக்க மெனக்கெடுகிறேன். காய்கள் வெறுமனே நகர்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நகர்த்துபவர்கள் வெறுமனே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகத்தினையோ வருத்தத்தினையோ தந்துவிடாத ஒன்றை ஏன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்? என்பவர்களுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. இது இப்படித்தான் இருக்கிறது.

எந்த ஒன்றின் எச்சம் நான்? எதன் மிகுதி என்னை நீட்டித்திருக்கிறது? எதன் விருப்பம் என்னை இயங்கவைக்கிறது?: உண்மையின் உன்னத சங்கீதம் : முடியல!

2

மனிதர்கள் எவரும் தேவையில்லையென்கிற மனநிலை எப்போதெல்லாம் எனக்கு ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் எனது கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வேன். நெருக்கமான நண்பர்கள், அறிமுகமானவர்கள், தினம் பேசுவோர், அவ்வப்போது சந்திப்போர் என எல்லாரையும் வெளியே தள்ளி மிகக் குரூரமாய் கதவைச் சாத்திக் கொள்ளும் இந்தத் திமிர்தான் அந்நிய வாழ்வின் மூலமாய் நான் பெற்றுக்கொண்ட செல்வப்பயனாய் இருக்கிறது. எனது தலைமறைவு வாழ்வு இன்னொரு வகையில் மிகுந்த சுவாரஸ்யமானது. அலுவலகத்திலிருந்து எத்தனை சீக்கிரம் வரமுடியுமோ அத்தனை சீக்கிரம் வந்து எனது பொந்திற்குள் அடைந்து கொள்வேன் அறைக்கதவை எந்தக் காரணத்திற்கும் திறந்துவிடத் தேவையில்லாத வாழ்வாய் இருப்பதால் எனக்குப் பிடித்தமான நிழல் உலகத்திற்குள் என்னை மூழ்கடித்துக் கொள்வேன். புத்தகங்களில், திரைப்படங்களில் வாழும் வாழ்க்கைக்கான பின்புலம் மனிதர்கள் மீதிருக்கும் என்னுடைய அவ நம்பிக்கைகளாகத்தான் இருக்கின்றன.

கைவசமிருக்கும் கடைசிப் பணத்தையும் சாம்பலாக்கிவிட்டு நடையைக் கட்டிய In to the Wild கிறிஸ்தான் கடந்த மூன்று வாரங்களாக நினைவிலாடிக் கொண்டிருக்கிறான். இந்த நிலப்பரப்பை ஒற்றைப் பணமில்லாமல் நடந்து /கடந்து பயணிக்கும் வாழ்வு மிக அதிக வளைவுகள் கொண்டதாய் இருக்கக் கூடும். விநோதங்களை, அதிர்ச்சிகளை, பயங்களை, எதிர் கொள்ள வேண்டிவரும். எதிர்பாராமின்மை மட்டும் எப்போதுமிருக்கலாம்.

சுதந்திரத்தின் காற்றை அடர்ந்த வனங்களில் உள்ளிழுக்க முடிவதை, பயம் என்பதின் நிழலைக் கூடத் தொடாத வாழ்வினை, புதிய மனிதர்களை, புதிய வாழ்வை, உயிர்ப்பை கிறிஸ் முழுமையாய் துய்ப்பதைக் காணும்போது ஏற்படும் ஒப்பீடுகள் இதுவரைக்குமான என் இயங்குதலை அபத்தமாக்கின. என்னுடைய நமுத்த இவ்வாழ்வின் மீது திரை கிறிஸ் கனவில் காறியுமிழ்கிறான். கெக்கலித்துச் சிரிக்கிறான். நான் கூனிக்குறுகி அறையின் இருள் மூலைகளில் ஒண்டுகிறேன். அவனது சுதந்திரப் பீறிடல், உற்சாகப் பிளிறல் சுதந்திரத்தை வாய் ஓயாது முணுமுணுக்கும் என் போதாமையின் செவுளில் ஓங்கி அறைகிறது, நான் பலமிழந்து மூர்ச்சையாகிறேன்.

மாறாய் குவாண்டினின் Death Proof பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். பிறிதொரு பெண்கள் அதே சைக்கோவை துப்பாக்கியால் சுட்டு, கதறக் கதற, விரையும் காரினால் பின்பக்கமாய் முட்டி முட்டி, விரட்டி, வழிமறித்து, தடியால் மண்டையிலடித்து, மூஞ்சியில் மாறி மாறிக் குத்துவிட்டு, தரையில் வீழ்த்தி, அவன் முகத்தில் காலை தூக்கி வைத்துக் கெக்கலிக்கும்போது என் அறையிருளை இவ்வின்பம் விரட்டியடிக்கிறது. திருடன் சேமித்தப் பணத்தை திருடனுக்கும் போலிசுக்கும் தண்ணி காட்டி லபக்கும் பெண்ணின் சாதுர்யமும் கால் கால்சட்டையணிந்து, பைப் புகைத்தபடி, சதா டிவி பார்த்தபடி, இன்னொருவனை துரோகிக்க தூண்டி, சமயோசிதமாய் இருக்க வேண்டிய இடத்தில் வாய் ஓயாது பேசி, குண்டடி பட்டுச் செத்துப் போகும் இன்னொரு பெண்ணின் இளமைத் திமிரும் புன்முறுவலை வரவழைக்கின்றன. நல்லவை, உன்னதம், நேர்மை, தெளிவு, உண்மை, வரலாறு, நேர்க்கோடு என எல்லாவற்றையும் தலைகீழாக்கும் சிதைக்கும் குவாண்டின் மறைமுகமாய் அல்லது நேரடியாய் என்னை என் குற்ற உணர்வுகளிலிருந்து தப்ப வைக்கிறான்.

இன்குளோரியஸ் படத்தில் குவாண்டின் நிறுவியிருப்பதெல்லாம் அதிகாரத்தின் வரலாற்றை அதற்கு இணையான அல்லது அதைவிட பலம் வாய்ந்த அதிகாரத்தின் பக்கம் நின்று புனைவுகளின் துணைக் கொண்டு சிதைத்திருப்பதுதான். சமூகம், அறம் , முறம் என்றெல்லாம் யோசிக்காது அதிகத் திமிர்த்தனமாய், அதிக நேர்த்தியாய் ஒருவன் திரிந்தால் அவனை எல்லாருக்கும் பிடித்துத்தான் தொலைகிறது.

வரலாறுகளை விளிம்பின் பார்வையிலிருந்து மறு உருவாக்கம் செய்வதின் தேவைகளை எவர் நிறைவேற்றுவார்/புரிந்துகொள்வார் எனத் தெரியவில்லை. இதை ஓரளவு தேவ் டி யின் சந்தா பாத்திரம் செய்திருக்கிறது. இதுவரைக்கும் சொல்லப்பட்ட தேவதாஸ் கதைகளில் சந்திரமுகி ஊறுகாயாக மட்டும் தொட்டுக் கொள்ளப்பட்ட ஒரு வஸ்து. இதை தேவ் டி நிர்நிர்மாணம் செய்திருக்கிறது. சந்தா என்கிற சந்திரமுகி உருவாவதற்கு இந்த சமூக அமைப்புகள் குரூரத் துணை போவதை சரியாய் பதிவு செய்த படம் இது. பாலியல் தொழிலாளி என்கிற வெற்றுச் சொல் மட்டும் அவர்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கிவிடும் என அரசியலறிவாளர்கள் நம்புவதை சந்தா பாத்திரம் கிண்டலடிக்கும் இடத்தில் அவமானத்தில் கூனிக் குறுகினேன். கொலுசுகளின் சப்தங்களை மட்டும் கொண்டு முன் நகர்ந்து போகும் என் பிரியத்திற்குறிய சந்தா! என்னால் முடிந்ததெல்லாம் உன்னைச் சுமந்தலையும் இந் நாட்களை நீட்டிப்பது மட்டும்தான்....

Featured Post

test

 test