Sunday, October 7, 2007

ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லைநிலைப்பாடு
அன்பு என்பதற்கு சுயநலம் என்கிற வார்த்தைதான் ஆகச்சரியானது.நேசித்தல் என்பதோ,காதல் என்பதோ,தியாகம் என்பதோ,துரோகம் என்பதோ தன்முனைப்பின் மற்றும் தன் சார்ந்ததின் வெளிப்பாடுகளாக மட்டும்தான் இருக்கமுடியும்.

நிகழ்
உன்னுடைய அ விற்கும் என்னுடைய அ விற்குமான இடைவெளியின் அகலத்தை வெள்ளைப் பெண்ணிற்கும் கருப்பு பெண்ணிற்கும் இடையேயான வித்தியாசங்களோடு பொருத்திக் கொள்ளலாம்.உடலமைப்பை தவிர்த்து வேறெந்த விதத்திலேயும் இரு பெண்களையும் ஒப்பிடமுடியாததைப்போல் ஒரே தளத்தில் இயங்குகிறோம் என்பதை தவிர்த்து வேறென்னவிருக்கிறது உனக்கும் எனக்கும்?.பொதுப்புத்தியானது பெண்கள் என்கிற வரையறையை தருவது போல் நம்மையும் காதலர்கள் என வரையறுத்து எந்த ஒன்றையும் ஒரு முத்திரைக்குள் அடைத்துக் கொண்டுவரும் சமூகம் தன் வழமையை செவ்வனே முடித்து விட்ட திருப்தியில் ஓரமாய் அமர்ந்து நம் செயல்பாடுகளை கவனிக்கிறது.எப்போதுமே மூடாத இக்கொள்ளி கண்களின் முன்னால்தான் உன்னுடன் பேசித்தொலைய வேண்டியிருக்கிறது.நீயும் கூட இந்த அடையாளங்களை விரும்புகிறாய் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தும் காற்றின் சாயல்களில் உன் மணற்பரப்பில் சில கீறல்களை,சில தற்காலிக அசைவுகளை மட்டும் செய்துவிட முனைந்து உன் விரல்களை பிடித்துக் கொண்டேன்.

அடையாளங்களை விரும்பிடாத பெண்ணொருத்தி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டாள்.அவளின் மரணம் குரூரமாய் இருந்தது.தான் அடையாளங்களை விரும்பினதில்லை என அவள் அடித்துக் கொண்ட தம்பட்டம் அனைத்தும் சொற்களின் வடிவம் உதறி புழுக்களின் வடிவத்தை பெறத் துவங்குகிறது.ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லை என அவள் புன்னகையோடு சொன்னபோது அவள் கழுத்தை நெறித்து விடத் தோன்றியது.அவள் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் மீதும் அவளால் எழுதப்பட்ட பிரதிகளின் மீதும் அவளது நள்ளிரவு பேச்சுகளின் மீதும் பாசியென படியத் துவங்குகிறது பாசாங்கின் வேர்கள்.இவளது மரணம் என்னுடைய தற்கொலையின் நாட்களை தோராயமாக கணக்கிட்டு சொன்னது.அவளின் சாயல்களில் என்னையும் தற்கொலை செய்துகொள்ள தூண்டிய அவளின் பெருமுயற்சிகளுக்கிரையாகி இதோ உன்னை காதலிக்கத் துவங்குகிறேன்.

நிகழிலிருந்து பிறழ்தல்

தன்னலம் கருதா என்கிற வார்த்தையை இனி எழுதப்போகும் வரலாறுகளில் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த ஒற்றை வார்த்தைதான் நமது பரப்பு கெட்டுச் சீரழிய காரணமாய் இருந்து வந்திருக்கிறது.இனி வரப்போகும் தலைவர்கள்,வழிநடத்துவோர்,இயக்க வேர்கள்,கட்சித் தூண்கள்,சமூக காவலர்கள், மக்களின் சேவகர்கள் அனைவருக்கும் இவ்வார்த்தையை பிரயோகிக்க தடை விதித்துவிட்டால் அவர்களின் விளிம்பை கவரும் யுக்தி தகர்க்கப்படும்.அதுமட்டுமல்லாது எதிர் தலைவர்கள் எதிர்வழிநடத்துவோர் எதிர்இயக்க வேர்கள் எதிர்கட்சித் தூண்கள் எதிர்சமூக காவலர்கள் எதிர்மக்களின் சேவகர்கள் வேறெந்த வார்த்தையை பிரயோகிப்பது என்பது தெரியாமல் குழம்பிப்போவர்.மேலும் தலைவரின் வழி நடப்போர்,தலைவர் கொள்கை பரப்புவோர், மக்களிடையே தலைவர்களை கொண்டு செல்வோர் ஆகியோர் தங்களின் சுய அடையாளங்களை (புகைப்படம்,பெயர்)பயன்படுத்தவும் தடை விதித்துவிடவேண்டும் அப்படி செய்துவிட்டால் அடிவருடி, தொண்டன்,கொள்கை பரப்பு செயலன் என்பது போன்ற அப்பாவித்தனமான வார்த்தைகளையும் அகராதியிலிருந்து பெயர்த்துவிடலாம்.

அச்சு இயந்திரங்கள் மூலம் தருவிக்கப்பட்ட புரட்சியின் நிகழ் முகம் கோரமானதாய் இருக்கிறது.இன்றைய சூழல் சீர்குலைந்து போக இவ்வியந்திரங்களே துணையானது மிகப்பெரிய சோகம்.நாளேடுகள்,நம்பர் ஒன் பத்திரிக்கைகள் போன்றவற்றில் கற்பழிப்பு செய்திகளையும் நடிகைகளின் செய்தி/புகைப்படங்களையும் வெளியிட தடைவிதித்துவிடலாம். தலைவர்களின் தொலைக்காட்சிகளில் நியூஸ்,ப்ளாஷ் நியூஸ் போன்றவற்றை ஒளிபரப்ப தடை செய்துவிடலாம். மேலும் செய்தி ஊடகங்களில் கிடைக்கும் 10 சதவீதத்திற்கு அதிகமான வருவாய் அனைத்தையும் அரசாங்கத்திற்கு வரியாய் செலுத்திவிடவும் மீறினால் ஊடக உடமைகளனைத்தும் தீக்கிரையாக்கப்படுமெனவும் கடுமையான ஆணைகளை விதித்து விடலாம்.

நிலைப்பாடிலிருந்து பிறழ்தல்

எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.எப்போதுமே பொய்க்காத,சலிக்காத,வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது.

*நிகழின் முதல்வரி அ.மார்க்ஸின் வித்தியாசங்களின் அரசியலிலிருந்து எடுக்கப்பட்டது
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...