Friday, July 27, 2007

கங்காவைப் பற்றி சில தகவல்கள்கங்காவிற்க்கு அப்போது வயது இருபது
கங்கா வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தான்
கங்கா விற்க்கு அதிகம் நண்பர்களில்லை
கங்கா கூச்ச சுபாவி
கங்காவிற்க்கு பெண் தோழிகள் யாருமில்லை
கங்காவிற்க்காக காத்திருந்த அத்தைப்பெண்ணுக்கு முடி நீளம்
கங்கா எல்லா சனிக்கிழமைகளிலும் தேவிகருமாரியம்மன் கோயிலுக்குப் போவான்
கங்காவிற்க்கு இரக்க குணம் அதிகம்
கங்காவிற்க்கு குழந்தைகளைன்றால் கொள்ளைப் பிரியம்
கங்காவிற்க்கு கோபம் அதிகம் வரும்
கங்கா உடம்பை நன்றாக வைத்திருப்பான் உடற்பயிற்சிகளில் நல்ல ஆர்வம்
கங்காவின் அப்பா ஒரு சவரத் தொழிலாளி விடுமுறை தினங்களில் கங்காவும் அவருக்கு உதவியாய் முடி திருத்துவான் / சவரம் செய்வான்
கங்காவிற்க்கு பிடித்த நடிகர் பிரபு பிடித்த நடிகை நதியா
பிடித்த படம் சின்னப்பூவே மெல்லப் பேசு
கங்காவிற்க்கு சண்டைப் படங்கள் அதிகம் பிடிக்கும்
சாமோ ஹியூங்க் மற்றும் ஜாக்கி ஜான் படங்களை விரும்பிப் பார்ப்பான் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படம் ஆர்மட் ஃபார் ஆக்சன்.
சின்னத் தம்பி படம் பார்க்கப்போன கங்கா அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்து மனமிரங்கி கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினான்
வெங்கடேசன் வீடு மழையில் அடித்துக்கொண்டு போனதற்க்கு மறுநாள் கங்கா தன்னிடம் இருந்த ஒரே போர்வையை அவனுக்கு கொடுத்து விட்டான்.
கங்காவிற்க்கு இரும்புக் கை மாயாவியை பிடிக்கும் நாமும் இப்படி மறைந்தபடி எல்லாம் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென சிலாகித்துக் கொள்வான்.
கங்காவிற்க்கு பாலகுமாரனின் இரவல் கவிதை மிகவும் பிடித்த புத்தகம்
கங்கா தன்னம்பிக்கை நூல்களை அதிகம் படிப்பான் எம்.எஸ் உதயமூர்த்தியின் எண்ணங்கள் அவன் அடிக்கடி படித்தது. பொன் மொழிகள்,தன்னம்பிக்கை வரிகள் இவற்றை தனது ரஃப் நோட்டில் எழுதி வைத்துக் கொள்வான்
கங்காவிற்க்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது.கிட்டி புல் நன்றாக விளையாடுவான்.
சிறுவர்களுடன் விளையடும்போது மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு கத்தியபடி நீண்ட குச்சியை வைத்து சுடுவான்
கங்காவிற்க்கு சுயமைதுனப் பழக்கம் இருந்தது
கங்காவிற்க்கு மிகவும் பிடித்த தலைவர் பிரபாகரன்.
கங்கா சில நாட்களாய் கல்லூரி போவதை நிறுத்தியிருந்தான்
நண்பர்களைப் பார்ப்பதையும் தவிர்த்தான்
உடம்பு சரியில்லை என அடிக்கடி சுருண்டு படுத்துக் கொண்டான்
1996 ஆம் வருடம் ஜனவரி 4 ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பெரிய அந்த வீட்டின் குறுகலான அறை ஒன்றில் கங்கா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
Post a Comment

Featured Post

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்

2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விர...