Saturday, August 16, 2008

திரை இசை பாடல்கள்- வெகு சன ரசனை-காதல் கவிதைகள் மற்றும் திரைப்படங்கள்

திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில்
நம்மைத் தொலைத்தது அந்த இசை
வீணையின் அதிர்வுகளில்
நினைவு
முடிவிலியின் சுவர்களில் மோதி
இரத்தமிழந்தது
இப்போது உன் உதடுகளிலிருந்து துவங்குவதே
மிகச்சரியானதாயிருக்கக்கூடும்


வெகுசன ரசனைகள் குறித்தான புரிதல்களையும் திரையிசையின் மீதும் திரை இசைப் பாடல்களின் மீதும் விருப்பம் கொண்ட நண்பர் ஒருவருடனான உரையாடல் திரை இசை பாடல்கள் மீதிருந்த சில இறுக்கங்களை விடுவித்தது போலிருந்தது.குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு நிகரான ஒரு கட்டமைப்பிலேயே கவிஞர்களுக்குப் பாடல்களெழுத சுதந்திரம் வழங்கப்படும் சூழலில் கவிஞன்/ பாடலாசிரியன் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள பாடல்களைச் செய்துகொண்டிருக்கிறான்.கவிஞர்களை விட திறமைசாலிகளை வளர்த்தெடுக்கும் இடமாக அல்லது திறமைசாலிகள் மட்டுமே கோலோச்சும் இடமாக திரை இசைப் பாடல்கள் உருக்கொண்டுள்ளன.இத்தகைய வெளி யிலிருந்து சில நல்ல பாடல்கள் வெளிவருவதைக் கண்டிப்பாகப் பாராட்டியே தீர வேண்டும்.சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் சில நல்ல பாடல்களும்,இசையும் தமிழ்த்திரையிசையை இன்னும் உயிர்ப்பாக வைத்துக்கொண்டிருக்கின்றது.பெரும்பான்மைக் குப்பைகளை கண்டிக்காமலிருக்கவும் முடியவில்லை.சமீபத்தில் சத்யம் எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் நயனை பால்பப்பாளி என விளித்து ஒரு குத்துப் பாடல்.எழுதியவனைச் சொல்வதா? எழுதத் தூண்டியவனைச் சொல்வதா? கேட்டு இன்புறுவனைச் சொல்வதா? இந்தக் கருமாந்திரங்களை வெகுசன ரசனை என பொத்தாம் பொதுவாக வகைப்படுத்தி தன் சுய அரிப்புகளுக்கு கூட்டம் சேர்க்கும் புல்லுருவிகளினை எதைக் கொண்டும் அடிக்கலாம்.வெகு சன ரசனை என்பது கீழ்த்தரமானதாய் ஒரு போதும் இருக்கமுடியாது.வெகு சன ரசனை என்பது இலகுவானதும், பொழுதுபோக்கு சார்ந்ததுமாய்த்தான் இருக்கமுடியும்.அதிக ஆபத்தில்லாத ராமராஜன் திரைப்படங்கள் குறித்து இப்போது நாம் பேச ஆரம்பித்திருப்பது வெகு சன ரசனைக்கு சரியான புரிதல்களாய் இருக்க முடியும்.

ADNAN SAMI யின் "bhigi bhigi rato mein..." பாடலை இசையுடன் மொழிபெயர்க்க நண்பர்களுடன் ஓர் இரவைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இந்தி,உருது போன்ற பிற மொழிப் பாடல்களை தமிழில் இசையோடு மொழிபெயர்ப்பது சிறிது கடினமானது.சந்தத்துடனும்,பொருள் மாறாமலும், மூலத்தைச் சிதைக்காமலும் மொழிபெயர்க்க வேண்டுமென்கிற எங்களின் ஆவல் ஓரளவிற்கு நிறைவேறியது.ஆனால் பாடல் மிகச் சாதாரண பிற தமிழ்பாடலைப் போலத்தானிருந்தது. பெரிதாய் கவித்துவமில்லாமல் போனது குறித்து எனக்கு சிறிது வருத்தமே ஆனால் மூலத்தை மாற்றுவதில் / சிதைப்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை.என் அறிவுக்கெட்டியவரை பிற மொழிப்பாடல்கள் / கவிதைகளில் தெறிக்கும் கவித்துவத்தை விட தமிழில் நாம் எட்டிய கவித்துவ உச்சம் சிறிது அதிகமாகத்தான் தோன்றுகிறது.நமது மொழியின் ஆளுமை அல்லது நமது மொழியின் மிக அதிக வார்த்தைகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஒரே வார்த்தைகளை கையாள வேண்டிய சிக்கல்களில்லாதிருக்கின்றது.நிறைய வார்த்தைகளை பல்வித உணர்வுகளுக்கு வழங்க ஏதுவாக அமைந்திருப்பது நமது மொழியை இன்னமமும் நேசிக்கத் தூண்டுகிறது.

பண்புடனில் தொடர்ச்சியாய் காதல் கவுஜை/கவிஜை/கவிதை களை எழுதிக்கொண்டிருப்பது இலகுவான மனநிலையை வெளிப்படுத்துவதாய் உள்ளது.விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தது.ஒரு வித கிண்டலடிக்கும் மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன்.சில சுமாராய் வந்திருப்பதால் தொடரும் எண்ணமும் இருக்கின்றது.

கூடுகளை விரும்பிடாத பறவையொன்றின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இளைப்பாறல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனெனினும்
பறவையின் வசீகரம் இளைப்பாறல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்....


காதல், உறவு, வாழ்வு என எல்லாவற்றையும் இதனுள் பொருத்திக்கொள்ளலாம் போலத்தானிருக்கிறது.

ட்விட்டர் பக்கம் ஒதுங்கியதில் நிறைய சுட்டிகளைப் பெறமுடிந்தது.சுரதா கொடுத்திருந்த கடவுளின் குழந்தைகள் எனும் பாலுமகேந்திராவின் குறும்படம் மனதைத் தைத்தது.தொடர்ச்சியாய் மனநலம் குறித்தாய் கண்ணில் பட்டு இம்சிக்கிறது.உள்ளே இருந்து சில குரல்கள் தந்த அயர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகு நாட்களாய் பார்க்காமல் வைத்திருந்த One Flew Over the Cuckoo's Nestதிரைப்படத்தையும் கடந்த வாரத்தில் பார்த்தேன்.முடிவை ஏனிப்படி குரூரமாக்கினார்கள் என புலம்பியபடியிருந்தேன்.சில நெருடல்களிருப்பினும் இந்தப் படம் எனக்குப் பிடித்தேயிருந்தது.இத்திரைப்படத்தில் வரும் குழு உரையாடல்கள் மிகச் சிறந்த முறையில் வந்திருந்தன.கோபியும் இந்த அணுகுமுறையை விரிவாய் பேசியிருப்பார்.தொடர்ச்சியாய் பேச முடியாத billy கதாபாத்திரம் ஏற்படுத்திய பரிதாபம் வெகுநேரம் நீடித்திருந்தது.

ஜெய மோகனின் காமரூபினி படித்தேன்.ஜெமோவின் அடுத்த படியென நண்பர் ஒருவரால் சிலாகிக்கப்பட்டிருந்த அளவிற்கு இதில் ஒன்றுமில்லை.பெண்ணை தொடைகளாய், முலைகளாய், யட்சியாய், காமாந்தகியாய் மட்டுமே பார்க்கத் தெரிந்த புனிதர்.ரப்பர், எசமாடன், டார்த்தீனியமென இவரது புனைவுகளிலிருந்தே சுட்டு எழுதப்பட்டிருந்த இன்னொரு புனைவாகத்தான் என்னால் இதை அணுகமுடிந்தது.வார்த்தைகளைக் கொட்டி ஜெமோ படைக்கும் பிரம்மாண்ட படையல்களின் மீது உண்மை சாவகாசமாய் கால் தூக்கி ஒன்றுக்கிருந்து போகிறது.மாறாய் உயிர்மை ஜீலை இதழில் வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன சிறுகதை மனதில் வெகு நேரம் தங்கியிருந்தது.அகம் புறம் என சிறுமியின் வினோத உலகத்தை பறவைகள் கொண்டு புனைந்திருந்தது அற்புதமாய் வந்திருந்தது.சுகி திடீரென சொல்லும் புல் புல் லில் சிறிது அதிர்ந்து போனேன்.

AKira வின் Dreams படத்தை இரண்டாம் முறையாக பார்க்கவாரம்பித்து முடிக்க முடியாத மன உணர்வில் நிறுத்திவிட்டேன்.நிகழிலிருந்து பிடுங்கி பெருங்கனவொன்றில் எறிந்தார்போன்ற உணர்வைத்தான் இத்திரைப்படம் தருகிறது.சிறுவனின் கனவுகளில் உயிர்கொள்ளும் peech மரங்கள்,மழையும் வெய்யிலும் அடிக்கும் பொழுதொன்றில் நரியின் திருமணம் பார்க்கபோய் வினோத மனிதர்களை பார்த்து ஆபத்தில் சிக்கும் இன்னொரு சிறுவன்,வான் கோவின் ஓவியங்கள் வழிப் பயணித்து வான்கோ வை சந்தித்து திரும்பும் பார்வையாளன், போரில் இறந்த வீரர்கள் உயிர்கொண்டு கமாண்டரினை கலங்கடிக்கும் வினோத tunnel என வினோதங்களாலும் பிறழ்வுகளாலும் நிரம்பிய வெளி.பிரம்மிப்பையும் அயர்ச்சியையும் ஒன்றாய் தரவல்ல tarkoyevski யின் திரைப்படங்களினையொத்த Akira வின் படம். காட்சியூடகத்தின் வலிமையை அழுத்தமாய் சொன்ன படமிது.பிரம்மிப்பொழிந்த மனநிலையில் இத்திரைப்படத்தை விரிவாய் பதியவும் எண்ணம்.

ஒரு மாலையின்
மேகக் கவனித்தலின்போது
நினைவை அசைத்தது
அந்தியின் பொன்னிறம்
மேகத்தை விட்டு
அடிவான நிறங்களில் கரையும்போது
இரவுப்பெண் தன் நீளக் கருங்கூந்தலினால்
வானத்தை மூடவாரம்பித்தாள்
அது உன் கூந்தலிழைகளில் புதையும்
என் முகத்தினையொத்தபடி
நிறங்களை விடுவித்து
கருமையில் புதைந்து கொண்டது...
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...