Thursday, December 11, 2008

சந்தோசின் கிளி


சந்தோசு எதையாவது வளர்த்துக்கொண்டிருப்பான்.எல்லாச் சிறுவர்களுக்கும் இருக்கும் பொது ஆர்வம்தான் என்றாலும் சந்தோசின் பிராணி வளர்ப்பு ஆர்வம் சற்று அதீதமானதுதான்.மேலும் அவன் வளர்ப்பதைத் தூக்கிக் கொஞ்சியோ, செல்லப் பெயரிட்டு அழைத்தோ, இம்சித்தோ, நான் பார்த்ததில்லை.அவன் வளர்க்கும் பிராணிகளுக்கான உணவு ,பாதுகாப்பு இவற்றில் செலுத்தும் கவனத்தை அவற்றினோடு விளையாடுவதில் காட்டமாட்டான்.தூரத்தில் அமர்ந்து அப்பிராணி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான்.பள்ளி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாய் திரும்புவான்.ஒருவேளை அப்பிராணி கடைசி வகுப்புகளிலேயே அவன் நினைவில் வந்துவிட்டிருகக்கூடும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்தப் பிராணியும் அவனோடு நிலைப்பதில்லை. நாய்,பூனைக்குட்டி,முயல் என அவன் வளர்த்ததெல்லாம் கொஞ்சம் வளர்ந்ததும் காணாமல் போய்விடும்.எதுவும் பேசாமல் இரண்டு நாட்கள் உம் மென்று சுற்றித் திரிவான்.அவன் அம்மா இரண்டு அடி போட்டதும் சம நிலைக்குத் திரும்புவான்.

சந்தோசு என் அக்காவின் மகன். ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவன் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு பெரிய மனுசத்தனம் தெரியும்.நானும் இப்படித்தான் இருந்தேன்.அறிமுகமாகா மனிதர்களிடம் லேசாய் கூச்சம், புது இடத்தில் வெட்கம் ,பிடிவாதமில்லாது இருத்தல்,பலர் புழங்கும் இடத்தில் அடங்கி ஒடுங்கி இருத்தல் என என் சிறுவயது குணாதிசியங்களையே இவனும் பிரதிபலித்தான் . எனக்கும் அவனுக்குமான ஒரே வித்தியாசம் புத்தகங்கள்தாம். நான் எத்தனை முயன்றும் அவனிடம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டு வர முடியவில்லை. சிறுவர் பத்திரிக்கைகளை என் முன்னால் படிப்பது போன்ற பாவனை செய்வானே ஒழிய நான் சற்று அகன்றதும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விடுவான்.

சிறுவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டால் என்னாகும் என்கிற யோசனை எனக்குப் பயத்தையே தந்தது.வாசிப்பினூடாய் விரியும் காட்சிகள் ஒருவனது கற்பனைத் திறனை மேம்படுத்தும். மேலும் வாசிப்பு மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.நான் ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வனை முடித்திருந்தேன்.இவன் குறைந்த பட்சம் அம்புலிமாமா வாவது படித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் இவன் தொலைக்காட்சி டிஷ்ஷீயும், டம்களில் மூழ்கிப் போயிருந்தான்.எந்த நேரமும் சுட்டி டிவியும், ஜெட் எக்ஸ்ம் வீட்டை அதிரச் செய்து கொண்டிருக்கும்.
மாதம் ஒருமுறை வீட்டிற்குப் போகும் இரண்டு தினங்களில் அவனைத் துன்புறுத்த வேண்டாமே என நானும் அதிகம் அவனை பிடித்து உலுக்குவதில்லை.ஒவ்வொரு முறை திரும்பும்போதும் அவனுக்கு பணம் கொடுத்து வருவேன்.”வீண் செலவு செய்து திரிகிறான் பணம் கொடுக்காதே” என அக்கா எவ்வளவு சொல்லியும் நான் பணம் கொடுத்துவிட்டுத்தான் வருவேன்.சந்தோசு தன் பணத்தை சேமிக்கும் இடங்கள் எவரும் அறியாதது.அவன் அம்மாவின் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க அதிகம் மெனக்கெடுவான்.அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பான்.அதை அவன் அம்மாவிடம் இருந்து காப்பாற்ற அவன் துப்பறியும் போலீசாக தன்னை நினைத்துக் கொள்வானாயிருக்கும்.பெட்டி சந்து, மண்ணைத் தோண்டி புதைத்தல், மரப் பொந்து என அவன் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பரம ரகசியமானது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு கிளி வாங்கினான் .அக்காவும் அம்மாவும் அவனை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.சின்னஞ்சிறு கிளி, இறக்கைகள் கூட இன்னமும் முளைத்திருக்கவில்லை.”பாவம் டா.. விட்டுட்டு வந்திடு” என அவனிடம் கெஞ்சியும்,மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள்.அவன் மசியவில்லை. ”விலைக்குதான் வாங்கிவந்தேன், எங்கிருந்தும் பிரித்து வரவில்லை”.. என சொன்னதும் என் அக்கா எனக்குத் தொலைபேசி ”ஏண்டா இவனுக்கு காசு கொடுத்து தொலையுற” என பொருமினாள்.”கிளிதான வளர்க்கட்டுமே என்ன இப்ப?” என தொடர்பை துண்டித்தேன்.அடுத்தவாரம் ஊருக்குப் போனபோது கிளிச்சத்தம் என்னை வரவேற்றது.பெருமையாய் தூக்கி வந்து என்னிடம் கொடுத்தான்.கிளி என்னென்ன சாப்பிடும்.. எப்போது சாப்பிடும்.. எந்த மாதிரி கத்தினால் என்ன அர்த்தம்.. என எல்லாவற்றையும் ஒப்பித்தான்.கிளிக்கூண்டு தற்சமயம் கிடைக்காததால் வெங்காய கூடையை தற்காலிக கூண்டாய் மாற்றி விட்டிருந்தான்.வீட்டை விட்டு விடுமுறை தினங்களில் கூட எங்கும் செல்லாமல் இருந்தான்.சினிமாவுக்கு அழைத்தேன் ”வர்ல மாமா கிளி தனியா இருக்கும்” என மறுத்து விட்டான்.முன்பு போல் அவன் சரியாய் படிப்பதில்லை ..எந்நேரமும் 'கிளி' 'கிளி' எனத் திரிகிறான் என அக்கா புராணம் வாசித்தாள்.”சின்னப்பசங்க அப்படித்தான் இருப்பாங்க வேலய பார்” என திட்டி விட்டு வந்தேன்.

அதற்கடுத்த மாதம் ஊருக்குப் போனபோது கிளி சற்று வளர்ந்திருந்தது..இங்கும் அங்குமாய் வீட்டிற்குள்ளேயே பறந்து கொண்டிருந்தது.இரண்டு முறை கிளி பறந்து போய் மாமரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாயும், தாத்தா மரமேறி பிடித்துத் தந்தாரெனவும் சொல்லிக்கொண்டிருந்தான்.”கிளி வளர்க்கிறேன்னு எல்லார் உயிரையும் எடுக்குது இது” என அக்கா அவனை லேசாய் தட்டி விட்டுப்போனாள்.சென்ற மாதம் ஊருக்குப் போகமுடியவில்லை.வாரம் ஒருமுறை அவனுக்குத் தொலைபேசி கிளி விசாரிப்புகளை செய்துகொண்டிருந்தேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அக்கா தொலைபேசினாள்.”நீ கொஞ்சம் வரமுடியுமாடா?.. இவன் ரெண்டு நாளா எதும் சாப்டல... அழுதிட்டே இருக்கான்” எனச் சொன்னதும் கிளம்பிப் போனேன். என்னைப் பார்த்ததும் இன்னும் அழத் தொடங்கினான். ”கிளி பறந்து போய்டுச்சு மாமா” என்றவனைத் தேற்றினேன்.”வேற கிளி வாங்கிக்கலாண்டா” என சொன்னதும் அக்கா கத்த ஆரம்பித்தாள் ”இனிமே இந்த வீட்ல எதையாச்சிம் வளர்க்கிறேன்னு ஆரம்பிச்சான்.. அவ்ளோதான்” என்றவளைக் கத்தி அடக்கினேன்.ஒரு வழியாய் அவனைச் சாப்பிட வைத்து, ”கிளி அடைஞ்சி இருந்தா பாவம்டா.. இறக்கை முளைச்சதும் நானே அத பறக்க விடலாம்னுதான் இருந்தேன்” என மெதுவாய் அவன் தலைவருடி சொன்னதும் சமாதானமானான்.மாலை கடைக்குப் போய் மீனும் மீன் தொட்டியும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்தில் திரும்பி வரும்போது சந்தோசு புத்தகங்கள் வாசிக்காமலிருப்பது குறித்தான கவலைகள் என்னிடம் காணாமல் போயிருந்தன.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...