Friday, December 28, 2007

சில கனவுகளைப் பகிர்ந்துகொள்ள இயலாது



HOUSE OF SAND AND FOG (2003)


சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக்கின்றன.நமது சுவாசத்தை,மகிழ்வை, துயரத்தை உள்வாங்கியபடி மெளனமாய் நிற்கும் வீடுகளின் அழகு அளப்பறியாதது.வாழ்வின் அலைவுகளின் நீட்டிப்பில், தேவைகளின் கழுத்து நெறிப்பில் வீடுகளைத் துறப்பது காட்டிலும் உயிர்வாழ்தலின் நிமித்தமாய் சொந்த வீடுகளைத் துறப்பது மிகவும் குரூரமானது. பணமோ, வசதிகளோ, சொந்த வீட்டினைக் காட்டிலும் அழகான வீடுகளோ எப்போதுமொரு இயந்திரத்தனத்தை இயல்பிலேயே கொண்டிருக்கிறது. இன்னொரு உயிராய் நம்முடன் எப்போதும் வசித்திருக்கிறது நாம் வாழ்ந்த வீடுகள்.


ஒரு வீட்டை மய்யமாக கொண்டு நிகழும் துயர சம்பவங்களை இத் திரைப்படத்தில் பதிவித்திருக்கிறார்கள்.யார் மீது குற்றம் சொல்வதென தெரியாமல் எல்லார் மீதும் பரிதாபம் கவிழ நிகழ்ந்த துயரங்களிலிருந்து மீள் பதிவித்துக் கொள்ள முடியாமல் இறுகிப் போய் கிடந்தது என் நேற்றய மாலை.


ஈரான் தேசத்திலிருந்து உயிர் வாழ்தலின் நிமித்தமாய் Colonel Massoud Amir Behrani (பென் கிங்ஸ்லி) யும் அவரது மனைவியும் மகனும் அமெரிக்கா வருகிறார்கள்.ஈரானின் கர்னலாக இருந்த பென்கிங்ஸ்லி அரசியல் காரணுங்களாயும் தன் மகனின் உயிர் மீதிருந்த பயத்திலும் இங்கே வசிக்க வருகிறார். ஏலத்திற்கு விடுவதாய் அறிவிப்பு செய்திருந்த ஒரு வீட்டினை வாங்கி பராமரிப்பு வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்பதன் மூலம் தன் மகனின் படிப்பு செலவை சமாளித்து விட முடியும் எனத் திட்டமிட்டு ஒரு வீட்டை வாங்குகிறார். அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு (Jennifer connelly)தன் வீடு ஏலம் போகும் காலை வரை அவ்விதயம் தெரியாமல் போய்விடுகிறது.வரிகளை ஒழுங்காய் செலுத்தவில்லை என்பதற்காக அவ்வீட்டினை ஏலத்திற்கு விட நிர்பந்திக்கிறது அரசாங்கம்.அவளை காலி செய்ய வரும் போலிஸ் Lester (Ron Eldard)அவள் நிலைகுலைந்து போயிருப்பதை அறிந்து உதவி செய்ய முன்வருகிறான்.தனது வீட்டை இழக்க விரும்பாத அப்பெண், அவளுக்கு உதவி செய்ய வரும் போலிஸ், பென்கிங்ஸ்லி இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் படம்.எவ்வித பூச்சுமில்லாமல் வெகு நேர்த்தியான திரைக்கதை விழிகளை இமைக்க மறக்கச் செய்து விடுகிறது.


எனக்குப் பிடித்த காதாபாத்திரம் பென்கிங்க்ஸ்லியின் மனைவி(Shohreh Aghdashloo-) அன்பும் தாய்மையும் மிகுந்து வழியும் அற்புதமான பெண். கலாட்டா செய்ய வருபவளின் காலில் பொத்துக்கொண்ட ஆணிக்காக மருந்திடும் காட்சியில்,தன் மகனைக் கொன்று விடுவார்கள் அதனால்தான் இங்கே பதுங்கியிருக்கிறோம் என் கதறும் காட்சியில்,தன் கணவனால் இப்பெண்ணுக்கு என்ன பிரச்சினையோ என அவனிடம் முறையிடும் காட்சியில், தற்கொலைக்கு முயன்றவளுக்கு பரிவுகளோடு தேநீர் தரும் காட்சியில் என திரையில் வரும் அத்தனைக் காட்சியிலும் மிகவும் நெகிழ வைக்கும் பாத்திரப்படைப்பு.தன் மகன் இறந்துபோன செய்தி கேட்டு உறைந்து போய் கதறும் காட்சியில் என்னமோ செய்து விடுகிறார். மிக மெதுவான ஆங்கிலம், மிக மிக சாந்தமான முகம் என அப்பாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு.


பென் கிங்க்ஸ்லி ஒரு அற்புத நடிகன்.மிக இறுக்கமான முகத்தோடும், தன்னால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளே என சங்கடப்படுவதிலும், தன் மனைவியை அறைந்துப் பின் தவித்துப்போவதிலும், தன் பதின்ம வயதுப் பையனிடம் மிகப் பரிவாய் தன் நிலையை விளக்குவதிலும், தற்கொலைக்கு முயன்றவளை காப்பாற்றி மிகத் தொய்வோடு அமர்ந்திருப்பதிலும், எனக்கு என் மகன் மட்டும் போதும் வேறெதுவும் வேண்டாம் என தரையில் தலை குத்தி கதறுவதிலும், இறுதியில் தன் இராணுவ உடையோடு முகத்தில் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை இறுக்கமாய் மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதிலும் தானொரு மிகச் சிறந்த நடிகன் என்பதை நிரூபிக்கிறார்.



விழித்தெழுந்த காலையில் தன் வீடு தனக்குச் சொந்தமானதில்லை உடனே காலி செய்யவேண்டும் என்ற நிர்பந்தத்தில் நிலை குலைந்து போகும் kathy (jeniffer conelley) எங்கு போவதென தெரியாமல் குழம்பிப் போகிறாள். வேலையும் இல்லை, கையில் பணமுமில்லை, தங்க இடமுமில்லை, இந்நிலையில் தான் வாழ்ந்த வீட்டை விட்டுப் போகவும் முடியாது வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறாள்.உதவி செய்ய வந்தவனின் சொந்த பிரச்சினைகள், தன் வீட்டை எடுத்துக்கொண்டவர்களின் பரிதாப நிலை என எல்லா சிக்கல்களிலும் சிக்கித் தவிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார்.a beautiful mind படத்திற்கான சிறந்த நடிப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட ஜெனிபர் தன் செறிவான நடிப்பால் மிளிர்கிறார்.தன்னால் தன்னைச் சுற்றி உள்ளவர் எல்லாரும் பாதிக்கப்படும் குற்றவுணர்வில் சிக்கித் தவிப்பது, இரண்டு முறை தற்கொலைக்கு முயல்வது, கடையிலும் தற்கொலை செய்து கொள்ள முயசித்துத் தோற்றுப்போவதென துயரத்தின் சாயல்களை தேக்கி வைத்திருக்கும் கதாபாத்திரம்.


மனிதாபிமானத்தின் நீட்சியாய் ஜெனிபரின் மேல் காதல் வயப்படும் போலிசாக lester.தன் மனைவி மற்றும் குழந்தைகளால் ஏற்படும் மன உளைச்சல், மேலதிகரிகளின் மூலமாய் வரும் பிரச்சினைகள், அத்தோடு ஜெனிபர் மீதான காதல் என பிரச்சினைகளின் இன்னொரு உருவமாய் இப்பாத்திரம்.பலவந்தத்தின் மூலமாக அந்த வீட்டை ஜெனிபருக்கு பெற்றுத் தர முயலும்போது மனம் பதறிப்போகிறது.எதிர்பாராத விதமாய் பென்கிங்ஸ்லி மகன் இறப்பதற்கு காரணமாகிறான்.



தற்கொலைக்கு முயன்று தோற்று ஜெனிபர் தன் வீடு திரும்புகிறாள்.மகன் இறந்த துக்கம் தாளாது படுக்கையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடக்கும் பென்கிங்ஸ்லி மற்றும் அவர் மனைவியின் உடல்களைப் பார்த்துக் கதறி செய்வதறியாது அவர்களுக்கு இடையில் கால்கள் குறுக்கிப் படுத்துக்கொள்வதோடு படம் முடிகிறது.



Andre Dubus III ஆல் எழுதப்பட்ட நாவலை அதே பெயரில் திரைப்படமாக்கியிருக்கிறார் Vadim Perelman. இவர் தற்போது Ayn Rand ன் நாவலான Atlas Shrugged ஐ திரைப்படமாக்கிக் கொண்டிருக்கிறார் .இத் திரைப்படம் மூன்று விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது எந்த அரசியல் காரணங்களுக்காக தேர்வு செய்யப்படவில்லை என விளங்கவில்லை :)



*வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஜோதிகா குறிப்பிடுவது இத்திரைப்படத்தைத்தான்.

8 comments:

ஹரன்பிரசன்னா said...

Nice Intro. Thanks.

KARTHIK said...

இது உங்களின் மற்ற படங்களின் பதிவுகளை போல் இல்லாமல் மிகவும் மெதுவாக நகர்கிறது.
நன்றி

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு.

நண்பன் said...

ஈரான் தேசத்தின் விமானப் படை அதிகாரியாக இருந்து, பின்னர் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தப்பி ஓடி அடைக்கலம் தேடி அமெரிக்காவிற்கு வந்தவர் - பென் கிங்ஸ்லி.

குடும்பம் - அதை பழைய மிடுக்கோடும் வசதியோடும் வைத்திருக்க வேண்டுமென்பதுவும், மகனின் படிப்பை எக்காரணம் கொண்டும் தடைபட்டுவிடக்கூடாது என்ற முனைப்பிலும் யாருமே மனம் ஒப்பாத வேலையைச் செய்கிறார் - சாலை போடும் கூலியாக.

கழிவறைக்குச் சென்று தன் உடைகளைக் களைந்து, மீண்டும் கோட்-சூட் மாற்றிக் கொண்டு, வீட்டுக்குத் திரும்புகிறார். தன் கஷ்டங்களை - அவலங்களைத் தன் குடும்பம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற முனைப்பு - குறிப்பாக தனது மகன் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற பதைபதைப்பும் இன்னமும் மனதில் நிற்கிறது. இடையில் காஸ்பியன் கடற்கரையில் தான் வாழ்ந்த பரந்து விரிந்த மாளிகை போன்ற வீடு, அலைகளில் விளையாடும் மனைவியும் மகனும்... கண்களில் தோன்றி மறைய, வாழ்ந்து கெட்ட மனிதரை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் - கிங்ஸ்லி.

மகன் இறந்ததும், எல்லாவற்றையும் தந்து விடுகிறேன் என் மகனை மட்டும் திருப்பித் தந்து விடுங்கள் என்று கதறுவது இதயத்தைப் பிழிந்து விடும் வல்லமை படைத்தது.

படத்தின் முதல் காட்சியில், "is this your house" என்ற கேள்விக்கு "யெஸ்" என்றும், அதே கேள்விக்கு இறுதியில் "நோ - இந்த வீடு இவருடையது" என்று சுட்டிக்காட்டுவதுடன் படம் முடியும். முற்றிலுமாக ஒரு மனிதன் தன்னை எப்படி உணர்ந்து அனுபவம் பெறுகிறான் என்பதைக் குறிக்கும் விதமாக முடியும்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பார்த்தது. மீண்டும் உங்கள் வர்ணனையில், புகை மூட்டத்துக்கு நடுவே கசியும் ஒளிபோல் தோன்றி மறைகிறது.

நன்றி, அய்யனார் - ஒரு நல்ல படைப்பைப் பற்றி பேசி மகிழ ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக.

மங்கை said...

//சொந்த வீடுகளைப் பற்றியதான ஏக்கங்கள் எப்போதுமிருக்கின்றன.நமது சுவாசத்தை,மகிழ்வை, துயரத்தை உள்வாங்கியபடி மெளனமாய் நிற்கும் வீடுகளின் அழகு அளப்பறியாதது.வாழ்வின் அலைவுகளின் நீட்டிப்பில், தேவைகளின் கழுத்து நெறிப்பில் வீடுகளைத் துறப்பது காட்டிலும் உயிர்வாழ்தலின் நிமித்தமாய் சொந்த வீடுகளைத் துறப்பது மிகவும் குரூரமானது.///

படிக்க படிக்க எனக்கே தெரியாமல் என் கண்களில் நீர்...என்ன் சொல்வதென்று தெரியவில்லை..
ஹ்ம்ம்ம்..நன்றி..இந்த வலியிலும் எனக்கு ஒரு சுகம் இருப்பதை உண்ர்கிறேன்..சொல்ல முடியாத ஒரு உணர்வு....

Ayyanar Viswanath said...

பிரசன்னா கார்த்திக் ஆடுமாடு நன்றி

விரிவான பகிர்விற்கு நன்றி நண்பன் ..

மங்கை
நன்றி

Anonymous said...

என்னய்யா இது கொடுமை?
பிரசன்னா, கார்த்திக், ஆடுமாடு உங்கள் அனைவருக்கும் நன்றின்னு எழுதாம

//பிரசன்னா கார்த்திக் ஆடுமாடு நன்றி//


இப்படிச்சொன்னா என்னான்னு எடுத்துக்குறது? :-) உனக்குப் பின்னூட்டம் போட்ட வெள்ளக்கார துரை பிரசன்னாதான்யா பாவம். ஆடுமாடுன்னு திட்டிட்டியே

சாத்தான்குளத்தான்

கப்பி | Kappi said...

அட போன மாதம் தான் எழுதியிருக்கீங்க..எப்படி படிக்காம விட்டேன்?! :S

விரிவாக அருமையாக சொல்லியிருக்கீங்க அய்ஸ்!

Featured Post

test

 test