Friday, April 10, 2009

பிரளயனின் பாரி படுகளம்


வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடகங்களை திருவண்ணாமலையில் அவ்வப்போது கண்டதுண்டு.மேடை நாடகமாக இருக்கையில் அமர்ந்து முழுமையாய் பார்த்தது இதுவே முதன்முறை.நிகழ்விற்கு அ.மார்க்ஸ் வந்திருந்தார்.பாண்டிச்சேரி நாடகத்துறை மாணவர்கள் நடித்திருந்த இந்நாடகம் மூவேந்தர்கள் அழித்த பாரி மன்னனின் வாழ்வைப் பேசுகிறது.பாரியின் கதையோடு மூவேந்தர்கள் காலத்தில் மிகுந்திருந்த குடி வேற்றுமைகள் அதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த கொலைகள் மற்றும் சொந்த நிலம் சார்ந்த வாழ்வியல் போராட்டங்களை இந்நாடகம் முன்வைக்கிறது.


முதல் காட்சியில் பாரி மன்னனின் மிகும் புகழை விரும்பாத சோழமன்னன் பாரியின் நாடான பறம்பிற்கு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்புகிறான்.வேவு பார்க்கச் செல்லும் ஒற்றர்களில் ஒருவனான அனிருத்தன் அங்கிருக்கும் வேடுவர் குலப்பெண் ஆதிரையின் அழகில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான்.திரும்பி வராதவனை விசாரிக்கையில் அவன் தாழ்குடியை சார்ந்தவன் என்பது தெரியவருகிறது.அவன் நண்பனைக் கொண்டே அனிருத்தனைக் கொல்கிறான் காவிரி நாடன்.

அடுத்தடுத்து வரும் காட்சிகள் பாரி மன்னனின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன.பாரி தன் மகள்களான அங்கவை சங்கவைகளுடன் ஆட்சி புரியும் காட்சிகள்,பறம்பு நாட்டின் இயற்கை வளங்களை அழித்திடாமல் காப்பதை தலையாய கடமையாகக் கொள்வது, எல்லா உயிர்களுக்குமான பாதுகாப்பைத் தருவது என பாரியின் நல்லாட்சி நேர்த்தியாய் காட்சிப்படுத்தப்படுகிறது.கபிலரின் பாடல்களும் ஆடல் மகளிரின் சிலாகிப்புகளும் பிற திசைகளுக்கும் பாரியின் புகழை கொண்டுச் செல்கிறது.இயற்கை வளமுள்ள நாடும், மிக அழகான பெண்களும் மற்ற பெருநில மன்னர்களுக்கு உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது.அதனோடு பாரியின் புகழும் சேர்ந்து கொள்ளவே மூவேந்தர்களும் ஒன்றிணைந்து அவன் நாட்டின் மீது போர்தொடுத்து பாரியை அழிக்கின்றனர்.

போர் காட்சிகள் மிக நேர்த்தியாய் பதிவு செய்யப்பட்டன.நிலம் சார்ந்த வாழ்வு சார்ந்த கூர்மையான வசனங்கள் ஈழத்தில் நிகழும் அவலங்களை கண்முன் நிறுத்தியது.மண்ணை, இயற்கையை, மக்களை தங்கள் சுய இலாபத்திற்காக அழிக்கும் அதிகார கரங்களுக்கான எதிர்ப்பாகவும் இந்நாடகத்தை நவீன சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.நாடகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கவிதைகள்,இசை,வசனங்கள் மாணவர்களின் உடல் மொழி என எல்லாம் எனக்கு நிறைவைத் தருவதாய் இருந்தது.

அ.மார்க்ஸ் மாணவர்களின் நடிப்பை அற்புதமான உடல் மொழி என சிலாகித்தார்.கபிலர் பாத்திரத்தின் பொருத்தமில்லாத உடையலங்காரத்தை நெருடலாக குறிப்பிட்டார்.மேலும் நாடகத்தின் முதல் காட்சி மய்ய நாடகத்தினுக்கு எந்த வகையில் தொடர்புள்ளது என்கிற கேள்வியும் எழுப்பினார்.மொத்தத்தில் நாடகம் நிறைவைத் தருவதாக குறிப்பிட்டார்.
மூவேந்தர்கள் காலத்தில் புரையோடிப்போயிருந்த குடிவேற்றுமைகளை பதிவு செய்யவே முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம்.முல்லைக்குத் தேர் கொடுத்ததைத் தவிர நமது பாடபுத்தகங்கள் பாரியை பெரிதாய் பதிவு செய்திருக்கவில்லை.அங்கவை சங்கவை எனப் பெயரிட்டு நம் வேர்களின் மீது மலத்தை அள்ளிப் பூசிய சங்கர் வகையறாக்கள் நிறைந்திருக்கும் இச்சூழலில் இதுபோன்ற நாடகங்களின் மூலம் என்னால் மகிழ்ச்சியடையவே முடிகிறது.

விழாவில் என் தமிழாசிரியரைப் பார்த்தேன் பார்வையாளர்களை கருத்துக்கூற அழைத்தபோது மேடைக்கு சென்று இந்த வயதிலும் கணீரெணப் பேசியது நெகிழ்ச்சியாய் இருந்தது.தலைவன்,தலைவி,தூது, காதல்,காமம், தோழிப் பெண்கள்,பசலைக் கொடி, குவளை மலர்கள் வயல்வெளிகள் என்றெல்லாம் இவரின் குரல் என் பதின்மங்களில் என்னை சங்க காலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.தமிழ் செய்யுள் பகுதியை இவரைப் போல் எவராலும் நடத்த முடியாது.சண்முக அருணாசலம் என்கிற இவர்தான் பிரளயனின் சகோதரர்.எனக்கு சங்க காலத்தை அறிமுகம் செய்து வைத்தவருடன் பாரி நாடகம் கண்டது தற்செயலானதாய் இருந்தாலும் மகிழ்வாய் இருந்தது.நாடகம் துவங்குவதற்கு முன்பு ஜெயமோகன் இந்நாடகத்தை கடுமையாய் விமர்த்திருப்பதாக பவா செல்லதுரை சொன்னார்.ஜெயமோகனுக்கு இந்நாடகம் பிடிக்காமல் போனதில் எனக்கு பெரிதாய் ஆச்சரியம் ஒன்றுமில்லை.சிவன் பார்வதி உடலிலிருந்து குமரியை கொற்றவையில் உண்டாக்கிய ஜெமோ விரைவில் தமிழ்நாட்டின் மொழி சமஸ்கிருதம் என்றோ தமிழ் நாட்டை ஆண்டதெல்லாம் பார்ப்புகள்தாம் என்றோ புது வரலாறு எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.அவர் எதை எழுதினாலும் மண்டையாட்டும் பெரும் மந்தையாட்டுக் கூட்டம் நம் சூழலில் பெருத்திருக்கும்போது எடுக்கும் வாந்தியெல்லாம் அமிர்தம்தான்.

தொடர்புச் சுட்டிகள்

1இந்நாடகம் குறித்தான பதிவர் சந்திப்பின் பார்வை..
2.எஸ்.கருணாவின் பகிர்வு
3.பிரபஞ்சனின் பகிர்வு
4.அருட்பெருங்கோவின் பகிர்வு
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...