Tuesday, December 25, 2007

பெண்களின் நகரம்- கட்டற்ற சுதந்திரத்தின் களி நடனம்


Città delle donne, La (1980) aka The City of Women

"It's the viewpoint of a man who has always looked at woman as a total mystery, not only as the object of his fantasies, but as mother, wife, lady in the drawing room, whore in the bedroom, Dante's Beatrice, his own personal muse, brothel entice--and more. He projects onto her all of his own fantasies."

- felini
ஆறு மாதங்களுக்கு முன்பு என்னால் இத் திரைப்படத்தை 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாய் பார்க்கமுடியவில்லை.(அப்பட்டமான ஆணியவாதியான என்னால் முப்பது நிமிடங்கள் பார்க்க முடிந்ததே அதிசயம்தான்)எந்த ஒரு ஆணாலும் இப்படத்தை எவ்வித அதிர்வுகளும் இல்லாது பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இருபத்தேழு வருடங்களுக்கு முன்னால் இத்திரைப்படம் அபூர்வ புனைவுத் தன்மையோடு எடுக்கப்பட்டிருப்பது பெரும்
ஆச்சர்யத்தைத் தந்தது ஃபெலினியின் மற்றத் திரைப்படங்களான Nights of Caribea, La strada போன்றவற்றில் காணமுடியாத புதிய பரிமாணம் மேலும்
பரவசத்தைக் கூட்டியது.

ஒரு ரயில் பயணத்திலிருந்து துவங்குகிறது படம் Snàporaz தனது இருக்கைக்கு எதிரில் மிகக் கவச்சியான ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவளது கிளர்வில் மயங்கி பின் தொடர்ந்து கழிவறையில் முத்தமிடுகிறான்.ஏற்கனவே இரண்டு ஆண்களால் என்னைத் திருப்தி படுத்த முடியவில்லை உன்னால் முடியுமா? எனக்கேட்டு அவனை மேலும் கிளர்த்துகிறாள். அவன் கலவிக்கு தயாராகும் சமயத்தில் ரயில் நிற்கிறது. அவள் அவனை விலக்கிவிட்டு இறங்கிப்போகிறாள்.அவளிடமிருந்து விடுபடமுடியாது அதே இறக்கத்திலிறங்கி அவளைத் தொடர்ந்து போகிறான் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த காட்டினை நோக்கிச்செல்கிறாள் விடாது பின் தொடர்ந்து முத்தமிடும் அவனை போக்குக் காட்டி மறைந்து விடுகிறாள்.சிறு அலைவிற்குப் பிறகு ஒரு ஓட்டலை காண்கிரான் அதில் உள்நுழைபவன் ஆச்சர்யத்தில் உறைந்து போகிறான் அந்த ஓட்டல் முழுக்க ஏகப்பட்ட பெண்கள்.முற்றிலும் பெண்களாலான ஒரு உலகம்.

கும்பல் கும்பலாய் எங்கு பார்த்தாலும் பெண்கள் ஓரிடத்தில் கூட்டமாய் குடித்து சிரித்து மகிழ்கிறார்கள்.இன்னொரு கும்பல் ஆண் குறிகளை
கேலிச்சித்திரங்களாக வரைந்து அவற்றைத் திரையிட்டு கிண்டலடித்து மகிழ்கிறார்கள். இன்னொரு பெண் ஆவேசமாய் பேசுகிறாள்.ஆண்கள் தங்களை அடிமையாக்கிய துயரங்களை கோபம் கொப்பளிக்க உரக்க கத்துகிறாள் .காமத்திற்கு ஆணை நம்பியிருக்கத் தேவையில்ல சுய புணர்வும் ஓரினப் புணர்வும் மட்டுமே பெண் விடுதலைக்கான ஒரே வழி என சத்தமாய் பிரசங்கிக்கிறார்கள்.இல்லத்தரசிகள் எவ்வாறு குடும்பம் என்ற கட்டமைப்பில் சிதைக்கப்படுகிறார்கள் குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள், ஆணின் காமம், உணவு, என எல்லாவற்றையும் ஒரு குடும்பப் பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதை கேலி நாடகங்களாக நடத்திக் காண்பிக்கிறார்கள்.ஆறு ஆண்களை மணந்த பெண்ணொருத்தியை அழைத்து வந்து அவளின் பிரசங்கத்தைக் கேட்கிறார்கள். கைத் தட்டி மகிழ்கிறார்கள். ஆறு ஆண்களையும் மேடையிலேற்றி மகிழ்ந்து போகிறார்கள்.

இதையெல்லாம் திகிலோடு பார்த்துக்கொண்டிருக்கிற நம் ஹீரோ வை அலேக் காக கடத்தி பனிச்சறுக்கு மைதானத்தின் நடுவில் விட்டு குறுக்கும் நெடுக்குமாய் மிக விரைவாய் சறுக்கி விளையாடி பயமுறுத்துகிறார்கள். பயந்து போய் கத்துபவனை பின்னாலிருந்து மிக வேகமாய் தள்ளி விடுகிறாள் ஒருத்தி, படிக்கட்டுகளில் தடுமாறி கீழ்தளத்திற்கு சென்றடையும் அவனை வயதான பெண்ணொருத்தி காப்பாற்றுவதாய் கூட்டிக்கொண்டு போய் வயலின் நடுவில் வைத்து கலவிக்கு பலவந்தப் படுத்துகிறாள் அலறியடிக்கும் அவனை அப்பெண்ணின் தாயார் வந்து
காப்பாற்றுகிறாள். ஒரு சிறுமியிடம் ஒப்படைத்து அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் சேர்த்துவிடும்படி பணிக்கிறாள்.

பாதி வழியிலேயே மித மிஞ்சிய போதையில் இளம் பெண்களின் கூட்டம் இரண்டு கார்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது ஒருவழியாய் காரில் ஏறும் அவனை மிக வேகமாய் செலுத்தி பயமுறுத்துகிறார்கள் கீழிரங்கி ஓடுபவனை தொடர்ந்தும் விரட்டியுமாய் மகிழ்கிறார்கள். ஒரு புதரில் மறையும் அவனை
காப்பாற்றுகிறான் இன்னொரு ஆண்.(Dr. Xavier Katzone) கையில் துப்பாக்கி கொண்டு அந்த பெண்களை விரட்டியடிக்கிறான் எதற்கும் பயப்பட வேண்டாம் எனச் சொல்லி தன் வீட்டில் தங்க வைக்கிறான்.

Dr. Xavier Katzone ன் பிறந்த நாள் விழாவில் அத்தனை பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மதுவினால் நிறைகிறது கூடம்.அந்த
கேளிக்கைகளுக்கு நடுவில் Snàporaz ன் மனைவியும் இருக்கிறாள்.அவளைப் பார்த்து அதிர்ச்சியடைபவன் அவளை திரும்பிப்போக பணிக்கிறான் அவனது
அதிகாரங்களை அடக்குமுறைகளை மிகுந்த ஆவேசத்துடன் எதிர்க்கிறாள் அவனைப் பழி வாங்கப் போவதாய் சொல்லியபடி குடிக்க ஆரம்பிக்கிறாள்.இரண்டு பெண்கள் அவனை திருப்தி படுத்த வருகிறார்கள். நடனமாடுகிறார்கள் கலவிக்கு முயற்சித்து தோற்று நீளமான சறுக்குப் பாதையில் சறுக்க ஆரம்பிக்கிறான் வளைந்து நெளிந்து செல்லும் அதில் மிக வேகமாய் சறுக்கியபடி எங்கிருந்தோ கீழே விழுகிறான்.வழி முழுக்க பெண்கள் அவனை பயமுறுத்துகிறார்கள்.வெறும் பெண்கள் மட்டுமே நிறைந்த பெரிய விளையாட்டுத் திடலில் இவனை ராட்சத பலூனொன்றில் கட்டி மேலே அனுப்புகிறார்கள் சிறிது தூரம் சென்றதும் அப்பலூனை குறிபார்த்து சுடுகிறாலொருத்தி தவறி ஒரு தளத்தில் விழுபவனை அந்த வயதான பெண் வரவேற்கிறாள்.

இப்போது ரயில் மீண்டும் வருகிறது snaporaz ஆரம்பக் காட்சியில் அமர்ந்திருப்பது போன்று அமர்ந்திருக்கிறான் எதிரில் அவனது மனைவி அமர்ந்திருக்கிறாள்.நடந்ததெல்லாம் கனவு என மகிழ ஆரம்பிக்கும்போது அந்த கேபினில் நுழையும் மூன்று பெண்கள் அவன் கனவில் வந்தவர்களாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறான்.அப்பெண்கள் கள்ளமாய் சிரித்துக்கொள்வதோடு படம் முடிகிறது.

ஏகப்பட்ட அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்திய இத்திரைப்படத்தை சர்ரியலிச சினிமாவில் வகைப்படுத்துகிரார்கள்.இங்க்மர் பெர்க்மெனும் ஃபெலினியும் இணைந்து இத்திரைப்படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள்.ஆனால் எங்கெடுப்பது என்ற சிக்கல் பிரதானமாய் இருந்திருக்கிறது.ஃபெலினி இத்தாலியிலும் பெர்க்மென் ஸ்வீடனிலும் எடுக்கவேண்டும் என பிடிவாதமாய் இருந்ததால் சில வருடங்களுக்குப் பிறகு ஃபெலினி தனியாகவே இத்தாலியில் எடுத்தார்.பெண்ணின் யுகாந்திர அடக்குமுறைகளை மிக ஆக்ரோஷத்துடன் உடைக்க முனைந்த முயற்சி எனத்தான் எனக்குத் தோன்றியது.ஆனால் எதிர் பெண்ணியவாதம் எனவும் ஃபெலினி விமர்சிக்கப்பட்டார்.பெண்கள் இத்திரைப்படத்தை தனியாய் பார்த்து எல்லாரையும் பழிவாங்கிய திருப்தியடைந்துகொள்ளலாம்.பலவீனமான இதயம் உள்ள ஆண்கள் இத்திரைப்படத்தை தவிர்ப்பதே நல்லது.

9 comments:

Jazeela said...

//பலவீனமான இதயம் உள்ள ஆண்கள் இத்திரைப்படத்தை தவிர்ப்பதே நல்லது.
// அப்ப உங்க இதயம் பலவீனமா இல்ல உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க இந்த பதிவா? :-) இந்த மாதிரி படம் பார்த்து எல்லாத்தையும் பயமுறுத்துறது நல்லதுக்கில்லப்பா சொல்லிட்டேன். :-)

பிச்சைப்பாத்திரம் said...

அய்யனார்,

அறிமுகத்திற்கு நன்றி.

seethag said...

i am going to watch this movie!!!how else to have some relief for the centuries of crap??sorry for the language.

Ayyanar Viswanath said...

ஜெஸிலா
உண்மையில இந்த படம் பார்த்து பயந்துதான் போனேன் சி டி அனுப்பி வைக்கவா :)


நன்றி சுரேஷ்

சீதா
நிச்சயமா இந்த படம் ஒரு புது வித பார்வையனுபவத்த தரும் கண்டிப்பா பாருங்க

சென்ஷி said...

என் இதயம் தற்சமயம் என்னிடம் இல்லாத காரணத்தினால் நான் இந்த திரைப்படத்தை காண்பது நன்றா.. தீதா.. சொல்லுங்க அய்யனார் சொல்லுங்க :))

Mangai said...

the revenge like the same way(like the men way) should no be encouraged.


Seetha, pls do not watch. These type of thoughts will enter into subconciuos mind. you'll not know. That might override one day your good, kind nature.

Ayyanar Viswanath said...

மங்கை

இத்திரைப்படம் ஒட்டு மொத்த ஆண் சமூகத்திற்கான பழிவாங்கல் என்பது உண்மைதான் இருப்பினும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களின் மன உளைச்சல்களுக்கு நிச்சயமொரு வடிகாலாக இருக்கும்

Mangai said...

இல்லை. இதுவும் ஒரு வகை வியாபரமே. பெண்களின் உணர்வுகளை தூண்டும் வியாபாரம். இதில் பலன் அடையப் போவது வியாபார வர்க்கம். பெண்கள் அல்ல

Anonymous said...

//இதுவும் ஒரு வகை வியாபரமே. பெண்களின் உணர்வுகளை தூண்டும் வியாபாரம். இதில் பலன் அடையப் போவது வியாபார வர்க்கம். பெண்கள் அல்ல//

நெத்தியடி. இது தெரியாம இவர் ஆணீய வாதியாம். வெங்காயம். போய் பொழப்பப் பாருய்யா

சாத்தான்குளத்தான்

Featured Post

test

 test