Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகத் தொடர்களில் பங்கு பெறுவது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. இவ்விளையாட்டுக்கள் பதிவுலகை ஆரோக்கியமாய் வைத்திருக்கின்றன என்றெல்லாம் சல்லியடிக்க விரும்பவில்லை. என்னைப் பற்றி நானே ‘டமாரம்’ அடித்துக் கொள்ள இத் தொடர்கள் மிகுந்த உதவியாய் இருப்பதால் இதில் நான் ஆர்வமுடன் பங்குகொள்கிறேன். இம்முறை என்னுடைய பதிவுலக வரலாறை எழுத தீபா அழைத்திருக்கிறார் அவருக்கு என் நன்றி.

அந்நிய வாழ்வில்தான் இணையத்தில் தமிழைக் காண முடிந்தது. இந்தியாவில் இருக்கும் வரை எனக்கும் கணினிக்கும் பெரிதாய் தொடர்பு ஒன்றுமில்லை. ”இரும்படிக்கிற பயல்!” என கணினியிடமிருந்து என்னைப் பிரித்து வைத்திருந்தனர். வீட்டில் வைத்திருந்த கணினியைப் பாட்டு கேட்கவும் படம் பார்க்கவும் மட்டுமே பயன்படுத்தினேன். மேலும் நாட்கள் ஒரு விதமான வழமைக்குப் பழகியிருந்தன.செய்து முடிக்கப்பட வேண்டியவைகள் மிகுதியாகவிருந்தன. எப்போதும் ஏதாவது ஒன்று காத்துக் கொண்டிருந்தது. இந்த அயல் வாழ்வில் வழமைகள் முற்றிலுமாய் மாறியதும் நிறைய இடைவெளிகள் உருவாகின. எதைக் கொண்டும் நிரப்பி விட முடியாத இடைவெளிகளாய் அவைகள் உருமாறத் துவங்கும் முன் என்னை இவ்வெளியில் திணித்துக் கொண்டேன்.

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் இது. இணையத்தில் முதலில் தமிழில் படித்த இடுகை சித்தார்த்தின் சொர்கத்தின் குழந்தைகள். கணினியில் தமிழைப் பார்த்த வியப்பை விட இத்திரைப்படம் குறித்தெல்லாம் எழுத ஆட்கள் இருக்கிறார்களா? என்கிற வியப்புதான் எனக்கு அதிகமாக இருந்தது. (அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம் இருந்தது.மேலும் அத்திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பே பார்த்துமிருந்தேன்.) பாசோலினி, குப்ரிக்கை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா ? என அறிவுஜீவித்தனமாய் அவருக்கு ஒரு மடலிட்டேன். சித்தார்த் உடனே தொடர்பு கொண்டு பேசினார். அவரின் மூலம் தமிழ்மணம், தேன்கூடு, வலைப்பதிவு என இவ்வுலகம் மெல்ல அறிமுகமானது.

தனிமையின் இசை என்கிற பெயருக்கு காரணங்கள் பெரிதாய் ஒன்றுமில்லை. நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லாம் ஒண்ணுங்கீழ ஒண்ணாய் சில வரிகளை எழுதியிராவிட்டால் கவிஞர் உலகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ? என்கிற லேசான பய உணர்வு என்னிடமிருந்ததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். ஆரம்பகாலத்தில் எழுதுவதை விட வாசிக்க அதிகம் பிடித்திருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஏராளமான புது எழுத்துக்களைப் பார்க்க முடிந்தது. சிற்றிதழ், வெகுசன இதழ் போன்ற பழகிய நமுத்த வாசமில்லாமல் வலை எழுத்துக்களில் ஒரு வித சுதந்திரத் தன்மையை, ஆசுவாசத்தை, குறைந்த போலித்தனத்தை உணரமுடிந்தது.

இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வெகு சன இதழ்களில் எழுதிப் புகழ்பெறுவதற்கான ஐந்தாண்டுத் திட்டங்களோடுதான் பெரும்பாலான வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன. வலைஞர்களுக்கு வெகுசன இதழ்களில் எழுவது எப்படி? என முகாமிட்டு சொல்லித் தருபவர்களும் இங்கு கிடைப்பதால் வருங்கால வெகுசன எழுத்தாள சந்ததிகளின் பெருக்கம் ஆரோக்யமானதாகவே இருக்கிறது. பலமான முதுகு சொறிதல்களும் பெருகிவருவதால் வலைப்பக்கங்களில் இரத்த ஆறு ஓடுவதாக புளகாங்கிதமடைந்து கொள்ளலாம். ஒரு மொக்கைப் படத்தை மொக்கை படமென்றே தெரிந்துகொண்டு, முதல் நாளே பார்த்து விட்டு, இந்தப்படம் மொக்கையாக இருக்கிறது என அவசரம் அவசரமாய் எழுதுவதைத்தான் முந்நூறுக்கும் அதிகமான தமிழ் வலைப்பக்கங்கள் செய்து கொண்டிருக்கின்றன என முன்பொருமுறை நண்பர் ஒருவர் சொன்னதற்காக அவருடன் அரை மணி நேரம் சண்டையிட்டேன். இப்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டுகிறார்.

புரியாத எழுத்து, கெட்ட வார்த்தைக் கவிதைகள் என இந்தப் பக்கம் ஆரம்ப காலத்தில் பெரும்பாலான சக பதிவர்களால் விமர்சிக்கப் பட்டது. சீனியர் கெட்ட வார்த்தைப் பதிவர்களிடம் உடனே நட்பு அல்லது அங்கீகாரம் கிடைத்ததும் அதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். இம்மாதிரியான முத்திரை அல்லது அடையாளம் தவிர்க்க நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்தன.ஆனாலும் உள்ளூர அவர்களுக்கு என் மீது அவநம்பிக்கைகள் இருந்ததைப் பிறிதொரு முறை தெரிந்து கொள்ள முடிந்தது.

எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையுமில்லை.கீதைக்கு விளக்க உரை எழுதுபவன் சரக்கடிக்க கூடாதென்றும், சரக்கடிப்பதைப் பற்றி எழுதுபவன் கீதை படிக்கக் கூடாதென்றும் எதுவுமில்லை. இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல. அவனின் பிம்பங்களை நோண்டி நுங்காகாமல் தன்னையும் தான் வாசிப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வது படிப்பவனின் கையில்தான் இருக்கிறது.

மாசோசிஸ்ட், நார்சிஸ்ட், சைக்கோபதிக் என வலையில் ஏராளனமான பிம்பங்களிருக்கின்றன. இந்த நார்சிஸ்ட் பிரிவில் என்னையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பலரிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. உன்னத மனிதர்கள், அற்ப மனிதர்கள் என அறிமுகமானவர்களை என் நம்பிக்கையளவில் தரம் பிரித்துக் கொண்டு இருவரிடமிருந்தும் விலகி வாழ்வதுதான் எனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

சுகுணாவிடம் மாய்ந்து மாய்ந்து சண்டையிட்டது, தமிழச்சியைத் திட்டி வாங்கிக் கட்டிக் கொண்டது,ஜெமோ சாரு இவர்களை அவ்வப்போது கிண்டலடித்தது போன்ற சாகசங்கள்தான் வலை வாழ்வில் உடனே நினைவுக்கு வருகின்றன. மேலும் தூக்கம் வராத மிக அழுத்தமான இரவுகளில் என்னுடைய சில வரிகளை, சில கவிதைகளை, சில கதைகளை, சில வார்த்தை ஜாலங்களை மீண்டும் மீண்டும் படிக்கப் பிடித்திருக்கிறது. “இத நீதான் எழுதினியா கண்ணா!” என புளகாங்கிதமடைந்து கொள்ள முடிகிறது. “எவ்ளோ மொண்ணையா எழுதியிருக்கடா!” என சத்தமாய் சிரித்துக் கொள்ள முடிகிறது.

இதை வேரெது அல்லது வேறெவர் எனக்குத் தந்துவிட முடியும்?

இத்தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்…

தமிழ் நதி
லேகா
உமாசக்தி
ரெளத்ரன்

30 comments:

இரவுப்பறவை said...

அழகான நினைவுகள் தான்...

Anonymous said...

அழகாய் கோர்வையான நினைவுச்சிதறல்கள் அய்யனார்.

பாலா said...

கொசுவத்தி சுத்தறதே தனி சுகம்தான்ல அய்யனார் ??

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:)

இளவட்டம் said...

///“எவ்ளோ மொண்ணையா எழுதியிருக்கடா!” என சத்தமாய் சிரித்துக் கொள்ள முடிகிறது///.

ஒத்துகிட்டா சரிதான்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல. அவனின் பிம்பங்களை நோண்டி நுங்காகாமல் தன்னையும் தான் வாசிப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்வது படிப்பவனின் கையில்தான் இருக்கிறது

அழகான வரலாறு :))

யாழினி said...

//"எழுத்துக்கும் வாழ்வினுக்கும் அதிக இடைவெளி இருக்கலாம் அல்லது இருக்கத் தேவையுமில்லை.கீதைக்கு விளக்க உரை எழுதுபவன் சரக்கடிக்க கூடாதென்றும், சரக்கடிப்பதைப் பற்றி எழுதுபவன் கீதை படிக்கக் கூடாதென்றும் எதுவுமில்லை. இப்படி எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல"//
ஒவ்வொரு எழுத்தாளர்களும் உண்மையை உரக்க சொல்லுகிறவர்கள்..!
தன்னுடைய பின்னணியை யாருக்கும் நிருபிக்க அவசியமற்றவர்கள். ..!
அழாகன சொற்கள் கொண்டு ஆழமான அருமையானதொரு படைப்பு
வாழ்துகள்பா!!

கோபிநாத் said...

அய்ஸ் முதல்ல விதிமுறைகளை ஒழுங்க படிங்க.!

சென்ஷி said...

//எழுதுபவன் இப்படித்தான் இருப்பான் என்கிற நம்பிக்கைகள் படிப்பவனுக்குத்தானே தவிர எழுதுபவனுக்கல்ல"//

:)

Ragavan said...

அன்பு அய்யனார் அவர்களுக்கு,

“புனைவுகளே வரலாறாய்....” எனக்கு ஒரு பயத்தை கொடுக்கிறது. நிறைய வலைப்பதியங்களை படித்து விட்டு நானும் ஏதாவது எழுதலாமே என்று சூடு போட்டு கொண்டு விட்டோமோ என்று ஒரு நியாயமான பயம். சில வலைப் பதியங்களில் (பதியங்கள் சரியான பிரயோகம் என்று நினைக்கிறேன்..) வரும் நேரடி அனுபவங்கள், எதிர்மறையான கருத்துக்கள், பார்வைகள், விமர்சனங்கள், பிடரி சிலுப்பல்கள், உலக சினிமா, கதைகள், கவிதைகள், எச்சங்கள், அகழ்வு ஆராய்ச்சிகள் உண்மையாகவே என்னை தெரிந்தோ தெரியாமலோ எழுத தூண்டி இருக்கிறது. எனக்கு வாய்க்கிறதா என்றால் தெரியாது, ஆனால் எழுதத் தோன்றுகிறது, அதன் வரையில் இதை ஒரு பிரகடனமாகவே சொல்லிக்கொள்கிறேன். நாளாக, நாளாக இது ஆரோக்கியமான வியாதியாகி விட்டது.

மற்றபடி உங்கள் எழுத்து நடை எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

ராகவன்..

நேசமித்ரன் said...

தங்கள் எழுத்தில் எப்போதும் இருக்கும் நேர்மை , எதை எழுதினாலும் குறையாத மொழியின் கம்பீரம் -பன்முகத்தன்மையை மிக எளிய சொற்களில் கொண்டுவரும் லாவகம் ,எலா இசங்களையும் தொட்டுப் பார்த்தாலும் அடிசரடாய் ஒளிர்ந்தபடி நகரும் நேயம் .தண்ணீர் ஒன்றுதானே லேபில் போட்டு பேர் வைத்துவிட்டால் மாறி விடுமா ?

இந்தப் பதிவு மிக அணுக்கமாய் உணரச் செய்கிறது அய்யனார் .ஒரு வேளை இந்த வரிகளில் காத்திரமாய் இருக்கும் சுய எள்ளல் என்னையும் சுட்டிருக்கிறதும் காரணமாய் இருக்கலாம் .

:)

தமிழன்-கறுப்பி... said...

அய்யனார் றொக்கிங்ஸ்..

:))

ஆயில்யன் said...

//.நிலா,மழை,தனிமை,பெண்,கண்,பாதம் என இவைபற்றியெல்லாம் ஒண்ணுங்கீழ ஒண்ணாய் சில வரிகளை எழுதியிராவிட்டால் கவிஞர் உலகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ? என்கிற லேசான பய உணர்வு என்னிடமிருந்ததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்./

:)

தமிழ்நதி said...

ஏற்கெனவே சிநேகிதி கூப்டாச்சு. இந்த ஆட்டத்துக்கு வருவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்களும் கூப்பிட்டிருக்கிறீர்கள். வந்தாப் போச்சு.

ரௌத்ரன் said...

ம்ம்..செய்றதெல்லாம் செய்ய வேண்டியது...அப்புறம் காந்தி செத்துட்டாரான்னு கேக்க வேண்டியது :)

ஃப்ளாஷ்பேக் நல்லாருந்தது அய்யனார்...

குசும்பன் said...

//நண்பர்கள், கும்மிகள், கிண்டல்கள் உதவியாய் இருந்தன.ஆனாலும் உள்ளூர அவர்களுக்கு என் மீது அவநம்பிக்கைகள் இருந்ததைப் பிறிதொரு முறை தெரிந்து கொள்ள முடிந்தது.//

ஆஹா எங்களை ஊறுகாயா யூஸ் செஞ்சு இருக்க...

குசும்பன் said...

//அப்போதெல்லாம் எனக்குப் பெரிய புடுங்கி என்ற எண்ணம் இருந்தது.//

இப்ப ராசா?

//மாசோசிஸ்ட், நார்சிஸ்ட், சைக்கோபதிக் என வலையில் ஏராளனமான பிம்பங்களிருக்கின்றன//

மோவோயிஸ்ட் தெரியும், நக்சலைட் தெரியும் இது எல்லாம் என்ன ராசா?

வால்பையன் said...

நல்லாயிருக்கு உங்க வரலாறு!

குப்பன்.யாஹூ said...

அருமை அய்யனார்.

உங்களோடு சேர்த்து நானும் லேகாவை இந்த தொடருக்கு அழைக்கிறேன்

பதிவு உலகமும் தமிழ் திரைப் படக் களம் போல தான். எல்லாரும் பாலு மகேந்திரா, பாரதி ராஜாவாக இருக்க வேண்டுமா, இங்கும் பேரரசு, கே எஸ் ரவிக்குமார்கள் உண்டு. vendum.

Ayyanar Viswanath said...

நன்றி இரவுப்பறவை

நன்றி சின்ன அம்மிணி

ஆமாம் பாலா

நன்றி செந்தில்

இளவட்டம் :)

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி யாழினி

கோபி எல்லாரும் ஒரு வழின்னா நாம ஒரு வழி :)

நன்றி சென்ஷி

Ayyanar Viswanath said...

ராகவன்
இந்த பயம் ஆரோக்கியமானதுதான் ஆனால் அதை அப்படியே விட்டுவிடவேண்டாம். பயத்தை உங்கள் எழுத்துக்களால் புன்னகையாய் மாற்றுங்கள்.

நேசமித்ரன் நெருக்கமான புரிதல்களுக்கு மிக்க நன்றி

தமிழன்
கிண்டலா :)

நன்றி ஆயில்யன்

Ayyanar Viswanath said...

சீக்கிரம் வாங்க தமிழ் :)

ரெளத்ரன் காந்தி செத்தது தெரியாதே :)

குசும்பர் உதவிய உங்க ஊர்ல ஊறுகாய்னு சொல்வாங்களா :@
கூகுல்ல தேடுய்யா

நன்றி வால்பையன்

நன்றி ராம்ஜி

யாத்ரா said...

//வலை உலகம் ஏராளமான மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பலரிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. உன்னத மனிதர்கள், அற்ப மனிதர்கள் என அறிமுகமானவர்களை என் நம்பிக்கையளவில் தரம் பிரித்துக் கொண்டு இருவரிடமிருந்தும் விலகி வாழ்வதுதான் எனக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.//

இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

காமராஜ் said...

ரொம்பத் தீர்க்கமான நினைவும் எழுத்தும்.
கீதை, சரக்கடிப்பது இந்த காயினேஜ் அபாரம்.
ரொம்பப் பொறாமையா இருக்கு. அய்யனார்.
எதுவும் இழிவில்லை எதுவும் புனிதமில்லை.

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பே அழகா இருக்கே அய்ஸ் :)

DJ said...

/இந்த உணர்வு இப்போது மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வெகு சன இதழ்களில் எழுதிப் புகழ்பெறுவதற்கான ஐந்தாண்டுத் திட்டங்களோடுதான் பெரும்பாலான வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன/
அப்ப‌டித்தான் என‌க்கும் ப‌ல‌முறை தோன்றிய‌து. வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுதுவ‌துதான் உய‌ர்ந்த‌ இல‌ட்சிய‌ம் என்று வ‌ருப‌வ‌ர்க‌ளை அவ‌ர‌வ‌ர்க‌ளின் தெரிவு என் விட்டுவிட‌லாம். ஆனால் அத‌ற்காய் இத்த‌கை ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் எல்லாம் செய்ய‌த்தேவையில்லை :-)

Bala said...

திரு. அய்யனார்,

எப்படி ஒரு நடிகனால் அரிதாரம் பூசமல் தன் சுய முகத்துடன் தன்னை வெழிப்படுதிகொள்ள முடியதோ, அதேபோல் தான், ஒரு தனி மனிதனாலும் தன்னை முழுமையாக ஒளிவுமறையின்றி தன் குணதிசியங்களை வெளிக்கொனற முடியதென்பது என் திண்ணமான எண்ண்மாக என்றுவரை இருந்தது......

தங்கள் பதிவில் குருப்பிட்டதைப் போல்....
எழுதுபவனின் எழுத்தோட்டமோ அல்லது எழுத்தின் சிந்தனை ஓட்டமோ எழுதுபவனின் உண்மையான உள்த்தோற்றத்தை வெழிப்படுத்தக்கூடியதல்ல.... என்பதை கோர்வையான நினைவுச்சிதறல்களால் நன்குணர்த்தியதியதை.... ரசித்தேன்....

பா.ராஜாராம் said...

வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எவ்வளவு அழகாய் இருக்கு அய்யனார்!கீதையும் சரக்கு மேட்டரும் வரும்போது சீட் நுனிக்கு வந்துட்டேன்.அங்கிருந்துதான் படம் ஸ்டார்ட் ஆகுதுண்ணே.(ஹி..ஹி..நம்ம படம்.)

பா.ராஜாராம் said...

வெளிப்படையா பேச,வெளிப்படையா எழுத,வெளிப்படையா வாழ,எவ்வளவு அழகாய் இருக்கு அய்யனார்!கீதையும் சரக்கு மேட்டரும் வரும்போது சீட் நுனிக்கு வந்துட்டேன்.அங்கிருந்துதான் படம் ஸ்டார்ட் ஆகுதுண்ணே.(ஹி..ஹி..நம்ம படம்.)

selventhiran said...

டாப் கிளாஸ்!

Featured Post

test

 test