Saturday, April 7, 2007

அழகே...அழகு..

இந்த முறையும் தம்பி இந்த விளையாட்டில் என்னை இழுத்து விட்டிருக்கிறார்.தமிழ்மணத்தில் தர தர வென இழுத்து வந்து சேர்த்ததோது நில்லாமல் அவ்வப்போது தலைப்பையும் கொடுத்து எழுதவும் வைக்கிறார்.ரெண்டு நாள் இந்த தலைப்ப சுமந்துட்டு திரிஞ்சதின் விளைவுகள் இதோ...

பெண்கள்

அழகான ன்னு ஆரம்பிக்கும்போதே உடனடியா நினைவுக்கு வருவது பெண் தான் இது மாற்றுப் பாலியல் ரீதியிலான கவர்ச்சியா கூட இருக்கலாம்.எல்லா கிராமத்து பசங்களுக்கும் இருக்குற அனுபவம்தான்னாலும் அழகி பட ரேஞ்சு க்கு கவிதா ன்னு ஒரு பெண் பெரிய கண்களோட துரு துரு ன்னு ரொம்ப சுத்தமா இருப்பா. இப்ப நினைச்சாலும் உடனே மனசுக்குள்ள வர ஒரு முகம்.பத்து வருச இடைவெளிக்கப்புறம் உருவ மாற்றங்களோட அந்தப் பெண்ணை பாத்தப்ப எதுவும் பேசாம அவ பார்வையில் இருந்து ஒளிஞ்சிக் கிட்டேன்.அடிமனசுல தங்கிட்ட அந்த இனம் புரியாத உணர்வு அப்படியே இருக்கட்டும்ங்கிற ஆசைதான்.

கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் என் வாழ்க்கைய ஆக்கிரமிக்க தொடங்கினப்போ சில பெண்களை ரொம்ப தீவிரமா காதலிச்சிட்டு இருந்தேன்.இவங்களோட ப்ரம்மாண்டம் என்ன கிறுக்குப் புடிச்சு அலைய வச்சது.குறிஞ்சி மலர்-பூரணி,பால குமாரனோட காயத்ரி,அகல்யா,நந்தினி,ஸ்வப்னா,மோகமுள் - யமுனா,மரப்பசு-அம்மிணி லா.ச.ரா வோட தாக்ஷாயணி,ஜெயமோகனோட - நீலி ன்னு என் உலகத்தை ஆக்ரமிச்ச இந்த பெண்கள் தான் மேக்கப் வஸ்துக்கள் எதுவும் இல்லாம மூப்பு பிணி ன்னு எதுவும் அண்டாம என்னைக்குமே அழகான பெண்கள்.

தருணம்
காதல் சொன்ன கணம் யாராலாவது மறக்க முடியுமா? அதுவும் பதின்ம பருவத்தில் எழும் காதலுக்கு அதிக வேகமும் பரபரப்பும் இருக்கும். என்ன வேனும்னா செய்யலாம் இந்த பெண்ணுக்காகன்னு ஒரு சாத்தான் முழுமையா அந்த வயச ஆக்ரமிச்சிருக்கும்.சன்னமாய் மழை பெய்துகொண்டிருந்த ஒரு பிற்பகலில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி வெகு நாட்களாய் மனதிலிருந்த காதலை சொன்ன கணம் மிக அழகான தருணம்.அந்தப் பெண் வெட்கமும் புன்முறுவலுமாய் அதை ஏற்றுக்கொண்டு'இத சொல்ல இவ்ளோ நாளா'ன்னு பதில் வர..ஆஹா பரவசம்னு இதத்தான் சொல்வாங்களோ?..இரண்டு வருடங்கள் கழித்து ஒரு விடியற்காலையில் அலறிய தொலைபேசியினூடாய் ஒலித்த 'என்ன மற்ந்திடு' ரீதியிலான உரையாடலில் உறைந்து போன கணமும் வெகு நாட்கள் கழித்து அழகாய் தோன்றிற்று.

அனுபவம்

மூன்று வருடங்களுக்கு முன்பு வெகு குழப்பங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம் என் வீட்டிற்க்கு சமீபமாய் இருக்கும் ரமணாஸ்ரமத்திற்க்கு சென்றிருந்தேன்.இரவு 7 மணிக்கு மேல் அந்த ஆஸ்ரமத்திற்க்கு தனி அழகு வரும்.பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள்.மெல்லிய இருள் போர்வையென விரித்துப் படர்ந்திருக்கும்.பூக்களின் வாசனை,சில்வண்டுகளின் ரீங்காரப் பிண்ணணியோடு ஒரு தெய்வீக அமைதி எங்கும் நிறைந்திருக்கும்.ரமணரின் அன்னை சமாதி பழமையின் சாயலோடு மிக அழகாய் இருக்கும்.குறந்த வெளிச்சம் கொண்டதாய் ஒளியின் கூச்சமில்லாது இருளில் புதைந்து அகத்தின் வெளிச்சத்தை தேட ஏதுவான இடம்.என் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தேன் 7.30 மணி வாக்கில் திடகாத்ரமான ஆங்கிலேயர் ஒருவர் வீணை சகிதமாய் என் அருகிலமர்ந்தார்.அவரைப் பின் தொடர்ந்து மிருதங்கம் ஒன்றை ஏந்தியபடி ஒரு இளைஞரும் வந்தமர்ந்தார்.எனக்கு ஒரு புன்னகையை தந்துவிட்டு அந்த ஆங்கிலேயர் வீணையை மீட்ட ஆரம்பித்தார்.என்னையும் சேர்த்து அந்த கல் மண்டபத்தில் ஐந்து பேர் இருந்தோம்.மெல்லியதாய் வருடிக்கொடுக்கிற் சுகமென ஆரம்பித்தது அவரின் மீட்டல்கள்.என் உடலும் மனசும் இளக ஆரம்பித்தது வீணையின் சுருதி கூடக்கூட நான் அதிரத் துவங்கினேன்.இசையின் உச்சத்தில் நான் ஒரு நாத அதிர்வென மாறி அந்த மண்டபத்து சுவர்களில் மோதத் துவங்கினேன்.கண் திறக்கப் பயமாக இருந்தது.45 நிமிடம் கழித்து அவ்விசை மெல்ல அடங்கியது.மழை ஓய்ந்த அமைதி.என் உடல், ஆன்மா, மனம் எல்லாவற்றையும் உலுக்கிப் போட்ட பரவச அனுபவம்.

வீடு

மத்தியப்பிரதேசத்தில் குச்வாடா என்றொறு சிறிய கிராமம்.நாகரீகம் வசதி வாய்ப்புகள் எதுவும் இன்னும் அண்டியிராத ஒரு உள்ளடங்கிய கிராமம்.அங்குதான் இந்த வீடு இருக்கிறது.1930 களிலிருந்து அக்கிராமத்தில் இதுதான் பெரிய வீடு.முழுவதுமாகவே மண்ணால் கட்டப்பட்டது.மண் தரையை சாணமிட்டு மெழுகியிருந்தது அக்கோடையில் வெகு குளுமையைத் தந்தது.வீட்டின் நடையில் மாடிக்கு படிக்கட்டு இருக்கும் அதுவும் மண்படிக்கட்ட்டுத்தான்.பக்கவாட்டில் முன் பக்க கதவு வைத்து வீட்டை ஒட்டிய மற்றொறு அறை இருட்டாய், அதற்க்குப் பின் ஒரு அறையும் பின்புறத்தில் ஒரு வராந்தாவும்.படிக்கட்டு வழியாய் மேலே சென்றால் கீழ் தட்டை ஒத்தார்போல் மேல் தட்டு.அங்கங்கே மூங்கில் சன்னல்கள், வேடிக்கைப் பார்க்க சின்னதாய் ஒரு பால்கனி.வீட்டின் மூலைகளெங்கிலும் அமைதி படிந்து கிடந்தது.உள்ளே அப்படியொறு மலர்வு.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்க்கு ஒரு பேரமைதியும் அன்பும் சூழ்ந்தது என்னை.அந்த வீட்டிற்க்கு சொந்தக்காரர் ஓஷோ.

பொழுது
மாலை..இந்த சாயந்திர நேரம் ரொம்ப ரம்யமா படும்.'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில்' 'பொன்மாலைப் பொழுது' 'மாலை எனை வாட்டுது' ன்னு பொருத்தமான பின்னணி இசையோட மொட்டை மாடில உட்கார்ந்துட்டு வீதியையும் வானத்தையும் பார்த்திட்டு இருப்பேன்.சைக்கிள் ரிக்க்ஷா,ஆட்டோ சகிதமா வீடு திரும்புற கான்வெண்ட் குழந்தைகள்.ஹோ ன்னு உற்சாக கூச்சல்களோடு வீடு நோக்கி ஓடும் கார்ப்பரேஷன் குழந்தைங்கள் ன்னு தெரு வெங்கும் பூப்பூத்த மாதிரி இருக்கும்.ஒரு பரபரப்பான காலைய முடிச்சு வைக்கிற அந்தி ரொம்ப அழகு.மேற்குல ஒரே நேரத்துல வானப்பெண் பலவித வண்ண உடைகளை மாத்துவா.மலைக்குப் பின்னால இருக்கிற தன் காதலி வீட்டுக்கு ஒரு திருட்டு காதலனைப் போல சூரியன் மெல்ல உள்ளப் போவான்.ரொம்ப கவித்துவமான பொழுது இந்த மாலை.சில சமயங்களில சன்னமாய் மழையும் சேர்ந்துக்கும் அப்போ ஏற்படுகிற உண்ர்வை குதூகலம் னு சொல்லலாம்.

கண்கள்

கண்களின் மீது எப்போதுமே ஒரு கிறக்கம் உண்டெனக்கு.குழந்தைகளின் கண்களில் எல்லைகளற்ற குறும்பும் அன்பும் எப்பவும் நிறைந்திருக்கும்.எந்த உயிரினத்த பார்த்தாலும் எனக்கு முதலில் அதன் கண்களைத்தான் பார்க்க தோனும்.பூனைக்குட்டியின் கண்கள்ல எப்பவும் ஒரு சோம்பலான குறும்பு தெரியும் பசுவின் கண்களில் தெரியும் அமைதி.பாம்பின் கண்களில தெரியுற வசீகரம்.அத்தோட பசியில் சோர்ந்த விழிகளில் தெரியும் சோகம்.கண்களில் நீர்கட்ட சிரிக்கும் மனிதர்கள்னு கண்கள் ஒரு அழகான குறியீடு ன்னு சொல்லலாம்.என் சமீபத்ய தோழி அருபதர்ஷினியோட கண்கள் ரெண்டு நாள் தூங்க விடாம பண்ணிடுச்சு.:)

அப்பா...!! ஒரு வழியா இறக்கி வச்சாச்சு இதோ அடுத்த மூணு பேர்

எடிட் செய்ய கத்துக்கொடுத்த துபாய் கோபிநாத்
திடீர்னு கவித எழுதும் ராயல் ராம் ( ரகசியம் இன்னாபா?)
மென்மையாவும் ரொம்ப அழுத்தமாகவும் வலிகளை பதிவு செய்யும் தமிழ்நதி
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...