Saturday, May 12, 2007

அடர்வனத்தின் மய்யத்தில் பூத்திருக்கும் செடிகளை முளைக்கச் செய்யும் வீர்யம் கொண்ட வினோதனின் சொற்கள்அரசாண்மையின் கட்டளைகள் எவ்வெவற்றை விலக்கப்பட்டவையாக அறிவிக்கின்றதோ அவற்றை மிக இயல்பாய் கடைபிடிக்கத் துவங்கி,ஆபாசங்களை அழகென்றும் அழகுகளை அழுகிப்போனவையென்றும்,தேவதைகளின் சிலைகளின் மேல் சிறுநீர் கழித்தும்,வேத கன்னிகளை புணர்ந்தும்,தடுக்கப்பட்ட வார்த்தைகளை உரக்க கூவியபடியுமாய் திரியும் அதீதனின் நண்பர்கள் கூட்டத்தில் தன்னையும் ஒருவனாய் பாவித்துக்கொண்டு மனம் பிறழ்ந்த மதிய கனவொன்றில் திளைத்துக்கொண்டிருந்த அவனின் உச்சந்தலைமயிரை பிடித்திழுத்துவந்து நாற்சந்தியில் நிற்கவைத்து தன்னிரு கைகளால் மலத்தை அள்ளி அவன் முகத்தில் அடித்தாள் பெருந்தனிமைக்காரி ஒருத்தி.

புத்தகங்களால் முடப்பட்டிருக்கும் பெருந்தனிமைக்காரியின் அறையில் இயல்பாய் படுத்திருக்கும் அவநம்பிக்கைகளின் கருநிழல்கள்.புத்தக இடுக்கிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் எவனோ க்களின் சொற்க்குவியல்களில் புதைந்துகொண்டிருக்கும் அவளது தனிமை.மிகுந்த கழிவிரக்கதிலிருந்து வெளிப்படும் அவளது சொற்கள் கவிதை எனும் உடை அணிந்து நகரெங்கும் வலம் வரும் கம்பீரமாய்.கவிதையின் சாயலையொத்த ஒருபிரதியினை துருப்புச்சீட்டெனக் கொண்டு அவள் அறை நுழைந்த அவன் வெகு விரைவில் தன் மந்திரச் சொற்களை நிறைக்க ஆரம்பித்தான்.சிதறிக்கிடந்த புத்தகங்களை மூட்டைகட்டி பரணின் மேல் வீசியெறிந்துவிட்டு தன் வசீகர சொற்களை அறையெங்கும் பரவ விட்டான்.எல்லாப் புத்தகத்தின் கவிதைகளையும் எப்படியோ அவன் தன் சொற்களில் சேமித்திருந்தான்.அவனின் வித்தைகள் அவளின் நடுமுதுகில் ஆணியென இறங்கியது.துரத்தப்பட்ட அவளின் தனிமை கதவின் மூலையிலும்,கட்டிலின் அடியிலும் தஞ்சமடைந்தது.ஆளறவமற்ற அவளின் அறையில் கதகதப்பாய் நிரம்பிய அவனின் சொற்களை மெல்ல விழுங்க ஆரம்பித்தாள்.மதிய கிளர்ச்சிகளில் அவன் சொற்களை மொத்தமாய் சேகரித்து படுக்கையில் நிரப்பி பாம்பின் வடிவம் கொண்டு அக்குவியலில் புதைந்து தன் உச்சமடைந்தாள்.எழுத்து,ஒலி,ஒளி என எல்லா வடிவிலும் அவன் பிம்பம் அவளுள் நிறைய ஆரம்பித்தது.இரு வேறு தனிமை உலகங்கள் தன் நிறங்களை இழக்க ஆரம்பித்தன.ஒரு கட்டத்தில் அவனின் சொற்களை சேகரிக்க அறையில் இடமில்லாது போக தன் யோனிக்குள் திணிக்க ஆரம்பித்தாள்.யோனி நிறைந்த வெளியில் தாளமுடியாத வேட்கையில் அவனை சந்தித்து நிறைந்த சொற்களை மீட்டெடுக்க வேண்டிப்புறப்பட்டவளை பின் வருமாறு கூறி தடுத்து நிறுத்தினான்.

தோழி!நான் வாழும் இவ்விருள் நகரத்திற்க்கு உன்னை அழைக்கவிருப்பமில்லை. ஆயிரம் பேர்களுக்குமேல் புணர்ந்து சலித்த ஒரு குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியின் அறையொன்றில் கவிதை தீர்ந்த வெளியில் உன்னுடல் சேர நீளலாம் என் அசிங்க குறி.அதன் நீட்சியாய் உன்னைக் கிளர்த்தி இந்தப் பாழில் நம் புனிதக் கலவியை நிகழ்த்த நான் விரும்பவில்லை. அத்துடன் கலவிதீர்ந்த நள்ளிரவில் புனிதங்களை கொளுத்திய உன் விசும்பல்களை கேட்கும் திராணியும் எனக்கில்லை.மேலும் திட்டமிட்ட சந்திப்புகளின் மேல் நம்பிக்கையுமில்லை அது வெகு இயல்பாய் நிகழ வேண்டும் உன் அறையில் என் சொற்கள் நுழைந்தது போல.மேலும் விசையுறு பந்து என்கிற பிம்பத்தை நான் செயற்கையாய் ஏற்படுத்திகொண்டு விட்டேன் வரலாறு என்பது புரட்டுக்களின் தொகுப்பென்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.உடனே இப்பிம்பத்தை அழிப்பதென்பது இயலாத காரியம்.அதீதனின் புத்தகங்களை இப்போதுதான் ஒவ்வொன்றாக படிக்கத்துவங்கியிருக்கிறேன்.மொத்தமாய் படித்து முடித்ததும் நானே உன்னை சந்தித்து என் சொற்களை மீட்டெடுக்கிறேன் என்றான்.

அவனின் புனித பிம்பங்களில் களைப்படைந்த பெருந்தனிமைக்காரி தன் வன்மங்களனைத்தும் திரட்டி அவனது குறியின்மீது காறி உமிழ்ந்தாள்.அவன் ஆண்மையை சந்தேகித்து அவளெழுப்பிய வினாக்கள் அவனை பெரும் பாழில் தள்ளியது.மேலும் வெகுண்டெழுந்த அவளின் வன்மங்கள் இப்பிரதியின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டதுபோல அவனின் பிம்பங்களின் மீது மலமள்ளி வீசியது .சொற்களை உற்பத்தி செய்யும் அவன் ஊற்றின் மீது உதிரப்பெருக்கில் நனைந்த தன் உள்ளாடை கொண்டு மூடினாள்.பின் எப்போதும் அவனை மீளவிடாமல் கூரிய ஆயுதமெனும் தன் சொற்களைக் கொண்டவனை சிதைத்தழித்தாள்.அறையை நிரப்பியிருந்த அவனின் சொற்களை துடைப்பம் கொண்டு வழித்தெடுத்து சன்னலின் வழி வெளிக்கொட்டினாள்.கூரிய ஆயுதம் கொண்டு குத்திக்கிளறி அவள் யோனியில் புதைந்திருத அவனின் சொற்களை மீட்டெடுத்து வன்மங்களுடன் வெளியே வீசியெறிந்தாள்.பின்பு கட்டிலுக்கடியிலும் கதவின் மூலையிலும் ஒளிந்திருந்த தனிமையின் காதைப்பிடித்து திருகி வெளியிழுத்து தன்மீது போர்த்திக்கொண்டாள்.பரணில் கட்டப்பட்ட புத்தகக்குவியலின் முடிச்சை அவிழ்த்து தன் அறைமுழுக்க சிதறவிட்டு அவற்றின் இடுக்கில் தூங்கிப்போனாள்.

மலங்களை வெகுநேரம் வழித்தெடுத்த அவன் அவமானத்தில் உடல் குறுகி யாருக்கும் கேட்காதபடி சன்னக்குரலில் பின்வருமாறு முனகினான்.தோழி!முன்பொரு பிறவியில் வேட்கைமிகுந்த கானக மதியமொன்றில் கலவியிலிருந்த இரு புலிகளின்மீது அம்பெய்தேன் விரைத்த குறியோடு ஆண் புலியொன்று மடிந்ததுபோனது.எஞ்சியிருந்த பெண்புலியின் சாபத்தால் வெயில் காலங்களில் என் உடல் புலியின் வாசனை கொள்கிறது.அதன் வீச்சம் என் அருகினில் யாரையும் நெருங்க விடுவதில்லை வெயில் காலம் முடியும் வரை இந்த இருள் நகரத்தில் நான் புதைந்து கொள்வேன்.வீச்சங்களை நீ தாங்கிக்கொள்வாயெனினும் மதிய பொழுதுகளில் என் குறி சிதைவுற்று புலியின் விறைத்த குறியின் தன்மையை அடைகிறது.மதிய புணர்வுகளில் பெரும் தாகம் கொண்ட உன்னை எவ்வாறு புணர்வேன் புலியின் குறிகளோடு.மேலும் இதை சொல்லி உன் துயரை நீட்டிக்க செய்ய விரும்பாமல் என் பசப்பு வார்த்தைகளை கொண்டு உன் வருகையைத் தடுத்தேன் என்றபடி இருள்நகரத்தில் அமிழ்ந்துபோனான்.

துயிலெழுந்த பெருந்தனிமைக்காரி விடியலைக்காண தன் சன்னல்களை திறக்கையில் அடர் வனங்களில் பூத்திருக்கும் செடிகள் தன் தோட்டம் நிறைய பூத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள்.வழித்தெடுத்து வீசப்பட்ட அவன் சொற்களனைத்தும் முளைத்து அடர்வனப்
பூக்களைப் பிரசவித்தது கண்டு சொல்லொனாத் துயர் கொண்டாள்.அவள் யோனியிலிருந்து வீசப்பட்ட சொற்கள் மட்டும் ரத்த வண்ணத்தில் பூத்திருந்ததை அவளின் அழகிய விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்தாள் அப்பெருந்தனிமைக்காரி.

*நன்றி : அதீதனைக் கண்டறிந்த ரமேஷ்-ப்ரேம் களுக்கு
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...