Saturday, June 28, 2008

சிமோந்தி ஜார்ஜினா :வடிவ நிரூபணம்


திசையெங்கிலும் விரவி இருக்கும் இவ்விருள் மெல்லிதான பயத்தை வரவழைக்கிறது. மின்மினிப் பூச்சுகளின் வெளிச்சங்கள்... சில் வண்டு்களின் கிர்ர்கள்... சாதாரணங்களிலிருந்து விலகலை வரவழைக்கின்றன.நட்சத்திரங்களற்ற வானம் கருமை பூசி இன்னும் கலவரத்தைத் தூண்டுகிறது.இந்த இரவில்,இந்தத் தனிமையில், சன்னமாய் பெருகிக்கொண்டிருக்கும் இந்தப் பதட்டங்களை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொன்டிருக்கிரேன்.அப்படிச் செய்திருக்க வேண்டாம்தான் ஆனால் ஒரு கோபத்தில், ஒரு வெறுப்பின் உச்சத்தில் அவ்வாறு செய்துவிட்டேன்.சென்ற நொடியை மீள்பதிவிக்க முடியாமலின் சோகத்தின் உச்சத்தில் இயலாமைகள் கழிவிரக்கங்களாக மாறிக் கொல்கின்றன.எதற்கிந்த வாழ்வு? எதற்கிந்த பிறப்பு? என எல்லாவற்றின் மீதும் சலிப்பு சாதுவாய் படரத் துவங்குகிறது.தப்பித்தல்கள் சாத்தியமே இல்லை என்றான ஒரு நொடியில் நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தேன்

சாரா இரவு சரியாய் 11.47 க்கு சமையலறையிலிருந்த மிகவும் கூரான கத்தியினை எடுத்துத் தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டாள். **தன் பெயரை தானே ஒரு முறை உச்சரித்துக்கொண்டாள். எப்போதுமே அவளின் பெயர் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.** அரூபன் அவளை கூப்பிடும் விதம் அவளுக்கு பிடித்தமானது..ஒரு நாளில் நூற்று எண்பத்தி எட்டு முறை அவளை சாரா எனக்கூப்பிடிருந்தான்.அந்த நாளின் இரவிக்கலவிக்குபின்,அவன் அயர்ந்து தூங்கிய பின்பு சாரா அவனை நூற்றி எண்பத்தி எட்டு முறை முத்தமிட்டாள்.தனக்கு பிடித்தமானவர்களிடம் அவள் எப்போதுமே வெறுப்பாகத்தான் நடந்து கொண்டாள் அல்லது அவளுக்கு அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியவில்லை அரூபன் தூங்கியபின் முத்தமிடுவது,தனியாய் கனவுவது, புலம்புவது, என அவளின் நிகழ் எப்போதுமே குரூரங்களாலும், கழிவிரக்கங்களினாலும் நிரம்பியதுதான். மணிக்கட்டிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த இரத்தம் சமயலறை பேசினில் நவீன ஓவியத்தின் சாயல்களில் திசையெதுவுமற்று விரவத் தொடங்கியது.

இந்த இரண்டு பத்திகளும் மிகக் கவனமாய் எழுதப்பட்டவை அல்ல.ஆனால் எழுதி முடித்தவுடன் ஒரு அசாதாரணத்தை என்னால் உணர முடிந்தது.முன் பத்தி திசையில் தொடங்கி தற்கொலையில் முடியும் பின்னது தற்கொலையில் தொடங்கி திசையில் முடியும்...
(என்னைத் தொடர்ச்சியாய் படிக்கும் தோழிகளால் இதைக் கண்டறிந்து கொள்ள முடியுமெனினும் இந்த அபத்தக் குறிப்பிற்கு வாசகிகளிடம் மன்னிப்பு..) என்னுடைய முப்பத்தி இரண்டாவது காதலியான சிமோந்தி ஜார்ஜினாவிடம் முந்தா நாள் விடியலில் என் எழுத்துக்கள் அவற்றின் வடிவங்களை அவைகளே தீர்மானிக்கின்றன எனச் சொல்லியபோது அவள் இடைவிடாமல் பதிமூன்று நிமிடம் சிரித்தாள்.அவளின் வெற்றுடம்பின் ஒவ்வொரு இணுக்கும் சிரிப்பில் அதிர்ந்ததை அதனோடு ஒட்டியிருந்த என்னுடம்பால் உணர்ந்து கொள்ள முடிந்தது.அவளுக்கு புரிவிக்கவே இவ்விரண்டு பத்தியை சூரியன் உதிக்க ஒரு நிமிடத்திற்கு முன்பாக எழுதிக் காண்பித்தேன்.படித்து முடித்த அவள் அப்போதுதான் உதித்த சூரியனை துரத்தியடித்திவிட்டு இருட்டையும் என்னையும் இழுத்திப் போர்த்திக் கொண்டாள்..

** இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை எழுதியது என் பிரியத்திர்குரிய ----------- (இன்னமும் எவ்வித பெயரிட்டு என அழைப்பதில் குழம்பியிருப்பதால் இப்போதைக்கு இடைவெளி எனக் குறிப்பிடுகிறேன்)

பதிவு சிறியதாக இருப்பதால் சல்மா hayek ஐ பற்றிக் கொஞ்சம் பேசட்டுமா..அவளின் புகைப்படத்தை வேறு பதிந்திருப்பதால் பேசித் தொலைக்கிறேன்.Desparado கரோலினா (சல்மா) அறிமுகக் காட்சியை வெகுநாட்கள் மறக்கவியலாமல் தவித்தேன்.கிதாரின் தந்திகள் அதிர அந்த சாலையின் எதிரில் சல்மா அறிமுகமாகும் காட்சியை எத்தனை முறை பார்த்தேனென கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.சமீபத்தில் வேறு Frida வையும் பார்த்து தொலைத்தேன்.debonair புத்தக அழகிகளை கோபி கிருஷ்ணன் காதலித்ததில் ஒன்றும் வியப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

Sunday, June 22, 2008

நினைவுகளை மீட்டல் : கோடை



அதிகாலை வேம்பூக்களின் வாசம் முதல் முத்தத்தின் உயிர்த்துடிப்புகளை நினைவூட்டிப்போகின்றது.வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களினை, கோடைகால இரவுப் புழுக்கம் முடிந்த அதிகாலை, தென்றலின் வடிவம் கொண்டு வருடிப்போகிறது.இந்த உள்ளிழுக்கும் சுவாசத்தினுக்காக, இந்த சுவாத்தினூடாய் நுரையீரலை அடையும் வேம்பூவின் கிளர்ச்சிக்காக, இந்த அதிகாலையை கொண்டாடலாம்.கொல்லைப்புற வேம்பூ, முற்றத்துப் புங்கை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.

இந்த மலையை அதிகாலையில் பார்க்கவேண்டும்.பிரமிடின் முழுமையான வடிவம் அல்லது மலையின் முழுமையான தோற்றம் நம் வீட்டிலிருந்துதான் மிகச் சரியாக தெரிகிறதென்பார் அண்ணன்.எனக்கென்னமோ மிகக் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சக உயிரியாகத்தான் இந்த மலை, இந்த இடத்திலிருந்து நினைவூட்டுகின்றது.மிக ஓய்வாக, மிக லகுவாக, மிக சாந்தமாக, மிக அழகாக, வீற்றிருக்கும் இன்னொரு ஜீவன் இம்மலை.வெள்ளி இன்னமும் ஒளிர்ந்திருக்க, துடைத்து வைக்கப்பட்ட வெளிர்நீலத்தின் அழகினை தலைக்கு மேல் சூடியிருக்கும் இந்நித்திய பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம்.

எதிர்ச்சாலையில் எதிர்ப்படுவர் எவருமற்ற ஒரு குக்கிராம வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பயணிப்பது எத்தனை குதூகலமானதென்பதைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.இரு புறங்களிலும் அடர்த்தியாய் புங்கை மரங்கள் பூத்திருக்கும் நண்பகலில் ஒற்றையனாய் பயணிக்கும் தருணங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவை.மிகப்பரந்த ஏரிக்கரையின் இருமருங்கிலும் எப்படி இத்தனை வளர்த்தியாய் அடர்த்தியாய் மரங்கள் வளர்ந்திருக்கின்றன?. மிகப் பெரு அடிமரத்தின் பொந்துகளிலிருந்து கிளியின் கெச்சட்டங்கள் வெகு தொலைவினை கடந்து செல்கையிலும் கேட்க முடிகிறது.தவிட்டு வால் குருவிகள் வெகு சுவாதீனமாக சாலையின் இரு பக்கங்களிலும் நடந்து போகும் இந்நண்பகலில், நான் அவைகளின் இறக்கைகளை கடன் வாங்கிப் பறக்கத் துவங்குகிறேன்.

சூரியனைப் பழித்துக் கவிதை எழுதுபவர்களை செவிட்டில் அறையலாம்.இதோ இந்தக் கோடையின் வீச்சை உள்வாங்கியபடி மரங்களற்ற சாலையில் பேருந்து புகைக் கழிவினை உள்ளிழுத்தபடி என் சிறுநகரத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். உச்சந்தலை கொதித்து உடலின் எல்லாச் சிறு துளைகளிலிருந்தும் வியர்வை நீராய் வெளியேறும் பரவசத்தை உணர்வது் அற்புதமானது.நெற்றியின் இருபுறங்களில் துவங்கி, பின்னங்கழுத்து வழியாய் பல்கிப் பெருகி, எவரும் தொடா இடங்களை மிக மென்மையாய் தொட்டு வழியும் இவ்வியர்வையை நான் நேசிக்கிறேன்.முன் நெற்றியிலிருந்து வழிந்து, மூக்கினைக் கடந்து, உதட்டைத் தொடும் இந்நீரை, என் உடல் நீரை, என் நாவுகளில் சுவைக்கிறேன். அது அமிர்தமெனச் சொல்லப்படுவதையெல்லாம் விடச் சிறந்ததாய்த்தான் இருக்க முடியும்.கோடையை இயற்கை கொண்டாடுகிறது. எல்லாத் தாவரங்களும் பச்சையுடுத்தி பூக்களை அணிந்துகொள்கின்றன. அவை மாலைநேரத்தில் கணவனின் வருகைக்காய் காத்தி்ருக்கும் புது மணப்பெண்ணை நினைவூட்டியபடியிருக்கின்றன. புழுக்கத்தை உள்வாங்கி தென்றலை வெளித்துப்பும் கோடை மிக உன்னதமானது.கோடை காலத்தில் வானம் தன் அழகின் மொத்தத்தையும் அள்ளித் தருகிறது.வெளிர் நீல வானில் தவழும் வெள்ளை நிற மேகங்களை நான் காதலிக்கிறேன்.அந்தியில் வானம் தன் மிகச்சிறந்த ஓவியங்களை உலகிறகு மொத்தமாய் தருகிறது.மழைக்கால மழைக்கிருக்கும் சோம்பலும் சகதியும் கோடை மழைக்கில்லை கோடை மழை முற்றத்தில் தெளிக்கும் நீரையொத்தது. மேலும் இம் மழையை பனியொத்த உதடுகளின் முத்தமெனவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.உதடுகள் மட்டுமின்றி உடலெங்கும் தரும் முத்தம் கோடை மழையின் தொடுகையாக இருக்கலாம். சிறார்களோடு இம்மழையில் குதிப்பதும், ஓடுவதும், கத்துவதும், என் கசடுகளை வெளித் துப்புவதற்கான மிகச் சிறந்த வழி.

என் சின்னஞ்சிறு நினைவுப்பேழையினுள் கண்ணில் விரியும் அற்புதங்களை வாரிப்பூட்டிக் கொள்ள விரும்புகிறேன்.விருப்பென்றும் வெறுப்பென்றும்
ஏதுமில்லை. இந்த இடத்தில் நானிருந்தால் நானிருக்க விரும்புகிறேன். பின்பெதுவுமற்ற சூழலில் முன்பிருந்ததை சொற்களினைக் கொண்டு வரையத் துவங்குகிறேன்.என்னால் ஒரு ஓவியனாவதற்கான கொடுப்பினைகள் இல்லாமல் போனது. நான் சபிக்கப்பட்டவனானதால் வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கிறேன்.இறையும் வார்த்தைகள் தனக்கேற்ற வடிவத்தினை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தினையாவது தந்துவிட வேண்டும்.அஃதெப்போது ஒற்றை வடிவத்தினை கொண்டுவிடுகிறதோ அப்போது என் விரல்களை ஒடித்துக் கொள்ளவேண்டும்.

நான் வாழ்ந்தேன்.வாழ்கிறேன் நிகழ்வுகளாலும் நினைவுகளாலும்...

********************************

பறவை வேட்டை



திரும்பவே இயலாத பிரிவொன்றின்
கடைசி நொடியில்
தளும்பல்களையும் அடைப்புகளையும்
துடைத்தோ கனைத்தோ
சரிசெய்தபடி விடைபெறலாம்.
இயலாமைகளின் உச்சங்கள் வெளிப்பட்ட
அதற்கு முந்தின கணத்தையும்
அப்படியே வைத்திருப்பது நல்லது.
அவை பின்னிரவுக் குவளைகளை நிறைக்க உதவக் கூடும்.
வன்மங்களை வாரிப் பூசிக்கொள்வதும்
கழிவிரக்கத்தை முழுவதுமாய் படரவிடுவதும் நல்லதுதான்
குறைந்தது நான்கு கவிதைகளை (இது தவிர்த்து)
எழுதிக் கொள்ளலாம்.

மற்றபடி உனக்கு பிடித்த மொழியில் இதை இப்படியும் சொல்லலாம்

அந்த விநோத பறவை தனது எச்சங்களயும்
சில அபூர்வ சிறகுகளையும் உதிர்த்துப் பறந்தது
நானொரு வேட்டைக்கான கண்ணியில்
முனைப்பாயிருந்தேன்.

Friday, June 20, 2008

மேய்ச்சல் - இணையம்

எழுத்தினைத் தொழிலாகக் காணவேண்டாம். வேறெதாவதைத் தொழிலாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் குழி தோண்டுங்கள்; ஆனால் எழுத்தினை உங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காக கருதுங்கள். என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு பொழுதுபோக்கு தொழிலால் நான் ஒரு விவசாயி - வில்லியம் ஃபாக்னர்

ஆதவன் தீட்சண்யாவின் இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை எனும் சிறுகதை புதுவிசையில் கிடைத்தது.படித்து முடித்தபின்பெழுந்த உணர்வுகள் புதுவிதமானது.குறுநாவல் அல்லது நாவலுக்கான உள்ளடக்கத்தை, விரிவை இச்சிறுகதை கொண்டிருக்கிறது.மிகத் தீவிரமான வீர்யமுள்ள கருவை எவ்விதக் குலைவுமில்லாமல் சிறுகதையாக மட்டும் எழுத ஆதவனால் முடிந்திருக்கிறது.இதே போன்றதொரு கருவோ, சிந்தனையோ இலக்கிய டைனோசர்களுக்கு உதித்திருந்தால் ஒரு குறுங்காட்டையே அழித்தெழுதியிருப்பர்.இன்னுமொரு தடிமனான வஸ்து தமிழ்பரப்பை ஆக்ரமித்திருக்கும்.கவிதையில் சிறுகதையும், சிறுகதையில் நாவலையும் பொருத்திவைத்திருக்கும் ஆதவன் நாவலெழுதினால் அதற்கான உள்ளடக்கங்கள் எதுவாயிருக்கும் என்பது பற்றி யோசித்துக் கொன்டிருந்தேன்.இந்த கீழ்கண்ட வரிகள் படித்த உடன் ஒட்டிக்கொண்டது.

வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர் இங்கிருந்தோரை மதம் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறவர்களே, ஆரியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே...
அவர்கள் ஏன் இங்கிருந்தோரை ஆரியராக மாற்றி தம்மோடு சேர்த்துக் கொள்ளாமல் வர்ணமாக,சாதியாக பிரித்து வைத்தார்கள்

கடவுளுக்கு முன்பே உலகமிருந்தது என்பதைப்போலவே எனக்குப் பின்னும் இருக்கும். ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்றுகொண்டிருக்க முடியாது...

வில்லியம் ஃபாக்னர் செவ்வி ஒன்றில் சிறுகதை என்பது முற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்ட வடிவம் ஆனால் நாவல் அப்படியில்லை கொஞ்சம் குப்பைகளை வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பார். புத்தகத் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான வீர்யங்கள் குறைவதாகத்தான் படுகிறது. எழுபது பக்கங்களுக்குமேல் தமிழில் நாவல் எழுதுபவர்களின் பேனாக்களை / தட்டச்சுப் பலகையை பிடுங்கிகொண்டால் கூட நன்றாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் அதிகப் பூச்சுகள் ஆயாசத்தைத் தருகிறது.
********************************
தீராநதியில் படிக்க நேர்ந்த சோ தர்மனின் சில கருத்துக்கள் எரிச்சலை வரவைத்தது. அதிரடியாக அவர் ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார்.
இதுவரைக்கும் கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்ன விஷயங்கள் இவை : தலித் என்றால் எண்ணெயே தேய்க்காமல் பரட்டைத் தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். சண்டை போடுவான். தலித் பொம்பளை என்றால் அவள் லேசாக சோரம் போவாள். தலித்துகளை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என்ன கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள்? தலித் பண்பாட்டைக் கொடுத்திருக்கிறதா? தலித்தினுடைய பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் எழுத்தில் பேசும் தலித் பாஷையே போலியானது.
இது இவரின் வாசிப்பு லட்சணத்தைத்தான் காட்டுகிறது என்றாலும் இது போன்ற கருத்துகளுக்கான எதிர்வினைகள் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாகத்தான் படுகிறது.தலித் எழுத்தாளர் என அறியப்பட்ட இவர் பண்பாட்டையையும் பாஷையையும் எழுத வேண்டியதுதானே?வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்பவரைப் பற்றி மோனோகிராஃப் புத்தகம் ஒன்றை எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நாடார்களின் பிள்ளைமார்களின் இசையை ஆய்வு செய்தவருக்கு தலித்தின் இசை கண்ணில் பட்டுத் தொலையவில்லையா? இதையெல்லாம் விட எரிச்சலைக்கிளப்பியது தீராநதியின் இந்தக் கேள்விதான் நெடிய கல்வி பாரம்பரியமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியைக் கையாளுவதற்கும், இப்போதுதான் கல்வியறிவை பெற்று எழுத வந்திருக்கின்ற தலித்துகள் மொழியை கையாளுவதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?
இவனுகளை எதால் அடிப்பது?படித்து தொலைத்திற்கு நாம்தான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
*****************************
காலச்சுவடு மே இதழில் வெளிவந்த இமையத்தின் கட்டுரையையும் அதற்கு எதிர்வினையான சில கட்டுரைகளையும் படித்தபின்பு எழுந்த எரிச்சல் அடங்க சிறிது நேரம் பிடித்தது.இப்போதைய சலனமற்ற நிலையில் சண்டை போடும் எழுச்சி எதுவும் இல்லை.மெதுவாய் பார்த்துக்கொள்ளலாம் என விட்டாயிற்று ஆனால் காலச்சுவடு உள்ளொளி தரிசனத்தை கண்டறிந்த முடிவிலியின் பெருவெளியில் நீந்திக் களிப்பதோடு தன்னுடைய இலக்கியப் பணியை நிறுத்திக் கொள்ளலாம்.இமையம்,சோ தர்மன் போன்றோர் உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு உருப்படியாய் எழுதத் தொடங்கலாம்.நானும் கூட இந்த விடுமுறைநாளில் இப்படியெல்லாம் படித்து டென்சன் ஆகி பதிவெழுதிக்கிழிப்பதை நிறுத்திவிட்டு நேற்றிலிருந்து தீரவேமாட்டேன் என்கிற ஜானியை லேசாக மிரட்டலாம் :)

Saturday, June 14, 2008

சிலேபிக் கதைகள்


கொன்றை மரங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த பூக்களின் பன்னீர்துளிகள் உலர்ந்து கொண்டிருக்க, இன்றைய காலையின் முதல் சிகரெட்டினைப் பற்றவைத்தேன். நேற்றைய பொழுதின் சிந்தனைகளினூடே மெல்லப் புகையினை உள்ளிழுக்க இருமல் வந்தது. ஒரு தேனீர் அருந்தினால் இதமாக இருக்குமெனத் தோன்ற பார்வையை உட்புறமாகத் திருப்பியபோது திரும்பிய விழிகளை பின் பக்கமாய் திருப்பியது அவளின் வெளிர் நீல உடை. அவளிடம் இன்று பேசிவிடலாமா? ......நேற்றைய பொழுதின் சிந்தனைகள் மீண்டும் துவங்கின. நேற்றென்றும் சொல்ல முடியாது எப்போதுமிருக்கின்றன இச்சிந்தனைகள். ஆனால் சொல்லத் தெரியாத ஒரு தயக்கமும் கூச்சமும்
விரவியிருக்கிறது. இது தயக்கமும் கூச்சமும் மட்டும்தானாவென யோசிக்கையில் அவள் என் மீது கொண்டிருக்கும் நம்பகத் தன்மைகளை குலைக்க விரும்பாத என் அச்சமும் நினைவில் வந்து போனது. அவளாக தெரிந்துக்கொள்ளும் வரை பேசாமலிருப்பதே உசிதமென்ற முடிவுக்கு வந்தேன் கடைசி புகையை உள்ளிழுத்தபடியே. நேசத்தை பிரியங்களைச் சொல்லாமலிருப்பதை விட இம்சையானது வேறெதுவுமிருக்காது.இது மிகுந்த சோர்வை வரவழைத்து விடுகிறது. செய்ய எதுவுமற்றவனின் வீணான விழைவென்றோ மிகக் கடுமையாய் கடந்து போகும் இந்நாட்களின் தணிவுகளுக்கான முயற்சியென்றோ நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்வீர்களேயானால் உங்களின் மீது உமிழவும் தயாராய் இருக்கிறேன். இந்தத் தீவிரத் தன்மைக்கான காரணங்களையும் உங்களிடம் சொல்ல விருப்பமாகத்தானிருக்கிறது ஆனாலும் காரணங்கள் மூலமாக என் நேசத்தை கட்டமைப்பது அபத்தமாக படுவதால் அவற்றைத் தவிர்க்கிறேன் அவளிடம் வேறொன்றையும் சொல்லாமல் தவிர்த்ததைப்போல் .......

இது போல அபத்தமாக கதை எழுத சலிப்பாயிருக்கிறது....படிக்கும் உங்களை
உற்சாகமூட்ட ஒரு கவிதை எழுதட்டுமா? வேண்டாம்....அது கதையை விட அதிபயங்கர சலிப்பை தந்துவிடக்கூடும். வேறென்ன செய்ய?..ஒரு பாட்டு
பாடட்டுமா?..குத்து பாட்டு பிடிக்குமா உங்களுக்கு? ஆனால் என் கொடுமையான குரலில் நான் பாடி நீங்கள் கேட்டு....அதுவும் வேண்டாம்.என் அத்தை நிறைய கதை சொல்லுவாள்....அதில் ஒரு கதை திரும்ப திரும்ப அவள் குரல் தீண்டாமலே ஒலித்ததுண்டு என்னுள். அதை இப்போது சொல்லுகிறேன்... உங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட என்னவெல்லாம் செய்து தொலைய வேண்டியிருக்கிறது பாருங்கள் :(

ஜான்வின்னு ஒரு பொண்ணு அவளுக்கு பதினேழு வயசா இருந்தப்ப ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து ஒரு கால் நசுங்கிப்போச்சு. ஒருவழியா தேறிவந்ததும் காலேஜ் போகமாட்டேனிட்டா. சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிச்சு பரிசோதிக்கப்பட்டபின்புதான் இன்னொரு விஷயமும் தெரிய வந்துச்சு. அவளுக்கு புற்றுநோய். அவளோட பெற்றோர்கள் இத அவளுக்கு தெரியப்படுத்தாம இருந்தாங்க. ஆனா ஜான்வி எத பத்தியும் கவலப்படலை. இருக்கிற காலத்துக்கு சந்தோசமா வாழ்ந்து செத்திடனும்னு முடிவு பண்ணா.3மாசம் கழிச்சு தீடீர்ன்னு ஒரு நாள் கல்லூரிக்கு போய் மீண்டும் படிக்கனும்னு ஆசைப்பட்டா. அடுத்த நாளே கல்லூரிக்கு கிளம்பினா.ராதாவ தெரியுமா உங்களுக்கு...அவ செம அழகு.. அவ கண்கள மட்டும் பாத்திட்டே இருக்கலாம்... அத்தன அழகு... அவ பேச்சுல ஒரு வசீகரம் இருக்கு...இதுக்கு காரணம் அவ பேச்சுல இருக்க குழைவா...இல்ல அவ குரலா....பேசற விஷயங்களா...இல்ல எல்லாம் சேர்ந்த காரணமான்னு தெரில...இருக்கலாம்.அவளும் நானும் ஒண்ணா படிச்சோம்.

ஜான்வி காலேஜிக்கு போனான்னு சொன்னவுடனே எனக்கு ராதா நினைவு வந்திடுச்சி... படிக்கிற உங்கள குழப்பறேனா? மன்னிச்சிடுங்க... சரி இப்போ என் அத்தை சொன்ன கதைக்கு வரேன். அதுக்கு முன்னாடி....நான் போறவழியில அந்த ரெண்டாவது சந்து திரும்பற இடத்துல இருக்க குள்ள மரத்துல இருந்து ஒரு நாளுக்கு சராசரியா எத்தனை பூ உதிருதுன்னு
கணக்கெடுத்திருக்கீங்களா நீங்க? அப்படி உதிரும் பூக்கள் தோராயமா எத்தன கால்கள்ல மங்கிவிடும் முன்பாக மிதிபடுதுன்னு தெரியுமா உங்களுக்கு? இத ஏன் சொல்றன்னா பூ மிதிபடுறத தாங்கிக்க முடியாதவங்களால மட்டும்தான் இந்த கதய சரியா உள்வாங்க முடியும். உங்களில் யாருக்காச்சும் அந்த மன நிலை இல்லனா தயவுசெய்து இதுக்கு மேல படிக்காதீங்க. தொடர்ந்து படிக்கலான்னு முடிவு செஞ்சவங்க பின்னனியில மடோனாவோட bad girl பாட்ட போட்டு கேட்டுக்கிட்டே படிங்க. ஏன் சொல்றேன்னா இந்த கதை எனக்கு எவ்ளோ பிடிக்குமோ அதே அளவு அந்தப்பாட்டும் பிடிக்கும்.கதயே சொல்லாம ஏன் இப்படி சுத்தி வளைக்கிறேன்னு கடுப்பானிங்கன்னா சாரி பாஸ்/பாஸீ எனக்கு அந்த கதை மறந்து போச். கததான் மறந்துப்போச்சே தவிர....எனக்கு உங்ககிட்ட பேச இன்னும் நிறைய இருக்கு. இப்ப இந்த பேருந்து என்ன எங்க அழைக்கிட்டுப்போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா?.....ஜான்வியோட இறுதி சடங்கிற்கு.

இறுதி சடங்கின்னவுடனே அதிர்ச்சியா இருக்கா..மொதல்ல இந்த சாவுக்கு பயப்படறத நிறுத்துங்க... சாவு ஒரு சப்ப மேட்டர் அப்படீன்னெல்லாம் நான் உளரமாட்டேன். நீங்க பயப்படறத நிறுத்திட்டீங்கன்னா...அப்படியே எப்படி பயப்படாம இருக்கனும்னு எனக்கும் கத்துக்கொடுத்துடுங்க. ஏன்னா எனக்கு சாவுன்னா ரொம்பவே பயம். தினகரன்னு ஒருத்தன் சாவுக்கு பயந்து.. பயந்து.. தேடி.. தேடி ..சாவுன்னா இன்னான்னு கண்டுபுடிச்சிட்டான்.. செம ஆள் அவன். உதிர்தல், பிரிதல், மறித்தல், நீங்குதல்......இதெல்லாம் என்னன்னு புரியுதா உங்களுக்கு? அட ரொம்ப சிம்பிளா சொல்ல போனா சாவுங்கிறது இடைவெளி தாம்பா அப்படீன்னு சொல்லிட்டு சொன்னவனும் செத்துப்போயிட்டான். இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க நமக்கு தான் பயம் போக மாட்டேங்குது.

சரி ஜான்விக்கு போவோம் அப்படீன்னு தோனினாலும்...செத்த மூதேவிங்கள பத்தி நமக்கு என்ன பேச்சு.....கடகட்டுவோம்... போய்வாங்க. கிளம்பறத்துக்கு முன்னாடி இன்னொன்னும் தெரிஞ்சிக்கிட்டு போங்க....நானும் இன்னைக்கு சாகப்போறேன்.

நானும் நண்பி ஒருத்தியும் எழுதியது ..எந்த முன் முடிவுகளும் இல்லாது, மய்யக் கருத்தென ஒன்று இல்லாது, போகிற போக்கில் கதைகளை உருவாக்க முடியுமா? என்கிற பேச்சின் நீட்சி இதை எழுத வைத்தது.அவளொரு வாக்கியமும் நானொரு வாக்கியமுமாய் எழுதிய வடிவம் இது.நெடுநாட்கள் ட்ராப்டில் இருந்த இதை இப்படி பெயரிட்டு வெளியிட தோன்ற காரணமாயிருந்த வலையுலக நட்புகளுக்கும் தொடர் விளையாட்டுகளுக்கும் நன்றி..

Monday, June 9, 2008

The Shoe Tree - குறும்படம்

இந்த வலைத் தளத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது The shoe Tree யைப் பிடித்தேன்.பதினைந்து நிமிடக் கவிதை எனச் சொல்வது சரியாகத்தானிருக்கும் வேண்டுமென்றால் ஒருமுறை பார்த்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...உறவுகள் மீதான நீர்த்துப்போகாத அன்பை கவித்துவமாய் சொல்லியிருக்கிறார்கள்.இந்தச் சூழலில் இதுபோன்ற படங்கள் எனக்கு மிகவும் தேவையாக இருக்கின்றன.உங்களுக்குமாயுமிருக்கலாம்.

Saturday, June 7, 2008

மீண்டும் ஒரு காதல் கதை


அறிமுகம் / சிலாகிப்பு

என் பெயர் தமிழ்செல்வன்.நான் தமிழ்செல்வி என்றொரு பெண்ணைச் சந்தித்தேன்.என்ன பொருத்தம் பாருங்கள்! தமிழ்செல்வன்/செல்வி.இந்தப் பெயர் ஒற்றுமைக்காகவே அவளைப் பிடித்துப் போனது.தமிழ்.. தமிழ்...என கூப்பிடலாம் நீங்களும் ஒருமுறை கூப்பிட்டு பாருங்களேன் தமிழ்,தமிழ்,தமிழ்,தமிழ்..நன்றாக இருக்கிறதல்லவா! இதுதான்..இதுதான.. அவளின்பால் என்னைப் பைத்தியமாக்கத் தூண்டியது.சரி விடுங்கள் பெயர் ஒருபுறம் இருக்கட்டும் அவளின் நிறத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்..அவள் மாநிறமெல்லாம் இல்லை,கருப்பு,நல்ல கருப்பு,அழகான கருப்பு.கருப்பான வட்டமான முகத்தில் வெண்மை நிற வரிசைப் பற்கள் எத்தனைக் கிளர்ச்சி தெரியுமா! நாள்தோறும் நீங்கள் தவிர்க்கவிடும் அழகு பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமானது.எதுவெல்லாம் அழகு, சிறந்தது, மேன்மையானது என சொல்லப்பட்டு வந்ததோ அதை முற்றாகப் புறக்கணியுங்கள்.இந்த தமிழெழுத்து உருவான கணத்திலிருந்து இந்த கணம் வரை நாமனைவரும் அழகு குறித்தான சரியான புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை.சொல்லப்போனால் மிக வன்மையாய் இந்த எழுத்துக்களால் பழிவாங்கப்பட்டு வந்திருக்கிறோம்.சரி விடுங்கள..இது குறித்துப் பிறகொரு முறை பேசுவோம்.நானொரு காதல் கதையை எழுதத் தொடங்கினேன்.ஆகவே அதனைத் தொடர்கிறேன்.குறைந்தபட்சம் தலைக்கு மேலே வானமிருப்பதையாவது உணர்ந்திருக்கிறீர்களா?இல்லையெனில் உங்களால் அவளைக் காதலிக்கமுடியாது.வானம் நீலநிறமென்பதை ஒத்துக்கொள்ளும் நபரா நீங்கள்? அப்படியெனில் உங்களாலும் அவளைக் காதலிக்க முடியாது.மலர்களை முத்தமிடுவது, அதிகாலையில் எழுவது, வேம்பூக்களை நுகர்வது போன்ற பழக்கங்கள் இருக்குமெனில் நீங்கள் ஆபத்தானவர்கள்.ஒருவேளை எனக்குப் போட்டியாய் நீங்களும் அவளை காதலிக்க கூடும்.

சந்திப்பு / முதல் தருணம்

மலை சுற்றும் வழியிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போகும் வழியில்தான் அவளைச் சந்தித்தேன்.வெயிலின் தகிப்பில் மினுமினுத்த கொன்றை மரங்களின் கீழ் நடந்து வந்துகொண்டிருந்த பிற்பகலில் அவள் என்னைக் கடந்து போனாள்.
நான் திசைமாற்றித் தொடர்ந்து போனேன்.புகழ் தியேட்டர் சந்தில்தான் அவளின் வீடு.மலை சுற்றும் வழியிலிருந்து புகழ் தியேட்டர் எவ்வளவு தூரம் என்பதை என் ஊரைப் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.திங்கட்கிழமை பச்சையம்மன், செவ்வாய் கருமாரியம்மன், புதன் ரமணர் விசிறி ஆசிரமங்கள், வியாழன் தட்சிணாமூர்த்தி, வெள்ளி அண்ணாமலையார், சனி ஆஞ்சநேயர் என எல்லா நாட்களிலும் ஒரு கோயில். எல்லா கோயில்களுக்கும் நடந்துதான் போவாள்.எத்தனை தூரம் நடந்தாலும் அவளுக்கு வியர்த்து நான் பார்த்ததில்லை.பூக்களுக்கு வியர்ப்பதில்லை எனவெல்லாம் என்னால் எழுதித்தொலைக்க முடியாது என்பதினால் அவளின் அழகு மற்றும் இன்ன பிற க்களின் வர்ணிப்புகளை மிகவும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அதற்காக 'ரா'வான ஒரு காதல் கதை என நீங்கள் பழித்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

காதல் மொழிதல் /ஒளறிக் கொட்டுதல்

ஒரு பெண்ணிடம் போய் காதலிக்கிறேன் என சொல்வதெல்லாம் எத்தனை அபத்தம். தயங்கி, பயந்து, விழுங்கி, தடுமாறி, ஏங்கி, கனவி, கடேசியாய் ஒளறி,.... சரி விடுங்கள் இப்போது இருவரும் காதலிக்கிறோம் அவ்வளவுதான். அவள் தினம் கோயிலில் மெனக்கெட்டு வேண்டிக் கொண்டதெல்லாம் ஒரு நல்ல புருசன் வாய்க்கத்தானாம்.ஊரில் உள்ள கோயில்கள் மட்டுமல்லாது வெளியூர் உள்ளிட்ட கோயில்களையும் அவள் விட்டு வைக்கவில்லை அத்தனை அம்மன் கோயில்களிலும் மஞ்சள் கயிற்றை மரத்தில் கட்டி வைத்திருக்கிறாளாம்.திருமணத்திற்கு பிறகு எல்லாவற்றையும் நான் போய் அவிழ்க்க வேண்டுமாம்.என்ன கொடும சார்! நான் ஒரு மாதம் பழகிவிட்டு அப்புறம் எஸ் ஆகி விட்டேன்.ஒரு மாதத்தில் எண்பத்தி இரண்டு முத்தங்கள்.மூன்று முறை மேலோட்டமான ஸ்கலித வெளியேற்றம், விதிர்த்த துடிப்பு அவ்வளவுதான். எந்த ஒன்றினையும் ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவது அல்லது அதிலிருந்து வெளியேறிவிடுவது அல்லது தீவிரமான விதயங்களில் தொடர்ச்சியாய் ஈடுபடாமல் தப்பிப்பது இதுவே என் மகிழ்ச்சியான வாழ்வினுக்கான அடிப்படை ரகசியம்.

கதையில் நவீன மசாலாக்களைச் சேர்த்தல்1 - கதைசொல்லி கதாநாயகியிடம் சொன்னது

மன்னித்து விடு தமிழ்! நீ இந்த நிலைக்கு வந்தமைக்கு நானும் ஒரு காரணம்.இந்த இடத்தில் உன்னை எதிர்பார்க்கவில்லை.உனக்கிருந்த அழகிற்கு என்னை விட சிறந்தவன் எவனையாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்வாய் இருப்பாய் என நம்பிக்கொண்டிருந்தேன்.ஆனால் ஏன் ஏன் ஏன் தமிழ்?.இந்த நொடியில் என்னை மாய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.உன் வாழ்வில் நான் கடந்து போன பிறகு என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.இதை தேர்ந்தெடுக்கும் எல்லாருக்குமான காரணங்கள் மிக குரூரமானது என்பதையறிவேன்.இருப்பினும் நானிப்போது கையறு நிலையிலிருக்கிறேன்.உன்னோடு சேர்ந்து வாழ நான் தகுதியானவனில்லை என்பதினால் மட்டுமே உன்னை இந்நிலையிலிருந்து மீட்க முடியாதவனாயிருக்கிறேன்.மேலதிகமாய் உன்னை இங்கிருந்து பெயர்த்துச் சென்றாலும் உனக்கு மூன்றுவேளை உணவளிக்க முடியுமா என்பது சந்தேகமே.என்னுடைய உணவிற்கே சில நாட்கள் வேட்டு வைத்துவிடுகிறேன்.உனக்கு தெரியுமா தமிழ்? எனக்கு வேலை என்கிற வழக்கத்தின் மீது மிகுந்த வெறுப்புகள் இருக்கின்றன.எந்த ஒரு நிறுவனத்தையும், நிறுவனமயமாதலையும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.களவு,கொலை இவற்றுக்கான உடல் தகுதியும் எனக்கில்லை.அதுவுமில்லாமல் இயல்பிலேயே நானொரு பயந்தாங்கொள்ளி.பெண்களை மட்டுமே வீழ்த்தத் தெரிந்த வீரன்.ஆகவே இத்தருணத்தில் என்னால் முடிந்தது உன்னோடு இந்த போதை வெளிறிப் போகாதவரை பேசிக் கொண்டிப்பது மட்டும்தான்.நீ பேசு, ஏதாவது கேள் , கன்னத்தில் அறை, காறி உமிழ், என் கழுத்தை நெறித்து உன் கோபங்களைத் தீர்த்துக்கொள்.எப்போது வெளியில் போகச் சொல்லுகிறாயோ அப்போது போய் விடுகிறேன்.

கதையில் நவீன மசாலாக்களைச் சேர்த்தல் 2 - கதாநாயகி் சொன்னது

என் பிரியத்திற்குரிய கதைசொல்லி என்னை நீயொரு பிற்பகலில் கொன்றை மரங்களடியில் சந்தித்ததாய் சொன்னாய்.என்னைப் பொருத்தவரை உன் பதிமூன்றாம் வயதிலிருந்து உன்னை எனக்குத் தெரியும். எட்டாம் வகுப்பு அ பிரிவிலிருந்து பத்தாம் வகுப்பு சி பிரிவு வரை நீயும் நானும் ஒன்றாய்த்தான் படித்தோம்.எனக்கான முதல் கிளர்வுகளைத் தந்தவன் நீ! உனக்கான என் காத்திருப்புகளாய்த்தான் நான் அய்ந்து வருட வாழ்க்கையை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.எந்த ஒன்றினுக்கான காத்திருப்புகளும் வீண்போவதில்லை என்பதுபோல் நீயென்னைக் கண்டறிந்தாய.ஆனால் நான் உனக்குள்தான் இருந்தேன் என்பது உனக்கு இந்த நிமிடம் வரை தெரியாமல் இருந்துவிட்டது பாரேன!!.அந்தத் தருணங்களில் எனக்கேற்பட்ட அலைக்கழிப்புகளிலிருந்து என்னை மீட்டெடுக்க அங்கங்கே இருந்த சிலைகளை நம்பிக்கொண்டிருந்தேன.வேறெந்த வழிகளும் அப்போதெனக்கு தெரியாமல் இருந்துவிட்டது.உனது முத்தங்களில் முழுமையடைந்த அல்லது விழிப்படைந்த என்னுடைய தாமதமான பெண்மை தனக்கான அபரிதங்களில் மூழ்கிப்போனது.நீ என்னை துரோகித்திருந்தாலும, ஒளிந்துகொண்டிருப்பினும் என் வாழ்வில் நீயொரு முக்கியப் பங்கு.உன்னை எப்போதுமென்னால் வெறுக்க இயலாது.இந்த கணத்தில் எதைத் தேடி இங்கு வந்தாயோ அதை முழுமையாய் எடுத்துக்கொள்.உனக்காய் மட்டுமான சிறப்பான தயாரிப்புகள் என்னிடம் ஏதுமில்லை.இது எல்லாருக்குமான ஒன்று.உன்னிலிருந்து ஆரம்பித்தது.இன்று உன்னோடு மட்டும் முடிந்துபோனால் எனக்கான முழுமை போன்ற ஒன்றினை நான் ஒருவேளை அடையலாம்.

கதையில் டுவிஸ்ட்

கதை சொல்லி:நீ எப்படி என்னுடன் படித்திருக்கமுடியும்?நான் படித்தது ஆண்கள் பள்ளி..
கதாநாயகி :ஆம் அப்பொது என் பெயரும் தமிழ்செல்வன் தான். சே.தமிழ்செல்வன்.

புகைப்படம்: http://www.comm.unt.edu/histofperf/pmp1.gif

Featured Post

test

 test