Friday, June 20, 2008

மேய்ச்சல் - இணையம்

எழுத்தினைத் தொழிலாகக் காணவேண்டாம். வேறெதாவதைத் தொழிலாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் குழி தோண்டுங்கள்; ஆனால் எழுத்தினை உங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காக கருதுங்கள். என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு பொழுதுபோக்கு தொழிலால் நான் ஒரு விவசாயி - வில்லியம் ஃபாக்னர்

ஆதவன் தீட்சண்யாவின் இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை எனும் சிறுகதை புதுவிசையில் கிடைத்தது.படித்து முடித்தபின்பெழுந்த உணர்வுகள் புதுவிதமானது.குறுநாவல் அல்லது நாவலுக்கான உள்ளடக்கத்தை, விரிவை இச்சிறுகதை கொண்டிருக்கிறது.மிகத் தீவிரமான வீர்யமுள்ள கருவை எவ்விதக் குலைவுமில்லாமல் சிறுகதையாக மட்டும் எழுத ஆதவனால் முடிந்திருக்கிறது.இதே போன்றதொரு கருவோ, சிந்தனையோ இலக்கிய டைனோசர்களுக்கு உதித்திருந்தால் ஒரு குறுங்காட்டையே அழித்தெழுதியிருப்பர்.இன்னுமொரு தடிமனான வஸ்து தமிழ்பரப்பை ஆக்ரமித்திருக்கும்.கவிதையில் சிறுகதையும், சிறுகதையில் நாவலையும் பொருத்திவைத்திருக்கும் ஆதவன் நாவலெழுதினால் அதற்கான உள்ளடக்கங்கள் எதுவாயிருக்கும் என்பது பற்றி யோசித்துக் கொன்டிருந்தேன்.இந்த கீழ்கண்ட வரிகள் படித்த உடன் ஒட்டிக்கொண்டது.

வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர் இங்கிருந்தோரை மதம் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறவர்களே, ஆரியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே...
அவர்கள் ஏன் இங்கிருந்தோரை ஆரியராக மாற்றி தம்மோடு சேர்த்துக் கொள்ளாமல் வர்ணமாக,சாதியாக பிரித்து வைத்தார்கள்

கடவுளுக்கு முன்பே உலகமிருந்தது என்பதைப்போலவே எனக்குப் பின்னும் இருக்கும். ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்றுகொண்டிருக்க முடியாது...

வில்லியம் ஃபாக்னர் செவ்வி ஒன்றில் சிறுகதை என்பது முற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்ட வடிவம் ஆனால் நாவல் அப்படியில்லை கொஞ்சம் குப்பைகளை வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பார். புத்தகத் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான வீர்யங்கள் குறைவதாகத்தான் படுகிறது. எழுபது பக்கங்களுக்குமேல் தமிழில் நாவல் எழுதுபவர்களின் பேனாக்களை / தட்டச்சுப் பலகையை பிடுங்கிகொண்டால் கூட நன்றாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் அதிகப் பூச்சுகள் ஆயாசத்தைத் தருகிறது.
********************************
தீராநதியில் படிக்க நேர்ந்த சோ தர்மனின் சில கருத்துக்கள் எரிச்சலை வரவைத்தது. அதிரடியாக அவர் ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார்.
இதுவரைக்கும் கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்ன விஷயங்கள் இவை : தலித் என்றால் எண்ணெயே தேய்க்காமல் பரட்டைத் தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். சண்டை போடுவான். தலித் பொம்பளை என்றால் அவள் லேசாக சோரம் போவாள். தலித்துகளை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என்ன கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள்? தலித் பண்பாட்டைக் கொடுத்திருக்கிறதா? தலித்தினுடைய பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் எழுத்தில் பேசும் தலித் பாஷையே போலியானது.
இது இவரின் வாசிப்பு லட்சணத்தைத்தான் காட்டுகிறது என்றாலும் இது போன்ற கருத்துகளுக்கான எதிர்வினைகள் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாகத்தான் படுகிறது.தலித் எழுத்தாளர் என அறியப்பட்ட இவர் பண்பாட்டையையும் பாஷையையும் எழுத வேண்டியதுதானே?வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்பவரைப் பற்றி மோனோகிராஃப் புத்தகம் ஒன்றை எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? நாடார்களின் பிள்ளைமார்களின் இசையை ஆய்வு செய்தவருக்கு தலித்தின் இசை கண்ணில் பட்டுத் தொலையவில்லையா? இதையெல்லாம் விட எரிச்சலைக்கிளப்பியது தீராநதியின் இந்தக் கேள்விதான் நெடிய கல்வி பாரம்பரியமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியைக் கையாளுவதற்கும், இப்போதுதான் கல்வியறிவை பெற்று எழுத வந்திருக்கின்ற தலித்துகள் மொழியை கையாளுவதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?
இவனுகளை எதால் அடிப்பது?படித்து தொலைத்திற்கு நாம்தான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
*****************************
காலச்சுவடு மே இதழில் வெளிவந்த இமையத்தின் கட்டுரையையும் அதற்கு எதிர்வினையான சில கட்டுரைகளையும் படித்தபின்பு எழுந்த எரிச்சல் அடங்க சிறிது நேரம் பிடித்தது.இப்போதைய சலனமற்ற நிலையில் சண்டை போடும் எழுச்சி எதுவும் இல்லை.மெதுவாய் பார்த்துக்கொள்ளலாம் என விட்டாயிற்று ஆனால் காலச்சுவடு உள்ளொளி தரிசனத்தை கண்டறிந்த முடிவிலியின் பெருவெளியில் நீந்திக் களிப்பதோடு தன்னுடைய இலக்கியப் பணியை நிறுத்திக் கொள்ளலாம்.இமையம்,சோ தர்மன் போன்றோர் உளறிக் கொட்டுவதை நிறுத்திவிட்டு உருப்படியாய் எழுதத் தொடங்கலாம்.நானும் கூட இந்த விடுமுறைநாளில் இப்படியெல்லாம் படித்து டென்சன் ஆகி பதிவெழுதிக்கிழிப்பதை நிறுத்திவிட்டு நேற்றிலிருந்து தீரவேமாட்டேன் என்கிற ஜானியை லேசாக மிரட்டலாம் :)

10 comments:

Ken said...

நெடிய கல்வி பாரம்பரியமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியைக் கையாளுவதற்கும், இப்போதுதான் கல்வியறிவை பெற்று எழுத வந்திருக்கின்ற தலித்துகள் மொழியை கையாளுவதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?
இவனுகளை எதால் அடிப்பது?படித்து தொலைத்திற்கு நாம்தான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


மிகச்சரி புலி, அடிச்சிக்க வேணாம், படிச்சி சிரிச்சிட்டு போயிடுங்க

chandru / RVC said...

//இப்படியெல்லாம் படித்து டென்சன் ஆகி பதிவெழுதிக்கிழிப்பதை நிறுத்திவிட்டு நேற்றிலிருந்து தீரவேமாட்டேன் என்கிற ஜானியை லேசாக மிரட்டலாம்//
இது மேட்டரு..! :))

சென்ஷி said...

//இதே போன்றதொரு கருவோ, சிந்தனையோ இலக்கிய டைனோசர்களுக்கு உதித்திருந்தால் ஒரு குறுங்காட்டையே அழித்தெழுதியிருப்பர்.//

என்ன அய்யனார் இவ்வளவு வருத்தப்படறீங்க. இப்பலாம் தலைவனுங்க அமேசான் காட்டு மேலதான் கண்ணாம். இன்னும் கொஞ்ச நாள்ல அத அழிக்காம தூங்க மாட்டேன்னு அடம் புடிப்பானுங்க பாருங்க.

ஆதவன் தீட்சண்யாவின் அறிமுகத்திற்கு நன்றி. வாசித்து விடுகிறேன்.

//வில்லியம் ஃபாக்னர் செவ்வி ஒன்றில் சிறுகதை என்பது முற்றிலும் குப்பைகள் அகற்றப்பட்ட வடிவம் ஆனால் நாவல் அப்படியில்லை கொஞ்சம் குப்பைகளை வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பார். புத்தகத் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான வீர்யங்கள் குறைவதாகத்தான் படுகிறது. //

இதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியாது. முழுக்க முழுக்க குப்பைகள் மட்டுமே சேர்ந்த நாவல்களையும் நான் வாசித்ததுண்டு.. :(

மிதக்கும்வெளி said...

காலச்சுவடுவில் வெளிவந்த இமையத்தின் உளறல் கட்டுரையைப் படித்துவிட்டு நான் அதற்கான எதிர்வினை ஒன்றை எழுத எண்ணிப் பாதி எழுதவும் செய்தேன். ஆனால் காசுவையோ சுஜாதா, சு.ரா வகையறாக்களையோ விமர்சித்தாலே அது சாதிவெறுப்பாக இனங்கண்டுகொள்ளப்படுகிற சூழல் அயர்ச்சியையே தந்தது. தலித்திலக்கியம், தலித் என்னும் தனித்துவ அடையாளத்தின் இருப்பு மற்றும் அவசியம் குறித்து பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்திருக்கும் காத்திரமான விவாதங்களைப் பற்றி எந்த அக்கறையுமில்லாமல் இமையம் உளறுகிறார் என்றால் அந்த உளறல் பத்தாண்டுகளுக்கு முன்பு சு.ரா மற்றும் கோவைஞானி வகையறாக்களின் உளறல்தான். அட்டைப்படக்கட்டுரையாக வெளியிடுவதற்கான எந்தச் 'சரக்கும்' இல்லாத அந்த இழவை வெளியிட்டு தன் பார்ப்பன வன்மத்தைத் தீர்த்துக்கொண்டது கா.சு. இமையத்தின் அந்த உளறல் எதுவரை சென்றதென்றால் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டக் கோரும்வரை. என்ன செய்ய? இத்தனைக்கும் கா.சுவின் நிழல் ஆசிரியர் குழுவில் ரவிக்குமார், நிஜ ஆசிரியர்குழுவில் ஸ்டாலின்ராஜாங்கம் மாதிரியான தலித் எழுத்தாளர்கள்.

Anonymous said...

///கருவோ, சிந்தனையோ இலக்கிய டைனோசர்களுக்கு உதித்திருந்தால் ஒரு குறுங்காட்டையே அழித்தெழுதியிருப்பர்//

அந்தக் கொடுமையை வியந்து இன்னொரு கூட்டம் ஒரு பெருங்காட்டை அழித்திருக்கும். காடுகளைக் கடவுள் காப்பாற்றட்டும்.

சுகுணா

இந்த அயர்ச்சிக்காக அமைதியாக இருந்து விடாதீர்கள். சிலராவது தொடர்ச்சியாகத் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போதுதான் பம்மாத்துக்ளின் கூடாரங்கள் கலைந்து போக வாய்ப்பு உருவாகிறது. ஆகவே உங்கள் கருத்துக்களை எழுதி வாருங்கள் - அயர்ச்சியின்றி

seethag said...

faukner....:)

Ayyanar Viswanath said...

ஆமாம் கென் இப்போதைய மனநிலையில அதான் பண்ண முடியுது

அதே மேட்டர்தான் சந்திரசேகர் :)

சென்ஷி முழுக்க முழுக்க நல்ல நாவல்கள் தாம் இப்ப உம்மிடம் இருக்கே படியுமய்யா..படிச்சிட்டு உன் பங்குக்கு அமேசான் காடுகளுக்கு ஆபத்த உண்டு பண்ணு

Ayyanar Viswanath said...

சுகுணா
ஆசிப்பின் பின்னூட்டத்தை இங்கே பயன்படுத்திக்கொள்கிறேன்.அயர்ச்சி எதுவுமற்று தொடர்ந்து எதிர்வினையாற்றி வருவது தார்மீக மற்றும் அறக் கடமைகளில் ஒன்று :)


அண்ணாச்சி ஒடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் இத்தன சீரியசா ஒரு பின்னூட்டம் :)

நன்றி சீதா

Perundevi said...

அய்யனார்,
சோ. தருமன் மற்றும் அமிர்தம் சூர்யாவின் நேர்காணல்கள் குறித்து ஜெயமோகன் பதிவு பார்த்தீர்களா? இதைப்பற்றி என் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது என் பதிவில் பதிக்கிறேன். நன்றி.

Ayyanar Viswanath said...

பெருந்தேவி,

ஜெமோ கட்டுரை முன்பு படித்திருக்கவில்லை உங்களின் பின்னூட்டம் பார்த்த பின்புதான் படித்தேன்..(ஜெமோ படிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்பது என் தட்டைப் பார்வை)

ஜெமோ ஒரு நல்ல நகைச்சுவை கட்டுரையாளர் என்பதைத் தவிர சொல்ல எதுவுமில்லை...உங்களின் கருத்துக்களை வாசிக்க காத்திருக்கிறேன்..

Featured Post

test

 test