Friday, February 29, 2008

கூடு தப்பிப்போய் பைத்தியமாதல்


மழைக்காலங்களின் மேல் எப்போதுமொரு காதலிருக்கிறது.மேகங்கள் சூழத் துவங்கும் பகல்பொழுதொன்றில் உள்ளிருந்து ஏதோ ஒன்று விழித்துக்கொள்ளும்.செய்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் புறந்தள்ளி கற்பனைகளில் மூழ்கத் துவங்குவேன்.மிகச்சரியாய் என் பால்யங்களின் தடம் கண்முன்விரியும்.பதிமூன்று வயது வரை நானொரு மலைக்கிராமத்தில் வசித்து வந்தேன் மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மூங்கில் தோப்புகள் அடர்வாய் செழித்து வளர்ந்திருந்த பகுதியை ஒட்டி எங்களின் குடிசை இருந்தது.விடியல்களில் பனி மூங்கிலின் இலை மீது படிந்திருக்கும். என் பெயர் செதுக்கியிருக்கும் மரமொன்றின் அடியில்தான் நான் சிறுநீர் கழிப்பேன். உடல் சிலிர்த்துக் குலுங்கி வெளிப்படும் சூடான சிறுநீர் எத்தனைக் கிளர்ச்சி!மெல்ல மரத்தை உலுக்கும்போது சிதறுண்ட பனித்துளிகள் என் தலைக்கேசம் தொடும்.மீண்டுமொருமுறை உடல் சிலிர்த்துப் போகும்.மலையின் மீது கவிழ்ந்து தூங்கும் மேகக் கூட்டங்களை கல்லெறிந்து எழுப்புவேன்.அப்போதிருந்த மனநிலையில் மேகங்களுக்கு வலிக்குமா? என்பது பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லாதிருந்தது.எத்தனை முறை கல்லெறிந்தாலும் மேகங்கள் ஒருபோதும் கோபித்துக் கொண்டதில்லை.மெல்ல தலை எழுப்பிப் பார்த்து மரங்களின் வழி இறங்கத் துவங்கும்.பின்பு அக்கூட்டங்களோடு சேர்ந்து விளையாடப் போவேன்.அருவிகளில் குதித்து விளையாடுவதுதான் எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருந்தது.

அருவி மிகப் பெரிய வடிவினள்.மலையின் எந்தச் சரிவிலிருந்து வருகிறாள் என்பது எவருக்கும் புலப்படாததாய் இருந்து வந்தது. அவளது விரிந்த உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வழிந்து கொண்டிருந்து நீர். அருவி மிக மோசமானவள். சிறுவர்களைக் கண்டால் அவளுக்குப் பிடிக்காது.நான் மட்டும் எப்படியோ அவளின் அன்பைப் பெற்றிருந்தேன். என்னை மட்டும் அவளது அந்தரங்கப் பிரதேசங்களுக்கு கூட்டிப் போவாள்.மேகக்கூட்டங்கள் தொலைவிலிருந்தபடியே அவளின் பிரம்மாண்டத்தில் மனம் பிறழ்ந்து தன்னை அவளுக்குள் மூழ்கடித்துக் கொள்ளும்.அருவி ஒரு தாய், அருவி ஒரு காதலி,அருவி ஒரு காமுகி,அருவி ஒரு சகோதரி,அருவி ஒரு பெண்,அருவி ஒரு வேசி,அருவி எல்லாப் பெண்ணின் வடிவமுமாய் என்னை அரவணைப்பாள் நான் திக்குமுக்காடிப்போவேன். எங்கிருக்கிறேன் என்பது மறந்துபோவேன். மேகக்கூட்டங்கள் மலையின் சிரசில் கவிழ்ந்திருப்பது போல் நான் அருவியின் தனங்களில் முகம் புதைத்துத் தூங்கிப் போவேன்.முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது.

பிறகெப்போதுமந்த அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைக்கவே இல்லை நகரத்தில் எவரையும் எனக்குப் பிடிக்கவில்லை.என்னையும் எவருக்காவது பிடித்துவிடுமோ என நடுங்கியபடி நகரின் இருளான பிரதேசங்ககளில் என்னைப் புதைத்துக்கொள்கிறேன்.புதைந்து, பயந்து ,நடுங்கி, பதபதைத்து.....எனக்காக வைக்கப்பட்டிருந்த விஷம் தோய்ந்த பாலை வேறாதாயினும் பூனை அருந்தி இறந்துபோனாலும் நான் கலவரப்படத் துவங்குகிறேன் குற்ற உணர்வுகளை நிரப்பிக் கொள்வதில் எனக்கு நிகர் எவருமில்லை நானொரு குற்ற உணர்வின் பிறப்பிடம்.

ரெட்லேபிளோடு ஸ்மைரைன் ஆஃப் அடித்திருக்கிறார்களா? அது ஒரு நல்ல காம்பினேசன்.பியர் குடித்து முடித்தவுடன் டகீலா அடித்துப் பாருங்கள் அதும் கருப்பு தேசத்துப் பெண் தன் பிரத்யேக வாசனைகளோடும் பருத்த ஆகிருதியோடும் உங்கள் உள்ளங்கையினை குவிக்கச் செய்து அதில் உப்பைத் தூவுவாள் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே கல்ஃபில் அடித்து விட்டு உப்பை நாக்கில் தடவிக் கொள்வதே. அந்த நேரத்தில் பக்கத்திலிருப்பவன் அவளை சகிலா என்றாலும் நல்லெண்ணெய் சித்ரா என்றாலும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். மறுத்தால் அஃதொரு நீளமான விவாதத்திற்கு உங்களை இட்டுச் செல்லும்.குடிக்கும்போது விவாதங்களைத் தவிருங்கள். மாறாய் கண்ணில் படுபவர்களை நேசிக்கத் துவங்குங்கள்.உடன் வந்த நண்பனை முத்தமிடுங்கள்.அல்லது பழைய காதலியை முத்தமிட்டட தருணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

மூளையழிவதும் நமது கூட்டுக்குள் திரும்புவதென்பதும் வெவ்வேறானதில்லை.

அதீத வன்முறையை நான் நேரில் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்து என் கண்ணெதிரில் சில விபத்துக்களைப் பார்த்து சில இரவுகள் தூங்காமலிருந்திருக்கிறேன்.மற்றபடி உச்சகட்ட வன்முறை என்பது சில படங்களாக மட்டும் இருந்தது. A Clockwork Orange படம் பார்த்தேன் உச்சகட்ட வன்முறை இதுவாய்த்தான் இருக்கமுடியும்.sinsity யை என்னால் comical லாகத்தான் அணுக முடிந்தது.ஆனால் இது அப்படி இல்லை.கையில் ஒரு இரும்புத் தடிகொண்டு சாலையோரக் கிழவனை அடித்துக் கொள்கிறார்கள் தனியாய் ஒருவீட்டினுள் நுழைந்து..இல்லை..என்னால் எழுத முடியவில்லை..நீங்கள் தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது உசிதம்..மீறிப்பார்த்தால் தயாராய் ஒரு பியர் புட்டியாவது கைவசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.Maria Full of Grace யாராவது பார்த்தீர்களா?..என்னா அழகு அந்தப் பொண்ணு!..போதை மருந்துக் குப்பிகளை டாய்லட் பிள்ஷ் ல இருந்து எடுத்து பேஸ்ட் தடவி மீண்டும் முழுங்குவாளே... என்னக் கொடுமையான காட்சி அது.
தேவை/நிர்பந்தம்/சுயம்/fantasy/அலைவுறும் மூளை/ இன்னும் என்னென்ன எழவுக்களோ வாழ்வ குரூரமாக்கிடுதில்ல..எந்த சனியனுக்கும் தெரியாம எங்கவூட்டு வேப்பமரத்துக் கெளயில ஒளிஞ்சிருக்குதுய்யா உண்மையான வாழ்வு!...உங்க வூட்ல கீதான்னு நீதான் பார்த்துக்கனும்..எத சொன்னாலும் கேப்பியா..அடச்சீ ஏஞ்சிப் போ மூதேவி!..
Post a Comment

Featured Post

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா

கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...