Sunday, September 2, 2007

மனம் பிறழ்ந்த வழிப்போக்கனின் தொடர்புகளற்ற குறிப்புகள்


0 ------- 1-------------0
உன்னிடம் பேச வேண்டுமென்பது என் நெடுநாளைய விருப்பம்.இத்தனை நாட்களாக பேசிக்கொண்டிருப்பதுதான் என்ன? பேச்சுதானே?விடாத பேச்சு..எழுத்தும் குரலுமாய் எத்தனை பேச்சுக்கள்!..இரவு, பகல், மதியம், விடியல், பின்னிரவு என எந்த பொழுதில்தாம் நாம் பேசிக்கொள்ளவில்லை?இதை தவிர்த்து எப்போதும் உரையாடல்கள் ஓடிய படியே இருக்கும் தறிகெட்ட நினைவு.செவிகளில் இடைவிடாது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பேச்சொலிகள்.சதா உன்னை தொடர்ந்தபடி இருக்கும் மனதின் நினைவு,நினைவின் அலைவு, அலைவின் பிறழ்வு, பிறழ்வின் மய்யம் நீ! நீ மட்டும்தானென்பதை நான் சொல்லித்தான் அறிந்துகொள்ள வேண்டுமா?

ரத்த வாடைகளுடன் உயிரொன்றை சிதைக்கும் சொற்கள் இவையாய் இருக்ககூடும் என்பதைப் பற்றிய அக்கறையோ தயாரித்தல்களோ என்னிடம் எப்போதும் இருப்பதில்லை.மேலும் அந்த சூழலில் தோன்றும் உணர்வுகளை அந்தந்த சூழலில் தோன்றும் வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்துதல்தானே நேர்மையானதாய் இருக்கமுடியும்.உன்னிடம் பேசும்போது நான் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்னை அப்படியே விட்டுவிடுகிறேன். சொற்கள் தாமாகவே தன்னை வெளிப்படுத்துகின்றன.நீ தந்த இந்த சுதந்திரம் உன் மீதான என் நம்பிக்கைகளை மிகவும் வலுப்படுத்துவதாயிருக்கிறது.

சந்தேகித்தல்களை வெறுத்தவன் நான்.என் சகோதரனைப்போல் எதிர்ப்படும் எல்லா முகங்களிலேயும், பேசப்படும் எல்லா சொற்களிலேயும் புத்தரின் தரிசனங்களைத்தான் கண்டுகொண்டிருந்தேன். இந்த பேய் எப்போது பிடித்தது என தெரியவில்லை.மனிதர்களை மனிதர்களாக மட்டும்தான் இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.இந்த சொல் வெளிப்படும் உள்மனம் எத்தனை அழகானது/அபத்தமானது என்பது குறித்த பின் விவரணைகளை யோசிக்கத் தொடங்குகிறேன்.இந்த பின் விவரணை குறித்து என் அருகாமைத் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் மிகவும் பயந்துபோனாள்.இப்படி யோசித்தால் மகிழ்ச்சியின் ஊற்றுக் கண் மொத்தமாய் மூடிக்கொள்ளும் என்றும் எப்போதும் சந்தேகத்துடன் நீ வாழ்வது உனக்கும் மற்றவர்களும் எத்தனை ஆபத்தானதென்பது என்றும் உனக்கு புரியவில்லையா என்றாள்.சொல்லப்போனாள் ஒரு உண்மையான உள்மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்வது எத்தனை அற்புதமானதென்பது அவளுக்குப் புரியவில்லை.நடிப்பதோ பாசாங்கு செய்வதோ மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.எத்தனை மனிதர்கள்? எவ்வளவு நம்பிக்கைகள்? ஒவ்வொருத்தனாய்/ஒவ்வொன்றாய் தன் பாதுகாப்புணர்வை,தன் சார்ந்த உலகங்களை மிக குரூரமாய் நிரூபிக்க நேரிடும் கணங்களை,நேரடியாக சந்திப்பது எவ்வளவு வலி நிறைந்தது என்பது உனக்கு தெரியுமா?

எனக்கு பின்நவீனம் பிடித்துப்போனது இந்த சந்தேகித்தல் கூற்றினால் மட்டும்தான் என்றால் அதில் பொய்யில்லை.வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட என் பாடப்புத்தகங்களின் அறிவையும் நம்பிக்கைகளையும் சில/பல பிரதிகள் உடைத்துப்போனது.பாரதியின் பிம்பத்தை சிதைத்த ஒரு பிரதியை படிக்க நேர்ந்தபோது கதறிஅழத் தோன்றியது.இது ஏன் பொய்யாய் இருக்க கூடாது என வேண்டிக்கொண்டேன்.இறந்த ஒரு கலைஞனை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்து வந்தது.ஆனால் உனக்கொன்று தெரியுமா இப்போதெல்லாம் புதைக்கப்பட்ட குழிகளை தோண்டுவதில் ஏனோ எனக்கு குரூரமாய் ஒரு திருப்தி வந்து நேர்கிறது.இதை குரூரம் என சொல்வதில் கூட உடன்பாடில்லை கடன் என்றோ அத்தியாவசியமென்றோ தவிர்க்கமுடியாதது என்றோதான் சொல்லத் தோன்றுகிறது.பெருங்கதையாடல்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தமிழ்பரப்பை ஏன் ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாக்க கூடாது?வெறும் சிறுகதையாடல்களை கொண்டு மட்டும் இந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய சரித்திரப் பொய்களை கட்டவிழ்த்துவிட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.

தமிழொரு நீச மொழி என்ற பெரியாரின் புத்தகங்களையும் தமிழ் பேச முடியாத அளவிற்கு மிக கடுமையான மொழி என்ற ஓசோவின் பிரசங்கங்களையும் நாம் ஏன் பாடப்புத்தகங்களாகவோ அரசியலின்/சமூகவியலின் அடிப்படை சித்தாந்தங்களாகவோ மாற்றிவிடக்கூடாது?

0 ------- 2-------------0

என் தந்தையின் கடையில் சிங்கத்தின் படம்போட்ட சுவர் படமொன்று நினைவுக்கு வருகிறது அதன் அடியில் 'நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்' என எழுதப்பட்ட வாசகங்களை என் சிறுவயதில் அடிக்கடி படித்துக்கொள்வேன்.நானே என் கைப்பட 'அரசியல் பேசாதீர்' என எழுதியும் வைத்ததாய் நினைவு.அரசியல் ஒரு சாக்கடை கல்லெறிந்தால் மேலே தெறிக்கும் என எவனோ ஒரு புனிதன் சொன்னதுதான் என் சிறு பிராயங்களில் வேத வாக்காய் இருந்து வந்தது.அந்தப்புனிதன் யாரென்று தெரியவில்லை இப்போது மட்டும் அவனை அடையாளம் கண்டு கொண்டால் எத்தனை வயதாகியிருப்பினும் அவனை செருப்பாலடிப்பேன்.இந்த புனிதர்கள் நமக்கே தெரியாமல நம் சன்னல்களை மூடிவிடுவது எத்தனை அபத்தம்?போகிற போக்கில் சொல்லப்படும் வார்த்தைகள் வழிவழியாய் மரபின் தடம்பிடித்து வரும் ஒரு சாமான்யனை எவ்வித நிலைக்கு தள்ளிவிடுகிறது என்பது என் அரசியலறிவினை நோக்கினாலே உனக்கு புரிந்துவிடும்.

நம்மால் முடிந்த வரை இந்த புனிதர்கள் மீதும் நல்லவை என சொல்லப்படுபவைகள் மீதும் சேறுவாறி அடிப்போம் மிக மிக ஒழுங்கான புனிதன் என்றால் அவன் மீது உன் உதிரப்பெருக்கு காலத்தில் பயன்படுத்திய நாப்கின்களை கொண்டு அவன் முகத்தில் உதிர ஓவியம் ஒன்றினை வரைவதற்கான சாத்தியக்கூறுகளையும் முயன்று பார்ப்போம்.

அன்பு செலுத்துதல் என்பது என்னைப்பொருத்தவரை நாமாக புனைந்து கொள்ளும் ஒரு அசட்டு பிம்பம்.அன்பையெல்லாம் யார்மீதும் செலுத்த முடியாது.அன்பென்பது அவரவரிடத்தில் இருப்பது என்பதையே நான் மிகுந்த தயக்கங்களோடுதான் ஒத்துக்கொள்கிறேன்.நாம் அனைவரும் இரை தேடி அலைந்த ஆதி மிருகங்களின் வழித்தோன்றல்கள் மட்டும்தான் நாகரீகத்தின் சிதைவுகளில் குடும்பம்,அமைப்பியல்,விஞ்ஞானம் என பல்வேறு கூறுகளாய் சிதைந்த மனித மனம் கடைசியில் இறுகி இயந்திர மிருகங்களாகிவிட்ட இச்சூழலில் நீ சொல்லிக்கொள்ளும் அன்பென்பதின் சரியான பெயர் சுயநலமாய் மட்டும்தான் இருக்கமுடியும்.உன்னுடைய சுயநலத்தின் விழைவுகள்தான் உன்னுடைய பாரம்பரியமும், வழித்தோன்றல்களும், விதிமுறைகளும், கட்டமைவுகளும்.மற்றபடி தன்னலமில்லா தொண்டு என்பதோ தியாகம் என்பதோ பொதுநலம் என்பதோ தமிழகராதியிலிருந்து நீக்கப்படவேண்டிய வார்த்தைகள்.

எனக்கொரு அறிவு சீவி தோழியிருந்தாள் என் பழைய காதலியை தவிர்த்து என் நிர்வாணத்தை யாரும் அறிந்ததில்லை ஆனால் பேசிய இரண்டாம் மணி நேரத்திற்குள் இருவரும் தத்தம் ஆடைகளை களைந்தெறிந்து விட்டோம்.எவ்வித பாசாங்குகளும் இல்லாமல் பழகினோம்.கண்ணாடியில் தத்தமது பிம்பம் பார்த்து பேசுவது போலத்தான் உணர்ந்தோம்.அவளோடு பழகிய தொன்னூற்றெட்டு நாட்களும் நான் எவ்வித ஆடைகளும் அணிந்து கொள்ளவில்லை அவளும் அப்படியே ஆனால் ஒரு நாள் எல்லாம் சலித்துபோனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவள் எங்கேயோ போய்விட்டாள்.உண்மை உவப்பைத் தரும் அதே வேளையில் மிகுந்த சலிப்பையும் தந்துவிடும்.உண்மை சீக்கிரம் அலுத்துப்போவது அதன் இயல்பாயிருக்க முடியாது ஆனால் புனைவிலும்,அழகியலிலும்,பொய்யிலும், பாசாங்கிலும் ஊறித் திளைத்த நம் தமிழ்மனம் உண்மைத் தன்மையில் வெளிறிப்போகிறது.நிர்வாணத்தில், கனவின் கைப்பிடியை நெகிழ விட்ட வெட்டவெளியில், தனக்கான பயங்களின் பிறழ்வில் உண்மை மிகுந்த வெறுமைகளோடு சலிப்புகளை பதிவிக்கிறது. இருப்பினும் உண்மையை நேசிக்க ஆரம்பி.உண்மை மட்டுமே உண்மையானது.

தமிழ்சினிமாக்களில் தொப்புள்களாய்,பாதிபிதுங்கிய முலைகளாய் ஒதுங்கிய மாராப்புகளாய் பார்த்துப் பழகிய பெண்ணுடல் திடீரென எல்லாவற்றையும் அவிழ்த்தெறியும்போது ஒரு முகச்சுளிப்பு வந்து படர்வதை என்னால் மறுக்கமுடியவில்லை. மறைமுகமாய் நிர்வாணத்தின் மீது வெறுப்பை அல்லது ஈடுபாடின்மையை புனைந்து கொள்ள உள்மனதிற்கு ஊக்கிகளாக இருந்தது தமிழ்சினிமாவும் புனிதர்களும் மட்டும்தான்.இப்போது பார் உச்ச கட்டம் என்பது அவள் தன் பிராவின் ஊக்குகளை கழட்டும்போதே எனக்கு நேர்ந்துவிடுகிறது. இதே போன்ற அணுகுமுறைதான் அரசியலிலும் கலையிலும் வாழ்வியலிலும் பொதுவாய் தமிழ் பேசப்படும் இடங்களிலெங்கும் நிகழ்கிறதென்பதை நான் சொன்னாள் நீ என்னை மனம் பிறழ்ந்தவன் எனத் தூற்றுவாயா? …..

6 comments:

கோபிநாத் said...

\\அந்த சூழலில் தோன்றும் உணர்வுகளை அந்தந்த சூழலில் தோன்றும் வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்துதல்தானே நேர்மையானதாய் இருக்கமுடியும்.\\

\\நடிப்பதோ பாசாங்கு செய்வதோ மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் இருக்கிறது\\

எனக்கு பிடித

Ayyanar Viswanath said...

நன்றி கோபி

Anonymous said...

இரண்டாம் பத்தி எனக்குப் பிடித்திருக்கிறது.

இதிலே தமிழ் என்று துவங்கும் சொற்றொடர்களிலே, "தமிழை" நீக்கிவிட்டாலும் சரியே. (நீக்குதலே கருத்துக்குச் செய்யும் நியாயம்)

கையேடு said...

ஒவ்வொரு வரியும், உங்கள் படிம வகைக் கவிதையைப் போல், இறுதியில் விரிந்து விருட்சம்போல் நிற்கிறது.

அருண்மொழி said...

//தமிழொரு நீச மொழி என்ற பெரியாரின்//

அப்படி சொன்னது பெரியார் இல்லை. பெரியார் "தமிழ் ஒரு காட்டிமிராண்டி மொழி" என்று தன் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜகத்குருக்கள்தான் தமிழை நீச பாசை என்று சொன்னவா .

காட்டாறு said...

//நீ தந்த இந்த சுதந்திரம் உன் மீதான என் நம்பிக்கைகளை மிகவும் வலுப்படுத்துவதாயிருக்கிறது.
//
இதுவும், இந்த நம்பிக்கையும் நிரந்திரமானது இல்லையே.

Featured Post

test

 test