Wednesday, September 12, 2007

கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்குபண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்கு மட்டுமே உரித்தான புழக்கத்தில் உள்ள மொழியை நாம் நாகரீகம் என்னும் பெயரில் கொன்று புதைத்து விடுகிறோம்.தமிழேயானாலும் நம் சொந்த பேச்சு மொழியில் உள்ள இணக்கத்தை நாகரீகம் கருதி பேசப்படும் வலிந்த பேச்சு வழக்கில் காணமுடிவதில்லை வேறொரு சூழலில் பண்பாட்டு ஒத்திசைவிற்காக பேச விழையும்போது நமக்கான அடையாளத்தை நாம் மறைமுகமாய் இழக்கிறோம்.சந்தர்ப்பம் கிடைக்கும்போது நமது பேச்சு வழக்கத்தில் பேசிக்கொள்வது எத்தனை திருப்தியம் மகிழ்ச்சியுமளிக்கிறதோ அத்தனை திருப்தி இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தபின் ஏற்பட்டது.

கதைகள் நமக்கு தெரிந்த நாம் புழங்கிய இடத்தை மய்யமாக கொண்டு எழுதப்படும்போது அந்த புத்தகம் வெகு சீக்கிரம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது.கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பு நான் வாழ்ந்த சூழலைப்பற்றி பேசுவதால் புத்தகத்தோடு சுலபமாய் ஒட்டிக்கொள்ள முடிந்தது.மண் சார்ந்து எழுதப்படும் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் கி.ராஜநாராயனின் எழுத்துக்களே முதலில் நினைவிற்கு வருகிறது.வெவ்வேறு மண் சார்ந்த மொழி வழக்குகளை பிரதானப்படுத்தி பல நாவல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கண்மணி குணசேகரனுக்கு முக்கியமான இடமொன்றைத் தரலாம்.

விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளியாக பணிபுரியும் கண்மணி குணசேகரன் 1993 லிருந்து எழுதி வருகிறார்.இதுவரை வெளிவந்த நூல்கள்
தலைமுறைக்கோபம் கவிதைகள்(1994)
உயிர்தண்ணீர் சிறுகதைகள் (1997)
அஞ்சலை நாவல் (1999)
ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைகள்(2000)
காற்றின் பாடல் கவிதைகள்(2001)

பதினான்கு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் நேரடியான கதையாடல்களை வட்டார மொழியின் வீச்சோடு முன் வைத்திருக்கிறார்.விருத்தாசலம்,பண்ருட்டி, விழுப்புரம்,திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறம் சார்ந்த மொழிநடையையும் மக்களையும்,மண் வாசத்தையும் தனது கதைகளில் உலவவிட்டிருக்கிறார் குறவர்கள், நாவிதன், ரெட்டியார்கள், குடியானவர்கள், படையாச்சிகள், என்பன போன்ற பின்புலங்களோடு உயிர்ப்பான கதாபாத்திரங்களின் மூலம் விளிம்பின் வாழ்வையும் குடியானவர்களின் அவலத்தையும் ஆதிக்க சக்திகளையும் எவ்வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல மிக இயல்பாய் பதிவித்திருக்கிறார்.

இந்த தொகுப்பில் கொடிபாதை,ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு, ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் போன்ற சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.பேருந்தில் நிகழும் பிரசவத்தினை விவரித்திருக்கும் கொடிபாதை சிறுகதை கிராமத்து சூழலில் வறுமையில் உழலும் மனிதர்களின் வலிகளை சரியாய் தடம்பிடித்திருக்கிறது.குண்டும்குழியுமான ஒற்றையடி சாலையில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்படும் நிறைமாத கர்ப்பிணி ஓடும் பஸ்ஸிலேயே மிகுந்த போராட்டங்களுக்குப் பின் தனது குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.இந்த சிறுகதையில் உலுக்கிப்போட்ட நிதர்சனம் கீழ்கண்ட வரிகள் தான்

ஆஸ்பத்திரில நிறுத்தட்டுமா...முன்னாலிருந்து ஓட்டுகிறவன் குரல் வந்தது

கூட்டத்தில் குனிந்து பணிக்கை பண்ணிக்கொண்டிருந்தவள் பட்டென்று நிமிர்ந்து சொன்னாள் "வேணாம் சாமீ பாவம் இல்லாதபட்டவன் ஆஸ்பத்திரிக்கு போனா தொட்டு தொட்டு பார்த்தாலும் ஆயிரம் ஐநூறுன்னு ஆவும் எந்த சிக்கலும் இல்லாம ஆண்டவன் புண்ணியத்துல தாய் வேற புள்ள வேற ன்னு சுத்தபடியா பூட்டுது.இனிமே அநேவசியம்தே..அந்த நெழல் கொடையில நிறுத்துங்க எறங்கிக்கறோம்.திரும்புகாலுக்கு இதே வண்டியில ஊருக்கு இட்டுகிட்டுப் பூடறோம்."


மழிப்பு எனும் சிறுகதை ரத்னவேல் என்கிற நாவிதனைப்பற்றி பேசுகிறது.கட்டையன் என்கிற குடியானவன் அவனிடம் சவரம் செய்துகொள்ள வரும் சம்பவத்தோடு விரியும் சிறுகதை அதிகாரத்திற்கெதிரான ஒரு சின்ன குரலை பதிவிக்கிறது.குடியானவப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் நாவிதனின் கலகம் காலம் காலமான அடிமைத்தனத்தை, விளிம்பை சார்ந்து வாழும் நிர்பந்தத்தை ஆங்காரமான குரலில் சொல்கிறது.

"இம்மாங் குடியானவன் இருக்கிற ஊர்ல ஒருத்தனாவுது என்ன நெனச்சி பாத்தீங்களா.ஏம் பொண்டாட்டிப் புள்ளிவள நெனச்சி பாத்திங்களா.நம்பள சுத்திதான இருக்கிறான் அவம் பொழுது எப்படிப் போகும் காசி கன்னிய படி பண்டத்த குடுப்பம்னு நெனச்சிங்களா.நா என்னடா கடனா கேட்டன் செஞ்ச வேலக்கி கூலியதான கேட்டன்..எவன் கொடுத்திங்க..எவங் குடுக்கிறீங்க."மண்ணில் கையால் அடித்து அடித்து பேசினான்.."குடுக்கிற மகராசன் மோம்பிரிக் குப்பத்தில இருக்கறான் அங்க போறேன்..ஏண்டா போறேன்னு எதுக்குடா கேக்குறீங்க"...

கட்டையனுக்கு ஆத்திரமாகவும் அவமானமாகவும் இருந்தது குடிபோதயில் உளறுகிறவனிடம் என்னபோய் பேசுவது.அதைவிட அவன் வீட்டுப் படி நெல்லே இன்னும் கொடுக்கப்படாமல் இருந்தது அவன் பேசுவது பாரயால் செருகி இழுப்பதுபோல் அவனுக்குள் வலி தெறித்தது.

அப்படியே அவனை விட்டுப்விட்டுப்போகவும் கட்டையனால் முடியவில்லை.காலையிலிருந்து அவனுக்காக அலைந்த அலைச்சலை எண்ணி நொந்த படி கிட்டப் போணான் கீழே கிடந்த கத்திப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் கையைப் பிடித்து தூக்கினான்.

யார்ரா அது..உடம்பை ஒரு குலுக்கு குலுக்கியபடி லேசாய் கண்களைத் திறந்து மூடியபடி கேட்டான்.
.............
கையில் திணித்த கத்திப் பெட்டியை பட்டென்று பிடுங்கி படுத்த நிலையிலேயே தூக்கி எறிந்தான்.."ஆமா மயிர வெட்றான் ..போடா"...
கத்திப் பெட்டி பை முந்தரிச்சருகில் ஓடி பொத்தென்று விழுந்தது.


வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
பதிப்பாளர்: தமிழினி
விலை : Rs.90.00
பக்கம்:208

(...புத்தகம் தந்த ஆசிப் மீரான் அண்ணாச்சிக்கு)
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...