Sunday, July 29, 2007

சந்தர்ப்பங்களைத் துய்த்தல்



செய்து முடிக்கப்பட வேண்டியதின் தரம் குறித்தான நிலைப்பாடுகளின் தீவிரத்தன்மை காரணமாக பொறுப்புகளை எப்போதும் தட்டிக் கழிக்கவே விரும்புவேன்.எதிர்பார்த்தலும்,நம்பிக்கை வைத்தலும்,காத்திருத்தலும் என்னை என் நிலையில் இயங்கவிடாதவை.தீவிரமான அன்பைக் கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.எல்லா அன்பின் பின்னாலும் குளமெனத் தேங்கி நிற்கிறது தேவைகளின் எதிர்பார்ப்புகள்.

எதன் அடிப்படையில் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பலரின் கேள்விகளாக இருக்கிறது.எந்த அடிப்படையில் இவனைத் தேர்வு செய்தார்கள் என்பதும் சிலரின் கேள்விகளாய் இருக்ககூடும்.அடிப்படைகளை நிரூபிக்கும் விதமாகவோ கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவோ செயல்பட்டிருந்தால் அமைப்பியல் ரீதியாக கட்டமைவுகளின் ஒழுங்குகளை காப்பாற்றிய நிம்மதி என்னை வந்து சேரலாம்.

ஆசுவாசமான இந்த எழுத்தை எப்படி எழுதினால்தான் என்ன?ஏதோ ஒரு வடிவம்.அவரவர் அவரவருக்குப் பிடித்தமான பெயர்களை வைத்துக் கொள்ளட்டும்.குப்பை என்றோ கவிதை என்றோ ஆபாசம் என்றோ அசிங்கம் என்றோ வலியத் திணித்தல் என்றோ அவரவர் உள்ளங்கைக்கு ஏத்தாற்போல் அள்ளிக்கொள்ளட்டும் இல்லை முற்றிலுமாய் புறக்கணிக்கட்டும்.

ஒரு வாரத்தில் சில விதயங்களை பரிசோதித்துக்கொள்ள முடிந்தது(எழுதும் மொத்தமே பரிசோதனைதான்..சிலருக்கு சோதனையாகவும் இருக்ககூடும்).எழுத்து எல்லாரையும் சென்றடையும் வடிவம் எனக்கு சலிப்பைத் தந்தாலும் அசைக்கப் பட்ட சுயங்களின் கைத் தட்டல்களில் சற்றுக் குழம்பித்தான் போனேன்.வாழ்வின் எல்லா அசைவுகளும் புகழ் அல்லது வெளிச்சத்திலிருத்தலுக்கான விழைவுகள்தானோ?

நட்சத்திர வாரத்திற்க்கு தெரிவு செய்த தமிழ்மணத்திற்க்கும்,பின்னூட்டத்தைப் புறக்கணித்த நண்பர்களுக்கும் நெருங்கிய நண்பர்களின் பாசக்கார பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.
இதெல்லாம் ஒரு எழுத்தா?நீயெல்லாம் ஒரு ஆளா?என எவரும் இந்த வாரத்தில் திட்டவில்லை.வலையில் புதிதான நண்பர்களின் அறிமுகமும் இந்த வாரத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மேலதிகமாய் நம்பகத்தன்மைக்கு வெகு அருகில் வாசகர்களை சில இடுகைகளின் மூலம் கொண்டு சென்றது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது.

ஒரு வாரத்தில் வாசிக்காமல் விட்ட இடுகைகள் குவிந்திருக்கிறது.பல மடல்களுக்கு இன்னும் பதில் போடவில்லை.எல்லாம் முடிந்து கிளம்புகையில் நீ ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதி என சமீபத்தில் விழித்த சிவப்புக் குரல்காரன் பின் முதுகைத் தட்டுகிறான்.

ஏன் இவ்வளவு நாட்களாய் வெறும் புரியாத கவிதை மட்டும் எழுதிக்கொண்டிருந்தாய்?வேறு வடிவங்களை முயற்சித்திருக்கலாமே என எல்லாத் தரப்பிலிருந்தும் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு…

பிறிதொருவர் கேட்காதவரை தரப்படாத அன்பிற்க்கு வீர்யம் இல்லையென்றாகிவிடுமா என்ன?

Saturday, July 28, 2007

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா



நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது.1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள்,நினைவுப்பாதை,நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள்,இவர்கள்,வாக்குமூலம்,அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பு அல்லது ஒரே ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்க கூடும்.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள்.எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார்.எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள்.நகுலன் இறந்த அன்று எல்லாரும் சுசீலா வை நினைத்துக்கொண்டோம்.இனி சுசீலாவின் கதியென்ன என்பதுதான் என் நண்பர்களின் வருத்தமாக இருந்தது.தான் படைத்த ஒன்று தன்னை முன்னிருத்துவது எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கக்கூடும்.நினைவுப்பாதையில் சிவன் யார் சுசீலா எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார்.மேலும் அவள திருமணமாகிப்போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார்.இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் அந்த மனத்தை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும்.ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார் நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.இந்த அளவுகோல்களைப் புரிந்துகொள்ளமுடியாத ஞானக்கூத்தன் போன்றோர் அவருக்கான இரங்கல் கட்டுரையிலும் கூட இவர் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பது போன்ற கூற்றையே ஆனந்தமாக முன் வைக்கிறார்கள்.

சமூகத்திலிருந்து விலகியிருப்பது தப்பித்தலுக்கான ஒரு முயற்சியின் நீட்டிப்பே.தன்னை தன் எழுத்துக்களை அடையாளப்படுத்திக்கொள்ள/பெரிதாய் நிரூபிக்க படைப்பாளிகள் துணியும்போது அவர்களின் தனித்தன்மை அடிப்பட்டுப்போய்விடலாம்.சமூகம் என்பதே சமரசங்களின் கூடாரம் அல்லது பெரும்பான்மைகளின் ஆக்கிரமிப்புதானே.ஆனாலும் கைத்தட்டல்கள் மீதான வசீகரங்கள் எல்லாக் கலைஞனுக்கும் பொதுதான்.தன் எழுத்துக்களை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும் கடிதத்திற்க்கான எதிர்பார்ப்புகளும் தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது.

மாற்றுக் கருத்துக்கள் மாற்று சிந்தனைகள் வழக்கொழித்தல் போன்றைவைகளின் மீதான வெறுப்பும் பயமும் பெரும்பான்மைகளுக்கு சற்று அதிகம்தான்.உன் படைப்பு விலைபோகவில்லை! உன் எழுத்து எவனுக்கும் புரிவதில்லை நீ! என்ன கிறுக்கா? என்பது போன்ற கேள்விகளின் மூலமாய் தங்களின் இருப்பை உறுதிசெய்துகொண்ட எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார்.

சுசீலா நிஜமா? என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது.மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை.வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.

நவீனன் டைரி யிலிருந்து சில துளிகள்.

3.12.73
வரிகள்
பல கட்டங்களில் நான் அவளை சந்தித்திருக்கிறேன் பல அனுபவ உச்ச கட்டங்களில்-நான் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்த சமயங்களில் அவ்ள் பேசவில்லை-ஏன் அவள் என்னிடம் பேசினதே இல்லை.எதிர்பார்த்த நேரங்களில் அவள் வந்ததுமில்லை.இனி வரவும் மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் நான் தனியாகப் போகும்பொழுது,இருக்கும்பொழுது,இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெருவிவுக்குத் தாண்டும்போது யாரோ எனக்கு முன் சென்று மறைவது போன்ற ஒரு தோற்றம்.
நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.பல்லாக்கித் தூக்கிகளை,வாடகைக்குப் பிணம் சுமப்பவர்களை புதுப்பணம் படைத்தவர்களை சாதாரன மனிதனைக் கண்டால் புருவம் உயர்த்திப் பேசுபவர்களை இலக்கிய ரெளடிகளை இயற்கையாகவே கோபத்தினால் வசைபாடும் விற்பன்னர்களை பணக்கார வீட்டுப் பெண்களை எனக்கு நான்

சிலுவையாக இருக்கும் என்னை
எங்கிருந்தோ
வந்தவள்
யாரையோ மணந்தவள்
இன்று இருக்கிறாளோ
இல்லையோ
என்று கூடத் தெரியாத

ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட
நீதான் எனக்கு
வேண்டியிருக்கிறது
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத் தெரியாது
இருந்தாலும் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் என்ன நேர்ந்தாலும் எப்படிப்போனாலும் யார் வந்தாலும் யார் போனாலும் உன்னைத் தூண்டில் இட்டுப் பிடிக்க முடியுமானால் கடிவாள்ம் கட்டி செலுத்த முடியுமானால்

பல்லக்குத் தூக்கிகளால் பிரயோஜன
மில்லை
கிருஷ்ணன் என்று

புதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது? என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம். தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.

சன்னாசியின் நகுலன் நாவல்கள் இடுகை இப்புத்தகத்தை அணுக உதவியாக இருக்கும்

நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

கொடுத்த புத்தகப் பட்டியல்களை இந்தியாவிலிருந்து தவறாமல் வாங்கி வந்த சார்ஜா சிங்கம் கோபிக்கு நன்றியும் அன்பும்.

வடிவங்களற்ற மேகம்

Photo Sharing and Video Hosting at Photobucket

எதிர் நகர்த்துதல்களை முன் கூட்டியே தீர்மானித்தபடி
இயங்கும் உன் அணுகுமுறை வெகு நேர்த்தியானது
இந்த உணர்வுகளுக்கு இந்த வார்த்தைகளென
நீ திட்டமிட்டு வெளித்துப்பும் சொற்கள்
தனக்கான பணியை செவ்வனே முடிக்கின்றன
சில கணங்களின் திடுக்கிடலோ
சில நம்பிக்கைகளின் தகர்வுகளோ
ஒரு இதயத்தின் நொறுங்குதலோ
கேட்காத தொலைவிலிருந்தபடி
உன் இயக்கம் வெகு சீராய் இருக்கிறது.

நிகழின் பிரதியென பிரகடணப்படுத்தியபடி
கணங்களின் உணர்வுகளை
வெளித்துப்பும் இன்னொருவனை
சொற்கள் அகல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.
நாகரீகத்தின் பூச்சுகளிலோ
நட்பின் முகமூடிக்குள்ளோ
ஒளிந்திருக்கிறது வன்மத்தின் கசடுகள்.
கோபத்தின் விதையொன்றினை
எதிராளியின் விளை நிலத்தில் ஊன்ற செய்யும் கணங்களையாவது
இனி முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.

எவ்விதத் தீர்மானங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்

பொறாமையின் கங்குகளணைக்க
அன்பின் நீர்த்துளி சுமந்தலைகிறது
வடிவங்கள் எதுவுமற்ற வெண்ணிற மேகம்.

Friday, July 27, 2007

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!



தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன்.சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன்.ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது.தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே.அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள்.குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.

அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன்.உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என் கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.

இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன்.அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம்.இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.

ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன்.எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா)

புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை.ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!
நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.

டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.

மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.

நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு.மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள்,அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..

எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

கங்காவைப் பற்றி சில தகவல்கள்



கங்காவிற்க்கு அப்போது வயது இருபது
கங்கா வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தான்
கங்கா விற்க்கு அதிகம் நண்பர்களில்லை
கங்கா கூச்ச சுபாவி
கங்காவிற்க்கு பெண் தோழிகள் யாருமில்லை
கங்காவிற்க்காக காத்திருந்த அத்தைப்பெண்ணுக்கு முடி நீளம்
கங்கா எல்லா சனிக்கிழமைகளிலும் தேவிகருமாரியம்மன் கோயிலுக்குப் போவான்
கங்காவிற்க்கு இரக்க குணம் அதிகம்
கங்காவிற்க்கு குழந்தைகளைன்றால் கொள்ளைப் பிரியம்
கங்காவிற்க்கு கோபம் அதிகம் வரும்
கங்கா உடம்பை நன்றாக வைத்திருப்பான் உடற்பயிற்சிகளில் நல்ல ஆர்வம்
கங்காவின் அப்பா ஒரு சவரத் தொழிலாளி விடுமுறை தினங்களில் கங்காவும் அவருக்கு உதவியாய் முடி திருத்துவான் / சவரம் செய்வான்
கங்காவிற்க்கு பிடித்த நடிகர் பிரபு பிடித்த நடிகை நதியா
பிடித்த படம் சின்னப்பூவே மெல்லப் பேசு
கங்காவிற்க்கு சண்டைப் படங்கள் அதிகம் பிடிக்கும்
சாமோ ஹியூங்க் மற்றும் ஜாக்கி ஜான் படங்களை விரும்பிப் பார்ப்பான் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படம் ஆர்மட் ஃபார் ஆக்சன்.
சின்னத் தம்பி படம் பார்க்கப்போன கங்கா அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்து மனமிரங்கி கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினான்
வெங்கடேசன் வீடு மழையில் அடித்துக்கொண்டு போனதற்க்கு மறுநாள் கங்கா தன்னிடம் இருந்த ஒரே போர்வையை அவனுக்கு கொடுத்து விட்டான்.
கங்காவிற்க்கு இரும்புக் கை மாயாவியை பிடிக்கும் நாமும் இப்படி மறைந்தபடி எல்லாம் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென சிலாகித்துக் கொள்வான்.
கங்காவிற்க்கு பாலகுமாரனின் இரவல் கவிதை மிகவும் பிடித்த புத்தகம்
கங்கா தன்னம்பிக்கை நூல்களை அதிகம் படிப்பான் எம்.எஸ் உதயமூர்த்தியின் எண்ணங்கள் அவன் அடிக்கடி படித்தது. பொன் மொழிகள்,தன்னம்பிக்கை வரிகள் இவற்றை தனது ரஃப் நோட்டில் எழுதி வைத்துக் கொள்வான்
கங்காவிற்க்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது.கிட்டி புல் நன்றாக விளையாடுவான்.
சிறுவர்களுடன் விளையடும்போது மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு கத்தியபடி நீண்ட குச்சியை வைத்து சுடுவான்
கங்காவிற்க்கு சுயமைதுனப் பழக்கம் இருந்தது
கங்காவிற்க்கு மிகவும் பிடித்த தலைவர் பிரபாகரன்.
கங்கா சில நாட்களாய் கல்லூரி போவதை நிறுத்தியிருந்தான்
நண்பர்களைப் பார்ப்பதையும் தவிர்த்தான்
உடம்பு சரியில்லை என அடிக்கடி சுருண்டு படுத்துக் கொண்டான்
1996 ஆம் வருடம் ஜனவரி 4 ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பெரிய அந்த வீட்டின் குறுகலான அறை ஒன்றில் கங்கா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Thursday, July 26, 2007

எனக்குப் பிடித்த இயக்குனர்கள் மற்றும் திரைப்படங்கள்



எந்த ஒரு திரைப்படத்தை பார்க்க நேரிட்டாலும் முதலில் தெரிந்து கொள்ள விழைவது அதன் இயக்குனர் யார் என்பதுதான்.நடிகர் நடிகைகளை காட்டிலும் என்னை அதிகம் கவர்வது ஒரு திரைப்படத்தின் இயக்குனர்தான்.எனக்குப் பிடித்த சில இயக்குனர்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்கள் மேலும் நான் தேடிக்கொண்டிருக்கும் அவர்களின் திரைப்படங்களை இங்கே பதிவிக்கிறேன்.அதிகம் மெனக்கெடாததால் சிலரை விட்டிருக்கலாம்.

1 அகிராகுரசோவா -ஜப்பான்

Seven samurai (1954)
The Hidden fortress (1958)
The lower depths (1957)
இவரின் மற்ற திரைப்படங்களான ran/ikiru/rashoman/dreams போன்றவைகள் தேடுதல் வேட்டையிலிருக்கின்றன.

2 ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - பிரிட்டிஷ் / ஹாலிவுட்

Black mail (1929)
Murder (1930)
The 39 Steps (1935)
The shadow of a doubt (1943)
The Rope (1948)
I Confess (1953)
Psycho (1960)
Birds (1963)
Marnie (1964)
Frenzy (1972)

தேடிக் கொண்டிருக்கும் படங்கள் rear window / rebacca

3 இங்க்மெர் பெர்க்மென் - ஸ்வீடிஷ்

wild strewberries (1957)
The silence (1963)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Fanny och Alexander /The virgin spring /Cries and Whishpers

4 விட்டோரியா டெசிகா - இத்தாலி

The bicycle theif (1948)
Umberdo D (1952)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The children are watching / miracle in milan
Shoeshine

5 கீஸ்லோவெஸ்கி-போலந்து

Three colors Blue / White /Red (1993 &1994)
A short film about Love (1989)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The decalogue / Short film about killing

6 அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி - ரஷ்யா

solaris (1972)
The Mirror (1975)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் My name is Ivan / Nostalghia

7 ஸ்டேன்லி குப்ரிக் - ஹாலிவுட்

Spartacus (1960)
2001:A Space Odyseey (1968)
The Shining(1980)
Full Metal Jacket (1987)
Eyes wide Shut(1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் A Clockwork orange / Barry lyndon

8 கோடார்ட் - பிரெஞ்ச்

Band of outsiders
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் two three things i know abot her / pierrot le fou

9 பெட்ரிகோ ஃபெலினி - இத்தாலி

Nights of cabiria (1957)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Amarcord (டிசே மனது வைப்பாராக)
10 கர்-வாய்-வொங் - சீனா
chunking Express (1994)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
Inthe mood for love / Happy togather

11 ரோமன் போலன்ஸ்கி - போலந்து

The pianist (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் china town/rosemary's baby

12 ஸ்பீல்பெர்க் - ஹாலிவுட்

Jaws (1975)
Indiana jones (1989)
Jurassic park (1993)
Schindleers List (1998)
Artificial Inteligence(2001)
Catch me If you can(2002)
The terminal(2004)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Munich

13 கிளிண்ட் ஈஸ்ட்வுட் -ஹாலிவுட்

A Fist fulof dollars (1964)
The good,the bad and the ugly (1966)
Unforgiven (1992)
Mystic River(2003)
Million Dollar Baby(2004)
Flags of our Father(2006)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் Bird / Letters from iwo jimbo

14 ப்யெர் பாலோ பாசோலினி - இத்தாலி

The Decameran(1971)
Edipo re (1967)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள்
The Gosepel According to St.Mathew
The Witches

15 ஷாங்க் யுமூ - சீனா

Red sorghum (1987)
The Road Home (1999)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் To live / Not One less

16 மஜித் மஜித் - ஈரான்

childern of Heaven
color of paradise
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் The willow Tree / Rain / Father

17 வால்டர் செலஸ் - பிரேசில்

The Motorcycle Diaries (2004)
Dark Water (2005)
Behind the Sun (2001)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் central station / Life somewhre else

18 பெட்ரோ அல்மதோவர்- ஸ்பானிஷ்

volver (2006)
Talk to Her (2002)
தேடிக்கொண்டிருக்கும் படங்கள் All about my mother / Live flesh

Life is Beautiful படம் எடுத்த Roberto Remigio Benigni எமிலி படம் எடுத்த Jean-Pierre Jeunet ஆலிவர் ஸ்டோன் ,கெவின் காஸ்ட்னர் போன்ற இயக்குநர்களும் பிடித்தவர்கள்தாம்.
முக்கியமாய் யாரேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அப்படியே உங்களுக்குப் பிடித்த இயக்குனர்களையும் தெரிவியுங்களேன்.

Wednesday, July 25, 2007

விழிகளில் மழையைத் தேக்கி வைத்திருப்பவளின் நினைவுக்குறிப்புகள்



Memories of a Geisha (2005)

மிதந்து கொண்டிருக்கும் இவ்வுலகின் வெளியை நடனப்பெண் தனது பாவனைகளால் நிரப்புகிறாள். உங்களை மகிழ்விக்க இசைக்கருவிகள் மீட்டுகிறாள்.தனது நடனத்தின் மூலம் உங்களின் பொழுதுகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள்.கருநிழல் படிந்த அவளின் பின்புலம் யாரும் அறியாதது மேலும் அது மிகவும் ரகசியமானதும் கூட.


கேளிக்கைக்காக பயன்படுத்தப்படும் பெண்களின் வாழ்வு சந்திக்கநேரிடும் துயரங்களை.உடலாக மட்டுமே பார்க்கப்படும் பெண்ணின் உணர்வுகளை.சட்டென மாறிப்பொகும் அழகின் நிரந்தரமில்லாத தன்மையை பதிவு செய்திருக்கும் இப்படம் ஜப்பானின் கலாச்சார பிரதிகள் என்றைழக்கப்படும் நடனப்பெண்களின் வாழ்வு பற்றிய சிறந்த பதிவு.1930 களின் இறுதிவாக்கில் சம்பவங்கள் நடைபெறுகின்றன.ஆர்தர் கோல்டன் நாவலின் திரைவடிவத்தை இயக்கி இருப்பது ராப் மார்ஷல் இவர் சிகாகோ படத்தை இயக்கியவர்.ஸ்பீல்பெர்க் தயாரித்த இப்படம் சிறந்த ஓளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு,மற்றும் சிறந்த கலை நுட்பத்திற்க்கான மூன்று அகாடமி விருதுகளை குவித்தது.சயூரியாக நடித்திருப்பது zhank ziyi இவர் The road home திரைப்படத்தில் நடித்தவர்.இத்திரைப்படம் 2005 ல் வெளிவந்து.


ஒரு கடற்கரையோர கிராமத்தின் சிறுகுடிலிலிருந்து இரண்டு சிறுமிகள் மழை வலுத்த இரவொன்றில் பலவந்தமாய் பெயர்த்தெடுக்கப்பட்டு ஜப்பானின் நடனப்பெண்கள் வசிக்கும் வீடுகளுக்கு அடிமைகளாய் விற்க்கப்படுகின்றனர்.கண்களில் நீர் மிகுந்த ஒன்பது வயதான சியோ தனது அக்கா சாட்சு வை பிரிய நேரிடுகிறது.சியோ வின் வீட்டில் அவள் வயதையொத்த பம்ப்கின் என்ற மற்றொரு சிறுமியும் ஏற்கனவே விற்கப்பட்டிருக்கிறாள்.வேலை ஓய்ந்த நேரம் போக இருவரும் நடனப்பெண்களை உருவாக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அங்கே நடனமும் இசையையும் பயிற்றுவிக்கப்படுகிறது.சியோ விற்க்கு நடனப்பெண்ணாகும் ஆசையை விட அந்த இடத்திலிருந்து தப்பித்து தனது அக்காவுடன் எங்காவது சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஹாட்சுமோமா எனும் தலைமை நடனப்பெண்ணுக்கு சியோ வை பிடிக்காமல் போகிறது மேலும் அவள் தன் காதலனுடன் தனித்திருக்கும்போது சியோ பார்த்துவிடுகிறாள். விதிமுறைகளின் படி நடனமாதுக்கள் யாருடனும் உறவு கொள்ளக்கூடாது.சியோவின் மீது வன்மமும் கோபமும் அவளுக்கு அதிகரிப்பதின் நீட்சியாய். அவ்வில்லத் தலைவி சியோ வை நிரந்தர அடிமைப்பெண்ணாக இருக்கும்படி பணித்து விடுகிறாள்.


ஓர் உறைபனி மாலையில் பம்ப்கின் தவறவிட்ட இசைக்கருவியை கொடுக்க கேளிக்கை விடுதிக்கு செல்கிறாள் எதிர்பாராவிதமாய் அக்கணவானை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறாள்.அவளின் அழகில் கவரப்படும் அக்கணவான் மெம்ஹா என்ற மற்றொரு நடனப் பெண்ணை அனுப்பி சியோ வை ஒரு நடனப்பெண்ணாய் தயார்படுத்த பணிக்கிறார்.மெம்ஹா சியோ வை அவளின் அடிமை உலகிலிருந்து மீட்டெடுக்கிறாள்.ஓற்றைப் பார்வையில் ஓர் ஆணை சாய்க்கும் வித்தை கற்றுத்தருகிறாள் நடனம்,இசை,நேர்த்தி,பாவம் என எல்லாம் தேர்ந்த நடனப்பெண்ணாக மாறுகிறாள்.இப்போது சியோ வின் பெயர் சயூரி.

சயூரி புகழடைகிறாள்.எல்லா பணக்கார கிழவர்களும் சயூரி யின் மேல் காதல் கொள்கின்றனர்.இவள் அடிமையாய் இருந்த வீட்டின் தலைமை நடனப்பெண்ணான ஹாட்சுமோமா வின் அறை சயூரியின் வசமாகிறது.சரியான விலைக்கு சயூரி யை விற்க ஆள்தேடிக்கொண்டிருப்பாள் மெம்ஹா.இந்த நிலையில் சயூரியின் காதலரான அக்கணவான் தன் நண்பரை மகிழ்விக்க சயூரியைப் பணிக்கிறார்.பெண்கள் மேல் ஆர்வமில்லாத நெபு சோன் சயூரியின்பால் ஈர்க்கப்படுகிறான்.சயூரியின் காதல் சொல்லமுடியாமலே போய்விடுகிறது.திடீரென வரும் போர் எல்லாக் கதவுகளையும் அடைக்கிறது.அத்தனை கேளிக்கைகளும் வண்ணங்களும் நிறமிழக்கத் தொடங்குகின்றன.உயிர் பிரதமானமாய் திசைகளற்று இடம்பெயர்கின்றனர் மக்கள். சயூரி நெபு சோனின் பாதுகாப்பில் ஒரு மலைக்கிராமத்திற்க்கு கொண்டு செல்லப்படுகிறாள். சாதாரண தொழிலாளியாய் சயூரி விழிப்பதும் வேலை செய்வதுமாய் இரண்டு வருடங்கள் கழிகின்றன.ஒருநாள் நெபு சோன் அவளை சந்திக்க வருகிறான். தான் புதிதாக ஆரம்பிக்க இருக்க்கும் வியாபாரம் பற்றியும் அதன் கூட்டாளிகளை மகிழ்விக்க மீண்டும் சயூரியை நடனப்பெண்ணாக மாறும்படிம் கோருகிறான். பம்கின்னின் வனமத்தில் விரும்பத்தகாத சூழலில் அக்கணவான் சயூரியை பார்க்க நேரிடுகிறது.தன் நம்பிக்கைகளை மொத்தமாய் இழந்த சயூரி ஒரு வெளியில் தான் பத்திரமாய் வைத்திருக்கும் அக்கணவானின் கைக்குட்டையை காற்றில் எறிகிறாள்.மீண்டும் மெம்ஹா வுடன் நடனப்பெண்ணாக வாழ்வை தொடருகிறாள்.ஒருநாள் மெம்ஹா பணக்காரர் ஒருத்தரை சந்திக்க சயூரியை அனுப்புகிறாள். அங்கே இவளின் காதலை மொத்தமாய் சுமந்திருக்கும் அக்கணவான் இவளின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.அற்புதமான சூழலில் இருவரும் இணைகின்றனர்.

இதுவரை யராலும் சொல்லப்படாத கதை என்னுடையது என்றபடி சன்னமான பின்குரலோடு துவங்கும் இத்திரைப்படம் கீஷாக்கள் என்றழைக்கப்படும் நடன பெண்களின் வலிகளை பதிவிக்கிறது.உலகம் முழுக்க மதம்,கலாச்சாரம்,பண்பு,குடும்பம்,கட்டமைப்பு என்ற வெவ்வேறு பெயர்களில் பெண்ணின் உணர்வுகளை நசுக்கி சமூகம் தன் போலிக்கட்டமைப்புகளை பெருமையாய் வடிவமைத்துக்கொண்டுள்ளது. மேல்தட்டு மக்களை கேளிக்கைகளில் திளைக்க செய்ய தன் நேர்த்தியான, நளினமான பணிவிடைகள் மூலமாய் அவனை பெருமைப்படுத்த அழகான அடிமைகளான இந்த நடனப் பெண்களை கலாச்சார பிரதிநிதிகள் என பெருமையோடு அழைத்துக் கொள்ளும் ஜப்பானிய கலாச்சாரம் திரைமறைவில் இப்பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் அவலத்தையும் இத்திரைப்படம் பதிவு செய்ய தவறவில்லை.

உடல் என்ற ஒற்றை பரிமாணத்தில் இச்சமூகத்தால் உற்றுநோக்கப்படும் பெண்ணின் துயரங்களை,தனக்கான ஒரு சிறுஅசைவைக்கூட மறுக்கும் அவள் சார்ந்த சமூக கட்டுகளை, மேலும் தான் நசுக்கப்படுகிறோம் என்பதைக்கூட அறிந்து கொள்ளமுடியாத அப்பெண்களின் விளிம்புநிலை வாழ்வை,சகப் பெண்களின் போட்டிகளை சமாளிக்க கையாலும் தந்திரங்களை,அழகு மெல்ல நிறமிழக்கும்போது அல்லது போட்டி வலுக்கும்போது மீண்டும் சமூக விளிம்பிற்க்கு துரத்தப்படும் அவலத்தை இப்படம் பதிவு செய்கிறது.

ஹாலிவுட்டில் பெரும்புகழ் குவித்த இத்திரைப்படம் ஜப்பானியர்களின் விமர்சனத்திற்கும் உள்ளானது.கீஷாவின் வடிவம் முழுமையடையவில்லை என அவர்கள் குறைபட்டு கொண்டார்கள்.

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 2



அடுத்த நாள் சனிக்கிழமை காலை 4.30 எழுந்து குளித்து 6 மணிக்கு டைனமிக் தியானம் தொடங்கப்பட்டது.இருப்பதிலேயே மிகவும் கடினமான மிகவும் சக்தி வாய்ந்த தியானமாக டைனமிக் கருதப்படுகிறது 5 இடைவெளிகளில் மாறிக்கொண்டே இருக்கும் இசை, முதல் 10 நிமிடங்கள் சுவாசத்தை மிகவும் வேகமாக உள்ளிழுத்து விடவேண்டும்.ப்ரீத் ஃபாஸ்ட்..ப்ரீத் ஃபாஸ்ட் என்கிற ஓஷோ வின் உற்சாக குரலும் துள்ள வைக்கும் இசையும் முழுமையான சுவாசம் நடக்க ஒத்துழைக்கும்.அடுத்த 10 நிமிடங்கள் ஜிப்ரிஷ் பைத்திய நிலைக்குப் போய் உள்ளடைப்புகளை வார்த்தைகளாய் வெளித்துப்பல்.அடுத்த 10 நிமிடங்கள் ஜம்ப் அண்ட் ஊ எம்பிக் குதித்து அடிவயிற்றிலிருந்து ஊ என குரலெழுப்ப வேண்டும்(மிகவும் கடினமானது இந்த முறைதான்) நான்காவது ஸ்டாப் எனும் ஓசைக்குப் பின் அந்தந்த நிலைகளிலே உறைந்து போக வேண்டும்.சகலமும் அடங்கி சொந்த வீட்டில் புதைந்து கொள்ளும் மனம்.இது 15 நிமிடங்கள்.ஐந்தாவது நிலை கொண்டாடுதல் மாறும் இசைக்கேற்ப மெல்ல உடல் தளர்த்தி நடனம் இதுவும் 15 நிமிடங்கள். இறுதியில் உடலை தரையில் கிடத்தி விடுதல்.தியானத்திற்க்குப் பின் காற்று போன பலூன் போல ஆகிவிடும் உடல்.ஒரு புள்ளியில் உறைந்து போகும் மனம்.

காலை உணவு இடைவேளைக்குப்பிறகு நாத பிரம்மா தியானம்.திபெத்திய முறையான இத்தியானம் காந்த சக்தியை தூண்டவல்லது.பின்னனியில் மணி சப்தம் ஒலிக்க உடம்பை ஒரு வெண்கல மணியாய் கருதிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து சப்தம் எழுப்ப வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒலி எழுப்பும்போது சுவாசத்தை உள்ளிழுக்க கூடாது.உடல் முழுக்க ஒரு அதிர்வு ஏற்படும் உடலின் எல்லா சக்கரங்களும் இயங்க ஆரம்பித்து உடலின் அதீத காந்த சக்தியை உணரச் செய்யும் தியானமிது.சக துணையுடன் அதாவது மனைவியுடன் இத்தியானத்தை செய்வது மிகுந்த பலனளிக்கும்.அடுத்து ஓஷோவின் ஒலிநாடா ஏதாவது ஒரு தலைப்பில் அவர் பேசிய பிரசங்கத்தை கேட்கலாம்.அதுமுடிந்த பின் நட்ராஜ் தியானம்.வழக்கம்போல் உடலதிர ஆட்டம் இறுதியில் தியானம்.ஓஷோவின் தியானமுறைகளைப் பொறுத்த வரை நாம் எதையும் மெனக்கெட்டு செய்யவேண்டியதில்லை அதுவே நிகழும் உடம்பை,மனதை தியானத்திற்க்கு தயார் படுத்திக்கொள்ளுதலே நம்முடைய வேலை.அதாவது காற்று வர சன்னலைத் திறப்பது போல்.

ஓஷோவின் தியானத்தில் நடனத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன் இப்படி தியான முறைகளை ஓஷோ வடிவமைத்துள்ளார் நடைமுறை வாழ்விற்கேற்ப உடல் மனம் எல்லாம் இயங்க செய்யும் அதி அற்புத தியான முறைகள்.வாழ்வு,மரணம்,காதல்,காமம்,இன்பம்,துன்பம்,தனித்தன்மை,போராட்டம்,தியானம் என்பது குறித்த சரியான புரிதல்கள் இவரிடம் மட்டும்தான் உள்ளது.ஆனால் கவனம் மேலோட்டமான வாசிப்பும் அரைகுறை தியானமும் உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம்.ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் சில கிறுக்குகள் கூட அவரின் சன்னியாசிகள் எனக்கேள்விப்பட்டபோது சிரிப்புதான் வந்தது.
0----------------0-----------------
முதல் முகாம் முடித்து விட்டு வந்து நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.தியானத்தன்மையின் நீட்டிப்பை எப்போதும் விரும்பியது மனம்.மூளையில் யதார்தத்தின் பிரச்சினைகள் படிய ஆரம்பித்தது, இழந்ததை இடைவிடாது யோசித்தபடி இருக்கும் மனத்தை நிகழில் ஒட்டவைக்கப் போராட வேண்டியிருந்தது.மனம் அலைவுறுவது தெரியாத வரை எந்த பிரச்சினையுமில்லை.அது நிகழின் சுவையை தெரிந்து கொண்டுவிட்டால் அலைவுக்கும் நிசப்சத்திற்க்குமுள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டுவிட்டால் சிக்கல்தான்.அடுத்த இரண்டு மாதங்களிலேயே அடுத்த தியான முகாமிற்க்கு சென்றேன்.அந்த முகாமில் சன்னியாசத்திற்க்கான உறுதியுமெடுத்துக்கொண்டேன்.சன்னியாசம் வாங்கிய அனுபவத்தை தனிப்பதிவாய் எழுத வேண்டும்.
ஒவ்வொரு தியான முகாம் முடிந்து திரும்பும்போதும் தொண்டையிலிருந்து மூன்று நாளைக்காவது குரல் சுத்தமாய் வராது.
0--------------0-----------------
ஹாய்டா!
ஹே வீணா!
நாளைக்கு எனக்கு ஆஃப் டே வர்ரியா மேட்னி போலாம்..சரியா 1.30 க்கு ஆபிஸ் வந்தின்னா ரெட்ட கால் போட்டு உன் பைக்ல உட்காருவேன் 5 நிமிசம் லேட்டானாலும் ஒரு சைட்தான் ஓ கே வா?
வீணா! நாளைக்கு செந்தில் வீட்ல தியானம் பன்றோம் அவங்க வொய்ஃப் லாம் இருப்பாங்க நீயும் வாயேன்
என்னாஆஆஆஅது தியானமா??
ம்..ஓஷோ ..நாதபிரம்மா பண்ணப்போறோம்..
ஏய் ச்ச்சு அதெல்லாம் கேன்சல் பண்ணு ..ஒழுங்கா வா
இல்ல வீணா! நீ வர்ரதா இருந்தா செந்தில் வீட்டுக்கு வா! நான் கிளம்பறேன்.
0----------------0----------------------
மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் குச்வாடா எனும் குக்கிராமத்திற்க்கு நண்பர்களுடன் சென்றேன்.அருகிலிருக்கும் மிக அழகான ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கினோம்.தினம் அவரது வீட்டில் நாத பிரம்மா தியானம் செய்தோம்.மறக்கவே முடியாத அற்புத அனுபவங்களாக இருந்தது அந்த நாட்கள்.அத்தனை அனுபவங்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதவும் உத்தேசம்.மேலும் இராஜ யோகம்,வேதாத்திரி மகரிஷி,ப்ராணிக் ஹீலிங்க் மேலதிகமாய் சென்னையடுத்த திருமுடிவாக்கத்தில் தம்ம சேது தியான மையத்தில் 10 நாட்கள் தங்கி விபாஸனா தியானம் மற்றும் தம்மம் பயின்றதென என் அலைவுகளைனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையுமிருக்கிறது.எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

கோயம்பத்தூரில் ஞான் ரிக்தா என்பவர் தியான முகாம்கள் நடத்தி வருகிறார்.வெகு சிறப்பாய் இருக்கும்.இந்த தியான முகாம்களில் கலந்துகொள்ள நமது பதிவர்கள் ஓசை செல்லா அல்லது ஆனந்த் நிரூப்பை தொடர்பு கொள்ளவும்.

Tuesday, July 24, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 1



டேய்! ஓஷோ ன்னு ஒருத்தர் புல் தானாகவே வளர்கிறது ன்ன்னு ஒரு புக் எழுதியிருக்கார் சிலது புரியல சிலது நல்லாருக்கு படிச்சி பாக்குறியா?

தினத்தந்தில அவர் செக்ஸ் சாமியார்னு போட்டிருந்தாங்களே!அடுத்த வாரம் பப்ளிக் எக்ஸாம் புல் வளருது பூ உதிர்துன்னு எதும் சொல்லிட்டிருக்காத ராஜேஷ் வா! படிக்கிற வேலய பாப்போம்..
0----------0----------------
மச்சான்! காமத்திலிருந்து கடவுளுக்குன்னு ஒரு புக் ஓஷோ சாமியார் எழுதியிருக்கார் என்னன்னவோ சொல்றார்டா செக்ஸ் தப்பில்லையாண்டா

மாமா! கண்ட புக்ஸ் லாம் படிச்சி கெட்டுப்போகாத பாலகுமாரன் படி.. சரி அத வுடு அகிலா இந்த பக்கம் வந்தாளா மோக முள் இன்னிக்கு எடுத்துட்டு வரேன்னா ஆளயே காணோம்…
0------------0---------------
அண்ணா! என்ன இது வீடு முழுக்க ஓஷோ போட்டோ? ஷெல்ப் ல அவ்ளோ புக்ஸ் இருக்கு ஏதோ 5000 ரூபாய்க்கு ஓஷோ புக்ஸ் வாங்கினிங்களாம்?
ஆமாண்டா நாளைக்கு காலைல 5 மணிக்கு எந்திரி டைனமிக் பண்ணலாம்
இந்த குளிர்ல 5 மணியா?:@ நீங்க பண்ணுங்க அடுத்த வாரம் வரும்போது பாக்கலாம்..
0------------0-----------------
ப்ளீஸ்! என்ன விட்டுட்டு போயிடாத ஹேமா! நீ இல்லன்னா நான் செத்திருவேன்
நான் உங்கூட வந்தா எங்க அப்பா அம்மா செத்திருவாங்க பரவாயில்லையா?
0-------------0---------------
உன் இழப்புகளை என்னால் தாங்க முடியவில்லை
உன் உள்ளங்க கையை விட மிருதுவான என் இதயத்திடம் கேட்டுப்பார்த்துவிட்டேன் அது சொல்லிற்று இறந்து போ என
0-------------0-------------
டேய் தம்பி! என்னடா இது ரூம் முழுக்க பேப்பர் எல்லாத்துலயும் ஏதோ கன்னாபின்னான்னு கிறுக்கியிருக்க?
உங்களுக்கு தெரியாதா நான் கவித எழுதுவேன்னு
நீ ஒரு கருமமும் எழுத வேணாம் இந்த வாரம் ரெண்டு நாள் லீவு போடு
திருச்சி போற நான் எல்லாம் புக் பண்ணிட்டேன்
என்னா திருச்சில?
ம்ம். ஓஷோ ஆசிரமம் போயிட்டு வா!
இல்ல முடியாது
ஒழுங்கா போ! கோவத்த கிளறாதே
0----------------0-------------------------
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போகும் சாலையில் துவாக்குடி தாண்டி தனியாய் இயற்கை சூழலுடன் அமைந்திருக்கிறது ஓஷோ தர்மதீர்த்தா சன்னியாஸ் ஆசிரமம் ஸ்வாமி மோகன் பாரதி என்பவருக்கு சொந்தமானது.3 நாள் தியான முகாமும் ஒரு வார நோ மைண்ட் முகாமும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.ஓரு வெள்ளிக்கிழமை மாலை அங்கே மூர்த்தியுடன் சென்றடைந்தேன்.தியான அறைக்கு போகும் வழியில் செருப்பு வைக்கும் இடத்தில் இவ்வாறு எழுதப்பட்ட ஒரு வாசகம்
Please leave your foot wear and mind here

முதலில் செயதது குண்டலினி தியானம்.தியானமென்றால் கண்ணை இருக்க மூடி உட்கார்ந்து சினிமா நடிகையை கனவு காண்பது என்கிற எண்ணத்திலிருந்து உடலை உலுக்கி அத்தோடு மனத்தையும் இணைக்கும் அற்புத சங்கிலி எனப் புரியவந்தது.

டுடுங் டுடுங்
டுடுங்க்..டுடுங் டுடுங்
டுடுங் டுடுங்க்..டுடுங் டுடுங் டுடுங்
டுடுங்க்..டுடுங். டுடுங் டுடுங் டுடுங்

மிகச்சீராய் ஆரம்பித்த ட்ரம்ஸ் இசை மெல்ல உச்சத்தை அடைகிறது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உதற வேண்டும் பின் இசையின் மாற்றத்திற்க்கேற்ப அசைந்து நடனமாடி இறுதியில் அமைதிப் பெருவெளியில் கலக்க வேண்டும்.உடலை உதறி மனத்தை உலுக்கிப்போடு பின் அமைதிப்படுத்தும் வழிமுறைகள் தான் பெரும்பாலான தியானங்கள்.முதல் தியானத்துக்குப் பின் சில பரவசங்களை,புத்துணர்வை மூளையும் உடலும் பெற்றது சூடான தேநீர்,சக நண்பர்களுடன் பந்தாட்டம், திறந்த வெளி பம்பு செட்டில் ஆனந்த குளியலுக்கிப்பின் சரியாய் 6 மணிக்கு white rope medidation வெள்ளை நிற அங்கி அல்லது வெள்ளை நிற ஆடையை பயன்படுத்த வேண்டும் அந்த ஆடையை வேறெந்த தியானத்திற்க்கும் பயன்படுத்தக்கூடாது ஓஷோவின் பிரசங்கங்கள் அந்த தியான இடைவெளியில் ஒளிபரப்பப்படும்.

அதற்க்குப் பின் ஜிப்ரிஷ் என்றொரு தியானம் நமக்கு தெரியாத மொழியைப் பேச வேண்டும் மனதில் என்னென்ன சொற்கள் மிகுந்து வருகிறதோ அதையெல்லாம் அதே வன்மத்தோடு வெளித்துப்ப வேண்டும் உரத்த குரலெடுத்து அழலாம்.. பைத்தியம் பிடித்தார்ப்போல் பெருங்குரலில் சிரிக்கலாம்.. சில பெண்கள் நீளமான குச்சியாலோ அல்லது தலையணை கொண்டோ சுவற்றை அடித்தபடி இருந்தனர்.சிறிது நடுங்கியபடி நானும் கண்ணை மூடிக்கொண்டு கத்தஆரம்பித்தேன்..
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ,,
ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
கலப்கபக்க் ஜக்லச்ம்ன்ச்க்ட்க்ட்ம்ச்க்ச்க்
ட்டுடுடுடுடுடுடுட் டடுட்ம்ம்
டுடஜ்மச்ம்ச்க்ட்ம்ச்ட்
டனக்ட்க்டிக்க்ல்ல்ம்ச்ட்ல்ம்

கத்த கத்த தொண்டை வலித்தது உள்ளே ஏதோ கரைவது போலிருந்தது நெடுங்காலமாய் சேமித்து வைத்த துக்கம் பீறிட்டெழ பெருத்த குரலில் அழ ஆரம்பித்தேன் அரை மணி நேர கூச்சலுக்குப்பின் ஸ்டாப் என்கிற ஓசை சகலமும் அடங்கிப்போய் உள்வெளியின் மடிப்புகளில் நினைவு புதைந்து கொண்டது மீளவே வேண்டாத ஒரு இருப்பில் சகலமும் கரைந்து போனது தன் சொந்த இருப்பின் சுவையை ..நம் சொந்த இருப்பிடங்களை கண்டு கொள்ளமுடிந்தது.தியானம் முடிந்த பிறகு தொண்டையிலிருந்து பேச்சு வரவில்லை ஆனாலும் அடைப்புகள் திறந்து உள்ளிருந்த கழிவுகள் வெளியேறி சுத்தமாய் இருந்தது அகம்.இரவில் பத்து மணிக்கு மேல் அதிர வைக்கும் இசையை ஒலிக்கசெய்துவிட்டு உடலும் மனமும் பரவசத்தை எட்டும் வரை ஆடிக்கொண்டிருப்போம்.உடல் முழுக்க வியர்வையில் குளித்து அடுத்த அசைவை உடலின் பாகங்கள் எடுத்துவைக்கத் திராணியில்லாத் நிலையில் ஆட்டத்தை நிறுத்துவோம்.

(தொடரும்)

அடையாளம் தந்த நூலகங்களின் முகவரி



புத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கமெல்லாம் கடந்த ஒரு வருடங்களாகத்தான் அதற்க்கு முன்பு வரை நூலகங்களின் இடுக்குகளில்தான் எங்காவது ஒளிந்துகொண்டிருப்பேன்.ஊர் ஊராக சுற்ற நேர்ந்த வாழ்வு பெரும் நண்பர்களை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் பல நூலகங்களின் அறிமுகத்தையும் கொண்டுவந்து சேர்த்தது.மழையில் நனைந்த மரமல்லிப்பூக்களின் வாசம் என் சிறு வயதினை நினைவுபடுத்துவது போல் புத்தகங்களை நுகரும்போதெல்லாம் மனக் கண் முன் நூலகங்கள் வந்துவிட்டுப்போகும்.பதின்ம வயதோரும் சிறார்களும் இப்போதெல்லாம் நூலகத்திற்க்கு செல்கிறார்களா எனத் தெரியவில்லை.நகரங்களில் இருக்காதெனத்தான் தோன்றுகிறது.வளர்ந்துவிட்ட அறிவியலின் தாக்கங்கள் நூலகத்தினை மறக்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.பொழுதுபோக்கும் கணினி விளையாட்டுக்களும் அவர்தம் மூளைகளில் இருந்து உணர்வுகளை மழுங்கடிக்க செய்துவிட்டிருக்கலாம்.எனினும் எங்காவது ஒரு கிராமத்தின் சந்தடிகளற்ற தெருவின் கடைசியில் அமைந்திருக்கும் நூலகத்தில் இடையூறுகளில்லாது இன்றும் பதின்ம வயதோறும் சிறார்களும் படித்துக் கொண்டிருக்கலாம்.

ஏழு வயதில் நான் முதலில் சென்ற நூலகம் திருவண்ணாமலையில் என் வீட்டிற்க்கு அருகிலிருக்கும் ரமணா நூற்றாண்டு நூலகம்.ஆசிரமத்திற்க்கு வருவோர் தங்குவதற்க்கென வீடுகள் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியினுள் நூலகம் இருக்கும்.அந்த நீளமான காம்பவுண்டு சுவரை ஓணான் குச்சியினால் கோடிழுத்தபடி நடந்து சென்றது இன்னும் நினைவிருக்கிறது.சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான இடம் நூலக சன்னலை ஒட்டி நாகலிங்க பூ மரம் நெடு நெடு வென வளர்ந்திருக்கும்.இனிப்பாய் காய்க்கும் கொய்யா மரமும் இரண்டு மாமரங்களும் பாதாம் மரங்களும் முன்புறம் நிழல் போர்த்தியபடி இருக்கும்.பதினோரு மணி வெயிலில் காக்கைகள் கரைவது மட்டும் கேட்டபடி நாகலிங்கப் பூ வின் கிறக்கமான வாசனைகளோடு படித்த பூந்தளிரும் அம்புலிமாமாவும் இன்னும் நினைவிலிருக்கிறது.திரும்பும்போது பாதாம் மரத்திலிருந்து உதிர்ந்த சிவப்பு நிறக்கொட்டைகளை கால் சட்டைப் பைகளுள் திணித்தபடி வீடு திரும்புவேன.பதின்மத்தை தொடும் வரையில் என் எல்லா விடுமுறை தினங்களும் இப்படித்தான் போயிற்று.

மேலும் என் அலைவுகளில் ஒதுங்கிய சில இடங்களின் பெயர்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
1.ரமணா நூற்றாண்டு நூலகம் - திருவண்ணாமலை
2.கீதாஞ்சலி வாடகை நூல் நிலையம் - திருவண்ணாமலை
3.மாவட்ட மைய நூலகம் - திருவண்ணாமலை
4.மாவட்ட மைய நூலகம் -கிருஷ்ணகிரி
5.கிளை நூலகம் - ஓசூர்
6.ரோமண்ட் ரோலண்ட் நூலகம் - பாண்டிச்சேரி
7.கிளை நூலகம் - மத்திகிரி
8.மாவட்ட மைய நூலகம் - திருவள்ளூர்
9.கிளை நூலகம் - பூங்கா நகர் திருவள்ளூர்
10.கன்னிமாரா நூலகம் - சென்னை
11.மைய நூலகம் - மதுரை
12.கிளை நூலகம் -ஒத்தக்கடை மதுரை

இதில் பள்ளி கல்லூரி நூலகங்களை சேர்க்கவில்லை.அங்கிருக்கும் சொற்பமான துறை தவிர்த்த நூல்களை படித்துவிட்டு நூலகரை எப்போது புதிதாய் புத்தகங்கள் வருமென நச்சரிப்பேன்.

மறக்கவே முடியாத நூலகங்களில் ரமணர் நூலகத்திற்க்கும் பாண்டிச்சேரி ரோமண்ட் ரோலண்டுக்கும் முக்கிய இடம்.ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்கு எதிர்புறம் பூங்காவும் சற்றுத்தள்ளி கடற்கரையும் நூலகத்தை சுற்றி உயரமான மரங்களுமடர்ந்த சன சந்தடி குறைந்த ஒரு நூலகம்.வழக்கமாய் எல்லாரும் படிக்குமிடத்தில் அமராது நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி இடைவெளிகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.

எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே முதலில் தேடிக் கண்டுபிடிப்பது நூலகங்களைத்தான்.
கடைசியாய் துபாய் வருவதற்க்கு முன் என்னிடம் குவிந்திருந்த நூலக அட்டைகளை என்ன செயவதென்று தெரியாமல் ஒரு பெட்டியுனுள் பத்திரப்படுத்திவிட்டு வந்துவிட்டேன்.

நீங்கள் படித்த நூலகங்களை பற்றியும் சொல்லுங்களேன்

சொல் என்றொரு சொல் ரமேஷ்-ப்ரேம் -2

ஒட்டு மொத்த புத்தகமே அதிர்வைத் தரும் வாசிப்பணுவம்தான் என்றாலும்
புத்தகத்திலிருந்து சில துளிகள்

இப்படியாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக்காக மாறிவருவதை கண்டு அவள் அசூசை கொண்டாள்.ஆரம்பத்தில் இது ஒரு வித வியாதி என்றும் இது சுற்றுப்புற சூழலின் கேட்டால் உண்டாவது என்றும் அவள் எண்ணினாள்.இருள் நகரத்தில் சிலருக்கு உடல் பிளாஸ்டிக்காக மாறி வருவது பற்றிய செய்திகளை சஞ்சிகைகளில் வாசித்திருந்ததால் இது அவனுக்கு நேர்ந்து இருப்பதையும் ஒரு செய்தி போலவே கருதலானாள்.தன் உடல் ஈரப்பதமற்ற ஒரு பொருளாக இருப்பது கண்டு அவன் கொஞ்சமும் அச்சமோ துயரமோ வாதையோ அடையவில்லை.அவனுக்கு இது வசதியாக இருந்தது.ஆனால் எங்காவது மோதிக்கொண்டால் மோதிய இடம் வீரல் விழுவதை அவனால் சகித்து கொள்ள இயலவில்லை அன்று அப்படித்தான் இருட்டில் படிக்கட்டுக்களை ஏறி வாசல் என் நினைத்து சுவரில் மோதிக்கொண்டபோது நெற்றியில் வீறல் விழுந்து பார்ப்பதற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக அச்சமூட்டுவதாக மாறியது.அவள் தீக்குச்சியை உரசி அதன் சுடரால் நெற்றி வீரலை இணைக்கும் முயற்சியில் ஒரு நீண்ட சாய்கோட்டை தழும்பாக மாற்றி மேலும் அசிங்கப்படுத்தி விட்டாள்.பிளாஸ்டிக் முகத்தில் இன்னும் தசையோடு இருக்கும் இமைகளைப் பார்ப்பதற்க்கு அழகாக தொடுவதற்க்கு வண்ணத்துப் பூச்சியின் உடல் போல மிருதுவாக இருக்கிறதென்பாள்.அவள் அவனை பொம்மை என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தாள்.ஒருநாள் புணர்ச்சிக்குப் பிறகு விரைத்த நிலையில் அவனது குறி கெட்டி தட்டிப்போய் உறைந்து விட்டது அன்று அவள் ஆற்றாமையில் புலம்பியதை எப்படி எழுதுவது.அவன் மெளனமாக தலை குனிந்தபடி இருந்தான்.அவள் தயங்கி தயங்கி வெளியேறியவள் பிறகு திரும்பி வரவே இல்லை.

சேகுவாரா மிக மெதுவாக ஆரம்பித்து பதட்டத்தோடு ஓவியங்களைப் பற்றி பேசுகிறான்.பெருவின் இன்காஸ் தொல்குடியின் ஓவியங்களிலிருந்து ஸ்பெயினின் சல்வதோர் தாலி வரைக்கும் பேசுகிறான்.அவனுடைய பேச்சு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தும் பேருரை போல நீண்டு கொண்டே போகிறது.அவனது பேச்சிலிருந்து வெளிப்பட்ட தகவல்களால் நிறைந்த சிறைக்கூடத்தின் சுவர்களில் வீறல்கள் விழுந்து வண்ண வண்ணப் பாகு குழைவுகள் ஆங்காங்கே வழிந்து கொண்டிருக்கின்றன.சுவரில் இல்லாத கைகளின் ஓவியங்கள் அந்த நிறக்குழைவுகளால் அழிவதாக பொய்ப்பாவணை கொண்டு வான்கோ சேகுவாராவின் வாயைப் பொத்துகிறான்.
சேகுராவிற்க்கு மூச்சு இறைக்கிறது வான்கோ அவனைத் தன் மடியில் படுக்க வைத்து ஒரு பாடலை பாடுகிறான் தாலாட்டுப்போல இருக்கும் அப்பாடல் பெண்குரலால் ஒலிக்கிறது.மடியிலிருந்து தலையை தூக்கிச் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.அப்பெண்குரல் வான்கோவின் உதட்டசைவிலிருந்து வெளிப்படுவது கண்டு பரவசத்தோடு பார்க்கிறான்.வான்கோவின் முகத்தைத் தனது ஒரு கையால் ஏந்துகிறான்.அவனுடைய முரட்டுத்தனமான கைவிரல்கள் வான்கோவின் காதிழந்த காயத்தில் பட எரிச்சல் பட்ட வலியோடு அவன் ஆ..என்ற சப்தம் ஆண்குரலில் வெளிப்படுகிறது.ஆண்குரல் கண்டு சேகுவாரா கேலியோடு குறுநகைபுரிய வான்கோ கூச்சத்தோடு தன் முகத்தை மூடிக்கொள்கிறான்.மூடிய கைகளை இவன் விலக்கி அவனது உதடுகளில் முத்தமிடுகிறான்.

நீ கருத்த தசைவெளியாய் இருந்தாய்
உனக்குள் குமைந்து கொண்டிருந்த படைப்பு வெறி
வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தது
உன் கணத்த முலைகளில்
பெருமூச்சுத் தணிவுகள்
ஒருக்களிப்படுத்துத் தூரமாய்
உன் பார்வையை நீளவிட்டாய்
உன் உடல் நீள்வெளியெங்கும்
நிரம்பிக்கிடந்தது தனிமை
எல்லாவற்றையும் உன்னால் மட்டுமே நிரப்பிக்கொண்ட
உனக்குள் தனிமை
உன் தொடைகளை
விரல்களால் வருடிக்கொண்டபடி
உன் நிதம்பத்தின் ரோமப்பரப்பைச் சீண்டிக் கொண்டாய்
மீண்டும் பெருமூச்சு எழுந்து
மண்டியிட்டு உன் உடலை மடித்துக் கொண்டாய்
விரிந்து பரவிய கூந்தலில் வெற்றிடங்கள் கலைந்தன
ஏதோவொன்றைக் கனவு கண்டுத் துடிக்கும்
உனது மெளனம்
தாபத்தில் சிலம்பும் உன் உதடுகள்
உன் கூந்தலை அள்ளி முடித்தபடி சுற்றிலும் பார்த்துக் கொண்டாய்
எல்லா இடமும் நீ

நான் தேடியலைவதுஎனது மிருக நினைவுகளை நான் இல்லாத சமயங்களில் எனது அறையில் ஒருபுலி படுத்திருப்பதாக ஒருமுறை கலவரத்தோடு எனது தோழி சொன்னாள்

வளர்மதியின் ரமேஷ்-ப்ரேம் குறித்தான நிலைப்பாடுகள் எனக்கு சலிப்பையே தந்தன.துப்பறியும் வடிவமே ஒழுங்கை சிதைக்க உதவுமென்றால் ஜெயமோகனின் நான்காவது கொலையை பின்நவீன பிரதியென்று சொல்லலாமா?
எம்.ஜி.சுரேஷ் மணிரத்னம் மற்றும் பாலசந்தரை பின்நவீனவாதிகளாக்கி அழகு பார்க்கிறார்.அவர் ஏன் எம்.ஜி ராமச்சந்திரனை மறந்தார் எனத் தெரியவில்லை.இதற்க்கு எதிர்வினையாக சுகுணாதிவாகர் சகிலா திரைப்படங்களில் பின்நவீன கூறுகளை கண்டறிந்தார் :) ஏதோ என்னால் முடிந்தது ரமேஷ்-ப்ரேமே

நூல் விவரம்
முதல் பதிப்பு:டிசம்பர்2001
வெளியீடு:காவ்யா
வாங்கிய கடை:எனி இந்தியன் - தி.நகர்
விலை : ரூ 125பக்கம்:311

Monday, July 23, 2007

சொல் என்றொரு சொல் ரமேஷ்-ப்ரேம் -1



இன்றைய பின்நவீனத்துவ பிரதிகளில் ஒன்றாக ரமேஷ்-ப்ரேமின் இந்த நாவலைக் குறிப்பிடலாம்.நாவல் என்கிற வடிவத்தை சிதைக்கும் முயற்சி அல்லது ஒரு வடிவத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் எனவும் சொல்லலாம்.தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது இந்நாவல்.

இந்த நாவலை வெகு கவனமாக அணுக வேண்டியுள்ளது.வார்த்தையாடல்களில் கவர்ச்சியும் வசீகரமும் சொற்களில் ஒரு மயக்கத் தன்மையும் நம்மை வேறு ஏதோ ஒரு உலகத்தில் புரியாத ஒரு வெளியில் தொலைக்கச் செய்து விடுகிறது.போதை தரும் எழுத்து அல்லது கிறங்க வைக்கும் சொல்லாடல்கள் படிப்பவரை குழம்ப வைத்து திகைப்பும் வெறுப்பும் ஒரே சமயத்தில் ஏற்படச் செய்கிறது.இந்நாவலை படித்து முடிக்க 30 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதிற்க்கு காரணம் இந்த உணர்வை மயக்கத் தன்மையை இழக்க விரும்பாததே.

சில பின்நவீன கூறுகளுடன் இந்நாவலை தொடர்பு படுத்திப் பார்க்கலாம்

வாசிப்பின்பம்

பின்நவீன கூறுகளில் ஒன்றான வாசிப்பின்பம் இந்த நாவலில் அதிகமாகவே விரவி இருக்கிறது.எந்த அத்தியாயத்தைப் புரட்டினாலும் அதில் பரவி இருக்கும் சொற்கள் மயக்கத்தைத் தருகிறது.காமமும்,உடலும்,புணர்வும் விலங்குகளின் நடமாடுதல்களும் மனித மனங்களின் உள்ளூடாக பயணித்திருப்பதும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த புத்தகம் படித்த நாட்களில் நான் எழுதிய கவிதைகள் அனைத்திலும் எப்படியோ புலி வந்து ஒட்டிக் கொண்டது.கனவு நிலைக்கும் பித்த நிலைக்கும் கொண்டு செல்லும் சொற்களை தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார்கள்.

விளிம்பு மய்ய சல்லிகள்

மய்யமில்லாத படைப்பு எழுதப்படுவதற்க்கு சாத்தியமா எனத் தெரியவில்லை.சொல் என்றொரு சொல் அதற்க்கான ஒரு முயற்சி என்று கொண்டாலும் பழமைகளை அடியொற்றி வந்த பழக்கப்பட்ட மூளை இந்த நாவலின் மய்யம் என்ன என்று தேடுவதிலேயே முனைப்பாக இருந்தது.ஒருவேளை படைப்பாளியின் பார்வையில் மய்யமில்லாத படைப்பொன்று எழுதப்பட்டாலும் பழகிய வாசகன் மூளை எப்போதும் மய்யம் ஒன்றை உருவாக்கி கொண்டு திருப்தி அடையும் என்பதில் சந்தேகமில்லை.அதீதன் அதிகமாக பேசப்படுவதால் அவனை மய்யமென்று கொள்ளலாம்.அதீதன் என்ற சொல்லே அல்லது பாத்திரமே ஒரு குறீடெனத்தான் சொல்லப்படுகிறது.புரட்சிகளின் வடிவமாக அடக்குமுறைகளின் மீறலாக புனிதங்களின் கட்டுடைப்பாக அதீதன் வரையறுக்கப்படுகிறான்.காலத்தை மந்தமாக்கி சொற்கள் எங்கெங்கோ அலைகிறது தொடர்பில்லாத கதையாடல்கள் படிப்பதற்க்கு சலிப்பைத் தந்தாலும் வசீகர அணுகுமுறை புத்தகத்துடன் ஒன்றிப்போகச் செய்கிறது.


பன்முகத் தன்மை

இதன் உள்ளடக்கம் 24 தலைப்புகளில் வெவ்வேறு கதையாடலை முன் வைக்கிறது.முதல் பக்கத்தில் இருக்கும் இந்த கவிதை நாவலை அதன் உள்ளடக்கத்தை மிகச் சரியாய் சொல்கிறது.


கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சொல்லொன்று பொத்துவிட்டால்
மதிலின் பக்க வாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்
அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமார்ந்து போவீர்கள்

இப்படித்தான் பிம்பங்களை புனைந்து கொண்ட மனம் பெரிதும் ஏமாற்றமடைகிறது.அறிவுஜீவிகளின் மூலத்திலிருந்து வந்ததாக சொல்லப்படும் அதீதனின் உடலில் வலியும் உணர்வில் இசையும் உள்ளிட்ட அவனது தடை செய்யப்பட்ட அத்தனை புத்தகங்களையும் ஆய்வு செய்யும் அரூபதர்ஷினி ஆத்மார்த்திக்கு எழுதும் கடிதங்கள், அவனோடு சில இரவுகள் தங்கிய அவன் தோழி பற்றிய குறிப்புகள், பிரபஞ்சனா மற்றும் விமோசனாவின் அதீதனைப் பற்றிய குறிப்புகள், இருள் நகரத்து கதைகள், நானும் எனது பிணமும்,அதீதன் பிறப்பின் பின்புலம் போன்ற அத்தியாயங்கள் மட்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.பத்திரிக்கையாளனின் சிறுகுறிப்பு எனும் அத்தியாயத்தில் அதீதனின் பேட்டியும் அவனது 18 நூல்களில் 3 படைப்புகளின் விமர்சனங்கள் தரப்பட்டிருக்கிறது.திடீரென புராண காலத்திற்க்கு தாவும் சொற்கள் சிவனுக்கும் தேவிக்கும் நடந்த ஊடல்களை கலவிகளைப் பற்றி பேசுகிறது தேவியின் தொலைந்த முக்குத்தியை கண்டெடுக்கும் காளியன் எனும் சாமான்யனின் காதல் அவனுக்கும் தேவிக்கும் இடையே நிகழும் கதையாடல்களை பற்றி பேசத் தொடங்கி விடுகிறது.பின்பு அதிலிருந்தும் தாவி புத்தருக்கும் ஆனந்தருக்கும் நடந்த உரையாடல்கள் மற்றும் புத்தரின் இறுதி நாட்களுக்கு சொற்கள் தாவி விடுகிறது.குருவைத் தேடி செல்லும் சீடனொருவனின் அடக்க முடியாத காமம் மற்றும் குருவின் காமம் மரவட்டகைகள் சாலையை கடப்பதை வேடிக்கைப் பார்க்கும் சிறுவனின் மரணம் என சொற்கள் வெவ்வேறு வடிவம் கொள்கிறது.வார்த்தைகளிலிருந்து வந்தவர்கள் என்ற அத்தியாயத்தில் ஒன்பது கவிதைகள் தரப்பட்டிருக்கின்றன படிக்கும் வாசகனை கலைத்துப்போடும் எழுத்து தொடர்ச்சியாய் யாராலும் ஒரு மணி நேரம் இந்த புத்தகத்தை படிக்க முடியுமா என்பது சந்தேகந்தான்.

மாந்திரீக யதார்த்தவியங்கள்

மொத்த அத்தியாயங்களும் இயங்கும் தளம் புதிரான ஒன்றாகத்தானிருக்கிருது தீவுகளிலிருந்து தோழியுடன் வரும் பேராசிரியரின் மகள் தான்யா நாடக ஒத்திகைக்காக பிரிந்து சென்ற தன் தந்தையின் வீட்டுக்கு மீண்டும் வருகிறாள்.அரசாங்கத்திற்க்கு எதிரான இவரது தொடர் பேச்சுகளும் புரட்சிகர நடவடிக்கைகளும் அந்த சம்யத்தில் வெடிகுண்டு வைத்து கொல்லப்படும் அரசியல் தலைவரின் கொலைக்கு காரணமாயிருக்கலாம் என சந்தேகிக்கிற காவல் துறை அவரை கைது செய்கிறது.அத்தோடு அந்த அத்தியாயம் முடிந்துவிடுகிறது.தனித்தனியே படித்தால் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்க்கான கட்டமைவுகள் உள்ளடங்கி இருக்கிறது.ஆய்வு நூலா,கட்டுரை தொகுப்பா என குழம்பச் செய்யுமளவிற்க்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லா அத்தியாயங்களின் கோர்வையாகவுமிருக்கிறது.

இருள் நகரத்து மனிதர்கள்,புராதன நூலகம் சிதைவை ஏற்படுத்தும் புத்தகங்கள் என இப்புத்தகம் உருவாக்கும் காட்சிகள் the name of the rose படத்தின் சில காட்சிகளை மனக்கண் முன்னிருத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.

(தொடரும்)

கவிதை குறித்தான என் புரிதல்கள் மற்றும் சில பகிர்வுகள்




கவிதையை விட வேறெதுவும் என்னை இட்டு நிரப்பமுடியுமா என்பது சந்தேகம்தான்.கவிதை என்கிற வடிவம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் தமிழின் தொன்மையும் வரலாற்றையும் வேறெந்த வடிவம் கொண்டும் சிறப்பாய் பதிவித்திருக்க முடியாது.தொன்மையான வடிவமான இக்கவிதையே நம் மொழியின் அடையாளமாக கலையின் பிறப்பிடமாக அமைந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து மாறிக்கொண்டும் வடிவத்தை அவ்வப்போது ஒழுங்கமைத்துக் கொண்டும் தன் இருப்பை மீள்பதிவித்துக்கொள்ளும் கவிதையின் வடிவம் எல்லைகளற்றது.

பாப்லோ நெருடாவின் துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம் என்கிற நிலைப்பாடுதான் வெகு இணக்கமாக இருக்கிறதெனக்கு வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ அல்லது உணர்வுகளை அசைத்துப்பார்க்கும் மென் தொடுகையாலோ கவிதை தனக்கான விதைகளை ஒரு தனிப்பட்ட சுயத்திற்க்குள் விதைத்துவிட்டு காணாமல் போய்விடுகிறது.துளிர் விடும் விதைகள் சூழல்களின் ஒத்திசைவில் செடியாகவோ மரமாகவோ தன் இருப்பை வடிவமைத்துக் கொள்கிறது.

கவிதை ஒரு சொல் விளையாட்டோ அல்லது அழகியல் வடிவமோ அல்ல.அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிதமானது.தனக்குள் உயிர்ப்பாய் இருக்கும் கவிதையை பிரபஞ்சத்தில் ஒரு உயிரெனக் கொள்ளலாம். இயக்கத்திலிருக்கும் அல்லது வளர்ச்சியடையும் பொருட்கள் மட்டுமே உயிருள்ளதென கருதப்படுவது போல் வளர்த்தெடுக்கப்படும் கவிதை வடிவங்கள் மட்டுமே உயிருள்ளது.பழைய அல்லது திரிந்த வடிவத்தை பிரகடனப்படுத்தியபடி வார்த்தைகளை பிடித்துத் தொங்கும் வடிவங்கள் கவிதையாகாது.அவை நாற்றமெடுத்த இறந்துபோன உடலின் துண்டங்கள் மட்டுமே.

தானாகவே உருவாகும் அல்லது நேரும் ஒரு வடிவமே கவிதை. திட்டமிட்டு செய்யப்படும் ஒன்று கவிதையாகாது. வார்த்தைகள் துருத்திக்கொண்டோ அதீதமாகவோ இருக்குமெனில் அந்த வடிவம் தனக்கான உயிர்ப்பை இழக்கிறது. சமகால கவிதைகள் குறித்து முன் வைக்கப்படும் விமர்சனங்களில் புரிவதில்லை எனும் பொத்தாம் பொதுவான கருத்தொன்று வானம்பாடிகளின் கவசமாய் நம் தமிழ் மூளைகளை இன்னமமும் பாதுகாத்துக்கொண்டு வருகிறது.மேம்போக்கான, செத்த,பழைய அணுகுமுறைகளை தனக்கான அடையாளமாக கொண்ட சில,பல பழகிய மூளைகள் தங்களின் பாதுகாப்புணர்வின் மிகுதியால் தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்றுதான் கவிதைகளில் ஆபாசம்.

இந்த வெற்று விவாதங்களுக்கு பதில் சொல்வதை விட கவிதைகளில் படிமம் என்பதென்ன?அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்துப் பார்ப்போம். கவிதைப் படிமம் (poetic image) என்பது பொருள், எண்ணம், கருத்து, உணர்வு என்பவைகளைப் புலன்வழிக் காட்சிகளாகவோ, நுண்காட்சிகளாகவோ, புலனுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களாகவோ மாற்றி வழங்குவது.படிமம் அலைந்து திரிவதில்லை. யோசனைக்கும் தீவிர சிந்தனைக்கும் அறிவுக்கும் இட்டுச் செல்லாமல் அனுபவத்தின் நுழைவாசலில் சுருக்கமாக இயங்குகிறது. அடுத்த நிமிஷத்தில் அந்த இயக்கம் மறைந்து படிமமே அனுபவமாகிறது.

'பாம்புப் பிடாரன் சுருள் சுருளாக வாசிக்கிறான் ' இது பாரதியின் படிமம், இசையை கண்களில் கொண்டு வந்து நிரப்பும் உணர்வைப் பெற முடிகிறதல்லவா?.


இன்னும் சில படிமங்கள்


'கூழாங்கற்களின் மெளனம்- கவிஞனுடைய உலகில் அஃறிணை என்பது இல்லை. 'மூலைகள் வெடித்துப் பெருகி இன்னும் இன்னும் மூலைகள் ' 'ஒருகை மீது இப்போது மழைவீழ்கிறது, மற்றதிலிருந்து புல் வளர்கிறது ' 'ஒரு நாள் கூந்தல் இழைகளிடை காற்று பிணங்கள் இழுத்துக் கொண்டோடியது ' இந்த சர்ரியலிசப் படிமங்கள் தம் இருப்பிடங்களில் 'விநோதம் ' என்று தோன்றாமலே வித்தியாசமான உணர்வுகளை எழுப்பக் கூடியவை
'என் பிடறியில் குடியிருக்கும் இருள் கலைந்து புறப்பட்டு நிசப்தத்தில் வானை நிரப்புகிறது '
இது இன்னொரு சிறந்த படிமம்

பாஷோவின் ஒரு ஹைகூ கவிதையை பார்ப்போம்


நங்கூரத்தின் மீது

ஒரு கடற்பறவை

அமைதியாக

திடாரென்று நங்கூரம்

நீரில் மூழ்கியது

காற்றில் அலை மோதி

வானில் ஏறியது பறவை.


இதில் நங்கூரம், பறவை ஆகியவை வாசகனால் எப்படியும் அர்த்தம் தரப்படலாம். இக்கவிதை ஒரு அர்த்த சட்டகத்தை உருவாக்கவில்லை. ஒரு உள நிகழ்வின் சட்டகத்தை மட்டுமே உருவாக்குகிறது
இப்படி நல்ல கவிதைப் படிமங்கள் ஏராளமாகச் சொல்லிப் போகலாம். மொத்தத்தில் இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மெளனத்தைத் தொடமுயல்பவை. இந்தவிதமான நுண்மையை உவமை உருவகம் கொண்டு சாதிக்க முடியாது. அவை செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு காரணம், அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டது; அலங்கரிக்க, சாமர்த்தியம் காட்ட, விளக்கம் சொல்ல எனக் கவிதைக்குப் புறம்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டது. மற்றபடி இன்றும் இனியும் நல்ல உவமைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடாது.


அடர்வு தன்மை கொண்ட அரூப கவிதைகள் ஒருபுறமும் படிமமும் நுட்பமும் புனைவும் மாந்திரீக யதார்த்தவியங்களும் ஒருபுறமும் கண்ணில் படுவதையெல்லாம் கவிதையாக்கும் யுக்தி ஒருபுறமும் விளிம்பின் வலிகளை அப்பட்டமாய் முகத்திலறைவது போல பதிவித்தபடி எந்த கட்டுக்களிலும் அடங்காத கவிதைகள் ஒருபுறமுமாய் தமிழ்க் கவிதைகள் தனக்கான நகர்வுகளில் திருப்தியாகவே இருக்கிறது.செத்த உடல்களை புணர்ந்து திரியும் பரிதாபத்திற்க்குரிய வாசகனையும் வெற்றுச் சொற்களால் பரப்பை நிறைக்கும் தமிழ்க்கவி சல்லிகளையும் புறந்தள்ளியபடி முன் நகர்கிறது உயிர்ப்பான கவிதை.


ஒப்பீடு


அபி நேர்காணல்

தேவதேவன் நேர்காணல்

ஜெயமோகன் குற்றால பதிவுகள் இலக்கிய அரங்கு 2

தமிழ்மணமேட்டிசுகளிலிருந்து ஒரு குரல்



வணக்கம் நண்பர்களே!!

நட்சத்திர வாரத்திற்க்கான அழைப்பு வந்தபோது சிறிது பரபரப்பு தொற்றிக் கொண்டதென்னவோ உண்மை.இத்தனை சீக்கிரம் எதிர்பார்த்திராததாலும் கட்டுரை அல்லது செறிவான ஒரு விதயத்தை முன் வைக்கும் மனோநிலை இன்னும் கிட்டியிடாத நிலையில் ஆராய்ச்சிகளும் வாசிப்பும் பன்முக அலசலும் தேவைப்படாத கவிதை என்கிற ஒற்றை சல்லியை பிடித்துக் கொண்டு தொங்கும் நான் ஏழு நாட்களை எப்படி ஒப்பேற்றப் போகிறேன் எனும் கவலையும் மிகுந்தது.

கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக் கொள்ளல் அல்லது எதிலேயும் எப்போதும் தனித்தன்மையை நிரூபித்தல் அல்லது தொடர்ச்சியாய் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளல் என்பதை நோக்கிய விழைதல்கள் மூலம் என்னை அப்பட்டமான பூர்ஷ்வா பயல் என யாரேனும் விமர்சித்தால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்ச்சியான இடம்பெயர்தல்களில் நான் இழந்தது என் சமூக அடையாளம் மற்றும் ஒரு நிரந்தர முகவரி.யாரேனும் திடுமென்று உன் சொந்த ஊர் எதுவெனக் கேட்டால் சிறிது யோசித்து திருவண்ணாமலை என்கிறேன்.கடைசி 12 வருடங்களில் 6 மாதத்திற்க்கு மேல் எந்த சூழலிலும் தொடர்ச்சியாய் இருந்ததாய் நினைவில்லை(குறைந்த பட்சம் இருப்பிடங்களையாவது மாற்றிக் கொள்வதுண்டு)இந்த சிக்கலான நிகழிற்க்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது.வலையெழுத வந்த பின் நிறைவு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று என்னை நிரப்பி இருக்கிறது.அடுத்த நகர்வுகளுக்கான அரிப்புகள் இல்லை.ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.மொத்தத்தில் எழுத்தென்பது ஆசுவாசமாய் இருக்கிறது.

கிடைத்திருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்துகொண்ட புதிய மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.தோன்றும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது பெருகிக்கொண்டிருக்கும் நட்பு வட்டங்களினூடாய் என் அணுகுமுறைகளின் நம்பகத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன.பறவையின் சிறகைப்போல காற்றில் முகவரியற்று வரும் கடிதங்கள் என் மொக்கை கவிதையை மூன்று வரிகளில் பாராட்டிச் செல்கிறது.ஆச்சர்யங்களும் வியப்பும் மேலிட திருவிழாவில் வழி தப்பிய குழந்தையொன்றின் காலடித் தடம் பற்றி கடந்து கொண்டிருக்கிறேன் இத் தமிழ்மணத்தையும் வலைப்பதிவையும்.

கருத்தாடல்கள்,அரசியல் நுட்புலம்,சந்தேகித்தல்,கூர்மையான விமரிசனப் பார்வை குறித்தான புரிதல்கள் சற்று புலப்பட துவங்கியிருக்கிறது.இசங்கள்,சித்தாந்தங்கள்,கொள்கைகள்,இயக்கங்கள் போன்றவைகளைப் பற்றிய விழிப்பும் பரவலான வாசிப்பின் சாரங்களை சுலபமாய் பெற்றுக்கொண்டபடியுமாய் கடந்துபோகின்றன நாட்கள்.

இந்த ஏழு நாட்களில் செறிவாய் எழுத ஆசை.கலந்துரையாடல்களுக்கான அழைப்பெனவும் இவ்வறிமுகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

வலைக்கு வந்தசேர்ந்த விதயங்களை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.மேலதிக தகவல்கள் விரும்புகிறவர்கள் இங்கே செல்லலாம்.

புகைப்பட கிராபிக்ஸ் தம்பி கதிர்
தமிழ்மணமேட்டிஸ் சொல்லாடலும் புதிய வார்ப்புருவும் பொன்ஸ் கொடுத்தது
டெஸ்ட் கயமையை சேர்த்தும் வலைச்சர பதிவுகளை தவிர்த்தும் பார்த்தால் இது என்னுடைய 50 வது இடுகை

Saturday, July 21, 2007

மழையின் ஈரக் கைகள்



வெட்ட வெட்ட தளிர்களாய்த் துளிர்க்கிறது
கொல்லைப்புற புங்கை
வன்மத்தில் எட்டி உதைத்தாலும்
வால் குழைந்தபடி காலைச் சுற்றுகிறது ராமு
தொல்லைகள் பொறுக்காது அறையப்பட்ட
குறும்புக்காரச் சிறுமி
கதவின் பின் ஒளிந்தபடி
கண்கள் பனிக்க
எட்டிப்பார்க்கிறாள்

நீலம் மறைத்தபடி சூழ்ந்திருந்த கரு மேகங்கள்
மெல்ல இளகத் துவங்கி
மழையின் ஈரக் கைகளின் வடிவம் கொண்டு
பூமியணைக்க விரைகிறது

தகித்திருந்த நிலம்
தணிவு கொள்கிறது

Tuesday, July 17, 2007

போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ



உன் அன்பு
காதல்
பகிர்தல்கள்
சகபயணி
நித்யகாதலி
ஸ்நேகிதி
ரகசியத்தோழி
என்றைன்றைக்குமான காதல் ..
இன்னும் இத்யாதி இத்யாதிகளையெல்லாம்
மூட்டை கட்டிக்கொண்டு
இடத்தை காலி செய்

நான் முன்பே உன்னிடம் சொன்னது போல்
இது சுயம் கரைந்த வெளி
அடையாளமனைத்தும் துறந்த நிகழின் பிரதி
கனவின் குத்தகைக்காரியான நீ
வசீகர வார்த்தைகளால் மயக்கத்திலாழ்த்துகிறாய்...
இந்த ஆக்ரமிப்புகள் பழக்கமில்லையெனக்கு
வெறுமை எப்போதும் வெறுமையை மட்டுமே தரும்
உன் இருப்பு இருவேறு நிலைகளை ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது
நெடுங்காலமாய் கனன்று கொண்டிருக்கும் தணலணைக்க
மழைத்துளியையொத்த உன் நேசம் எம்மாத்திரம்?

தனிமையின் கிளைகளில் தாயின் வெம்மைகளை
ஏற்கனவே படரச்செய்தாகிவிட்டது
உருவாக்கிக் கொண்ட பிம்பங்களில்
வெகு பாதுகாப்பாய் இருக்கிறதென் உலகம்
தலையைச் சுற்றிய வட்டம் அல்லது
இரட்டைக் கொம்புகள் முளைத்தலுக்கான
காத்திருப்புகளைத் தவிர
செய்ய வேண்டியது வேரெதுவும் இல்லை

மேலதிகமாய்

உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்

Saturday, July 14, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - பகிர்ந்துகொள்ளப்பட்ட ரகசியங்கள்

இடம்:அலைன் ஃபன் சிட்டி
மொத்தமாய் ஏமார்ந்தவர்:மின்னுது மின்னல்

சிதறிய முத்துக்கள்

எட்டு பதிவர்கள் மொத்தமாய் ஒரே இடத்தில் சந்தித்ததால் ஏனைய பதிவர்களை பற்றிய கொசிப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ஷியும் அபிஅப்பாவும் பதிவர்கள் பற்றிய ரகசியத் தகவல்களை அள்ளித் தெளித்தனர்.அரிய பல தகவல்களில் சிலவற்றை இங்கே தருகிறேன்

பாலபாரதி ஜெயா டிவி யில் வந்ததை யாரும் நம்பவில்லை.வெகுநேரம் போராடி அந்த உண்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது.
பாலபாரதி ங்கொய்யால என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்
ஓசை செல்லாவின் நச்சென்று ஒரு வலைப்பூவின் உள்ளடக்கமும் அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பயோனீர் இன் ப்ளாக் என்ற வார்த்தையும் பரவாலாய் எல்லாராலும் நகைக்கப்பட்டது
ராஜா வனஜ் மிகவும் கோபக்கார இளைஞர்
பொன்ஸிற்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
லக்ஷ்மியின் சொந்த ஊர் தஞ்சாவூர் அவர் அப்பா தமிழாசியர்
வெட்டிப்பயல் இந்தியா வந்த தகவலை நெருக்கமான நண்பர்களுக்கு தெரிவிக்கவில்லை.
நாமக்கல் சிபி மிகவும் பெரிய ஆள்
லக்கிலுக்கிற்கு வயது 29 தான்
செந்தழல் ரவி அதிமுக ஆதரவாளர்
வரவணையன் மதிமுக ஆதரவாளர்
குழலி பாமக ஆதரவாளர்
உண்மைத் தமிழன் மிகவும் நல்லவர்.அப்பிராணி அங்கங்கே சென்று எசகுபிசகாய் பின்னூட்டம் போட்டு மாட்டிக்கொளவதை தவிர்த்து பார்த்தால் அவர் ஒரு நடுநிலைவாதி
காயத்ரி நான் வெஜ் நன்றாக சாப்பிடுவார்.
மகேந்திரன் சட்னிவடை இல்லை

மேலும் பாசக்கார குடும்பங்களை பற்றிய ரகசியங்கள் பரவலாய் பேசிக்கொள்ளப்பட்டது குடும்ப உறுப்பினர் என்கிற முறையில் ரகசியங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தினால் அவற்றைத் தவிர்க்கிறேன்

நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

வலையில் கும்மி கூடாதென்கிற கருத்து வெகு நாட்களாய் சொல்லப்பட்டு வருகிறது.இதையெல்லாம் தீர்மாணிக்க இவர்கள் யார் அவர்கள் எழுதுவது செறிவானது நாங்கள் எழுதுவது செறிவில்லை என்றெல்லாம் எப்படி தீர்மாணிக்க முடியும்?அவரவர்க்கு எது தெரியுமோ அதை எழுதுவோம்

சந்தேகித்தல் அல்லது கேள்வி எழுப்பல்

பின்நவீனவத்துவத்தின் பயன் என்ன?எதற்க்காய் இவ்வளவு அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும்?

திராவிட தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் சார்ந்த கட்சிகளை புகழ்ந்து கொண்டிருப்பதை தவிர திராவிடம் என்பது குறித்து எதைப்பற்றியும் எழுதுவதில்லை.யாரையேனும் திட்டிக்கொண்டிருப்பது அல்லது சாதி வசை பாடுவதை மட்டும்தான் வெகுகாலமாய் செய்து கொண்டு வருகிறார்கள்

கம்யூனிச வலைப்பதிவுகள் அதன் சித்தாந்தம் குறித்து எவ்வித விளக்கங்களையும் தருவதில்லை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொள்வதை தவிர வேரெதுவும் இல்லை

பாமரன் மாலன் போன்றோர் சாதித்தது என்ன?பாமரன் வெகு காலமாய் தமிழ்சினிமாவை வசைபாடிக்கொண்டிருப்பதை தவிர்த்து வேறென்ன செய்துவிட்டார்?குமுதம் போன்ற மலிவு ஊடகங்கள் பரபரப்பாய் விற்பனையாவதற்க்கு துணை போவதை தவிர்த்து வேறெதுவும் செய்துவிடவில்லை

மக இக ,கம்யூனிசம் போன்றவை பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும் பெரும்பான்மைகளை எதிர்கொள்வது எப்படி சாத்தியம். மக இக குழுச்சண்டைகள் அதன் வளர்ச்சியை தடுக்குமே தவிர வேறெந்த ஒன்றையும் சாதித்து விட இயலாது.

வளர்த்தெடுத்தல்

புதிய பதிவர்களை ஊக்குவித்து வலைப்பதிவை எல்லாரிடத்தும் கொண்டு சேர்க்க வேண்டும்.

சாதனை

லிவிங்க் ஸ்மைல் வித்யாவின் வலைப்பதிவினூடாய் திருநங்கை என்கிற பிம்பம் குறித்தான தயக்கங்களை குறைந்தபட்சம் வலைப்பதிவர்களிடமிருந்து நீக்கியது.

சந்திப்பு கொண்டாட்டங்களை வெகு விரிவாய் எல்லோரும் எழுதிவிட்டிருந்தாலும் பனிச்சறுக்கு விளையாட்டும் பல்வேறு ராட்டினங்களில் 45 டிகிரி 90 டிகிரி பின் 180 டிகிரியில் அனைவரையும் களேபறப்படுத்திய மின்னுது மின்னல் மறக்க முடியாத அட்டகாசமான அனுபத்தை ஏற்படுத்தி தந்தார்.6 மணி நேரம் தொடர்ச்சியாய் சிரித்து,கத்தி மகிழ்ந்து மூக்கு விடைக்க சாப்பிட்டு பொறிபறக்க பேசி சென்ற வெள்ளி ஒரு மறக்க முடியாத விடுமுறை நாளாக இருந்தது

பி.கு:சந்தேகித்தல் என்ற தலைப்பில் எழுதப்பட்டவை குறித்து யாருக்கேனும் கோபமிருப்பின் அவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்

மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை



செவியதிர இசையொலிக்கும் குறுகலான அறையொன்றின் மேடையில்
அவள் உட்பட எழுவர் அமர்ந்திருப்பர்
வண்ண விளக்குகளின் ஒளிச்சிதறல்கள் மேடையிலும்
மெல்லிய இருள் அறையிலும் விரவி இருக்கும்
இசையின் அதிர்வுகளுக்கென்றில்லாமல்
மிதந்து கொண்டிருக்கும் முன்னமர்ந்த விழிகளுக்காய்
தன் இறுக்கமான உடைகளிலிருந்து பிதுங்கிய சதைக்கோளத்தை எப்போதும் குலுங்கும்படி குதித்தோ முன் பின் அசைந்தோ
மதுவில் கட்டவிழ்ந்த விழி மிருகங்களுக்கு இரையாக்கியபடி
இரவை நிறைத்துக்கொண்டிருப்பர்.

எனக்கான ப்ரத்யேகமான புன்னகைகளை கொண்ட
அல்லது அப்படி நினைத்துக்கொண்ட பெண் மட்டும்
வெகு சிரத்தையாய் நடனமாடுவாள்.
பாடல்வரிகளை பாவனைகள் மூலமும்
இசையதிர்வை உடலின் மூலமுமாய்
வெகு நேர்த்தியாய வெளிப்படுத்துவாள்.
குறிப்பிட்ட பாடலுக்கு மட்டும் என்றில்லாமல்
அவளுக்கு பிடித்தமான ஒன்றின் துவக்கம் கேட்டவுடன்
எழுந்து ஆட ஆரம்பிப்பாள்.
சுழன்றும் லயித்தும் துள்ளியும் தன்னை மறந்து ஆட ஆரம்பிக்கும்போது போதை கொஞ்சம் வெளிறிப்போகும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
பொங்குகிறது அவள் முகம்
வரவை மறந்து செலவு செய்து
விரல்கள் விழிகளை சுட்டுகிறது
உயரப் பறந்து கொண்டாட்டுவோம்
விரல்கள் பறக்க ஆரம்பிக்கின்றன.
மாலை நியூயார்க்கில் கேபரே
இரு கைகளும் எல்லா விரல்களும் தன்னையே மீட்டியபடி
இரவில் தாய்லாந்தில் ஜாலி
வெட்கத்தால் ஒரு கையால் முகம் மறைக்கிறாள்
தம்மர தம்மர மஸ்த் மஸ்த்
தன தம்தன தம்தன மஸ்த மஸ்த்
தனதம்தன தம் தம்
என்னாசை தாவுது உன்மேலே

சுழலும் ஒரு ஓவியத்தின் சாயல்களை முன்நிறுத்தியபடி
வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே
துயரத்தில் தாழ்கிறது விழிகள்
பாத சுவடு தேடி தேடி
அடியெடுத்து நடந்தபடி துயரத்தில் மருகுகிறாள்
ஆசைய காத்துல தூதுவிட்டு
முகம் உடல் எல்லாம் சட்டென மாறுகிறது
உற்சாகமும் துள்ளலும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
மாசம் தை மாசம் வாலிபக் காலத்து நேசம்
கிறக்கமும் தவிப்புமாய் தொடர்கிறது நடனம்

காலியான மதுக்கோப்பைகளை நிறைக்கும் துப்பட்டா அணிந்திராத செழித்த சேச்சிகள் மதுவோடு கிறக்கத்தையும் சேர்த்துக் கலப்பர்
பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.

Sunday, July 8, 2007

நாள் தோறும் நிறம் மாறும் தேவி



தூங்கும் என் உடலை அசையாது பார்த்தபடி அமர்ந்திருக்கிறது
நாம் பேசி சலித்த சொற்களின் வடிவம்
தாகத்திற்க்காய் விழித்தெழும் பின்னிரவில்
அது கொஞ்சம் அசைந்து மென் புன்னகையொன்றை உதிர்க்கும்
அபத்தங்களின் நீட்டிப்பென தவிர்த்துப்போய
உறங்க யத்தனிக்கையில்
பின் மதிய சொற்புணர்வுகள்
வெற்று உடல்களாய் நினைவை மோதும்

சொற்கள்..

எனக்கு மழையைப் பிடிக்கும்
சில நேரங்களில் எனக்கு ஏன் மழையெனப் பெயர்வைக்கவில்லை என கவலைப்படுவேன் பூனைகளென்றால் கொள்ளைப் பிரியம்
இந்த கடலும் மணற்பரப்பும் மெல்லிதாய் கவிழும் இருளும் எத்தனை சுகந்தம்
தி ஜானகிராமனைப் பிடிக்குமா உனக்கு எனக்கும்
காமம் கலக்காது உன்னுடலில் புதைந்து கொள்ளவா?
உன் மென் விரல்களைப் பிடித்தபடி மலை சூழ்ந்த சமவெளியொன்றில்
வெகுதூரம் நடக்க வேண்டும்
இந்த நள்ளிரவில் நட்சத்திரங்களினூடே கண்துழாவி
உன்தோள் சாய்ந்து தூங்கிப் போக வேண்டும்
நேற்று ஏன் நீ வரவில்லை?
இன்று பின்னிரவில் உன்னை உன் அணைப்பை
உன் முகம் எப்படியிருக்குமென்ற கனவை வளர்த்துக் கொண்டேன்
என் எல்லா கவிதைகளும் உனக்காகவே எழுதப்படுகிறது

நேற்று மாலை இலக்கிய கூட்டத்திற்க்கு சென்றேன்
அந்த பெருங்கொண்ட கவிஞனுக்கு என் இதழ்கள் பிடித்திருக்கிறாதாம் சிரிப்பாயில்லை
நான் வெளியில் போகிறேன்
முன்று தினங்கள் உன்னுடன் பேச முடியாதென நினைக்கிறேன்
நேற்று நினைத்துக் கொண்டாயா
செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் பூதத்தை போல் முன் நிற்கிறது
அப்புறம் பேசுவோமா அவசரமாய் வெளியில போகனும்

வெற்றுச் சொற்கள்...

குருட்டு வவ்வால்கள் சுவற்றில் வெறி கொண்டு மோதுகின்ற சப்தம்
கட்டவிழ்க்கப்பட்ட தொலைதூர தனிமையொன்றில்
சேமித்து வைக்கப்பட்ட சொற்களின் மிகுதி
பொழுதிற்க்கொன்றாய் வடிவம் கொள்கிறது
புனைவுகளில் திளைக்கும் பாசாங்குகளற்ற சுயம்
சொற்களின் வசீகரிப்பில் அடையாளமிழந்து
நிரப்பப்பட்ட மதுக்கோப்பைகளை
ஒரே மூச்சில் காலி செய்கிறது

Saturday, July 7, 2007

The Name of the Rose - சிதைந்த பின்நவீனம்




உம்பர்டோ ஈகோவினால் 1980 களில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவல் 1986 ல் Jean-Jacques_Annaud இயக்கத்தில் சீன் கானரி மற்றும் ஸ்லேட்டர் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.

வெகு நாட்களுக்கு முன்பே இப்படத்தை பார்த்திருப்பினும் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் மூலமான நாவல் ஒரு பின்நவீனத்துவப் பிரதி எனத் தெரிந்து கொள்ளமுடிந்தது. மிகுந்த பதட்டங்களுடன் மீண்டும் ஒரு முறை பார்த்தபோதும் என்னால் இத்திரைப்படத்தில் பின்நவீனத்துவத்தின் சாயல்களைக் கூட பெறமுடியவில்லை.நேர்கோட்டில் சொல்லப்பட்ட ஒரு துப்பறியும் கதையாம்சம் கொண்ட திரைப்படம் அவ்வளவுதான்.புதினங்களை திரைப்படமாக்குவதில் ஏற்படும் சிதைவுகள் தமிழ்பரப்பில் மட்டுமல்ல பொதுவாக எங்கும் விரவி இருக்கும் சிக்கல்.வாசகனின் அணுகுமுறையைப் பொறுத்து புதினங்கள் திரைப்படங்களாக மாறுவதின் தர அளவுகோல்கள் நிர்ண்யிக்கப்படுகின்றன.

சகோதரர் வில்லியம் பாஸ்கர்வில்லே (சீன் கானரி) ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு நிகரான புத்திக்கூர்மை படைத்தவர். ஃப்ரான்சிஸ்கேன் எனப்படும் பதவியிலிருப்பவர்.ரோமன் கேதலிக் சபையில் மதக் கட்டளைகளை நிறைவேற்றும் பதவியிலிருப்பவரை இவ்வாறு அழைக்கிறார்கள்.இவரது சீடனாக அட்ஸோ(ஸ்லேட்டர்)இவர்கள் இருவரும் ரோமிலுள்ள மடாலயம் ஒன்றில் நிகழ்ந்த மரணத்தை விசாரிக்க செல்லுகின்றனர்.பாதிரியார்கள் வசிக்கும் அம்மடாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று அங்கு நிகழ்ந்த மரணம் குறித்த கேள்விகளுக்கு விடை காண இருவரும் செல்கின்றனர்.இறந்த மொழிபெயர்ப்பாளன் தற்கொலை செய்து கொண்டான் என அம்மடாலயம் அறிவிக்கிறது ஆனால் சீன்கானரி அது கொலையாக இருக்ககூடும் எனக் கருதுகிறார்.மேலும் அடுத்தடுத்து இரண்டு கொலைகளும் சம்பவிக்கின்றன.தொடர் கொலைகளால் பீதியடையும் மடாலய பாதிரியார்கள் சீன்கானரியின் துப்பறியும் திறமையை சந்தேகிக்கின்றனர்.புராதன நூலகம் ஒன்றில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் மற்றும் இறந்த அனைவரின் விரலிலும் நாக்கிலும் கானப்பட்ட மைக்கறைகள் மூலமாய் இக்கொலைகளுக்கு காரணம் ஏதோ ஒரு புத்தகமாயிருக்ககூடும் என கருதுகிறார் வில்லியம்.

மேலும் அந்நூலகத்தினுள் இரவு நேரத்தில் செல்ல அனுமதியும் அவருக்கு மறுக்கப்படுகிறது.நூலக உதவியாளன் கொல்லப்படுகிறான்.நூலகரின் வினோத நடவடிக்கைகள் வில்லியமின் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.வில்லியமும் அட்ஸோ வும் labyrinthine medieval library என சொல்லப்படும் புதிர்தன்மை நிறைந்த குழம்பச் செய்யும் வழிகளைக் கொண்ட அந்நூலகத்தினுள் சென்று அரிஸ்டாட்டிலின் இரண்டாவது புத்தகமான பொயட்டிக்ஸ் என்ற நூலை கண்டுபிடிக்கின்றனர்.இந்நூலை படிக்க முயன்ற அல்லது பிரதியெடுக்க முயன்ற அனைவரும் கொல்லப்பட்டிருப்பதை வைத்து இந்நூலை வேண்டாத ஒருவர்தான் இக்கொலைகளுக்கு காரணமாயிருக்க முடியும் என்கிற முடிவிற்க்கு வருகின்றனர்.



அதே சமயத்தில் அட்ஸோ மடாலயத்தில் மிகுந்த உணவை கொண்டு செல்லும் விளிம்புநிலைப் பெண்ணை சந்திக்கிறான்.ஒரு எதிர்பாராத தருணத்தில் அவளோடு கலவியில் ஈடுபடுகிறான்.

இருவரின் மேலும் நம்பிக்கை இழந்த மடாலயத் தலைவன் வேறொரு அதிகாரியை வரவைக்கிறான்.அவன் வந்த வேகத்தில் மடாலயத்தில் பணிபுரியும் குரூபி ஒருவனையும் உணவு திருட வரும் பெண்ணையும் கைது செய்கிறான் மடாலயத்தின் கொள்கைகள் பிடிக்காது தப்பிப்போக எண்ணும் பாதிரியார் ஒருவனையும் கைது செய்து இக்கொலைகளுக்கு அவர்தான் காரணம் என நம்பவைத்து மூவரையும் உயிரோடு கட்டி வைத்து எரிக்க மடாலயத்திடமிருந்து அனுமதி வாங்குகிறான்.

புத்தகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியின் முடிவில் இக்கொலைகளுக்கு காரணமான மடாலயத்தின் முதிர்ந்த பாதிரியாரை சந்தித்து விடுகின்றனர்.இப்புத்தகத்தை அவர் மறைத்ததற்க்கான காரனம் இப்புத்தகத்தின் அபரிதமான நகைச்சுவை நடையே என்கிறார்.




சிரிப்பென்பது கிறிஸ்து விற்க்கு எதிரான செயல் கிறிஸ்து ஒருபோதும்
சிரித்ததில்லை.சிரிக்கும்போது பயம் போய்விடுகிறது பயமில்லையெனில் அங்கே சாத்தான்
இல்லை சாத்தான் இல்லையெனில் கடவுளும் இல்லை



மத நம்பிக்கைகளின் அடிப்படையே உலுக்கிப்பார்க்கும் இது போன்ற புத்தகங்களை எவரும் படிக்க நான் விரும்பவில்லை என கத்தியபடி அந்நூலகத்தை எரிக்கிறான்.கைக்கு கிடைத்த புத்தகங்களை சேகரித்து வெளியே தப்பிக்கின்றனர் வில்லியமும் அட்ஸோ வும் கொழுந்து விட்டு எயும் தீயில் அப்பாதிரியாரும் மடிந்து போகிறான்.



தண்டனை பெற்ற மூவரையும் உயிருடன் கொளுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்போது திடீரென மடாலயம் தீப்பிடித்து எரிவதினால் எல்லாரும் குழப்பமடைந்து சிதறி ஓடுகின்றனர்.குப்பை மேடுகளில் வாழும் விளிம்பு மனிதர்கள் அப்பெண்ணை காப்பாற்றி கூட்டி செல்கின்றனர்.தப்பிக்க முயலும் விசாரணை அதிகாரியும் சில பாதிரியார்களும் கொல்லப்படுகின்றனர்.

இறுதிக்காட்சியில் வில்லியமும் அட்ஸோவும் திரும்பிச் செல்லும் வழியில் அட்ஸோவிற்க்காக காத்துக்கொண்டிருக்கும் அப்பெண்ணை தவிர்த்துப் போகிறான்.

இப்புத்தகத்தை நான் படிக்கவில்லையென்பதால் மூலம் சிதைக்கப்பட்ட கோபங்கள் எதுவும் எழவில்லை.புத்தகம் படித்து படம் பார்த்திராத சித்தார்த்தை இப்படம் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன்.

Thursday, July 5, 2007

பவுத்த அய்யனார் குடுமி அய்யனார் - யார்யா நீங்க எல்லாம்?

மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பேன்.வலைக்கு வந்த உடன் இந்த பேர் நல்லா இருக்குன்னு பெரிய பெரிய அறிவு ஜீவிங்கலாம் சொன்னாங்கன்னு ஒரேயடியா சந்தோசப்பட்டேன்.ஆனா இப்ப என்ன ஆச்சின்னா சுரா பத்தி பேசுனதும் சிலருக்கு சந்தேகம் வந்திடுச்சி ஆரம்பத்தில என் தோழர் நீ காலச்சுவடு அய்யனாரா ன்னு கேட்டிருந்தார்.இல்லைன்னு பதில் அனுப்பினேன் ஆனா சில அனானிகளுக்கெல்லாம் என் திரு உருவம் தேவைப்படுதாம் அதுவுமில்லாம அசுரன் ஐயா சில கேள்விகள் எழுப்பியிருக்கார். அதுனால இந்த சுய விளம்பரம் :)


நானும் கைவசம் இருக்கும் சில புத்தகங்களும்






இபன் பதூத்தா மால் புராதண கடிகாரம் முன்பு





இது ஆபிசுல


இதுல தெளிவா தெரியுறேனா

Wednesday, July 4, 2007

ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல்



குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின்மீது
படிந்திருக்கும் புனிதங்களை
எதைக் கொண்டழிப்பதெனத் தெரியவில்லை
உன் உபயோகித்த நாப்கின்கள்
இடைவிடாது பேசியபடியிருக்கும்
இப்புனிதர்களின் துவாரங்களை
அடைக்க ஏதுவாய் இருக்கலாம்

எப்படி வெளித்துப்பினாலும்
சளியின் வெண்மை திரண்டு
உள்ளேயே தங்கிவிடுகிறது வன்மத்தின் கசடுகள்
மேலும் அது
யாரும் எதிர்பாராதொரு தருணத்தில்
எதிராளியின் முகத்தில் தெறித்து
தன் இயல்பின் முகம் காட்டி
கூரிய பற்களில் சிரிக்கிறது

புனிதமும் வன்மமும் அழிந்த வெளியில்
நரம்பு துடிக்க வெளிப்படும்
ஸ்கலிதம்
பெருங்கொண்ட சிரிப்பின் மூலமாய் மீட்டெடுக்கிறது
ஆதியின் மூல வடிவங்களை

Sunday, July 1, 2007

இபன் பதூத்தும் புரூஸ் வில்சும்

துபாய் அரபிக்களின் உருவம் போலவே இங்கே மால்கள் எல்லாம் டபுள் எக்ஸெல் சைசில்தான் இருக்கும்.இந்த வாரம் இபன் பதூத்த மால் சென்றபோது அதன் பிரம்மாண்டம் ட்ரிபிள் எக்ஸெல்லாக இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது.வெகு நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது இந்த மால்.6 நாட்டு மக்களின்(இந்தியா,சீனா,பெர்சியா,எகிப்து,துனிசியா,அண்டாலூசியா)கலாச்சாரம் மற்றும் அவர்களின் பழக்க வழக்கம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் கட்டிட அமைப்பு மற்றும் உள்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.IMAX தியேட்டர் பார்த்ததும் சந்தோஷம் பொங்கியது துபாயில் இந்த மாலில் மட்டும்தன் imax வசதி இருக்கிறது.live free or die hard ஆறு மணி ஷோ விற்க்கு டிக்கெட் வாங்கிகொண்டு இருந்த 1 மணி நேரத்தில் மாலை சுற்றி வந்தோம் Abu Abdullah Muhammad Ibn Battuta என்கிற 13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொராக்கோ பயணியின் பெயர்தான் இந்த இபன் பதூத்.மார்க்கோபோலோவிற்க்கு நிகராக இவர் உலகை சுற்றி வந்திருக்கிறார்.சீனா கோர்ட் அட்டகாசமாய் இருந்தது.கூரை வேலைப்பாடுகள் வெகு நுணுக்கமாய் செய்யப்பட்டிருக்கிறது.கோடைகால விழாக்களின் அங்கமாக சீனப்பெண்களின் நடனம் பார்த்தோம்.அநியாயத்திற்க்கு ஒல்லியாய் இருந்த பெண்கள் வளைந்து நெளிந்து ஆடியது நன்றாக இருந்தது.இந்த மொத்த அரங்கையும் சுற்றிவர கண்டிப்பாய் ஒரு நாள் தேவைப்படும் அடுத்த முறை வரும்போது கதிரையும் ஒரு நல்ல கேமராவையும் உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.இரண்டும் வாய்க்கும்போது விரிவாய் எழுதுகிறேன்.இவர்தாங்க இபன் பதூத் முதல் அரேபிய பயணி .

சீனா கோர்ட் பாருங்க.


புரூஸ் வில்ஸ் க்கு என்ன வயதிருக்கும் இப்போன்னு யோசிச்சிட்டெ உள்ளே நுழைந்தேன்.விறுவிறுப்புக்கு படம் எந்த குறையும் வைக்கல.நம்ம காதுல பூ சுத்தனும்னா அதுக்கு ஹாலிவுட் காரனுங்கள விட்டா ஆளே கிடையாது ஆனா கொஞ்சம் சுவாரசியமா சுத்துவானுங்க அப்படிங்கிறதால லாஜிக் எல்லாம் மறந்திடனும்.


52 வயசானாலும் மனுசன் துரு துரு.கிண்டலா படம் முழுக்க பேசியபடி ஏகப்பட்ட சாகசம் பன்றார்.இந்த முறை இந்த டீம் மென்பொருள்துறைய மய்யமா வைத்து அமெரிக்காவை தீவிரவாதிகள் எப்படி ஆக்கிரமிக்கிறாங்க அதை நம்ம ஆள் எப்படி முறியடிக்கிறார்னு ரொம்ப வித்தியாசமா சிந்திச்சி இருக்காங்க.மனுசன் கல கல ன்னு பேசியபடி அதம் பன்றார்.கணினி ஹேக்கர்ஸ் அப்படின்னு சொல்றாங்க அதாவது கோடிங்க் அல்கோரிதம் மூலமா ஒரு குறிப்பிட்ட கண்ணிய ஆக்ரமிச்சி அக்கணினிய பயன்படுத்துகிறவரை கொல்ல முடியுமாம்.அந்த மாதிரி ஒரு ஹேக்கர் ஜஸ்டின் லாங் அவரை கைது செய்ய நம்ம ஆள் போறார்.அவனை கொல்ல வரும் ஒரு பெரிய கூட்டத்திலிருந்து காப்பாத்தி fbi தலமை அலுவலகத்திற்க்கு கொண்டு போறார்.அதுக்குள்ள ஒரு தீவிரவாத கும்பல் அமெரிக்காவின் தகவல் தொடர்பு கோடிங் எல்லாம் திருடி தங்கள் வசமாக்கிடுறாங்க.தொலைபேசி,டிராபிக்,மின்சாரம் இப்படி எல்லாத்தையும் செயலிழக்க செய்திடுறாங்க.டிவில வெள்ளை மாளிகைய வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல் காண்பித்து பீதியை கிளப்புகிறார்கள்.ஒரே களேபரமான சூழலில் இந்த ஜஸ்டின் லாங் உதவியுடன் தீவிரவாதிகளை எப்படி தனியாளா அழிக்கிறார்ங்கிறதான் படம்.

வில்லியா நடிச்சிருக்க மாகி க்யூ (ஜஸ்ட் டூ மினிட்ஸா நீங்களும்:))செம க்யூட் இவரை அடித்து கொல்லும் புரூசை மன்னிக்கவே முடியல

ஹைடெக் கா சிந்திச்சிருக்கானுங்களேன்னு சந்தோஷப்படுவதற்க்குள் திருஷ்டி மாதிரி புரூஸ் பொண்ணை வில்லனுங்க கடத்தி கட்டிபோட்டுர்ரானுங்க (திருந்தவே மாட்டிகளாடா?)

எல்லாம் முடிந்த பின் வரும் போலிஸ் படை பார்த்து சிரிப்புதான் வருது யோவ் எங்க ஆளுங்களே திருந்திட்டானுங்கய்யா!

புரூஸ் சுரங்க பாதையிலிருந்து காரை கிளப்பி ஹெலிகாப்டரை வெடிக்க வைக்கிறார்.இதெல்லாம் ரொம்ப வருசத்துக்கு முந்தியே நம்ம கேப்டன் பண்ணிட்டார்.என்ன அவர் பைக்ல ஜம்ப் பண்ணி ஹெலிகாப்டர மோதிட்டு தாவி குதிப்பார்.இவிங்க கொஞ்சம் வசதி அதான் கார்.

கிளைமாக்ஸ் கிராபிக் மயமா இருந்தாலும் கலக்கல்.

நல்லா விறுவிறுன்னு ஒரு படம் நல்ல தியேட்டர்ல பாத்திங்கன்னா சவுண்ட ரசிக்கலாம்

Featured Post

test

 test