Monday, October 8, 2007

என் பக்கமும் உங்களின் விமர்சனங்களும்


இந்தப் பக்கத்தில் இது நூறாவது இடுகை.எண்ணிக்கைகளின் மீது பெரிதாய் ஆர்வமில்லையெனினும் கணக்கீட்டு அடிப்படையில் 100 என்பது நிறைவாகத்தான் இருக்கிறது.இந்த வருடம் பிப்ரவரி கடேசி நாளுக்கு முந்தைய தினம் ஆரம்பிக்கப்பட்டது இந்த தனிமையின் இசை.தொடங்கிய சில நாட்களிலேயே வலைப்பக்கத்தின் பெயர் அர்த்தமிழந்தது.பெற்றது நண்பர்கள் எனத் தேய்ந்த வார்த்தைகளை இங்கே மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.கற்றது அதிகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வலைப்பதிவும் தமிழ்மணமும் ஒரு போதையை ஏற்படுத்தி இருக்கிறது.அடிக்ட் என்ற வர்த்தையை கூட பயன்படுத்துவது சரியாகத்தானிருக்கும்.தமிழ்மணமேட்டிஸ் என்கிற சொல்லாடலையும் முன்பே உபயோகித்திருக்கிறேன்.சமூக பிரக்ஞை அல்லது கண்ணில் படுவதை எல்லாம் எழுத்துக்களாக்கிப் பார்க்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி அல்லது கிறுக்குகுணம் புதிதாய் வந்து சேர்ந்திருக்கிறது.இப்போதெல்லாம் நேரிலோ தொலைபேசியிலோ பிறரிடம் பேசுவதைக் காட்டிலும் சாட்டுவது மிகவும் பிடித்தமானதாகவும் இணக்கமானதாகவும் இருக்கிறது.

இன்னும் சொல்லப்படக்கூடியதாய் புதிதான பல குணாதிசிய மாற்றங்களும் வலைக்கு வந்த பின் ஏற்பட்டிருக்கிறது.எல்லாவற்றையும் விட கிடைத்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையும் அன்பும் மலைப்பூட்டக் கூடியதாய் இருக்கிறது.இன்றைய தினம் வரை எந்தவித ஆபாச பின்னூட்டங்களும் வரவில்லை என்பதில் சிறுமகிழ்ச்சியே ( நீயே அசிங்க அசிங்கமா எழுதுற உன்னவிட அசிங்கமா எவனால எழுதிட முடியும்)

சன்னாசியின் பழைய வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது அடையாளங் காணப்படுவதின் சிக்கல்களை குறித்து எழுதியிருந்தது (ஐ.பி விலாசம் கண்டறியும் யுக்திகளை வலையில் சேர்த்திருப்பது தன்னுடைய பிரைவசியை பாதிப்பதாய் சொல்லியிருந்தார்)ஆச்சர்யப்படுத்தியது.ஏதோ ஒரு அடையாளத்திற்கான உந்துதல்களின் விழைவுதான் நமது எழுத்து என்கிற என் நிலைப்பாடு சற்றே மாறிப்போனது உள்ளே தகிக்கும் அல்லது வெளிப்பட ஏங்கும் சொற்களின் எழுத்து வடிவமாக மட்டுமே இனி இந்த பக்கம் இருக்கும் என்கிற எண்ணம் அப்போது தோன்றியது.

மற்றபடி மலிந்த விளம்பர யுக்திகள் எதிலேயும் ஆர்வமில்லை.பெரும்பாலான விவாதங்களையும் தவிர்த்துவிடுவது விளம்பரமாதலின் பயம்தான்.வலை நண்பர்களின் மூலம் தெரிந்துகொண்ட புதிய திறப்புகள் இந்தப் பொழுதை மிகுந்த இணக்கமாக்குகிறது.சலிக்கும்வரை எழுதிக்கொண்டிருப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்தப் பொழுதில் நன்றி சொல்லப்பட வேண்டிய நண்பர்களின் பட்டியல் மிக நீளம்.

இந்த பக்கம் குறித்தான உங்களின் பகிர்வுகள்,விமர்சனங்களை எதிர் நோக்குகிறேன்.புரியவில்லை/ஆபாச வர்த்தைகள் போன்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை விட புதிதாய் ஏதேனும் குறைகளை சுட்டினால் மகிழ்வேன்.
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...