Monday, July 23, 2007

தமிழ்மணமேட்டிசுகளிலிருந்து ஒரு குரல்வணக்கம் நண்பர்களே!!

நட்சத்திர வாரத்திற்க்கான அழைப்பு வந்தபோது சிறிது பரபரப்பு தொற்றிக் கொண்டதென்னவோ உண்மை.இத்தனை சீக்கிரம் எதிர்பார்த்திராததாலும் கட்டுரை அல்லது செறிவான ஒரு விதயத்தை முன் வைக்கும் மனோநிலை இன்னும் கிட்டியிடாத நிலையில் ஆராய்ச்சிகளும் வாசிப்பும் பன்முக அலசலும் தேவைப்படாத கவிதை என்கிற ஒற்றை சல்லியை பிடித்துக் கொண்டு தொங்கும் நான் ஏழு நாட்களை எப்படி ஒப்பேற்றப் போகிறேன் எனும் கவலையும் மிகுந்தது.

கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக் கொள்ளல் அல்லது எதிலேயும் எப்போதும் தனித்தன்மையை நிரூபித்தல் அல்லது தொடர்ச்சியாய் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளல் என்பதை நோக்கிய விழைதல்கள் மூலம் என்னை அப்பட்டமான பூர்ஷ்வா பயல் என யாரேனும் விமர்சித்தால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்ச்சியான இடம்பெயர்தல்களில் நான் இழந்தது என் சமூக அடையாளம் மற்றும் ஒரு நிரந்தர முகவரி.யாரேனும் திடுமென்று உன் சொந்த ஊர் எதுவெனக் கேட்டால் சிறிது யோசித்து திருவண்ணாமலை என்கிறேன்.கடைசி 12 வருடங்களில் 6 மாதத்திற்க்கு மேல் எந்த சூழலிலும் தொடர்ச்சியாய் இருந்ததாய் நினைவில்லை(குறைந்த பட்சம் இருப்பிடங்களையாவது மாற்றிக் கொள்வதுண்டு)இந்த சிக்கலான நிகழிற்க்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது.வலையெழுத வந்த பின் நிறைவு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று என்னை நிரப்பி இருக்கிறது.அடுத்த நகர்வுகளுக்கான அரிப்புகள் இல்லை.ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.மொத்தத்தில் எழுத்தென்பது ஆசுவாசமாய் இருக்கிறது.

கிடைத்திருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்துகொண்ட புதிய மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.தோன்றும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது பெருகிக்கொண்டிருக்கும் நட்பு வட்டங்களினூடாய் என் அணுகுமுறைகளின் நம்பகத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன.பறவையின் சிறகைப்போல காற்றில் முகவரியற்று வரும் கடிதங்கள் என் மொக்கை கவிதையை மூன்று வரிகளில் பாராட்டிச் செல்கிறது.ஆச்சர்யங்களும் வியப்பும் மேலிட திருவிழாவில் வழி தப்பிய குழந்தையொன்றின் காலடித் தடம் பற்றி கடந்து கொண்டிருக்கிறேன் இத் தமிழ்மணத்தையும் வலைப்பதிவையும்.

கருத்தாடல்கள்,அரசியல் நுட்புலம்,சந்தேகித்தல்,கூர்மையான விமரிசனப் பார்வை குறித்தான புரிதல்கள் சற்று புலப்பட துவங்கியிருக்கிறது.இசங்கள்,சித்தாந்தங்கள்,கொள்கைகள்,இயக்கங்கள் போன்றவைகளைப் பற்றிய விழிப்பும் பரவலான வாசிப்பின் சாரங்களை சுலபமாய் பெற்றுக்கொண்டபடியுமாய் கடந்துபோகின்றன நாட்கள்.

இந்த ஏழு நாட்களில் செறிவாய் எழுத ஆசை.கலந்துரையாடல்களுக்கான அழைப்பெனவும் இவ்வறிமுகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

வலைக்கு வந்தசேர்ந்த விதயங்களை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.மேலதிக தகவல்கள் விரும்புகிறவர்கள் இங்கே செல்லலாம்.

புகைப்பட கிராபிக்ஸ் தம்பி கதிர்
தமிழ்மணமேட்டிஸ் சொல்லாடலும் புதிய வார்ப்புருவும் பொன்ஸ் கொடுத்தது
டெஸ்ட் கயமையை சேர்த்தும் வலைச்சர பதிவுகளை தவிர்த்தும் பார்த்தால் இது என்னுடைய 50 வது இடுகை
Post a Comment

Featured Post

பசுஞ்சமவெளியும் பொன்னிற ஒளிக் கதிர்களும்

2017 எனக்கு மிக முக்கியமான வருடம். இவ்வளவு அழுத்தத்திலா இத்தனை நாள் இருந்தோம் என்பது வெளியேறிய பின்னர்தாம் தெரியவந்தது.  வானம் வரை விர...