Thursday, August 6, 2009

தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான்


அப்பாஸ் கைரோஸ்டமியின் A taste of cherry யைச் சென்ற வார இறுதியில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடித்த பின்பு ஒரு சம நிலையின்மையை, ஒரு பதட்டத்தை என்னால் உணர முடிந்தது. மீதியிருந்த இரவு சப்பணமிட்டு என் எதிரில் அமர்ந்து கொண்டது. ஈரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எனக்குத் தந்ததெல்லாம் அமைதியின்மையே. இதுவரை பார்த்திருந்த எல்லா ஈரானிய படங்களும் ஏதோ ஒரு வகையில் என் சம நிலையைக் குலைத்துவிட்டே போயிருக்கின்றன. அப்பாஸ் கைரோஸ்டமி, மஜித் மஜிதி, Makhmalbaf, என மிகச் சிறந்த கலைஞர்களை கொண்ட களமாக ஈரானிய சினிமா இருக்கிறது. சினிமா என்பற்கான வரையறுக்கப்பட்டப் பொதுக் கூறுகளை ஈரானிய சினிமா களைந்துவிடுவதாலோ என்னவோ பொதுக் கூறிலேயே உழன்ற சாதாரணப் பார்வையாளர்களை இவை வசீகரிப்பதில்லை. பின்னணி இசையைக் கூட முற்றாய் தவிர்த்தவையாகத்தான் அப்பாஸின் படங்களிருக்கின்றன.

அப்பாஸின் the wind will carry us ஐ இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, விறுவிறுப்பு போன்ற வஸ்துக்கள் எதையும் திணிக்காமலேயே ஒரு மிகச் சிறந்த திரையனுபவத்தை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதற்கு அப்பாஸின் திரைப்படங்களை உதாரணமாய் சொல்லலாம்.இவரின் பெரும்பாலான படங்களில் கதை என்று தனியாய் எதுவுமிருக்காது. ஏதாவது ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு நிகழ்பவற்றை அச்சூழலின் இன்னொரு கண்கொண்டு பார்ப்பதுபோல பதிவிப்பதுதான் இவருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சம்பவங்களை நிகழ்த்தாது தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதுபோன்ற ஒரு மன நிலையை பார்வையாளனுக்குக் கடத்துவதுதான் இவரின் அணுகுமுறையாக இருக்கிறது.

இன்றளவும் காட்சிகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் திரையில் நிகழாது பார்வையாளனிடம் நிகழ்வதுதான் தூய சினிமாவின் சாத்தியங்களாக இருக்கின்றன.

தற்கொலைச் செய்து கொள்ள முடிவெடுக்கும் தருணம் மிகக் குரூரமானதாக இருக்கக் கூடும். இழப்பை, துயரை எதிர்கொள்வதை விட அதற்குப் பின் வரும் நாட்கள் மிகுந்தச் சிரமமானவை. இயல்பாய் வாழ விடாதவை. நினைவில் மிகும் இழந்தவை குறித்தானத் தொடர்ச்சியான எண்ணங்களே தன்னை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கத் தூண்டுபவயாகவும் இருக்கலாம். தன்னுடைய சவக் குழியில் தானே போய் படுத்துக் கொள்ளும் அவலம் எதன் மூலமும் பகிரமுடியாதது. இவ்வுலகில் ஒற்றையனாய் வாழ்வதன் துயரத்தை இத் திரைப்படம் பேசுகிறது. தனிமனிதனின் இழப்பென்பது நட்பு, கடவுள், மனிதம், போதனை, அறம் என பிற எந்த ஒன்றினாலும் ஈடு செய்து விட முடியாதது. இழப்பு எப்போதும் இழப்பாகத்தான் இருக்கிறது.

பிரதான கதாபாத்திரம் தன்னுடையப் பிணத்தை புதைக்க ஒரு நபரைத் தேடி படம் முழுவதும் அலைவதுதான் இத்திரைப்படத்தின் கதை. இக்கதாபாத்திரத்தின் சிக்கல் இதுவரை நான் கண்டிராதது. தன்னுடைய இழப்புகளுக்கான காரணத்தையோ குற்றச் சாட்டுகளையோ நீதிதவறலையோ இக்கதாபாத்திரம் முன்வைப்பதில்லை. தான் எதற்காக தற்கொலை முடிவினுக்கு வந்தோமென்பதைக் கூட இப்பாத்திரம் சொல்வதில்லை. ஆனால் இப்பாத்திரம் தன் உடல் மண்ணோடு புதைய வேண்டுமென விரும்புகிறது. மிகுந்த அன்போடு தன்னை ஒருவர் அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புகிறது. அதற்கான நபர் ஒருவரைத் தேடி அலைகிறது.

மரணத்தைப் பற்றிய உரையாடல்கள் மிகுந்த வசீகரமானவை. அல்லது எனக்கு மிகவும் பிடித்தவை. பிரபஞ்சத்தின் அதி ரகசியங்களில் ஒன்றான மரணத்தைப் பற்றிப் பேசவே, கேட்கவோ எனக்கு எப்போதும் சலிப்பதில்லை. The Curious Case of Benjamin Button இல் வரும் மரணம் குறித்தான பின் விவரணங்களை நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். (முதியோர் இல்லங்களில் மரணம் ஒரு அழையா விருந்தாளியைப் போல் எப்போதும் தங்கியிருக்கிறது)

இத் திரைப்படக் கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாய் மரணம் குறித்து உரையாடுகின்றன. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் தற்கொலைக்கு துணை போக மாட்டேன் என ஒருவன் விழுந்தடித்து ஓடுகிறான். தற்கொலை கடவுளுக்கு எதிரானது என ஒருவன் பிரசங்கிக்கிறான். ஒரு முதியவர் தான் தொடர்ந்து வாழ மல்பெரிப் பழத்தின் சுவையே போதுமான காரணமாக இருந்தது எனச் சொல்கிறார். இடி சப்தங்கள் மிகும் ஒரு இரவுப் பொழுதில் பிரதான காதாபாத்திரம் குழிக்குள் சென்று படுத்துக் கொள்கிறது.மழை சகலத்தையும் மூடும் வண்ணம் பொழியத் துவங்குகிறது.
அப்பாஸின் திரைப்படங்களில் இன்னொரு பிரதான அம்சம் landscape. ஈரானின் உள்ளடங்கிய கிராமங்கள், மணற்பிரதேசங்கள், சமவெளிகளென திரையில் விரியும் நிலம் பார்வையாளனுக்கு புது அனுபவமாகவிருக்கும். பெரும்பாலான காட்சிகளை தொலைவிலிருந்து பதிவிப்பது இவரது விருப்பமாக இருக்கலாம்.

Mr. Badii என்கிற பிரதான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்திருப்பவர் Homayoun Ershadi. இவரின் இறுகிப் போன முகமும் உணர்வுகள் எந்த நிமிடமும் உடைந்து விடலாம் ரீதியிலான பாவனைகளும் வெகுநேரம் மனதில் நின்றது.

தற்கொலை பாவமோ குற்றமோ அல்ல ஒரு விடுபடல் அவ்வளவுதான் என்பது மேலோட்டமான, குரூரமான சிந்தனையாகத் தோன்றினாலும் தற்கொலை செய்து கொண்டவனின் வலிகள் எவராலும் தீர்க்க முடியாதவையாகத்தான் இருக்க முடியும்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...