Saturday, August 11, 2007

சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?இன்று மாலை காற்று அதிகமில்லாதிருந்தது இறகுப்பந்து விளையாட ஏதுவாயிருந்தது.இந்த வாரத்தில் இன்றுதான் சிறப்பாக விளையாடினோம்.நடந்தாலே வியர்க்கும் துபாயில் விளையாடினால் கேட்கவா வேண்டும். விளையாடி முடித்து திரும்பும்போது பனியனை கழட்டி பிழிந்த வியர்வையை தண்ணீர் பாட்டிலில் பிடித்தேன்.
-----------×××----------------
குசும்பன் அண்ட் கோ கராமா வருவதாய் தொலைபேசினார்கள்.எல்லோரும் பனோரமா போனபோது வாசலில் பெரிதாய் பூட்டு தொங்கியது.இன்று துபாயிலிருக்கும் அத்தனை மதுவிடுதிகளுக்கும் விடுமுறை எனத் தெரியவந்தது.வீக் எண்டல லீவா என குமைந்தபடி மீனாபிளாசாவையும் கராமா ஓட்டலையும் எட்டிப்பார்த்து அங்கேயும் பூட்டுக்களை உறுதி செய்துவிட்டு கராமா பார்க் வந்தோம்.இதுவே நம்ம ஊரே இருந்தா காந்தி ஜெயந்திக்கு கூட பிளாக்கில வாங்கலாம் என்ன இருந்தாலும் நம்ம ஊர் மதிரி வருமா? எனப் புலம்பியபடி பார்க்கில் கதையளந்தோம்.பிலிப்பைன் தேசத்துப் பெண்ணொருத்தியை இருளின் துணையோடு ஆராய்ந்து கொண்டிருந்த நம் தமிழ்பையனின் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புலம்பி அவரவர் காதில் புகைவிட்டுத் திரும்பினோம்.நள்ளிரவில் வாகன நெரிசல் எத்தனை எரிச்சலான ஒன்று.
-----------×××----------------
பின்னிரவில் படிப்பதற்க்குக் கவிதை உகந்தது.அனிதாவின் தனிமைப்பெருவெளி மிக இணக்கமாக இருந்தது.நிகழ்வுகளின் மென் தொடுகை,மறைந்திருக்கும் குரூரம்,கசப்பின் வேர்,என எல்லா உணர்வுகளும் கவிதையில் அழகாய் வெளிப்படிருந்தது.அணில், குளம், மரம், பேருந்து, சன்னல், நெரிசல், தனிமை என பழகிய படிமங்களினூடாய் இவர் பார்த்திருக்கும் உலகம் அற்புதம்.மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.
-----------×××----------------
விழிக்கும்போதே படிக்காமல் சேர்ந்துவிட்டிருந்த புத்தகங்களை நினைத்துக்கொண்டேன்.தற்கால மலையாளக் கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்த்திருக்கிறார்.அத்தனை கவிதைகளிலும் யதார்த்தம் நிரம்பி வழிந்தது.அழகுணர்ச்சியோ படிமங்களோ நுட்பமோ இல்லை வெற்றுச் சொற்கள் மூலம் கோபம் கொட்டி எழுதுகிறார்கள் மலையாளக் கவிகள்.ஜெமோ சொல்வது போல் தமிழ் மலையாளத்திலிருந்தும் மலையாளம் தமிழிலிருந்தும் கற்றுக்கொள்ளக் கவிதையைப் பொறுத்தமட்டில் நிறைய இருக்கிறது.நகுலன் நாவல்களை மிக மெதுவாய் படிக்கப் பிடித்திருக்கிறது.நவீனன் டைரியை மீண்டும் படித்தபோது முன்பு படித்தது போல இல்லை.
கொற்றவையின் முதல் பத்து பக்கங்கள் எரிச்சலாக இருந்தது.நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.கானல் நதியை வாங்கிப்போன கதிர் எவன்யா இப்படி எழுதுறான்?.ஒரு மண்ணும் புரியல ஏதோ மொழிபெயர்ப்பு நாவல் போல என்று சலித்தபடி திருப்பித்தந்தான்.கதிருக்கு புனைவு பற்றி விரிவாய் ஒரு நாள் சொல்லனும்.கானல்நதியின் ஆரம்பப் பக்கங்களே அட்டகாசம்! யுவனின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.குள்ளசித்தன் சரித்திரம் என் வாழ்வோடு வெகு தொடர்புடைய நாவல்.யுவன் சந்திக்க வேண்டிய நபர்களில் ஒருவர்.
-----------×××----------------
மதியம் பொன்னுசாமியில் நடப்பன பறப்பனவைகளை வதம் பண்ணித் திரும்பிய களைப்பில் கண்ணைச் சுழற்றியது.ஓஒ வென்ற தொலைக்காட்சி அதிர்வில் பதைத்துக் கண்விழித்தபோது தோனி வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். அட நம்ம பசங்களா! என ஆச்சர்யமாய் வெகு நாட்கள் கழித்து விளையாட்டைப் பார்த்தேன்.தோனியின் தைரியம் மிகவும் பிடித்திருந்தது.டெஸ்ட் மேட்சுகளில் 90 ஐ தொட்டுவிட்டாலே ஆடு திருடிய கள்ளனைப்போல நம் வீரர்கள் விழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.தடவி தடவி 100 அடித்து பின் அடிக்க முயன்று 103 க்கு அவுட் ஆகித் திரும்புவர்.அதுபோல இல்லாமல் தொடர்ந்து மூன்றாவது சிக்ஸ்ருக்கு பந்தை அனுப்பமுயன்ற தோனியின் அணுகுமுறை சுத்த விளையாட்டு.கும்ப்ளே அடித்த செஞ்சுரி விசேச போனஸ்.
-----------×××----------------
இளவஞ்சி பின்னூட்டம் படிய்யா மோகந்தாஸ் பதிவிலே என்று கதிர் தொலைபேசினான் வெள்ளிக்கிழமை யாருடனும் சாட்டுவதில்லை.ஆஃப் லைனில் வலை மேய்ந்தபோது இளவஞ்சியின் பின்னூட்டம் படித்து சிரித்துக்கொண்டேன்.வெங்கட்ராமன் கண்டிப்பாய் அதிர்ந்துபோய் இருப்பார்.நான்கு சுவர்களுக்குள் கயமைத்தனத்தின் மொத்த உருவமாய் இருக்கும் மனித மனம் நான்கு பேர்களுக்கு மத்தியில் புனித பிம்பங்களை புனைந்துகொள்கிறது.சயந்தன் பின்னூட்டத்தின் மூலமாக தந்திருந்த தகவல் முள்ளாய் தைத்தது.டிசே அநாமதேய பின்னூட்டங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் ஆனாலும் அவரின் விளக்கமும் செறிவு.மொக்கை கிங்காய் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகச்சரியன தேர்வு.பொட்டி கடை கெட்ட ஆளுய்யா அதும் அவரோட சேர்ந்து லக்கி அண்ட் கோ அடிக்கும் கும்மி ச்சே கெட்ட பசங்கபா.உங்க பதிவில பின்னூட்டம் போட்ட தமிழச்சி நிசமாய்யா? இல்ல நீங்களே கிரியேட் பண்ணிங்களா?பெயரிலி யை வழக்கம்போல் மெதுவாய்த்தான் படிக்க வேண்டும்.லக்ஷ்மியின் விளக்கமும் பொன்ஸின் தொலைந்த எலியும் புன்முறுவலைத் தந்தது.எலி தான பொன்ஸ் போன போகட்டும் விடுங்க.எனக்கென்னமோ நந்தா மேலதான் டவுட் :)
-----------×××----------------

வார இறுதி நாளில் பியர் குடிக்காமலிருப்பது உடல் நலத்திற்க்குத் தீங்கானது என்ற சான்றோர் வாக்கை பொய்க்க விரும்பாமல் கராமா ஓட்டல் போனோம்.நலம் விசாரித்த பல்லுக்குக் கிளிப் போட்டிருந்த பிலிப்பைன் தேசத்துப்பெண்ணை பதிலுக்கு நலம் விசாரித்தேன் உன் கிளிப்பை எப்போது கழட்டப்போகிறாய் என்றதற்க்கு இன்னும் ஆறுமாதமிருக்கிறது என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.கிளிப் போட்டாலும் உன் புன்னகை வசீகரமானதுதான் என்பதற்க்குப் பதிலாய் சூடான பாப்கார்னகளை கிண்ணத்தில் நிரப்பினாள்.சில பொய்களுக்கு பலன் உடனே கிட்டி விடுகிறது.முடித்துத் திரும்புகையில் தாட்டியான ஆப்பிரிக்க தேசத்துப் பெண் வோட்கா பாட்டிலை இடுப்பில் சொருகியபடி வான்னா ட்ரை டகீலா என்றாள்.ஆள விடு ஆத்தா நாளைக்கு ஆபிசு போகனும் எனத் தமிழிலேயே சொல்லி நடையை கட்டினோம்.
-----------×××----------------

எனக்குப் பிடித்த கவிதை-அனிதா

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்தான்.
ஏன் அழறீங்க என்றவன் பின் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்
-----------×××----------------
Post a Comment

Featured Post

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்

2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விர...