Wednesday, September 9, 2009

சுய ‘நலம்’

காற்று மணலில் கீறிச் செல்வது போல், நதியில் சூரியனின் வண்ணங்களை மினுமினுத்தபடி பயணிக்கும் நீர்க்குமிழி போல தற்காலிக வசீகர உறவுகள் அமைவதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருப்பதில்லை. நிரந்தரத் தன்மையின் மீதிருக்கும் பிடித்தம் மற்றும் “என்றென்றைக்குமான" “ஏழேழு ஜென்மத்துக்கும்” என்பன போன்ற நாடக வாசகங்களின் மீதிருக்கும் நம்பிக்கைகள் ஏகப்பட்ட பொய்களோடு எல்லா உறவுகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் மீதான பயங்களே நிரந்தரம் என்கிற போலிச் சொல்லினை மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒன்று நிரந்தரமாக இருக்கத் தேவையில்லையோ அதை நாம் மிகச் சுதந்திரமாக அணுகுகிறோம். இஃதெனக்கு நிரந்தரமாய் இருக்கத் தேவையில்லை என்கிற எண்ணத்தோடு ஒன்றை அணுகுவது அதன் மீதான வீண் பயங்களையும் அவசியமில்லா நமது நாடக அணுகுமுறைகளையும் குறைக்கிறது.

திருமணம் என்கிற நிர்பந்தமில்லாது ஒரு பெண்ணை/ ஆணை க் காதலிப்பது மிகச் சுதந்திரமான செயலாய் இருக்கக்கூடும். அந்தக் காதலில் மிக அதிக நேர்மையையும் தடம் பிடிக்கலாம். போலிச் சமூகத்தின் காவலர்களுக்கும் மீட்பர்களுக்கும் இஃதொரு அதிர்ச்சியூட்டக்கூடிய செயல்தான் என்றாலும் அவர்களை எவையெல்லாம் அதிர்ச்சியூட்டுகின்றனவோ அவையே உன்னதங்களாக இருக்கக் கூடும்.

உதிரி வாழ்வு மற்றும் நாடோடித் தன்மை கொண்ட வாழ்வியல் அணுகுமுறைகளின் மீதெல்லாம் மிகுந்த விருப்பங்கள் இருக்கிறதென்றாலும் அவற்றை எதிர் கொள்ளும் துணிவு மட்டும் விருப்பத்தின் தொடர்ச்சியாய் உதிப்பதில்லை. மிதமான வெளிச்சத்தில் மெல்லிதாய் இசை கசிந்து கொண்டிருக்க பேரழகுப் பெண்கள் ஊற்றித் தந்த எரியாத மதுவினை உறிஞ்சியபடி “இயந்திர வாழ்க்கை” “செம்ம போர்” “I HATE” “I H A T E this fuckin life” “LIFE sucks” என விதம் விதமாய் வாழ்வு அலுப்பதாக நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். நானும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் என்றாலும் வாழ்வு வார்த்தையில் மட்டும் அலுக்கும் போலித்தனத்தை, வார்த்தையாய் உச்சரிக்கும்போதே உணர்ந்து கொண்டு சத்தமாய் சிரித்து விட முடிகிறது.

ஒரேயடியாய் வாழ்வை அற்பத் தளத்திலிருந்து உண்மைத் தளத்திற்கு நகர்த்திவிட முடியாதுதான் என்றாலும் மெதுமெதுவாய் நகர்ந்து போய்விட வேண்டும். எது உண்மைத் தளம் என்பதையெல்லாம் விவரிக்கத் துவங்கினால் அது மிக நீளமான விவாதத்திற்கு கூட்டிச் செல்லுமென்பதால், உண்மை என்பதை நாடகத்தனமாக இப்படிச் சொல்லலாம் “எங்கெல்லாம் நடிப்புகள் தேவையில்லையோ, எங்கெல்லாம் மிகைகளும் பூச்சுகளும் அவசியமில்லையோ, எங்கெல்லாம் எளிமையான அன்பு சாத்தியமாகிறதோ, எங்கெல்லாம் சுயநலம் குறைவாய் இருக்கிறதோ, அங்கெல்லாம் உண்மைத் தன்மை இருக்கிறது.”

சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டையுமே சூழலும் சுயநலங்களும்தான் தீர்மானிக்கின்றன. நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் பொய்க்கும்போது இரண்டாலுமே நாம் பழிவாங்கப்படுகிறோம். வலிகள், காயங்கள், ஏமாற்றங்கள் என எல்லாவற்றுக்குமான அடிப்படை நிறமிழக்கும் நம்பிக்கைகளாக இருக்கின்றன. குற்ற உணர்ச்சி,கழிவிரக்கம் போன்றவைகளுக்கான பின்புலம் பொய்க்கும் அவநம்பிக்கைகளாக இருக்கின்றன. அடுத்தவர் மீதான நமது நம்பிக்கைகள் எப்போது பொய்க்கின்றனவோ அப்போதே புன்னகையுடன் விலகுவதும், பிறவற்றின் மீதான நம்முடைய அவநம்பிக்கைகள் நீர்த்துப் போகும் புள்ளியில் அதற்காக வருந்துவதும்தான் ஓரளவிற்கு நேர்மையான செயலாக இருக்க முடியும். எவ்விதத் தீர்மானங்களும், முன்முடிவுகளும் இல்லாமல் உறவுகளை, சக மனிதர்களை எதிர்கொள்வதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனித உயிரும் சுயநலத்தால் நிரம்பியதுதான். மேலும் அதில் தவறெதுவும் இருப்பதாகப் படவில்லை. தானொரு முழுமையான சுயநலவாதி என்பதை புரிந்துகொள்வது தன்சார்ந்த மிகைகளையும், அனைவரும் சுயநலமிகள் என்கிற புரிதல்கள் பிம்ப உருவாக்கங்களையும் தனிநபர் துதிக்களையும் அடிவருடித்தனங்களையும் சிறிது குறைக்கலாம்.சுயநலத்தை ஒத்துக் கொண்டால் ஏமாற்றம், துரோகம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமுமிருக்காது. நாளையடைவில் நட்பு, அன்பு, தோழமை என்கிற வார்த்தைகளும் நீர்த்துப் போகலாம். அதனாலென்னக் குடிமுழுகிவிடப் போகிறது? இது போன்ற வார்த்தைகள் இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். அடுத்த விநாடியைக் கூட தயாரித்தல்களோடு எதிர்கொள்ளும் குரூரமான வாழ்வைத்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...