Monday, April 30, 2007

அடர் கானகப் புலிகளின் குகை திரும்பல்கள்




எனது பிரதிகளின் துண்டொன்று உன் சுயத்தை அசைத்த சிறுபொழுதின் சலனத்தில் உன்னிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் பிரயாணித்து என் இருப்பை வந்தடைந்தது.கதவு தட்டி உட்புகுந்த உன் சொற்கள் யுகங்களின் மீட்பாக,நம் ஆதி உறவின் உயிர்த்தெழலாக,சபிக்கப்பட்ட என் நிகழை மீள்பதிவித்தது.முடிவற்ற ஒன்றின் துவக்கங்கள் ஆச்சர்யங்களாய் மட்டுமே இருக்க முடியும் என்கிற விதிகளின் படி ஆச்சர்யங்களின் மொத்த உருவமாய் நீ என்னை ஆக்ரமித்தாய்.புதிதாய் என்னை மீட்டெடுத்த உன் சொற்களின் தடம் பற்றி உன்னிலிருந்து மேலும் சொற்களைப் பெற புதிதாய் நீவிரும்பும்படி என் பிரதிகளைக் கட்டமைத்தேன்.ஆதியின் வாசனைகளோடும் இருண்ட கனவுகளின் வெளித்தோன்றலாகவும் நீ என்னை ஆக்ரமித்தாய் முழுமையாய்.

குழப்பமாய் நீளும் என் கனவுகளின் நீட்சி இறுதியில் உன்னுருவம் கண்டதிர்ந்தது. அடர் கானகத்தில் நாம் புலிகளாய் அலைந்திருந்ததின் எச்சத்தை உன் கண்களில் தேக்கி வைத்திருந்தாய்.ஒரு மழையிரவில் இருள்குகையில் நம் கடைசிப் புணர்வில் உறைந்த நொடிகளை நீ உதடுகளில்தேக்கி வைத்திருந்தாய்.சாபங்கள் நிறமழியும்காலமென்பதை வெகு விரைவாய் உணரச் செய்தது உன் வாசனை.தேம்பியிருந்த என் தனிமையின் வலிகள் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது. அழுகையின் உச்சத்தில் கரையத்தொடங்கிய சுயம் உன்னை மூழ்கடித்தது.

கர்வம் கரைந்தழிந்த வெளியில் என் பேச்சுக்கான ஏக்கங்களின் வெளிப்பாடாய் உள்புதைந்திருந்த சொற்கள் வார்த்தைகளாய் பெருகி இக்காற்றினை நிரப்பத் தொடங்கியது.இடைவிடாத பேச்சுக்களில் உறைவித்தோம் காலத்தை.நீ பல யுகங்கள் பெண்ணாகவே இருந்திருக்கிறாய். வாழ்தலின் துயரமனைத்தையும் கர்வத்தோடு சுமந்தலைந்திருக்கிறாய்.குருதி கசிந்தஉள்ளாடைகளை யாருக்கும் தெரியாமல் உன் தனியறையில் மறைத்து வைத்திருக்கிறாய்.சாபத்தின் நீட்சியாய் நானும் ஆணாகவே உயிர்த்திருந்தேன்.தனிமையின் பரிகசிப்பைத்தவிர வேறெந்த வலிகளும் என்னிடமில்லை.இதுவரை என் குறிகளை யாரும் வன்புணர்ந்ததில்லை.விறைத்து நீண்ட எந்த ஒன்றும் என் குதத்தை தீண்டியிருக்கவேயில்லை.மாற்றாய் நீ எனக்கும் சேர்த்து இழ்ந்திருக்கிறாய். உன் குருதியின் கடைசி துளிவரை உறிஞ்சப்பட்டிருக்கிறாய்.சிறுமலையென உன் அறையில் குவிந்திருந்த,ரத்தம் தோய்ந்து வெளிறிய உள்ளாடைகளை கண்டுக் கூசியதென் குதம்.

சாபங்கள் நிறமழிந்த இக்கணங்களில் நீ வந்தடைந்துவிட்டாய்.இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம் தனிமைகளை தீயிலிடுவதே.முதலில் நம் ஞாபகக்குப்பைகளனைத்தையும் தீக்கு தின்னக் கொடுப்போம். வெப்பத்தில் உருக ஆரம்பிக்கும் நம் வலிகளின் தழும்புகளை குறுநகையோடு கண்டின்புறுவோம். பற்றி எரிய தொடங்கும் நம் சாபங்களின் பிரதிகளின் மேல் எச்சில் உமிழுவோம் வன்மத்துடன்.

வா! மனிதர்கள் அண்டியிராத நம் சொந்த அடர் கானகத்தின் குகைகளுக்கு சென்றுவிடலாம் கடைசியாய் நாம் புணர்ந்த இரவின் மீதங்கள் இன்னமும் நம்மைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். வைகறையில் மொட்டவிழும் புதிய மலரொன்றின் வாசம் நம் குகைகளில் படர கற்களின் இடுக்குகளில் செடிகளை நடுவோம். வண்ணத்துப்பூச்சிகளை தேன்குடிக்க அனுமதித்து மகரந்த சேர்க்கையை புணர்வின் நீட்சியென இருண்ட குகைகளெங்கிலும் மலர்களைத் தோற்றுவிக்கலாம்.மொத்தமாய் மொட்டவிழத் தொடங்கும் ஒரு விடியலில் யுகங்களை வென்ற களிப்பில் நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம் புலியின் வாசனைகளோடு.

Thursday, April 26, 2007

நிகழ் பறவை




உள்ளிருக்கும் புத்தர்
உன்னில் மட்டுமே உள்ளது நிறைவு
மகிழ்ச்சியைத் தேடவேண்டியதில்லை
இன்னபிற நீண்ட வாசகங்கள்
மேலும் சலிப்படையச் செய்கிறது
நிகழை..

எனது விடுபடல்கள்
தனியிருப்பு
விட்டு விடுதலையாதல்
சிறகுகள் முளைத்தல்
என்பன போன்ற
மிகையாக்கல் சித்திரங்களின் மீது
எச்சமிட்டு
திடுமென மரங்கள் அதிர
வெளியைக் கிழித்தபடி
பறக்கத் துவங்குகிறது
ஒரு பறவை

Wednesday, April 18, 2007

மணலில் புதையும் சொற்கள்



மரங்கள் அடர்ந்த
என் சொந்த வீட்டின்
இருப்பில்
மிகுந்ததே இல்லை
சொற்கள்

பறவைகள் துயிலெழுப்பும்
என் பழைய விடியல்களில்
எழுதப்பட்டதேயில்லை
எந்த ஒரு சொல்லும்

மலையேறி வழிதப்பி
காடலைந்து
மலையருவியின்
ஓடைத்தடம்பிடித்து
வீடடையும்
எந்த ஒரு நாளிலும்
எழுதப்பட்டதே இல்லை
ஒரு வரிகூட

பச்சை தொலைந்து
பறவைகள் இறந்த
இச்சாம்பல் வெளியை
நிரப்புகிறது
வெற்றுச் சொற்கள்

மணல் மூடிய
இந்நிகழ் வெளியில்
மிகுந்த சொற்களை
ஆழப்புதைத்து
பிரசவிக்க வேண்டும்
ஒரு நல்ல கவிதையை…



Wednesday, April 11, 2007

உம்பர்டோ டி (1952) - இருப்பின் அவஸ்தை


உம்பர்டோ டாமினிகோ ஃபெராரி என்ற வயோதிகனின் இருப்பு குறித்த அவஸ்தைகளை இந்தத் திரைப்படம் பதிவிக்கிறது. விட்டோரியா டெசிகா இயக்கி 1952 ல் வெளிவந்த இப்புகழ் வாய்ந்த திரைப்படம் இத்தாலிய நியோ ரியலிச சினிமா வரிசையின் கடைசிப் படம்.இத்தாலிய நியோ ரியலிச சினிமா 1943 ல் வெளிவந்த Ossessione என்ற படத்தில் இருந்து துவங்குகிறது. ராபர்டோ ரோசோலினி என்ற இயக்குனரின் திரைப்படங்கள் மூலம் கவனிக்கப்பட்டு விட்டோரியா டெசிகா வின் மூலம் புகழ் பெற்றது. என்னைப் போன்ற சாமான்யன் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் இந்த இசம் பற்றி பேசும் அளவிற்க்கு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நியோ ரியலிச திரைப்படங்கள்.

நியோ ரியலிசம் என்பது விளிம்பு நிலை மக்களின் வலிகளை பதிவு செய்ய முனைந்த ஒரு திரைப்பட இயக்கம். திரைப்படம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்பதால் இந்த இயக்கம் நேரடியாக அதிக அளவில் சென்றடைந்தது.இத்தாலியில் தோன்றிய ஒரு சினிமா இயக்கம் என்றும் சொல்லலாம். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இத்தாலியின் சாமான்ய மக்களுக்கு ஏற்பட்ட வாழ்க்கை நெருக்கடியை பிரதிபலிக்க ஒரு ஊடகம் தேவையாக இருந்தது. யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படங்களின் தேவை இருந்தது. அப்போதைய திரைப்படங்கள் பெரும்பாலும் வாழ்க்கையை மீறியதாக கற்பனை உலகின் பிரதிநிதிகளாகவே இருந்தன. நியோ ரியலிச திரைப்படங்கள் இந்த கட்டமைப்பை உடைத்தது. பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்கள் அல்லாதோர்களையே பயன்படுத்தி சாதாரண தன்மையை வெகு எளிதில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதே இவ்வகை திரைப்படங்களின் நோக்கமாக இருந்தது . 1952 ல் வெளிவந்த உம்பர்டோ டி என்ற இந்தத் திரைப்படத்தோடு இறந்ததாகக் கருதப்படும் இவ்வியக்கம் பிரதிபலித்ததெல்லாம் இத்தாலியர்களின் கலப்படமில்லாத வாழ்வியலை. சமுகத்தின் அவலத்தை மற்றும் அதன் உண்மை நிலையை.

இனி படத்திற்க்கு வருவோம். ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டி போராட்டம் நடத்த விழையும் சில திராணியற்ற முதியவர்களை காவலர்கள் விரட்டி அடிக்கும் துயரத்தோடு துவங்குகிறது படம்.தனக்கென்று ஒரு நாய்குட்டி,வெகுசொற்பமான ஓய்வூதியம் மற்றும் இருப்பிடம் என சொல்லிக்கொள்ள ஒரு அறையையும் தவிர்த்து வேறெதுவுமில்லாத உம்பர்டோ எனும் வயோதிகன் தன் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்ள நேரிடும் துயரங்களை,வலிகளை வலிகளாகவே பதிவித்திருக்கிறார் டெசிகா.தன் அறையின் வாடகையயை செலுத்த முடியாது வீட்டின் உரிமையாளரால் விரட்டி அடிக்கப்படுகிறார் வேறெங்கும் சென்று வசிக்க இயலாத உம்பர்டோ தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.ஆனால் அவர் நேசிக்கும் நாய்குட்டியை நிதாரவாய் விட்டுசெல்ல விரும்பாமல் அதை பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒப்படைக்க முயல்கிறார்.அதற்க்காக தன் கைவசம் இருக்கும் பணம் சில நல்ல உடைகள் எல்லாம் கொடுக்க முன்வந்தும் சரியான இடத்தில் ஒப்படைக்க இயலாத உம்பர்டோ நாய்குட்டியுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.ரயிலை நெருங்கி செல்லும்போது ரயிலின் சத்ததில் பயந்த நாய் அவரது பிடியில் இருந்து தப்பித்து ஓடுகிறது.நாயை விடுப்பிரிய முடியாது தற்கொலை முடிவை கைவிடுகிறார்.நாம் உயிருடன் இருக்க ஒரு சிறு உயிரின் அன்பு மட்டுமே போதுமானதகி விடுகிறது.

சாமான்யத்தின் வலிகளை செவிட்டில் அறைவது போல சொல்லியிருக்கிறார்கள்.உம்பர்டோவிற்க்கு தான் தங்கியிருக்கும் அறை உரிமையாளரின் வேலைக்கார பெண்ணின் மேல் தனி வாஞ்சை அந்த நாய்குட்டியை தவிர அவரை நேசிக்கும் இன்னொரு உயிர்.இருவருக்கும் நடக்கும் உரையாடல்

பணிப்பெண் : கவனித்தார்களா என் வயிற்றை நான் கர்ப்பமாய் இருக்கிறேன்
உம்பர்டோ : என்ன?
பணிப்பெண் : ஆம் உறுதியாகத்தான் சொல்லுகிறேன் மூன்று மாதம்.
பின்பு உம்பர்டோ தன் அறைக்கு திரும்புகிறார்.பின்தொடர்ந்து வரும் அப்பெண் சன்னலில் இருந்து கீழே எட்டிப்பார்க்கிறாள் வேலை முடிந்து தொழிலாளர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்.உம்பர்டோ வை அருகே வருமாரு அழைக்கிறாள்.
பணிப்பெண் : இங்கே பாருங்கள்..உயரமாக இருக்கிறானே இவன் நேபலை சார்ந்தவன்.கொஞ்சம் குட்டையாக இருப்பவன் வேறொரு நகரத்திலிருந்து வந்தவன்.
உம்பர்டோ : இதில் யார் உன்னுடையவன்?
பணிப்பெண் : இருவரும்தான்
உம்பர்டோ : என்ன.. உன் குழந்தைக்கு தந்தை யார்?
பணிப்பெண் : எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.ஆனால் இருவருமே மறுக்கிறார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு காட்சியும் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.வீட்டு வாடகை செலுத்த ஒரு பிச்சைக்காரனிடம் தன் வாட்சை விற்பது.கைவசம் இருக்கும் போர்வை,புத்தகங்கள் என எல்லாம் விற்றும் அத்தொகையை ஈட்ட முடியாமல் போய் பிச்சை எடுக்க துணிவதும் பின் தவிர்ப்பதுமாய் உம்பர்டோ எனும் பாத்திரம் ஏற்படுத்தும் துயரம் இரண்டு நாட்களுக்கு நம்மை மீளவிடாமல் அதன் பிடியில் வைத்திருக்கிறது.சாமான்யர்களின் வலிகளை முன்நிறுத்தும் எந்த ஒரு இயக்கமும் சந்திக்கும் தோல்விகளை இந்த நியோ ரியலிச இயக்கம் சந்தித்திருந்தாலும் இதன் வெற்றி சாமான்யர்களின் வெற்றியாகவே கருதப்பட்டது.

Monday, April 9, 2007

அரூபதர்ஷினிக்கு இருப்பை நிரூபித்தல்

புணர்ந்த உடல்களிலிருந்தெழும்
வீச்சம்
மீண்டும் ஒருமுறை
தற்கொலைக்குத் தூண்டுகிறது
என்னை

குறிகள் புடைத்து
முலைகள் விம்ம
வெறி கொண்டலையும்
இப்புற உலகிலிருந்துதான்
காதலித்துத் தொலையவேண்டியிருக்கிறது
உன்னையும்

சொல்லமுடியாத மெளனத்தைப்
புரிவிக்க
இச்சமவெளிகளிலிருந்து
சேகரிக்கிறேன்
சொற்களை

என் பாசாங்கற்ற
உலகின் வேர்கள்
பிரசவித்த
முதல் பூவின்
காம்புகளைக் கொண்டு
உனது புதைவிலிருந்து
உன்னை மீட்டெடுப்பேன்

கேவலம்
இந்த சொற்களைக்
கொண்டுதான்
நிரூபிக்க வேண்டியிருக்கிறது
என் இருப்பையும்..

அரூப வெளியின்
ப்ரசன்னத்தில்
உடல் தொலைத்துக்
கலப்போம்
வா தோழி!

Saturday, April 7, 2007

இரத்தத்தில் மிதக்கும் உடல்

உன்
ஞாபக இடுக்குகளிலிருந்து
எப்போதும் வழிந்து கொண்டிருந்த
அடர் குருதியினை
என் உதடுகள் கொண்டு
துடைக்க முயன்றேன்..

வலிகளை சுமந்தலைந்திருந்த
ரணங்களின் குருதி
என் உதடு வழி
உட்சென்று இரைப்பையை
நிறைத்துப் பின் மெல்ல
உடல் திசுக்களெங்கும்
நிறைந்தது.

சிறுமியின் மூச்சுக் காற்றை
உள்ளடக்கிய பலூனைப்போல்
உன் வலிகளின் ரத்தம்
என் உடலினை வீங்கச்
செய்திருந்தது..

இடைவிடாத உறிஞ்சுதலில்
உறைந்திருந்த காலம்
சோர்ந்த கண்களின் வழியாய்
வெளித்துப்பியது
நிகழை..

வெகு நாட்கள்
திரும்பியிராத என்
தனிமை அறை
உள்வாங்கிக் கொண்டது
பழகிய காதலியைப்போல்

இருளில் புதைந்த
என் தூக்கம்

குளிர்ச்சியின் ஈரத்தில்
திடுக்கிட்டு கண்விழிக்கையில்
மிதந்து கொண்டிருந்ததென்னுடல்
ஏற்கனவே அறையை நிரப்பியிருந்தது
உடலிலிருந்து இளகிய
உன் ரத்தம் ….

அழகே...அழகு..

இந்த முறையும் தம்பி இந்த விளையாட்டில் என்னை இழுத்து விட்டிருக்கிறார்.தமிழ்மணத்தில் தர தர வென இழுத்து வந்து சேர்த்ததோது நில்லாமல் அவ்வப்போது தலைப்பையும் கொடுத்து எழுதவும் வைக்கிறார்.ரெண்டு நாள் இந்த தலைப்ப சுமந்துட்டு திரிஞ்சதின் விளைவுகள் இதோ...

பெண்கள்

அழகான ன்னு ஆரம்பிக்கும்போதே உடனடியா நினைவுக்கு வருவது பெண் தான் இது மாற்றுப் பாலியல் ரீதியிலான கவர்ச்சியா கூட இருக்கலாம்.எல்லா கிராமத்து பசங்களுக்கும் இருக்குற அனுபவம்தான்னாலும் அழகி பட ரேஞ்சு க்கு கவிதா ன்னு ஒரு பெண் பெரிய கண்களோட துரு துரு ன்னு ரொம்ப சுத்தமா இருப்பா. இப்ப நினைச்சாலும் உடனே மனசுக்குள்ள வர ஒரு முகம்.பத்து வருச இடைவெளிக்கப்புறம் உருவ மாற்றங்களோட அந்தப் பெண்ணை பாத்தப்ப எதுவும் பேசாம அவ பார்வையில் இருந்து ஒளிஞ்சிக் கிட்டேன்.அடிமனசுல தங்கிட்ட அந்த இனம் புரியாத உணர்வு அப்படியே இருக்கட்டும்ங்கிற ஆசைதான்.

கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் என் வாழ்க்கைய ஆக்கிரமிக்க தொடங்கினப்போ சில பெண்களை ரொம்ப தீவிரமா காதலிச்சிட்டு இருந்தேன்.இவங்களோட ப்ரம்மாண்டம் என்ன கிறுக்குப் புடிச்சு அலைய வச்சது.குறிஞ்சி மலர்-பூரணி,பால குமாரனோட காயத்ரி,அகல்யா,நந்தினி,ஸ்வப்னா,மோகமுள் - யமுனா,மரப்பசு-அம்மிணி லா.ச.ரா வோட தாக்ஷாயணி,ஜெயமோகனோட - நீலி ன்னு என் உலகத்தை ஆக்ரமிச்ச இந்த பெண்கள் தான் மேக்கப் வஸ்துக்கள் எதுவும் இல்லாம மூப்பு பிணி ன்னு எதுவும் அண்டாம என்னைக்குமே அழகான பெண்கள்.

தருணம்
காதல் சொன்ன கணம் யாராலாவது மறக்க முடியுமா? அதுவும் பதின்ம பருவத்தில் எழும் காதலுக்கு அதிக வேகமும் பரபரப்பும் இருக்கும். என்ன வேனும்னா செய்யலாம் இந்த பெண்ணுக்காகன்னு ஒரு சாத்தான் முழுமையா அந்த வயச ஆக்ரமிச்சிருக்கும்.சன்னமாய் மழை பெய்துகொண்டிருந்த ஒரு பிற்பகலில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி வெகு நாட்களாய் மனதிலிருந்த காதலை சொன்ன கணம் மிக அழகான தருணம்.அந்தப் பெண் வெட்கமும் புன்முறுவலுமாய் அதை ஏற்றுக்கொண்டு'இத சொல்ல இவ்ளோ நாளா'ன்னு பதில் வர..ஆஹா பரவசம்னு இதத்தான் சொல்வாங்களோ?..இரண்டு வருடங்கள் கழித்து ஒரு விடியற்காலையில் அலறிய தொலைபேசியினூடாய் ஒலித்த 'என்ன மற்ந்திடு' ரீதியிலான உரையாடலில் உறைந்து போன கணமும் வெகு நாட்கள் கழித்து அழகாய் தோன்றிற்று.

அனுபவம்

மூன்று வருடங்களுக்கு முன்பு வெகு குழப்பங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம் என் வீட்டிற்க்கு சமீபமாய் இருக்கும் ரமணாஸ்ரமத்திற்க்கு சென்றிருந்தேன்.இரவு 7 மணிக்கு மேல் அந்த ஆஸ்ரமத்திற்க்கு தனி அழகு வரும்.பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.மெல்லிய இருள் போர்வையென விரித்துப் படர்ந்திருக்கும்.பூக்களின் வாசனை,சில்வண்டுகளின் ரீங்காரப் பிண்ணணியோடு ஒரு தெய்வீக அமைதி எங்கும் நிறைந்திருக்கும்.ரமணரின் அன்னை சமாதி பழமையின் சாயலோடு மிக அழகாய் இருக்கும்.குறந்த வெளிச்சம் கொண்டதாய் ஒளியின் கூச்சமில்லாது இருளில் புதைந்து அகத்தின் வெளிச்சத்தை தேட ஏதுவான இடம்.என் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தேன் 7.30 மணி வாக்கில் திடகாத்ரமான ஆங்கிலேயர் ஒருவர் வீணை சகிதமாய் என் அருகிலமர்ந்தார்.அவரைப் பின் தொடர்ந்து மிருதங்கம் ஒன்றை ஏந்தியபடி ஒரு இளைஞரும் வந்தமர்ந்தார்.எனக்கு ஒரு புன்னகையை தந்துவிட்டு அந்த ஆங்கிலேயர் வீணையை மீட்ட ஆரம்பித்தார்.என்னையும் சேர்த்து அந்த கல் மண்டபத்தில் ஐந்து பேர் இருந்தோம்.மெல்லியதாய் வருடிக்கொடுக்கிற் சுகமென ஆரம்பித்தது அவரின் மீட்டல்கள்.என் உடலும் மனசும் இளக ஆரம்பித்தது வீணையின் சுருதி கூடக்கூட நான் அதிரத் துவங்கினேன்.இசையின் உச்சத்தில் நான் ஒரு நாத அதிர்வென மாறி அந்த மண்டபத்து சுவர்களில் மோதத் துவங்கினேன்.கண் திறக்கப் பயமாக இருந்தது.45 நிமிடம் கழித்து அவ்விசை மெல்ல அடங்கியது.மழை ஓய்ந்த அமைதி.என் உடல், ஆன்மா, மனம் எல்லாவற்றையும் உலுக்கிப் போட்ட பரவச அனுபவம்.

வீடு

மத்தியப்பிரதேசத்தில் குச்வாடா என்றொறு சிறிய கிராமம்.நாகரீகம் வசதி வாய்ப்புகள் எதுவும் இன்னும் அண்டியிராத ஒரு உள்ளடங்கிய கிராமம்.அங்குதான் இந்த வீடு இருக்கிறது.1930 களிலிருந்து அக்கிராமத்தில் இதுதான் பெரிய வீடு.முழுவதுமாகவே மண்ணால் கட்டப்பட்டது.மண் தரையை சாணமிட்டு மெழுகியிருந்தது அக்கோடையில் வெகு குளுமையைத் தந்தது.வீட்டின் நடையில் மாடிக்கு படிக்கட்டு இருக்கும் அதுவும் மண்படிக்கட்ட்டுத்தான்.பக்கவாட்டில் முன் பக்க கதவு வைத்து வீட்டை ஒட்டிய மற்றொறு அறை இருட்டாய், அதற்க்குப் பின் ஒரு அறையும் பின்புறத்தில் ஒரு வராந்தாவும்.படிக்கட்டு வழியாய் மேலே சென்றால் கீழ் தட்டை ஒத்தார்போல் மேல் தட்டு.அங்கங்கே மூங்கில் சன்னல்கள், வேடிக்கைப் பார்க்க சின்னதாய் ஒரு பால்கனி.வீட்டின் மூலைகளெங்கிலும் அமைதி படிந்து கிடந்தது.உள்ளே அப்படியொறு மலர்வு.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்க்கு ஒரு பேரமைதியும் அன்பும் சூழ்ந்தது என்னை.அந்த வீட்டிற்க்கு சொந்தக்காரர் ஓஷோ.

பொழுது
மாலை..இந்த சாயந்திர நேரம் ரொம்ப ரம்யமா படும்.'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில்' 'பொன்மாலைப் பொழுது' 'மாலை எனை வாட்டுது' ன்னு பொருத்தமான பின்னணி இசையோட மொட்டை மாடில உட்கார்ந்துட்டு வீதியையும் வானத்தையும் பார்த்திட்டு இருப்பேன்.சைக்கிள் ரிக்க்ஷா,ஆட்டோ சகிதமா வீடு திரும்புற கான்வெண்ட் குழந்தைகள்.ஹோ ன்னு உற்சாக கூச்சல்களோடு வீடு நோக்கி ஓடும் கார்ப்பரேஷன் குழந்தைங்கள் ன்னு தெரு வெங்கும் பூப்பூத்த மாதிரி இருக்கும்.ஒரு பரபரப்பான காலைய முடிச்சு வைக்கிற அந்தி ரொம்ப அழகு.மேற்குல ஒரே நேரத்துல வானப்பெண் பலவித வண்ண உடைகளை மாத்துவா.மலைக்குப் பின்னால இருக்கிற தன் காதலி வீட்டுக்கு ஒரு திருட்டு காதலனைப் போல சூரியன் மெல்ல உள்ளப் போவான்.ரொம்ப கவித்துவமான பொழுது இந்த மாலை.சில சமயங்களில சன்னமாய் மழையும் சேர்ந்துக்கும் அப்போ ஏற்படுகிற உண்ர்வை குதூகலம் னு சொல்லலாம்.

கண்கள்

கண்களின் மீது எப்போதுமே ஒரு கிறக்கம் உண்டெனக்கு.குழந்தைகளின் கண்களில் எல்லைகளற்ற குறும்பும் அன்பும் எப்பவும் நிறைந்திருக்கும்.எந்த உயிரினத்த பார்த்தாலும் எனக்கு முதலில் அதன் கண்களைத்தான் பார்க்க தோனும்.பூனைக்குட்டியின் கண்கள்ல எப்பவும் ஒரு சோம்பலான குறும்பு தெரியும் பசுவின் கண்களில் தெரியும் அமைதி.பாம்பின் கண்களில தெரியுற வசீகரம்.அத்தோட பசியில் சோர்ந்த விழிகளில் தெரியும் சோகம்.கண்களில் நீர்கட்ட சிரிக்கும் மனிதர்கள்னு கண்கள் ஒரு அழகான குறியீடு ன்னு சொல்லலாம்.என் சமீபத்ய தோழி அருபதர்ஷினியோட கண்கள் ரெண்டு நாள் தூங்க விடாம பண்ணிடுச்சு.:)

அப்பா...!! ஒரு வழியா இறக்கி வச்சாச்சு இதோ அடுத்த மூணு பேர்

எடிட் செய்ய கத்துக்கொடுத்த துபாய் கோபிநாத்
திடீர்னு கவித எழுதும் ராயல் ராம் ( ரகசியம் இன்னாபா?)
மென்மையாவும் ரொம்ப அழுத்தமாகவும் வலிகளை பதிவு செய்யும் தமிழ்நதி

Featured Post

test

 test