Saturday, November 8, 2008

வா.மு.கோமு வின் கள்ளி:சாருவின் வாத்தி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது.வா.மு.கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு.இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி.

எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது.காமம் கரைபுரண்டோடுகிறது.கற்பு,ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள்.நள்ளிரவு,விடியல்,முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி,பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது.விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல்.முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது.எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது.ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது.லேசான எரிச்சலும் மண்டியது.எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார்.போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி/மனைவிக்கு சமர்பித்திருக்கிறார்.மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும்.

சாரு இவரைத் தன் முதல் வாரிசாக அறிவித்திருக்கிறாராம்.இந்த 'வாரிசு' களின் மீது ஏற்படும் பரிதாபமும் வாரிசுகளை உருவாக்கும் மகோன்னதர்களின் மீது ஏற்படும் எரிச்சல்களும் அத்தனை சீக்கிரம் அடங்குவதில்லை.புனைவிலக்கியத்தில் சாருவின் சாதனைகள் எல்லாம் மேல்தட்டு/நடுத்தர வர்க்கத்து போர்னோ மாதிரிகள் மட்டுமே.வா.மு.கோமு தன் முதல் நாவலிலேயே பல கட்டுக்களைத் தகர்த்திருப்பது சாருவின் சாதனை மாதிரிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை.தன் சார்ந்த பிம்ப உருவாக்கங்களிலிருந்து எங்களின் இலக்கிய பிதாமகர்கள் வெளிவர எல்லாம் வல்ல ரோலான் பர்த்துக்கள் உதவி செய்வார்களாக.

கள்ளி முடித்த கையோடு சோ.தர்மனின் கூகையை ஆரம்பித்தேன் முதல் பத்து பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்கமுடியவில்லை.விளிம்பின் கதைசொல்லலுக்கு தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான மொழி.மிகச் சரியான வட்டார வழக்கு.அம்மொழி சாத்தியமில்லையெனில் சும்மா இருந்துவிடலாம்.விளிம்பின் கதையெழுதுகிறேன் பேர்வழியென அடைப்புக்குறிகளுக்குள் சுந்தர ராமசாமித் தனங்களை பொருத்தி வைப்பது அபத்தமானது.மேலும் இவர் முதல் ஐந்து பக்கங்களில் சொல்லியிருக்கும் அபத்தங்கள் புத்தகத்தை தூக்கி எறிய வைத்தன.ஆண்டை ஒருவர் எல்லா பறக்குடி வீடுகளிலும் புகுந்து இஷ்டம் போல புணர்ந்து திரிவாராம்.எந்தப் பெண்ணை புணர்கிறாரோ அப்பெண்ணின் கணவன் அவருக்கு சாராயம் வாங்கி வந்து கொடுப்பாராம்.(தானும் கொஞ்சம் குடித்துக்கொள்வாராம்)ஆண்டை வீட்டில் மனைவியை புணர்ந்து கொண்டிருக்கையில் கணவன் வீட்டுத் திண்ணையில் தன் வயதுக்கு வந்த மகளோடு உட்கார்ந்து அழுவாராம்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வந்த கோபத்துக்கு அளவே இல்லை.இந்த மசிராண்டிகள் எந்த கருமத்தையும் எழுதாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது.ஒரு புத்தகத்தை பத்து பக்கங்கள் மட்டுமே படித்து மிக மோசமாக விமர்சிப்பது வன்முறைதான் என்றாலும் முழுவதையும் படிக்கும் பொறுமை இல்லை எனக்கு. படித்து முடித்த புண்ணியவான்கள் விளக்கினால் என் சிற்றறிவு சமாதானமடையும்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...