Wednesday, May 28, 2008

இடைவெளி - எஸ்.சம்பத்

சன்னாசி பட்டியலிட்டிருந்த புத்தகங்களில் இந்தப் பெயரை முதலில் பார்த்தேன்.தொடர்ச்சியான தேடுதல்களில் இந்தப் புத்தகம் மட்டும் கிடைக்கவே இல்லை.சி.மோகன் எழுதிய ஒரு விமரிசனக் கட்டுரையும, தென்றல் பக்கத்தில் கிடைத்த இடைவெளி சிறுகதையும் மட்டும்தான் இணையத்தில் சம்பத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.சமீபத்தில் நாகார்சுனனும் இப்புத்தகத்தை மரணத்தின் மீதான தியானமெனக் குறிப்பிட்டிருந்தார்.தமிழின் சிறந்த நாவல்களைப் பட்டியலிட்டால் இந்தப் புத்தகத்தை தவிர்க்கமுடியாது / தவிர்க்ககூடாதென்றுதான் சொல்ல வேண்டும்.கருத்தியலும் புனைவும் கலந்த செவ்வியல் நாவலென்றும்,உலகத் தரத்திற்கிணையான தமிழின் ஒரே நாவலென்றும், சி.மோகன் சிலாகித்திருக்கிறார்.இந்தப் புத்தகத்தினை பெரும் தேடலுக்குப் பின எழுத்தாளர் திலிப்குமாரிடமிருந்து ஹரன் பிரசன்னா நகலெடுத்துத் தந்தார் அவருக்கு என் அன்பும் நன்றிகளும்.

உலகின் சாபக்கேடான மேதமைத் தனத்திற்கு நிகழும் அத்தனை குரூரங்களும் இவருக்கும் நேர்ந்திருக்கிறது(இதைப்பற்றி எழுதவே சலிப்பாயிருக்கிறது).உலகின் மற்ற பாகங்களிலாவது அடையாளமற்று இறந்தவனின் சாஸ்வதங்களை சிலாகிக்க ஆட்கள் இருக்கிறார்கள். நம் சூழலில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.இறந்தவன் அதற்கான முனைப்புகள் ஏதும் இல்லாமலிருந்தான், அதற்குப் பின்பும் அவன் எதிர்பார்த்திருக்கமாட்டான்.அவனை ஒருபுறமாய் தள்ளிவைத்துவிட்டு நாவலுக்குள் போவோம்.தெறிகள் எனும் காலாண்டிதழில் இந்த நாவல் வெளிவந்தது 1970 ன் இறுதியாய் இருக்கலாம்.க்ரியா இந்நாவலை 1984ல் அச்சில் கொண்டுவந்தது.

தினகரன் சாவின் மீது பயம் கொள்கிறான்.சாவென்றால் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலுறுகிறான்.சாவைப் பற்றித் தொடர்ச்சியாய் சிந்தித்து, அலைந்து, திரிந்து, சாவென்பது இடைவெளி எனக் கண்டறிந்து மகிழ்வுறுகிறான்.தினகரன் மூலமாக கருத்தியல் ரீதியாக சம்பத் புனைவதெல்லாம் அவரின் நெருக்கமான உலகத்தையே.ஒரு பார்வையாளனின் எழுத்துக்கும் பங்குபெறுபவனின்/பெற்றவனின் எழுத்துக்குமான வித்தியாசங்களை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.தனக்கு நெருக்கமான உலகத்தை மிக நுட்பமான முறையில் வெளிப்படுத்தும் எழுத்துக்கள் மிக அபூர்வமானவை.அந்த வகையில் ஆத்மாநாம், கோபிகிருஷ்ணன், வரிசையில் சம்பத்தும் இடம்பெறுகிறார்.

இடைவிடாது சாவு, தினகரனிடம் பேசியபடியே இருக்கிறது.வெவ்வேறு தருணங்களாய்,வெவ்வேறு ரூபங்களாய், சாவு எதை எதையோ உணர்த்துகிறது.கழிவிரக்கம், குற்றவுணர்வு, மிக அதீதமான தன்வயமென அவனுக்கான உலகம் புற உலகிலிருந்து அந்நியமானது(இஃதொரு பொதுப்படையான குணாதிசயம்தான்).குடும்பம் என்கிற அமைப்பில் தொலைந்து போகாது, தனக்கான உலகங்களில் மூழ்கிப்போகும் தினகரன் எல்லாவிடத்திலும் எல்லா செயல்களிலும் சாவைப் பார்க்கிறான். தொடர்ச்சியாய் அவ்னை அலைக்கழிக்கும் சூதாட்டத்தை வெற்றிக்கொள்ள தன் வசமிழந்து தனக்கு மீறிய தொகையினை செலவழிக்கத் துணிகிறான். நடுத்தர வர்க்கத்தும் கீழான அவனது குடும்பம் அலைக்கழிக்கப் படுவதையெல்லாம் எழுத்தில் சொல்லவில்லை.முழுக்க முழுக்க தனியொருவனின் எண்ணங்களும,சிதறல்களும்,மாத்திரமே முனைந்து சொல்லப்ப்பட்டிருக்கிறது.குதிரை பந்தயத்தினுள் நுழைந்து, ஜெயிக்க முடியாமல் வெளியேறி, மூன்று சீட்டு பக்கம் நகர்கிறான். மூன்று சீட்டையும், ஒரு தரம் ஜெயித்த பின் மறுபடி அதனுள் போக மறுத்துவிடுகிறான. இந்த இடத்தில் பூர்ஷ்வாத் தன்மையை மறுதலித்து உள்ளுணர்வு அல்லது உள்விருப்பம் சார்ந்து வாழும் தன்னையும் முன்னிருத்திக் கொள்கிறார்.

காதல் நிமித்தமான தோல்வியொன்றில் மொட்டைமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள விழைந்த நொடிக்கு முன்னதாக தினகரன் தரையில் தன் சடலத்தைப் பார்க்கிறான்.பயந்து பின் வாங்கி அதைப்பற்றியே யோசிக்கும்போது அந்நொடியில் நிகழ்ந்தவைகளை நிசப்தம் என அர்த்தப்படுத்திக்கொள்கிறான்.பின் ஒன்றிலிருந்து ஒன்றாக சாவு புதுப்புது பரிமாணங்களை அவனுள் நிகழ்த்துகிறது.
1.சாவு என்பது நிசப்தம்,தாங்கொனா நிசப்தம்.
2.சாவு என்பது வாழ்விற்கு கருணா சமுத்திரம்.
3.சாவு என்பவர் கண்காணிப்பாளர்.
4.சாவு மனிதர்களுக்காக காத்துக்கிடக்கிறது. இந்த காத்திருத்தல் என்பதைக் கண்டறிந்ததும் தினகரன் சிறிது சந்தோஷப்படுகிறான்.
காத்திருத்தல் - பிரபஞ்ச ரீதியில் எப்பேர்ப்பட்ட மகத்தான காத்திருத்தல் இது! சாஸ்வதத் தன்மை கொண்ட காத்திருப்பவன் இதுவும்,இந்த எண்ணமும் நெடுநாள் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.பின்பொரு தருணத்தில் சாவென்பது இடைவெளி எனப் புலப்படுகிறது அவனுக்கு.சுருக்கு கயிற்றின் முடிச்சினுக்கு இடையுள்ள இடைவெளி, கழுத்தை நெருக்கி சாவினுக்கு காரணமாய் அமையும்.ஆக சாவென்பது இடைவெளிதான் என தீர்மானமாய் நம்புகிறான். மகிழ்கிறான்.

வாசித்து முடித்த பின்பு ஏற்படும் அயர்ச்சி தவிர்க்க முடியாதது.இடைவெளி என்கிற வார்த்தைகள் தரும் அர்த்தம் மிகப்பிரம்மாண்டமானது. எல்லாவற்றுக்கும் இடைவெளி இருக்கிறது.இடைவெளியின் நுட்பத்தை புரிந்துகொள்பவன் முழுமையான அல்லது அதைப்போன்ற ஒன்றினுக்கான வேட்கையில் ஓரளவு வெற்றிபெறக்கூடும்.இரண்டு உறவுகளுக்கிடையேயுள்ள இடைவெளியைப் புரிந்துகொள்வது வீணான சிக்கலைத் தவிர்ப்பதுபோல் வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியைப் புரிந்துகொள்வதும் சிக்கலானவர்களின் சிக்கல்களை சிறிது தீர்க்கலாம்.வாழ்வென்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மெளனம் அதாவது பிறப்புக்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட இடைவெளி என ஓஷோ வரையறுக்கிறார்.சம்பத் சாவென்பதே இடைவெளி என்கிறார்.

இடைவெளிகளை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.இந்த நாவல் என்னிடம் மின்நூல் வடிவத்தில் உள்ளது விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புச் சுட்டிகள்
1.http://tamilhelp.wordpress.com/2005/06/29/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/
2.http://www.tamilonline.com/thendral/SubCatContent.aspx?id=49&cid=2&sid=2&aid=1652
3.http://archives.aaraamthinai.com/ilakkiyam/padaippulagam/june2001/june08_idaiveli.asp

காலம் - முப்பரிமாணம்

ஒன்று

கத்திக் கப்பலொன்றைத் தருவிக்கும் முயற்சிகள்
தோல்வியில் முடிந்தன.
சதுரமாய் மடிக்கப்பட்ட தாளிலிருந்து
சாதாக் கப்பலையே வரவழைக்க முடிந்தது.
படிந்திருந்த குப்பைகளின் இடுக்கிலிருந்து
பிரித்தெடுக்கவே முடியவில்லை
கத்திக்கப்பலின் யுத்திக்கான முனை.
விரையும் பேருந்தின் சன்னலோரக் காற்று
குப்பைகளை அகற்றியதில்
முனையின் நுனியைப் பற்றிவிட முடிந்தது
கத்திக்கப்பலைக் கேட்கச் சிறுமியும்
மழையுமில்லாத அத்தருணத்தில்
என்னால் இயன்றது
இது மட்டுமே...

இரண்டு

இன்டர்நேஷனல் டெர்மினலின்
டெசிக்னேட்டட் ஸ்மோக்கிங்க் ஏரியாவில்
எனக்கு முன்னால் அவள் புகைத்துக்கொண்டிருந்தாள்.
அடர் ரத்தநிறத்தில் உதட்டுச்சாயமிட்டிருந்த அவள்,
பினலோப் குரூசின் சாயல்களிலிருந்தாள்.
புகைத்து முடித்து,
கால்களை குறுக்கு வாட்டிலிருந்து விடுவித்தபோது
இடது பக்க மூலையிலமர்ந்திருந்தபடி
அவளின் பளிச்சிட்ட தொடைகளைப் பார்த்தேன்.
குதிகால் செருப்பினை சரிசெய்தபடி
எழுந்து வெளியில் போன அவளின்
வெள்ளைநிற டைட் ஸ்லீவ்லெஸ் பனியனின்
முதுகுப்புறத்தில்
பிரா அணிந்திருப்பதற்கான தடங்கள் தெரியவில்லை.
புகைக்கு கண்களை மூடித் திறந்தபோது
மன்னிப்புக் கேட்டபடி
குனிந்து லைட்டர் கேட்ட
பிலிப்பைன் தேசத்துக்காரியின்
மேல் சட்டை
ப்ரா அளவிற்கே இருந்தது..

மூன்று

திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள்
மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது
பெரும்திரையெனக் கவிழ்கிறது
தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
இன்னும் ஒருதரம்
சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.
இதுவரை வந்த இல்லாமலிருத்தலின் வழிப்பாதைகள்
தீட்டிய வண்ணங்களை
கோடைமழை சடுதியில் அழித்துப் போகிறது.
கிளைகள் முழுக்கப் பூத்திருக்கும் கொன்றை மரங்கள்
பச்சையுதிர்த்து சிவப்பைச் சூடி நிற்கிறது.
தீயின் வண்ணமென்றும்
எரிதலின் தழலென்றும்
நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்

Featured Post

test

 test