Tuesday, July 24, 2007

அடையாளம் தந்த நூலகங்களின் முகவரிபுத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கமெல்லாம் கடந்த ஒரு வருடங்களாகத்தான் அதற்க்கு முன்பு வரை நூலகங்களின் இடுக்குகளில்தான் எங்காவது ஒளிந்துகொண்டிருப்பேன்.ஊர் ஊராக சுற்ற நேர்ந்த வாழ்வு பெரும் நண்பர்களை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் பல நூலகங்களின் அறிமுகத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.மழையில் நனைந்த மரமல்லிப்பூக்களின் வாசம் என் சிறு வயதினை நினைவுபடுத்துவது போல் புத்தகங்களை நுகரும்போதெல்லாம் மனக் கண் முன் நூலகங்கள் வந்துவிட்டுப்போகும்.பதின்ம வயதோரும் சிறார்களும் இப்போதெல்லாம் நூலகத்திற்க்கு செல்கிறார்களா எனத் தெரியவில்லை.நகரங்களில் இருக்காதெனத்தான் தோன்றுகிறது.வளர்ந்துவிட்ட அறிவியலின் தாக்கங்கள் நூலகத்தினை மறக்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.பொழுதுபோக்கும் கணினி விளையாட்டுக்களும் அவர்தம் மூளைகளில் இருந்து உணர்வுகளை மழுங்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.எனினும் எங்காவது ஒரு கிராமத்தின் சந்தடிகளற்ற தெருவின் கடைசியில் அமைந்திருக்கும் நூலகத்தில் இடையூறுகளில்லாது இன்றும் பதின்ம வயதோறும் சிறார்களும் படித்துக் கொண்டிருக்கலாம்.

ஏழு வயதில் நான் முதலில் சென்ற நூலகம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்க்கு அருகிலிருக்கும் ரமணா நூற்றாண்டு நூலகம்.ஆசிரமத்திற்க்கு வருவோர் தங்குவதற்க்கென வீடுகள் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியினுள் நூலகம் இருக்கும்.அந்த நீளமான காம்பவுண்டு சுவரை ஓணான் குச்சியினால் கோடிழுத்தபடி நடந்து சென்றது இன்னும் நினைவிருக்கிறது.சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான இடம் நூலக சன்னலை ஒட்டி நாகலிங்க பூ மரம் நெடு நெடு வென வளர்ந்திருக்கும்.இனிப்பாய் காய்க்கும் கொய்யா மரமும் இரண்டு மாமரங்களும் பாதாம் மரங்களும் முன்புறம் நிழல் போர்த்தியபடி இருக்கும்.பதினோரு மணி வெயிலில் காக்கைகள் கரைவது மட்டும் கேட்டபடி நாகலிங்கப் பூ வின் கிறக்கமான வாசனைகளோடு படித்த பூந்தளிரும் அம்புலிமாமாவும் இன்னும் நினைவிலிருக்கிறது.திரும்பும்போது பாதாம் மரத்திலிருந்து உதிர்ந்த சிவப்பு நிறக்கொட்டைகளை கால் சட்டைப் பைகளுள் திணித்தபடி வீடு திரும்புவேன.பதின்மத்தை தொடும் வரையில் என் எல்லா விடுமுறை தினங்களும் இப்படித்தான் போயிற்று.

மேலும் என் அலைவுகளில் ஒதுங்கிய சில இடங்களின் பெயர்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
1.ரமணா நூற்றாண்டு நூலகம் - திருவண்ணாமலை
2.கீதாஞ்சலி வாடகை நூல் நிலையம் - திருவண்ணாமலை
3.மாவட்ட மைய நூலகம் - திருவண்ணாமலை
4.மாவட்ட மைய நூலகம் -கிருஷ்ணகிரி
5.கிளை நூலகம் - ஓசூர்
6.ரோமண்ட் ரோலண்ட் நூலகம் - பாண்டிச்சேரி
7.கிளை நூலகம் - மத்திகிரி
8.மாவட்ட மைய நூலகம் - திருவள்ளூர்
9.கிளை நூலகம் - பூங்கா நகர் திருவள்ளூர்
10.கன்னிமாரா நூலகம் - சென்னை
11.மைய நூலகம் - மதுரை
12.கிளை நூலகம் -ஒத்தக்கடை மதுரை

இதில் பள்ளி கல்லூரி நூலகங்களை சேர்க்கவில்லை.அங்கிருக்கும் சொற்பமான துறை தவிர்த்த நூல்களை படித்துவிட்டு நூலகரை எப்போது புதிதாய் புத்தகங்கள் வருமென நச்சரிப்பேன்.

மறக்கவே முடியாத நூலகங்களில் ரமணர் நூலகத்திற்க்கும் பாண்டிச்சேரி ரோமண்ட் ரோலண்டுக்கும் முக்கிய இடம்.ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்கு எதிர்புறம் பூங்காவும் சற்றுத்தள்ளி கடற்கரையும் நூலகத்தை சுற்றி உயரமான மரங்களுமடர்ந்த சன சந்தடி குறைந்த ஒரு நூலகம்.வழக்கமாய் எல்லாரும் படிக்குமிடத்தில் அமராது நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி இடைவெளிகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.

எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே முதலில் தேடிக் கண்டுபிடிப்பது நூலகங்களைத்தான்.
கடைசியாய் துபாய் வருவதற்க்கு முன் என்னிடம் குவிந்திருந்த நூலக அட்டைகளை என்ன செயவதென்று தெரியாமல் ஒரு பெட்டியுனுள் பத்திரப்படுத்திவிட்டு வந்துவிட்டேன்.

நீங்கள் படித்த நூலகங்களை பற்றியும் சொல்லுங்களேன்
Post a Comment

Featured Post

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்

2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விர...