Saturday, June 30, 2007

பன்முகத்தன்மை கொண்ட உண்மை- சுகுணாவிற்க்கு சில பதில்கள்

சுந்தர ராமசாமி குறித்த எனது புரிதல்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் மிகவும் செறிவான ஒரு படைப்பு என்பது என் புரிதல்.நம்பகத் தன்மைக்கு வெகு அருகில் வாசகனை கொண்டு சென்ற யுக்தி தமிழில் புதிதான ஒரு களமாய் இருந்தது.புளியமரத்தின் கதையும் எனக்கு பிடித்தமான ஒரு படைப்புதான்.குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் குழந்தைகள் மிகவும் பரிச்சயமானவர்களாக இருந்தனர்.பசுவய்யா என்ற பெயரில் இவர் எழுதிக்குவித்த கவிதைகளின் மீது ஈர்ப்பில்லை.இவர் பார்ப்பனர் என்பதும் இந்துத்வத்தை வளர்க்க அரும்பாடுபட்டார் என்பதெல்லாம் சுகுணா மூலமாக அறிந்தவை.அவை நிஜமெனில் அதற்க்கான எதிர்குரல்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கும்.

ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்.படைப்பாளி என்பவன் இந்த கட்டுக்களை மீறியவன்.அவன் எழுத்தை விமர்சிக்கும் தகுதி படைப்பு புரிந்தவனுக்கு அல்லது எந்த ஒரு வாசகனுக்கும் உரிமை உண்டு.ஆனால் அவன் பிறப்பை முன் வைத்து கேள்வி எழுப்புவது அபத்தமாய் படுகிறது.

சுகுணா திவாகரின் எழுத்தை கொண்டாடும் நான் அவரின் சில புரிதல்களில் வேறுபடுகிறேன்.ஒரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரன் பெரும்பாலான வாசகனை தன் வசம் கொண்டிருக்கும் படைப்பாளி சக எழுத்தாளனை தூற்றும்போது அவன் மறைமுகமாக அவ்வெழுத்தாளனை கொலை செய்கிறான்.சுரா வின் எழுத்துக்களை படித்திராதோர் சுகுணா திவாகரின் கட்டுரைகளை படித்து சுரா வை புறந்தள்ளக்கூடும்.தன்னை ஒரு கலகத்தின் குரலாய் எப்போதும் முன்நிறுத்திக் கொள்ளும் சுகுணா சுரா விதயத்தில் போராளியாகவே செயல்படுகிறார்.சுராவின் எழுத்துக்களை படிக்கும் ஒருவர் இனிய தோழியாகவே இருப்பினும் அவரை கொலை செய்யக்கூட சுகுணா தயங்குவதில்லை.இந்த அளவு வன்மம் தேவை இல்லை என்றுதான் படுகிறது.

கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தமிழ்பரப்பில் மிகுந்துள்ள இச்சூழலில் ஏன் ஏற்கனவே இறந்த ஒன்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்?.வைரமுத்து,வாலி மற்றும் குறிகளை எழும்பச் செய்யும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களான தமிழின் திரைப்பட கவிகளை ஒருபோதும் கொல்ல நினைத்ததில்லையா நீங்கள்?சுஜாதாவை தூக்கிலிட நீங்கள் ஆசைப்பட்டதற்க்கு கூட சாதிய பின்புலம் மட்டும் காரணமாக இருக்காது என நம்புகிறேன்.

தமிழ் வலைப்பதிவுக்கு வந்த போது நான் அதிர்ந்த ஒரு விதயம் என் தமிழ் சொற்கள். நான் தமிழென நம்பிக் கொண்டிருந்த அத்தனை வார்த்தைகளும் கலப்பு வார்த்தைகளாக இருந்தது சிறிது அதிர்ச்சியை கொடுத்தது.இதற்க்கான காரணத்தை ஆராய்ந்த போது நான் படித்தபுத்தகங்கள்.வெகு நேர்த்தியாய் தன் மொழியை கலந்துவிட்டிருந்த எண்ணற்ற பார்ப்பன எழுத்தாளர்கள் எனக்கே தெரியாமல் என் மொழியை சிதைத்து விட்டிருந்த அவர்களின் ஆளுமையை என்னவென்று சொல்வது.

அவர்களை சரியாய் அடையாளம் கண்டுணர்ந்து புறந்தள்ள வேண்டிய கடமை அல்லது சரியாய் அடையாளப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் இருப்பதாக உணர்கிறேன்.இருப்பினும் பாரதியை குறித்தெழும் விமர்சனங்களுக்கும் சுரா,ஜெயமோகன் குறித்தெழும் விமர்சனங்களுக்கும் பிரதானமாய் முன்நிற்பது சாதிய பின்புலம் மட்டுமே என்பது வேதனையளிக்கிறது.
படைப்பு குறித்த விமர்சனங்களும் மறைமுகமாக சாதியை முன் வைப்பது தவறாக படுகிறது.

ஒரு படைப்பாளி இறந்தபின்பு அடையாளம் காணப்படுவது துயரமானது.வாழும்போது வறுமையில் உழலவிட்டு செத்த பின்பு சிலை வைப்பதும் விருது கொடுப்பதும் எந்த அளவிற்க்கு பிரயோசனமில்லாத செயலோ அதற்க்கு நிகரானது இறந்த ஒருவரை தூற்றுவதும்.பிரமிள் குறித்த ஞானக்கூத்தனின் விமர்சனங்கள் வெறுப்பையே தந்தது.ஞானக்கூத்தனின் கவிதை தொகுப்பை தெருவிலெறிந்து என் வன்மத்தை தீர்த்துக் கொண்டேன்.பிரமிள் படிமத்தின் தந்தை எண்ணற்ற சன்னல்களை திறந்த அபூர்வ படைப்பாளி அவரின் படைப்பு குறித்து கேள்விகளும் மட்டமான விமர்சனங்களையும் பதிவித்திருந்த ஞானக்கூத்தன் தனக்கிருக்கும் கொஞ்ச பெயரையும் கெடுத்துக்கொண்டார்.தமிழில் மட்டும்தான் இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைகள் மலிந்து போனதாய் படுகிறது.வெகுசன பரப்பில் நஞ்சை கலந்துகொள்ள ஆகச்சிறந்த படைப்பாளிகளை அனுமதித்துவிட்டு செறிவான படைப்பாளிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதும் மலிந்து போன குழு அரசியலும் வெறுப்பையே தருகிறது.

விருதுகளுக்கான அரசியல் இதைவிட கேவலமாய் இருக்கிறது விருது பெறும் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வேற்று மொழி வாசகனை சென்றடையும்போது அப்படைப்பின் தரம் அம்மொழிக்காரனை தமிழின் இலக்கிய தரத்தின் எல்லைகளை நினைத்து நகைக்கச் செய்யாதா? நம் மொழியின் சிறந்த படைப்புகள் சரியாய் அடையாளங்காணப்படாததிற்க்கும் சரியான படைப்பாளி சரியான அங்கீகாரத்தை பெறாததிற்க்கும் இதுபோன்ற ஒற்றைச் சாளர விமர்சனங்களே காரணமாயிருக்க முடியும்.

வைரமுத்துவிற்க்கு விழா எடுப்போம் மேத்தாவிற்க்கு இன்னும் பல விருதுகள் கொடுப்போம் சுஜாதாவிற்க்கு சிலை வைக்கலாம் சிங்காரத்தின் பெயரை தேடி அழிப்போம் நாகராஜனின் புதை மேடுகளில் போனால் போகட்டுமென சில பூக்களை மட்டும் மலர அனுமதிக்கலாம்.வாழ்க தமிழிலக்கியம்! வாழ்க கருத்து சுதந்திரம்!!

இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.

Tuesday, June 26, 2007

வரலாறுகளை சிதைக்காமல் பதிவித்தல்


நிழல்களைத் துரத்தி சலித்த மணிகண்டன்
வெம்மையான பரப்புகளில் புதைந்து கொள்ள இடம் தேடியலைகிறான்
நகரத்தில் வீழ்த்தப்பட்ட ஓணானென மல்லாந்திருக்கும் குணா சிறுநீரில் விந்து கலந்திடா பால்யத்திற்க்குத் திரும்புகிறான்
தேவதையின் மடிகள் களவு போன வன்மத்தில் சுந்தரராமசாமி ரசிகைகளை தேடிக் கொல்கிறான் சுகுணாதிவாகர்
சிதறுண்ட பிணங்களைக் குறிப்பெடுத்து ஓய்ந்த தமிழ்நதி யசோதரையின் பஞ்சணைக் கண்ணீருக்கு பதில் கேட்டு புத்தரை வம்புக்கிழுக்கிறாள்
அடர்கானகங்களில் நீலியை புணர புலியின் குறிகளை வேண்டி மிருக நினைவுகளில் நிகழ் தொலைக்கிறான் அய்யனார்
சிட்டுக்குருவிகளை பிரசவிக்க முடியாது போன துக்கத்தில் கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி அடுத்த கதவுகளை நோக்கி நகர்கிறாள் நிவேதா
காயத்ரியின் பொங்குதல்கள் லக்ஷ்மியின் விரலிடுக்குகளில் வழிகிறது
எல்லாருக்கும் முதுகு காட்டி தனியே அமர்கிறாள் சந்திரமதி

மதி மதி வளரும் மதி வளரா மதி என உளறி கொட்டியபடி உள்ளே குதிக்கிறதொரு ஓடுகாலி

பைத்தியமாகிறது தமிழ்பரப்பு




Friday, June 22, 2007

இருப்பை நிறைவாக்கும் பெருமிதங்கள்

எட்டு பெருமைகளை எழுதுங்கன்னு ரொம்ப யோசிக்க வைத்த நிர்மலா,குசும்பன்,நாகைசிவா விற்க்காக

வலைப்பதிவில் நான் பார்த்து பிரம்மிக்கும் ஒரு குணம் பெரும்பாலானோரின் வாழ்வும்,சிந்தனையும்,பேச்சும்,செயல்களும் ஒரே நேர்கோட்டில் இணைவதுதான்.அதற்க்கு உதாரணம் அடிக்கடி சுற்றி சுற்றி வரும் இவ்விளையாட்டுக்களில் காணப்படும் பொதுப்பண்புகள்.

1.இருப்பு கொள்ளாது அலையும் என் நிகழ்.

எந்த ஒரு புள்ளியிலும் தேங்கிடாத,தேங்க விரும்பாத என் சிக்கலான மனம்.அலைவும் திரிபும் என் இயல்பான குணமாய் அமைந்து விட்டது.இந்த குணத்தினால் நிறைய சிக்கல்களைத்தான் அதிகம் சந்தித்து முடிந்தது என்றாலும் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அற்புதம்.என் 9 வருட பணி அனுபவத்தில் இதுவரை 10 நிறுவனங்கள் மாறிவிட்டேன்.தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில்,நகரங்களில் எல்லாம் வாழ்ந்தாயிற்று.இப்பாலைக்கு வரும்போதும் எவ்வித பின் யோசனைகளும் இல்லாமல் ஒன்றிலிருந்து தப்பிப்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது மிகுந்த பெருமையிருந்தது.

2.வலையில் பதிவது

எனக்கான ஒரு தளம், என் தாங்கொணா தனிமையின் மீட்பு இவ்வலைப்பதிவென்று சொல்லலாம்.மிகவும் சந்தடியான இடத்திலும் நண்பர்கள் புடைசூழ வாழ்ந்திருப்பினும் நான் மிகத்தனிமையானவனாகவே உணர்ந்தேன்.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாததாகவே இருந்து வந்தது.இவ்வலையில் பதிந்த சில கவிதைகளே நிறைய நண்பர்களை கொண்டு வந்து சேர்க்கப் போதுமானதாக இருந்தது.இப்போது இந்த நிரம்பி வழியும் தனிமையிலும் மிகுந்த சன சந்தடியில் அடையாளம் தெரியும் ஒரு நபராக என்னை உணரச்செய்திருக்கிறது இவ்வலைப்பதிவும் தமிழ்மணமும். மிகுந்த பெருமைகளோடு கடந்து போகிறது என் நாட்கள்

3.புத்தகங்கள்,திரைப்படங்கள் மற்றும் என் ரசனை

மந்தையிலிருந்து தனித்து தெரிவதற்க்காக நான் நாடியது புத்தகங்களைத்தான்.தமிழின் பெரும்பாலான முக்கிய புத்தகங்களை படித்திருப்பதும் சில நூறு நல்ல திரைப்படங்களை பார்த்திருப்பதும் தொடர்ந்து இவைகளைத் தேடி அலைவதும் நான் பெருமைப்பட்டு கொள்ளும் செயல்கள்.மேலும் என் ரசனைகளின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கைகள் எப்போதுமே பெருமையான ஒன்றுதான்.

4 தியானம் மற்றும் உள்சார்ந்த தேடல்கள்

பிறந்த ஊரின் மகிமையோ என்னவோ அகத்தேடல்கள் ரமணரின் மூலமாக ஆரம்பித்தது பின் மெல்ல நகர்ந்து ஓஷோ,ஜேகே,புத்தர்,கொல்லிமலை சாமியார்களென முடிவற்ற ஒன்றின் பின்னால் சில காலம் அலைந்துகொண்டிருந்தேன்.எனக்கு மிக இணக்கமாகவும் என் சிறுமைத்தனங்களிலிருந்து வெளிவரவும் ஓஷோ மிகவும் உதவினார்.அவர் பிறந்த வீட்டில் விழுந்து புரண்டது, ஓஷோ சன்னியாசியாக என்னை மாற்றிக்கொண்டது இவை போன்றவை எனக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் இடியே விழுந்தாலும் சற்றுத் தள்ளி உட்காரும் மனோபாவத்தையும் ஒருங்கே தந்தது.

இனி கொஞ்சம் கொசுவர்த்தி.இவையெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் பெருமையாக,மிதப்பாக இருந்ததென்னமோ உண்மை

5.நண்பர்கள்

எனக்கான நண்பர்கள் கூட்டம் சற்று அதிகம்தான் இதற்க்கான காரணம் வேவ்வேறு சூழலில் வாழ்ந்ததுதான். திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்,பாண்டி, சென்னை,மதுரை,ஷார்ஜா,துபாய் என வெவ்வேறு இடங்களில் என் இருப்பு குறித்த அலைவுகளில் நான் சேர்த்து வைத்தது நல்ல நண்பர்களைத்தான்.என்னோடு முதல் வகுப்பு படித்த நண்பர்களுடன் இன்னமும் தொடர்பு இருக்கிறது.திருவண்ணாமலையில் நண்பணோடு ஏதாவது ஒரு இடம் செல்ல நேரும்போது வழியில் குறைந்த பட்சம் ஒரு பத்து பேருக்காவது ஹாய் மச்சான் இல்லைன்னா வண்டிய நிறுத்தி ஒரு பத்து நிமிட பேச்சு இல்லாமல் நான் எங்கு சென்றும் சேர்ந்ததில்லை.

6 ரொம்ப நல்ல பையன்

இப்படித்தான் ஒரு பெயர் வங்கி வைத்திருந்தேன் என் பதினைந்து வயதுவரை.பத்தாவது படிக்கும் வரை எப்பவும் நான்தான் முதல் மாணவன்.ஆனால் இறுதி தேர்வில் இரண்டாவதாகத்தான் வர முடிந்தது நல்ல மதிப்பெண்கள் என்பதால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.இறுதித்தேர்வை விட மாணவர் மன்ற தமிழ்த்தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தது அப்போது மிகப்பெருமையாய் இருந்தது.என் பதினாறாவது வயதிலேயே இப்பிம்பத்தை உடைத்ததுதான் என் சாதனை.

7.தமுஎச அறிமுகம் மற்றும் கலைஇலக்கிய இரவின் பரிசு

படிப்பைத்தவிர பள்ளியில் எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கிவிடுவேன்.பேச்சு,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசாவது என் பெயரில் வந்துவிடும்.சமீபத்தில் என் வீட்டில் பத்திரமாய் வைத்திருந்த 50 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பார்த்துக் கொண்டிருந்த போது மிகப் பெருமையாக இருந்தது.சொல்லிக் கொள்ளும்படியான பரிசு 93 ம் வருட கலை இலக்கிய விழாவில் பவா.செல்லதுரை கையினால் பாரதி பற்றிய பேச்சிற்க்கான முதல் பரிசை ஒரு நள்ளிரவு குளிரில் நடுங்கியபடி வாங்கியது.மேலும் சில இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் சிறிய வயதிலே கிடைத்தது

8.காதலுக்கு அட்வைஸர்

கல்லூரியில் படிக்கும்போது இந்த பதவி எப்படியோ வந்து சேர்ந்தது அபத்தமாய் கவிதை கிறுக்குவதும்,இளையராஜா பாடல்களை நன்றாய் தெரிந்து வைத்திருந்ததும் எப்போதும் கனவில் மிதப்பது போன்று திரிவதும் நண்பர்களை அதுவும் காதல் வயப்படும் மாணவர்களை என் பக்கம் ஈர்த்தது,எவனுக்கு காதல் வந்தாலும் என்னிடம்தான் கவிதை கேட்பார்கள்.இலவச கடிதமும் காதல் கவிதையுடன் எழுதித்தரப்படும் னு போர்டு தான் மாட்டல.இதனால் நிறைய நாள் தூக்கம் போச்சு இந்த பசங்க அரை பீரை குடிச்சிட்டு கன்னா பின்னான்னு பெணாத்துவாங்க கொஞ்சம் கூட சலிச்சிக்காம கேட்டு அவனோட உணர்வுகளை மொத்தமாய் ஒரு கடிதத்தில் எழுதி கொடுப்பேன்.ஆனா ஒரு சோகம் பாருங்க எனக்கு காதல் வந்தப்போ இதயம் முரளி மதிரிதான் நடந்துகிட்டேன்.படபடக்கும் மனசோட ஒரு பெண்ணை நேசிப்பது மிகவும் அற்புதமான ஒரு விதயம்னு அப்போது தோன்றியது.ஆனால் இந்த வயதில் சேர்த்து வைத்த இந்த அறிவுக்குப்பைகளால் காதல் மிக அபத்தமாய் கேலிக்குரிய செயலாய் தோன்றுவது நல்லதா?கெட்டதா?

நான் அழைக்கும் எட்டு பேர்

1.சித்தார்த் (கண்டிப்பா எழுதனும் ராசா)
2.மதி கந்தசாமி (திரட்டில இல்லனாலும் வந்து படிப்போமில்ல)
3.சுகுணா திவாகர் (இவர் எழுதுவாரா?)
4.டிசே தமிழன் (வேற யாராவது கூப்பிட்டுட்டாங்களோ?)
5.பொன்ஸ்(போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆச்சிங்கோவ்)
6.லக்ஷ்மி (சுவாரசியமான தகவல்கள் இருக்கும்னு நம்புறேன்)
7.ஜெஸிலா (எட்டுதான்னு இல்ல நிறையவும் எழுதலாம்)
8.கோபிநாத் (ஊர்ல இருந்தபடியே எழுது கண்ணா)


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு இடமாற்றம்



மழையின் காரணமாக சென்னை வலைப்பதிவர் சந்திப்பு கீழ்கண்ட இடத்தில் நடைபெறும்

நாள்: 24.ஜூன்.2007.
நேரம்: மாலை 4 மணி முதல் 6.30 வரை.

இடம்:

வித்லோகா புத்தக கடை,
ராபியா பில்டிங்,
238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
(பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
மைலாப்பூர், சென்னை-4.

பேச: 9940045507.

மழையோட சந்திப்பும் முகங்களற்ற நட்பின் சந்திப்பும் வெகு அற்புதமா இருக்கும் வாய்ப்பை நழுவவிடாதீங்க மக்கா!!

Wednesday, June 20, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் பாசக்கார குடும்பம்


எங்க பாசக்கார குடும்ப மக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வாழ் பதிவர்களை சந்திக்க உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்து சென்னைக்கு வராங்க. நீங்க உங்களோட பொன்னான நேரத்த ஒதுக்கி சந்திப்பில் கலந்துக்குங்க நண்பர்களே!
கலந்து கொள்ளவிருக்கும் குடும்ப மக்க..
டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி,சென்ஷி
துபாயிலிருந்து அபிஅப்பா,கோபி
இடம்: காந்தி சிலை, மெரீனா கடற்கரை.
நாள்: 24.ஜூன்.2007.
நேரம்: மாலை 4 மணி முதல் 6.30 வரை.
போட்டோ உதவி - அருள்குமார் ..(தல! பர்மிசன் கேக்கல ன்னு கோச்சிக்க மாட்டிங்க இல்ல :) )

Tuesday, June 19, 2007

அவன் அவள் மற்றுமொரு அவள் மேலதிகமாய் சாயந்திர மழையும்



அவனும் அவளும் சந்தித்துக் கொண்டது ஒரு மழை நாளின் மாலையில்.ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாமெனினும் அப்போதுதான் பேசிக்கொண்டார்கள்.ஒரே புள்ளியில் அவர்கள் நிலைபெற்றிருப்பினும் அந்த மழை மாலைக்கு முந்தய கணம் வரை ஏனோ அவர்கள் பேசிக்கொண்டதில்லை.எந்த ஒன்றின் அவசியத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள் என்பது இன்றுவரை புதிராகவே இருந்து வருகிறது.பிறகெப்பாவது அந்த கணத்தை தவிர்த்திருக்கலாமோ என்கிற இயலாமைகளின் புலம்பல்கள் தோன்றாத வரை அக்கணம் எப்போது நினைத்தாலும் சிலிர்ப்பையே ஏற்படுத்தி வந்திருக்கிறது.முதலில் வெட்கங்களும் தயக்கங்களும் மிகுந்தவளாய் ஒரு பொய்த்தோற்றத்தை அவள் நிர்மாணித்தாள் பின்பு ஏதோ ஒன்று உடைந்ததைப் போன்று பேச ஆரம்பித்தாள்.பருவ முடிவுகளில் பெரும்பாலும் மாலை நேரத்திலே ஏன் மழை பெய்கிறதென்பது அவளின் நெடுங்கால சந்தேகமாய் இருந்து வந்திருக்கிறது.மெல்லிய தூறலில் நனைவதென்பது அவளுக்கு பிடித்தமான ஒன்றாம்.இடியுடன் மழை பெய்தால் போர்வைக்குள் சுருண்டு கொள்வாளாம்.தமிழ் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஒரு மட்டமான கவிஞனின் சில வரிகளை சொல்லி சிலாகித்தாள்.அதிக புத்தகங்கள் விற்றுத்தீர்க்கும் மூன்றாந்தர கவிஞன் ஒருவனின் கவிதை தொகுப்புகள் அத்தனையும் பிடிக்குமாம்.பின்பு அவனை பற்றி பேச ஆரம்பித்தாள்.அவனின் மெளனம் அவளுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.அவனின் அறிவுஜீவித்தனம் குறித்தெழும் விமர்சனங்களின் மீது அவளுக்கு உடன்பாடு இருந்ததில்லையென்றும் எப்போதும் விவாதங்களை தவிர்க்கும் அவனின் அனுகுமுறை பிடித்தமான ஒன்றாக அவளுக்கு இருந்து வந்திருக்கிறது எனவும் சொன்னாள். அவன் தலைவாரி இருக்கும் முறை தன் ஆதர்ச தமிழ் சினிமா கதாநாயகனின் சாயலை ஒத்திருக்கிறதெனவும் சிலாகித்தாள்.அவன் தலையசைப்புகளோடும் குறுநகைகளோடும் அவள் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தான் நீரில் மென்காற்று சுழியிடும் வட்டங்களைப் போல அவை விரிந்தும் குவிந்தும் விலகியும் நெருங்கியுமாய் பல்வேறு தோற்றங்களை பதிவித்துக்கொண்டிருந்தது.அவளின் முலைகள் அம்மழை மாலையில் அவனினுள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தன் ஒற்றை சடையை முன்புறம் தொங்கவிட்டு விரல்களால் அவற்றை பிடித்தபடியுமாய் பேசிக்கொண்டிருந்த அவளின் முகத்தில் மழைத்துளியொன்று பட்டுத் தெறித்த கணத்தில் அவளைக் காதலிப்பதென்று முடிவு செய்தான்.

பின்பொரு பேருந்தில் அருகருகே அமர்ந்து சென்றபோது அவளின் வாசம் மிகுந்த இணக்கமாய் இருந்ததவனுக்கு.மழை விட்ட பின்பும் சொட்டிக்கொண்டிருக்கும் தூறலை நினைவு படுத்திய அவளின் பேச்சு மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது.ஒரு திருப்பத்தில் அவள் விடை பெற்று சென்ற போது இதே கணத்தில் எப்போதோ இருந்ததாய் அவனுக்கு தோன்றியது இதே கணத்தைப் போன்றதொரு முன்பொரு கணத்தின் தொடர்ச்சியா அல்லது இது புதிதா என்பது குறித்த சந்தேகங்களுடன் நகர் விட்டு தள்ளியிருக்கும் அவன் இருப்பிடம் சென்று தாழிட்டுக்கொண்டான்.அவனின் கதவுகள் வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் தூங்கிப்போகும் அவன் இரவுகள் அன்று விழித்துக்கொண்டது.

புகைவளையங்களுக்கு நடுவே அவன் அறிவுஜீவி தோழியின் நினைவு வந்து போனது.

தனது மிருக நினைவுகளை அவன் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் வழி தப்பி அலைந்து கொண்டிருந்த அவளை சந்திக்க நேரிட்டது.அவளின் அலைவுகளில் துக்கம் கவிழ்ந்திருந்தது.இடைவிடாமல் துயரத்தை சிலாகித்த வண்ணம் எப்போதும் புகைத்துக் கொண்டிருப்பாள்.புலிப்படிமம் மீதவளுக்கும் கிளர்ச்சி இருந்தது தானொரு பெண்புலியாக எனது தனிமை புனைவுகளில் உருவமெடுத்துக் கொள்கிறேன் என அவள் இருகிய முகத்தோடு சொன்னபோது அவனுக்கு மனம் பிறழ்ந்தது.ஒரு நாள் அவளுடைய ஓவிய கூடத்திற்க்கு அவனை கூட்டிச் சென்றாள்.தொடர்ச்சியாய் ஓவியங்களை வரைவது அவளுக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது அவள் வரையத்தொடங்கி முடியும் தருவாயில் பெரும்பாலும் அவை புலிகளாக மட்டுமே உருவம் கொள்கிறதென வருந்தினாள்.புலியின் ஓவியம் தவிர என்னால் வேறெந்த ஒன்றையும் வரைந்து விட முடிவதில்லை என் அவள் துயருற்ற போது அவன் அவ்வோயியங்களை பார்க்க கேட்டான்.அதற்க்கு அவள் தான் வினோத குணம் ஒன்றைக் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாய் பத்து ஓவியங்களை வரைந்த பின் மொத்தமாய் சுருட்டி எடுத்துக்கொண்டு நள்ளிரவில் கடற்கரையில் எறிந்துவிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.அதற்க்கான விளக்கம் கேட்டபோது பதில் அவளிடம் இருக்கவில்லை.

வினோதங்களின் மொத்த உருவமாய் அவள் தன்னை முன் நிறுத்த விழைந்தது அவனுக்குப் பிடித்திருந்தது.இன்றைய இவளின் மயக்கத்தில் தோன்றிய காதலிக்கும் முடிவுகள் அப்போதும் தோன்றியதவனுக்கு.அவன் தன்னுடைய காதலை கடற்கரை இருளில் அவள் விரல்களைப் பற்றியவாறு மனம் நெகிழ்ந்து சொன்னபோது அவள் பெருங்குரலெடுத்துச் சிரித்தாள்.நீ முப்பதாவது ஆள் என அவள் சொன்னபோது அவனுக்கு கோபம் வரவில்லை மாறாய் அவளின் மீதான காதல் எண்ணம் வலுப்பெற்றது.மேலும் அவள் நீ என்னைப் புணர்வதென ஆசைப்பட்டாள் இந்த வெளியில் இந்த இருளின் துணையொடு என்னைப் புணர்ந்து கொள் காதல் என்றெல்லாம் பிதற்றாதே அந்த சொல் இப்போது புழக்கத்தில் இல்லை என்றாள்.முகத்திலறைபட்ட அவன் தனக்கான புனிதங்களை சேமித்தபடி
இல்லை புணர்வதில்லை என் நோக்கம் உண்மையிலே உன்னை காதலிக்கத் தோன்றியது உன் ஆளுமை எனக்குப் பிடித்திருக்கிறது
என்றபடி தனது பசப்பு வார்த்தைகளை துணைக்கழைத்து அவளின் நிகழ்வை சிதைத்தான்.

அவளை விட பதினைந்து வயது சிறிய அவனது விடலைப் பருவத்தின் கிளர்ச்சிகளே இப்பிதற்றல்களுக்கு காரணமெனப் புரிந்த அவள் அவனிடம் ஒரு சிறிய விளையாட்டைத் தொடங்கினாள்.தொடர்ச்சியாய் காதல் கவிதைகளெழுதியும் ஒரே நாளில் முப்பது பக்கத்திற்க்கு கடிதமெழுதியும்,தமிழ் சினிமா நாயகிகளை அப்படியே பிரதிபலிக்கும் த்வனியில் அவனை, அவன் இளமையை மிகுந்த குரூரங்களோடு ஆக்ரமித்தாள். இருவரின் நிகழும் வேறெந்த தளத்திற்க்கும் நகரவியலாது சில மாதங்கள் உறைந்து போனது.ஒரு நள்ளிரவு மழையில் தட்டப்பட்ட அவன் அறைக்கதவுகளை திறந்தபடி வெளிவந்த அவன் குழம்பி நின்றான் மழையோடு மழையாய் நின்று கொண்டிருந்தாள் அவள். தான் விடிவதற்க்குள் இனி திரும்பியே வரமுடியாத தன் சொந்த தீவுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருப்பதை மிகுந்த பதற்றங்களோடு கூறினாள்.விடைபெற்று போவதற்க்காய் வந்ததாகவும் சில காலம் அவளை காதல் வயப்படவைத்ததிற்க்கு அவனுக்கு நன்றிகளையும் ஒரே ஒரு முத்தமொன்றையும் தந்துவிட்டுப்போக எண்ணி வந்தேனென சொல்லியபடி அவன் உதடுகளை கவ்விக் கொண்டாள்.

இன்று தூங்காமலே விடிந்ததும் அன்று விடிந்த பின்பு விலகிய உதடுகளும் ஒரே மாதிரி உணர்வையே தந்தது வெளுத்த உதடும் வெளுத்த கண்களும் இவ்வுடலில் ஒரே மாற்றங்களையே ஏற்படுத்துகிறது.

ஒரு புள்ளியில் நிலை கொள்ள விடா இருப்பு தனக்கான நகர்வுகளை கட்டமைத்துக் கொள்கிறது.நிலையானதென்பதோ மாறாத ஒன்றென்பதோ இறந்த ஒன்றின் சுவடுகளாய் மட்டுமே இருக்க முடியும் என்றுணர்ந்து நிகழ்கால இவளின் மீதான தன் அன்பை படரவிட்டான். அஃதொரு காட்டு கொடியினையொத்து வேர்களையே சூழ்ந்து கொண்டது.

தன் காதலை சொல்லாமல் விட்டு வந்த அம்மழை மாலையின் தொடர்ச்சியாய் இன்னொரு மழை மாலைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.எப்போதும் தொடர்புகளின் தொடர்புகள் அவனுக்கு மிகுந்த நிறைவைத் தருவதால் தொடர்புகளற்ற செயல்களை அவன் செய்யத் துணிவதில்லை.

கால சுழற்சியின் எந்த ஒரு மாலையிலும் மேகங்கள் கூடவில்லை.வானம் பார்த்தபடி தன் கனவுகளனைத்தையும் பிரதிகளாய் மாற்றியபடி அந்த நாளின் பரவசத்திற்க்காய் காத்திருந்தான்.ஊழி நிறைக்கும் பெருமழையொன்று அவளை சந்தித்துப் பிரிந்த நூற்றி முப்பத்து மூன்றாவது நாள் பெய்ய ஆரம்பித்தது பொழுதுகளின் மேல் தனது வன்மத்தைக் கொண்டு போர்த்தி மழை மட்டுமே இவ்வுலகின் பிரதானம் என ஆங்கர குரலில் சப்தங்களின் துணையொடு தாண்டவமிட்டது ஆதியின் பெருமழை.

தொடர்புகளின் சாரம் குலையாத மாலையொன்றில் விரகங்களையும் காதலையும் துணைக்கழைத்து மழையில் நீந்திச் சென்றான்.நகரின் எந்த ஒரு இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் காணப்படவில்லை.சந்தித்துப் பிரிந்த அவ்விடத்தை அடைந்தபோது ஒரு உடல் அவள் சாயலில் மிதந்து கடந்தது.

Monday, June 18, 2007

வலைப்பதிவர் சந்திப்பிற்க்கு கொண்டு போக மறந்த கால யந்திரம்

இவ்விழாவின் மொத்த பார்வையும் இங்கே

துபாய் வந்து ஒரு வருடமாகியிருந்தும் நண்பர்களைத் தவிர்த்து எவ்வித விழாக்களிலும் கலந்துகொண்டதில்லை.வார இறுதியை ஆரவாரமாய் கிடேசன் பார்க்கில் வலை நண்பர்களுடன் கொண்டாடிவிடுவதால் பதிவர் சந்திப்பின் மீதான இழப்புகள் ஏதுமில்லை.எனினும் நம் நக்கல் நாயகர்,ஜெஸிலா,பெனாத்தலார்,லொடுக்கு,மகேந்திரன்
இவர்களையெல்லாம் இன்னும் சந்தித்திராததால் ஆர்வமுடன் வெள்ளிமாலை இந்திய கவுன்சிலேட்டிற்க்கு தம்பியுடனும் வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த அனானி நண்பருடனும் (ஏற்கனவே தம்பி இவரை ஒரு பட்டிமன்றத்திற்க்கு கூட்டி சென்று தமிழ் விழாக்கள் என்றாலே தலை தெறிக்க ஓடுமளவு செய்துவிட்டிருந்தார்)குறிப்பிட்ட நேரத்திற்க்கு முன்னதாகவே சென்றுவிட்டிருந்தோம்.

அரங்கில் தமிழ் பட்டாசாய் வெடித்துகொண்டிருக்க முதுகு காட்டி உட்கார்ந்தபடி அண்ணாச்சி கவிதையின் அடுத்தகட்ட நகர்வைப்பற்றி எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பார்ப்பவர்கள் எல்லாரிடத்தும் கவிஞ்ர் தம்பி,கவிஞர் அய்யனார் என அறிமுகம் செய்து வைத்தார் பின்புதான் தெரிந்தது கவியரங்கத்திற்க்கு வருபவர்கள் எல்லாரையும் அவர் அப்படித்தான் அழைப்பாராம்

கிலியோடு வந்திருந்த தியாகு ஜெஸிலா வின் உரைநடை கவிதையில் உருகிப்போனார்

அரங்கம் அதிர பேச சென்ற அண்ணாச்சி தமக்கே உரித்தான பாணியில் வெளுத்து கட்டினார் அவரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்

* மு மேத்தா விற்க்கு சாகித்ய அகாதமி விருது மிக தாமதமாய் வழங்கப்பட்டிருக்கிறது அவரின் கண்ணீர் பூக்கள் வெளிவந்தபோதே இவ்விருது தரப்பட்டிருக்க வேண்டும்

* மேத்தாவிற்க்கு இவ்விருதை வழங்கியதின் மூலம் சாகித்ய அகாதமி விருது பெருமை அடைந்தது

* கால்நடைகளுக்கு தெரியுமா/கவிதைநடை-இது அவர் விருதுபெற்ற புத்தகத்தின் ஒரு சிறந்த கவிதை

* கவிதை மக்களுக்காக மட்டுமே எழுதப்பட வேண்டும்

* யதார்த்தம் மாந்திரீக யதார்த்தம் என்ற பெயர்களில் கவிதை எழுதுவது
யாருக்கு புரிகிறது?புரியாமல் கவிதை எழுதுவதால் யாருக்கென்ன பயன்?

இப்படி அண்ணாச்சி நிறைய உள்குத்துக்களோடு பேசி முடித்தார்.

தம்பி சிவாஜி படத்திற்க்கான டிக்கெட்டை ஒரு வாரமாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டு திரிந்ததின் பலனை அனுபவிக்க சிறிது நேரமே இருந்ததாலும்.எனக்கான ப்ரத்யேகப் புன்னகைகளை சுமந்திருக்கும் மது விடுதிப் பெண் நினைவில் வந்துபோனதாலும் உடனடியாக இடத்தை காலி செய்தோம்

பதிவர் ஜெஸிலா தற்செயலாய் போன் செய்ய வெளியில் வந்தபோது மூன்று நிமிடம் எங்களுக்காய் ஒதுக்கினார்.

அடுத்த முறையாவது தமிழ் விழாக்களுக்குச் செல்லும்போது பின்னோக்கி நகரும் என் காலயந்திரத்தை உடன் எடுத்துக் கொண்டு போவது என்கிற தீர்மாணத்துடன் காரிலமர்ந்தேன்.

Thursday, June 14, 2007

போர்ஹோவின் முத்தம்



நேற்றிரவு தின்று செரித்த பிரதியொன்று
சில விலங்குகளை உயிர்ப்பித்துப்போனது
கட்டுக்களுடைத்து வெளிவந்த
புலியின் குரூரம் மட்டும் பிரதானமாயிருந்தது
வன்மம் கொண்ட அதன் கண்கள்
தீச்சுவாலையை கக்கியபடி
உச்சிவெயிலில் இலக்கற்று அலைந்தது..


இரை தேடித்திரியும் கானக விலங்கின் வேட்கைமிகுந்து
தன்னுடலில் அதீதமான வீச்சத்தை வெளியேற்றியபடி
நகரபுழுதிகளில் அடர்வு கொண்டு
எதிர்கொண்ட விலங்குகளை மிரண்டொளியச் செய்தது..


எதிர்கொள்ள எதுவுமற்ற வெளியில்
தன் பிரம்மாண்டத்தில் திளைத்த
அதன் வாலினைப் பற்றி இழுத்து
மார்புறத் தழுவி கூரிய பற்கள் தெறிக்க
உதடுகளில் முத்தமிட்டான்
ஜார்ஜ் லூயி போர்ஹோ

ஒரு முத்தத்தில் கரைந்துபோன புலியின் கர்வம்
அவன் உடல் நுழைந்து
புதைந்து கொள்ள இடம்

தே
டி
யலை

ந்

து

பின் தோற்று

அவன் மைப்புட்டியினுள் குதித்து
தற்கொலை செய்துகொண்டது.

Sunday, June 10, 2007

தொடர்பற்று போவதின் இரகசியங்கள்




பொங்குதல் என்றோ
நிரம்பி வழிதலென்றோ
அடைப்பின் பீறிட்டெழுதலென்றோ
இக்கணங்களை வரையறுக்கலாம்...

ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட
பொய்கள் தானெனினும்
உடைந்த குரலும்
நெகிழ்ந்த மனதும்
வெம்மைக்கென ஏங்கும் உடலும்
மீண்டுமொரு ஆழக்கீறலுக்கு ஆயத்தமாகும்
இருள் கவிழ்ந்து வரும் மாலையில்
இரத்தச் சிவப்பில் உதட்டுக்கு சாயம் பூசும்
வேசியின் துயரங்களோடு....

வெகு நேர்த்தியான அணுகுமுறைகளின் முடிவில்
சரிபார்க்கப்பட்ட ஒத்திகைகளின் துணைகொண்டு
புதைந்து போகும் ரகசியமென உறுதி செய்து கொண்டபின்
பரஸ்பரம் ஆடைகளை அவிழ்த்துக் களிப்படையலாம்....

நகுலனையும் சிங்காரத்தையும்
சில்வியாவையும் கல்யாணியையும்
துணைக்கழைத்த நம் இலக்கிய ஆர்வம்
எத்தனையாவது முறையாகவோ
தற்கொலை செய்து கொண்டது....

இத்துக்கத்தை கொண்டாடும் பொருட்டு
சிலகாலம் தொடர்பில்லாதிருப்போம்.

Sunday, June 3, 2007

ஆற்றின் உட்பரப்பு




சுழியிட்டு நுரை தளும்ப
ஓடிக்கொண்டிருக்கும்
இவ்வாற்றில் நேற்றிரவு
ஒரு பிணம் மிதந்து சென்றது.

கருக்கலில் குளிக்க வந்த
நடுவயதுக்காரி
நீரின் குளுமையில் சிலிர்த்து
நழுவவிட்ட பச்சை நிற இரவிக்கை
தனக்கான இரகசியங்களைக்
கரைத்தபடி சுழன்று கடந்தது

முற்பகல் தென்றலுக்கு
கரையோர கொன்றை மரங்களிலிருந்து
உதிர்ந்த சிவப்பு நிறப் பூக்கள்
நெருப்பினை நினைவூட்டியபடி
மேற்பரப்பில் விரிந்தும் குவிந்துமாய்
வண்ணங்களைக் கரைத்து நிறமிழந்தது

உச்சி வெயிலில் நீருக்கு குனிந்த
செம்மறியாட்டு குட்டி மட்டும்
பிரதிபலித்த தன் பிம்பத்தினூடாய்
உற்று நோக்கியது
அடிப்பரப்பின் தணிவுகளை

தணிந்த மாலையில்
திரும்பிக் கொண்டிருந்த சிறுவன்
பட்டுத் தெறிக்கும்படி ஒன்றுக்கிருந்து
புன்முறுவலோடு ஓடிப்போனான்

காட்சிகளை விழுங்கியபடி
சலனமற்று விழித்திருக்கும்
ஆற்றின் உட்பரப்பு

Saturday, June 2, 2007

விகடனில் தமிழ்நதி

நம் சக வலைப்பதிவாளார் தமிழ் நதி ஆனந்த விகடனினால் அடையாளப்படுத்தபட்டிருக்கிறார்.வெகு ஜன ஊடகத்தில் இயங்குவது அவருக்குப் புதிதில்லை என்றாலும் தமிழ்நாட்டின் முக்கியப் பத்திரிக்கையொன்றில் அவர் கவிதைகள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிற்து.
விகடனில் வந்த அறிமுகமும் மற்றும் கவிதைகளை இங்கே தருகிறேன்.


தமிழ்நதி
தமிழ்நதி- தேர்ந்த ஈழத்துக் கவிஞர். ஈழ மக்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் வலிகள்... தீராத தனிமை.. கையறு நிலை பற்றி அவரது கவிதைகள் தனிப்பட்டுப் பேசுகின்றன. அவை புலம்பலாக அமையாதது பெரும் சிறப்பு. இவர் வலைப்பூக்கள் ( BLOGS) வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். 'கலைவாணி' என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.


இருப்பற்று அலையும் துயர்

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது.
பச்சைக் கவச வாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்.
ஆளற்ற வீட்டில் எத்தனை நாள்
காத்திருக்கும் அந்த நாய்க்குட்டி
சோறு வைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டு
என்புதோல் போர்த்திக் கிடக்கிறது
திரும்பமாட்டாத எசமானர்கள்
நெடியதும் கொடியதுமான போர் பற்றி
எந்த மொழியில் அதற்கு எடுத்துரைக்க?
நேற்று முன்தினம் பக்கத்துவீடும்
விம்மியழுது விடைபெறப் பார்த்திருந்தோம்
மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப்போன ஆச்சியின்
தளர்நடை இன்னும் ஒழுங்கையில்
ஒவ்வொரு வீடாய் இருள்கிறது
இந்தச் செங்கல்லுள் என் ரத்தம் ஓடுகிறது
இந்தக் கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது
மல்லிகையே! உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை...
வீட்டை... வேம்பை...
அது அள்ளியெறியும் காற்றை...
காலுரசும் என்
பட்டுப் பூனைக்குட்டிகளை.

அற்றைத் திங்கள்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப் புன்னகையுமற்று
கடந்துபோகிற மனிதர்கள் வாழும்
அந்நியத் தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக் குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே..!
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது.
தொப்புள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்...
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு.
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே

Featured Post

test

 test