Monday, August 17, 2009

சமவெளி மான்


1
பாசியில் நழுவும்
விலாங்கு மீனாகவும்
நீள்தெரு வளைவில்
பளிச்சிட்டு மறையும்
முதுகாகவும்
ஒவ்வொரு முடிவிலிருந்தும்
கிளைக்கும் பாதையாகவும்
அது இருந்தது
வெய்யிலின் தகிப்படங்கியிரா
பிறிதொரு நாளின் மாலையில்
இருவரும் சேர்ந்து
அதைத்
துடிக்கத் துடிக்கக்
கொன்றோம்.

அங்கையற்கன்னியுடன் சங்கமேஸ்வரன் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருக்கைக்கு வலது புறமாய் சன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த சாய்விருக்கையில் அமர்ந்தபடி சீஷா புகைத்துக் கொண்டிருந்தேன். இப்புகைத் தேநீர் விடுதி கான் அப்துல் கபார் சாலையின் முடிவிலிருக்கிறது. வழமை தவறாமல் தினம் காலைப் பதினோரு மணிக்கு இங்கு வர இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்விடுதி நகரின் மய்யத்திலிருந்தாலும் நெரிசல் கண்ணில் படாதவாறு நான்கு சிவப்பு குல்மோஹர் மரங்கள் சன்னல்களைப் போர்த்தியிருக்கின்றன. இரண்டு, பெரும்பாலும் கவ்வாலியும் எப்போதாவது வார்த்தைகளற்ற ஷெனாய் இசையும் மூங்கில் வேய்ந்த கூரையிலிருந்து கசிந்து கொண்டிருக்கும். மேலும் எனக்கானச் சரியான வாசத்துடனான கமறாத கலவையை இங்கிருக்கும் பணிப்பெண் தெரிந்து வைத்திருப்பதும் இன்னொரு முக்கிய காரணம்.

காலைப் பதினோரு மணி வெயிலுக்கான உற்றத் தோழன் காகமாகத்தான் இருக்க முடியும். குல்மோஹரின் சிறு கிளைகளில் அமர்ந்தபடி குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு மூன்றுக் காகங்கள் குரலெழுப்பிக் கொண்டிருக்கும். ஷெனாய் இசைக்கு இடைவெட்டாய் கேட்கும் காகத்தின் கரைச்சலும் என்னுடைய உடலின் லேசான மிதப்பும் சமவெளிகளில் திரியும் மானின் மனநிலைக்கு என்னைக் கொண்டுச் செல்லும்.

பதினைந்து நாட்களுக்கு முன்பு காக்கை நாடி சோதிடர் ஒருவரை மத்தலாங்குளத் தெரு அரசு மதுக்கடையில் சந்தித்தேன். கையில் மிக மோசமான போதையைத் தரக்கூடிய கால் புட்டி வஸ்து ஒன்றுடன் எனக்கு சமீபமாய் வந்து நின்றார். தொண்டையை லேசாய் கனைத்துக் கொண்டு புட்டியின் மூடியைத் திறந்து 110 டிகிரியில் உடலைச் சாய்த்து அவ்வஸ்தை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். பின்பு சம நிலைக்குத் திரும்பி தலையை உலுக்கிக் கொண்டார். இரத்தச் சிவப்பிலிருந்த விழிகளில் உருட்டி உருட்டி என்னைச் சற்று நேரம் பார்த்து விட்டு “நீயொரு சமவெளி மான்” என்றார்.

2


சங்கமேஸ்வரன் என்னருகில் வந்து காதில் சொன்னான்.

“நீங்களொரு சமவெளி மான்”

“என்ன?”

“நீங்களொரு சமவெளி மான்”

“எப்படித் தெரியும்?”

“சென்ற வாரத்தில் அங்கையற்கன்னியும் நானும் கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களுக்கு சென்றிருந்தோம்.கானகத்தில் வழி தப்பிய அவள் நினைவு மயங்கி எங்கேயோ கிடந்திருக்கிறாள். அவளையொரு சமவெளி மான் தன்னுடலில் சுமந்து என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.அச்சமவெளி மானின் முகம் உங்களைப் போலவிருந்தது”

“அதை நான் பார்க்க முடியுமா?”

“தெரியவில்லை.ஆனால் மீண்டும் நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை.
மீண்டும் அங்கையற்கன்னியைத் தொலைக்க நான் தயாரில்லை”

அங்கையற்கன்னி தன் கைப்பையிலிருந்து கையகலக் கண்ணாடி ஒன்றை எடுத்து வந்து என் முகத்தினுக்கு முன்னால் காண்பித்தாள்.“அந்தச் சமவெளி மான் இப்படித்தான் இருந்தது.”கண்ணாடியில் தெரிந்தது அங்கையற்கன்னியின் முகம்.

3

காக்கை நாடி சோதிடர் மலர்செல்வியிடம் அழுது கொண்டிருந்தார்.

“அவன் சமவெளி மான்தான்”

“யார்?”

“இன்று சந்தித்தவன்.பெயர் தெரியவில்லை.ஆனால் அவன்தான் சமவெளி மான்”

“சரி சாப்பிடுங்க”

“நீயொரு குழிமுயல் தெரியுமா?”

“தெரியும்”

“நானொரு நரி”

“அப்படியா?”

“ஆம் குள்ள நரி”

“சரி இருக்கட்டுமே”

“குள்ள நரி முயலுடன் சம்போகிப்பது குள்ள நரியின் அதிர்ஷ்டமாக இருக்கலாம் ஆனால் முயலுக்கு நரகம்தானே?”

“நிறைய குடிச்சீங்களா?”

“நீ பேசாம அவனை காதலி.அவன்தான் உனக்கு சரி”

“வேண்டாம்”

“தெருவில் கிடக்கும் கருங்கல்லை தூக்கி வந்து என் தலையில் போட்டுக் கொன்றுவிட்டு அவனுடன் போய்விடு”

“உளறாம சாப்பிட்டுப் படுங்க”

“மலர்”

“ம்ம்”

“உன்னைவிட நான் பதினைந்து வயது பெரியவன்”

“அதனால என்ன”

“உன்னைவிட ஐந்து வயது சிறியவனான அவனோடு சம்போகித்து என்னைப் பழிதீர்!”

“போதும் தூங்குங்க”

4

சங்கமேஸ்வரனும் நாடி சோதிடனும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அங்கையற்கன்னி மலர்செல்வியின் கன்னத்தோடு கன்னம் ஒட்டி பக்க வாட்டில் அணைத்துக் கொண்டாள். நாடிசோதிடன் மலர்செல்வியின் பாதங்களில் முத்தமிட்டான். அங்கையற்கன்னி சங்கமேஸ்வரனை கீழே தள்ளி அவன் மீதமர்ந்தபடி அவனின் கால் சட்டைப் பொத்தான்களை லேசான வெட்கத்தோடும்,விரகத்தோடும் விடுவிக்கத் துவங்கினாள். மலர்செல்வி சமவெளி மானைப் பற்றிய கனவில் மூழ்கினாள். சமவெளி மானாகிய நான் அங்கையற்கன்னியின் உடலை சுமந்து கொண்டு பள்ளத் தாக்குகளில் அலைந்தேன்.

5

இன்று காலை பதினோரு மணிக்கு முன்னதாகவே வந்துவிட்டேன்.புத்தா பார்-III ஒலித்தது. எனக்கு வழமைகளை மாற்றப் பிடிப்பதில்லை. பணிப்பெண்ணைக் கூப்பிட்டு மாற்றச் சொன்னேன். அவள் ஒரு யுவதியினை நோக்கி விரல் நீட்டி அவளின் விருப்பம் அவள் கொண்டு வந்த இசைத் தகடு என்றாள்.நான் அவளின் இருக்கைக்குப் போனேன்.

“இந்த இசை எனக்குப் பிடிக்கவில்லை”

“அதனாலென்ன. எனக்குப் பிடித்திருக்கிறது”

“நல்லது “

நான் திரும்ப வந்து என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.சற்று நேரம் கழித்து அவள் என்னருகில் வந்து சொன்னாள்.

“நீங்களொரு சமவெளி மான்”

நான் புன்னகைத்தேன். போய்விட்டாள்.

வழக்கமான நேரத்திற்கு சங்கமேஸ்வரனும் அங்கையற்கன்னியும் வந்து சேர்ந்தார்கள். அங்கையற்கன்னி எனக்காய் வந்து என் முகத்தினை வருடினாள். முதுகினை வருடினாள். என்னுடலை இறக்கிவிடுங்களேன் என மண்டியிட்டு அழுதாள். முடியவில்லையென நானும் அழுதேன். காக்கை நாடி சோதிடனும் மலர்செல்வியும் வந்தனர். எங்களிருவரின் கேவல் தாங்காது சோதிடனும் அழ ஆரம்பித்தான். சங்கமேஸ்வரனுக்கு ஏனோ சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. மலர்செல்வி புரியாமல் விழித்தாள். சங்கமேஸ்வரன் திடீரெனக் கத்தினான்

“அய்யனார் நீங்களொரு சமவெளி மான்!”

மலர்செல்வி திடுக்கிட்டாள்.பரபரப்பின் உச்சத்தில் அவள் இதயம் துடிக்க ஆரம்பித்தது. முதன்முறையாய் சமவெளி மானைப் பார்த்தாள். பின்பு மிகுந்த சினத்துடன் தன் இடுப்பில் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை வெளியெடுத்து முதலில் அங்கையற்கன்னியினை நோக்கிச் சுட்டாள். அருகில் அழுது கொண்டிருந்த சோதிடனின் நெற்றிப் பொட்டில் அடுத்த குண்டு பாய்ந்தது. ஓட ஆரம்பித்த சங்கமேஸ்வரனின் பின்னந்தலையில் அடுத்த குண்டு. மூவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இரத்தம் அந்தத் நேநீர் விடுதியின் தரைகளில் திட்டுத் திட்டாய் தேங்கி நின்றது. மலர்செல்வி சமவெளி மானை அள்ளியெடுத்து திட்டாய் தேங்கியிருந்த இரத்தத்தில் முக்கினாள். பின்பு இரத்தம் தோய்ந்த அச் சமவெளி மானைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு குல்மோஹர் மரத்தடி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...