Wednesday, September 19, 2007

இறப்பிற்கான போராட்டம் MAR ADENTRO aka THE SEA INSIDE


The Sea Inside (2004)
மரணத்திற்குப் பின் எதுவுமில்லை நீ பிறப்பதற்கு முன் எப்படி எதுவுமில்லாதிருந்ததோ அதைப்போலவே இறந்தபின்னும் எதுவுமில்லாதிருக்கும்.

(இறப்பதற்கு முன் ராமோனுக்கும் ரோஸாவிற்கும் நிகழும் உரையாடலிலிருந்து)

"உங்கள் உணர்வுகளை சாந்தப்படுத்துங்கள்... உங்கள் கண்களுக்கு முன்னால் திரைப்படத்தின் திரை ஒன்று விரிவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.. அதனூடே உங்களுக்குப் பிடித்தமான இடத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்... உங்கள் மொத்த உடலும் அமைதியடையட்டும்.. இப்போது உடல் மனம் இரண்டையும் தளரவிட்டு நினைவில் அந்த இடத்தை சென்றடையுங்கள்.. இப்போது அந்த இடத்தில் இருக்கிறீர்கள்... (ஒரு அழகிய கடற்கரை திரையிலிருக்கிறது) இந்த வண்ணம்.. இந்த ஒளி.. இந்த மிதமான வெப்பம்.. வெப்பத்தை உணருங்கள் உங்களுக்கு முன் விரிந்திருக்கும் இந்த அமைதி எல்லைகளற்றது. ''

இப்படியான பின் குரலோடு தியானத் தன்மையின் சாயல்களோடு ஆரம்பிக்கிறது இத்திரைப்படம். வாழ்வு, மரணம், அன்பு இந்த மூன்றிற்கிடையே அல்லல்படும் quadriplegics (கழுத்திற்கு கீழ் உடலின் பாகங்கள் எதுவும் செயல்படாது)நோயினால் பாதிக்கப்பட்ட ராமோன் என்வரின் போராட்டத்தை திரைப்படமாக்கியிருக்கிறார் Alejandro amenabar.
அலெஜாண்ட்ரோவின் மற்ற திரைப்படங்களான the others & Open your eyes போன்றே இந்த படத்தின் மய்யமும் மரணம்தான்.

இளம்பருவத்தில் காலிசியன் கடற்கரையில் குளிக்க ஒரு பாறையின் மீதிருந்து குதிக்கும்போது தவறுதலாய் ராமோனின் கழுத்து மணலில் புதைந்து கொள்கிறது.அந்த விபத்தின் மூலம் கழுத்திற்கு கீழிருக்கும் உடல்பாகங்கள் எதுவும் செயல்படாமல் போகிறது.படுக்கையிலே தன் வாழ்வை கழிக்கும் ராமோனால் தற்கொலையைக் கூட தன்னிச்சையாய் செய்து கொள்ள முடியாது. தனது தற்கொலைக்காக இன்னொருவர் உதவி செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மனு செய்கிறான் ஆனால் அந்த மனு 26 வருடங்களாக கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.

ராமோனின் எல்லாத் தேவைகளையும் உயிரோடு இருந்தவரை அவரின் தாயும் அதற்க்குப்பின் அவரது அண்ணி மேனூலாவும் கவனித்துக் கொள்கிறார்கள்.அவரின் அண்ணன் ஜோஸ் அவரின் மகன் ஜாவி வயதான தந்தை எல்லாரும் மிக இணக்கமாக இருக்கிறார்கள். குறிப்பாய் ராமோனின் அண்ணி தன் மகனாகவே கருதுகிறார்.இருப்பினும் கெளரவமான மரணத்திற்காக போராடுகிறார் ராமோன்.

ராமோனின் நண்பியான ஜெனி அவரது வழக்கை ஏற்று நடத்த விரும்பும் ஜீலியா என்கிற வக்கீலை அறிமுகப்படுத்துகிறார்.
ஜீலியா ஸ்ட்ரோக்கினால ஒரு கால் பாதிக்கப்பட்டவர் ஜீலியாவினால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியாது ராமோனிடம் ஏன் நீங்கள் மரணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்கு ராமோன் இப்படி சொல்கிறார்
“மரணம் நம் எல்லாரிடமும் எப்போதும் உள்ளது அதைப்பற்றி பேசினாலோ தேர்ந்தெடுத்தாலோ ஏன் எல்லோரும் பயப்படுகிறீர்கள்”
”எனக்கு மூன்றடி தள்ளி நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் மூன்றடி என்பது சாதாரண மனிதனுக்கு ஒரு தூரமே அல்ல! ஆனால் எனக்கு இந்த மூன்றடிதான் உங்களை நெருங்குவதிற்கு இடையூராய் இருக்கிரது.. உங்களை தொடுவதற்கு இயலாமல் போகிறது.. ஒரு முடிவில்லாத பயணமாய்! ஒரு மாய தோற்றமாய்! ஒரு கனவாய்! எனக்கிருக்கிறது.. அதனால்தான் நான் இறக்க விரும்புகிறேன் மேலும் சுயகவுரவமான ஒரு மரணத்தை நான் விரும்புகிறேன்”
என்கிறார்

ராமோனை புரிந்துகொள்ளும் ஜீலியா அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறாள்.அவரெழுதிய கவிதைகள்,அவரின் இளமைக்கால புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரிக்கிறாள்.மெல்ல ராமோனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.இருவரும் சேர்ந்து புத்தகமொன்றை எழுதுகிறார்கள்.இடையில் ஜீலியாவிற்க்கு ஒருமுறை ஸ்ட்ரோக் வந்து இரு கால்களும் செயல்படாமல் போய்விடுகிறது.புத்தகத்தை வெளியிட்ட அன்று இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து புத்தக வேலைக்காய் பார்சிலோனா சென்றுவிடுகிறாள்.

ராமோனின் பேட்டியை தொலைக்காட்சியில் காணும் ரோஸா ராமோனை கான வருகிறாள்.ஒரு பரிதாபமாக தொடங்கும் அன்பு மெல்ல வலுவடைகிறது.அவரின் இறப்பை ஒத்துக்கொள்ளாத ரோஸ் கடைசிவரை அந்த எண்ணத்தை மாற்ற முயன்று தோற்கிறாள்.அவளின் எல்லா பிரச்சினைகளையும் அவரோடு பகிர்ந்துகொள்கிறாள்.ராமோனுக்கான பணிவிடைகளை செய்வதில் ஆர்வமும் இன்பமும் அடைகிறாள்.

பார்சிலோனா சென்ற ஜீலியா புத்தகத்தை மட்டும் அனுப்பி வைக்கிறாள் ஜீலியாவின் தற்கொலை எண்ணத்தை அவளின் கணவர் மாற்றிவிடுகிரார்.கடைசியில் ரோஸ் மிகுந்த வேதனைகளோடு ராமோனின் மரணத்திற்கு உதவுவதாய் ஒத்துக்கொள்கிறாள்.ரோஸாவின் இருப்பிடத்திற்கு பிடிவாதமாய் சக்கர நாற்காலியின் உதவியுடன் செல்கிறார் ராமோன்.கடைசியாய் ராமோனை வழியணுப்பும் அவரது குடும்பத்தாரின் துயரம் நெகிழ வைக்கிறது குறிப்பாய் மேனுலா.. துக்கத்தை அடக்க முடியாமல் பீறிட்டெழும் அந்த முகபாவனை எளிதில் மனதை விட்டு நீங்காது.

கடலுக்கு அருகில் மிகப்பெரிய சன்னல்களை கொண்ட வீடு ஒன்றை அவரின் மரணத்திற்காய் தேர்வு செய்கிறாள் ரோஸா.நண்பர்களுடன் கடைசி இரவை கொண்டாடிவிட்டு,பொட்டாசியம் சயனைட் கலந்த நீரை ஒரு கண்ணாடி குவளையில் வைத்துவிட்டு,அவரது கடைசி பேச்சை பதிவிக்க இயங்கும் கேமரா ஒன்றை பொருத்திவிட்டு சென்றுவிடுகிறாள்.

என் வாழ்வு முழுக்க பிறரை சர்ந்து வாழும் ஒன்றாகவே இருந்துவிட்டது குறைந்தபடசம் மரணமாவது தனித்தன்மையுடன் இருக்க ஆசைப்படுகிறேன்..இந்த மரணம் என திட்டப்படி என் நண்பர்களின் உதவியுடன் நிறைவேறுகிறது.. இதற்காய் யாரையாவது தண்டிக்க நினைத்தால் அவர்களின் தலையை துண்டித்துவிடாதீர்கள்!.. ஏனினில் மூளை என்னுடையது விரல்கள் மட்டும்தான் அவர்களுடையது.. வேண்டுமானால் விரல்களை தண்டியுங்கள்"
என சொல்லியபடி பொட்டாசியம் சயனைட் கலந்த நீரை குடித்து உயிர் விடுகிறார். 28 வருடங்கள் 4 மாதங்கள் மற்றும் சில நாட்களாய் நடத்திய போராட்டம் முடிவிற்கு வருகிறது.

இந்த கதை முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.இந்த கதாபாத்திரங்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இந்த திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு அலெஜாண்ட்ரோ அந்தந்த கதாபாத்திரங்களிடம் கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார் சில சில சம்பவங்களை அதிகமாய் கொடுத்து இந்த படத்திற்கு மேலும் உயிரூட்டி இருக்கிறார்கள்.

கூர்மையான வசனம்,பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம்.இந்த திரைப்படத்தை எடுக்க நேர்ந்த விவரணைகளை 1 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரியாய் பதிவித்திருக்கிறார்கள்(ஒரிஜினல் டிவிடி வாங்கினால் அதனுடன் இணைப்பாய் ஒரு டிவிடி கிடைக்கும்).இந்த குழுவினர் ஒவ்வொரு படக்காட்சிக்கும் சிரமமெடுத்து பணியாற்றியிருக்கிறார்கள் திரையில் ஒரு சில நொடிகளே வந்துபோகும் காட்சிகளுக்கு அவர்கள் செயத பின் வேலைகள் பிரம்மிப்பூட்டக்கூடியதாய் இருக்கிறது.உதாரணத்திற்கு ராமோனின் இளமைப்பருவம் புகைப்படங்களாக மட்டுமே காட்டப்படுகிறது அந்த புகைப்படங்களை எடுக்க இவர்கள் மெனக்கெட்டிருப்பது இத்திரைப்படபம் ஒரு முழுமையான படமாய் வர உறுதுணையாய் இருந்திருக்கிறது.

Winner of Best forien Film- 2005 Academy awards
Winner of Best Forien Film- 2004 golden globes
உட்பட பதினான்கு விருதுகளை குவித்திருக்கிறது இந்த ஸ்பானிஷ் மொழித் திரைப்படம்.ராமோனாக நடித்த Javier bardem சிறந்த நடிகருக்கான விருதுகளை குவித்தார் என்பதை சொல்லத் தேவையில்லைதானே..

* நீல நிற எழுத்துக்கள் திரைப்படத்தில் வருபவை

(திரைப்படம் தந்த சித்தார்த்துக்கும்,விரிவாய் எழுத கேட்கும் மதிக்கும்,மரணத்தை பதிவித்த ஆழியூரானுக்கும்)
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...